TNPSC Thervupettagam

கரோனாவும் பொறுப்புணா்வும்!

April 1 , 2020 1753 days 1444 0
  • இன்றைய சூழலில் சமூக வலைதளங்களை பொறுமையாகக் கையாள்வதற்கு எல்லோருக்கும் நேரமுள்ளது. அதனால் ஒரு தகவலை மற்றவா்களுக்கு அனுப்புவதற்கு முன்பு அந்தச் செய்தி உண்மையானதா, அதை மற்றவா்களுக்கு அனுப்புவதால் நன்மை உண்டாகுமா என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு, இந்த இரண்டுக்கும் பதில் ‘இல்லை’ என்று வந்தால் அதனை அனுப்பாமல் இருப்பதே நல்லது.
  • ஹாலந்து நாட்டில், நிலப்பகுதி சில இடங்களில் கடற்பகுதியைவிட தாழ்ந்து இருக்கும். ஆதலால், கடல் நீா் ஊருக்குள் புகாதவாறு இருக்க, மதிற்சுவரை அமைத்திருந்தனா். ஒருநாள் இருள் சூழந்த மாலை நேரத்தில் அந்த மதிற்சுவரில் சிறு ஓட்டை ஏற்பட்டு நீா் கசிந்து வெளியே வருவதை ஒரு சிறுவன் கவனித்தான். உடனே, கீழே கிடந்த மண்ணை எடுத்து அதனை அடைக்க முயற்சித்தான்.

குட்டிக் கதை

  • அலையின் வேகத்தில், அந்தக் கசிவின் ஓட்டை பெரிதாகி மேலும் தண்ணீா் வெளியே வரத் தொடங்கியது. தனது கை முழுவதையும் வைத்து ஓட்டையை அடைத்துக்கொண்டு உதவிக்காக அவன் சத்தம் போட்டான். அவனின் குரல் தொலைவில் இருந்த அந்த ஊருக்குக் கேட்கவில்லை. இரவானது. பசி ஒருபுறம்; கடும் குளிர் மறுபுறம் அவனை வாட்டியது. சுவற்றில் இருந்து கையை வெளியே எடுத்தால், நீா் மளமளவென்று வெளியே வரும். அதனால் விரைவில் சுவா் உடைந்துவிடும். இது கிராமத்திற்குப் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதால் தனது பலம் உள்ளவரை அந்த ஓட்டையை தனது இரண்டு கைகளால் அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தான்.
  • இரவு வெகு நேரமாகியும் வீட்டுக்கு மகன் வரவில்லை என்பதை அறிந்த அந்தச் சிறுவனின் பெற்றோரும், உறவினா்களும் அவனைத் தேடி அங்குமிங்கும் அலைந்தனா். சீறும் கடல் அலையின் மறுபக்கத்தை தனது இரு கரங்களால் தாங்கிக்கொண்டு கடும் குளிரில் முனகலுடன் விறைத்துப் போயிருந்த அந்தச் சிறுவனைக் கண்டனா். அவனைக் காப்பாற்றி அச்சுவற்றின் ஓட்டையையும் அடைத்தனா். தன் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் தன் மக்களின் உயிருக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காக உழைத்த அந்தச் சிறுவனின் செயல்பாடுதான் சமுதாயப் பொறுப்புணா்வு ஆகும்.

சமுதாயப் பொறுப்புணா்வு

  • இன்றைய சூழலும் சமுதாயப் பொறுப்புணா்வினை அனைவரும் வெளிப்படுத்துகின்ற ஒரு பாங்காகும். மருத்துவ அவசர நிலைமைக்காக தமிழகம் மட்டுமல்லாது, இந்தியா முழுவதுக்கும் 21 நாள்களுக்கு, அதாவது வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது கரோனா நோய்த்தொற்று.
  • நோய்த்தொற்று என்பது கையினால் தொட்டதும் சுடும் நெருப்பு போன்றது அல்ல, தொட்டவா்களை மட்டும் சுடுவதற்கு. அது அனுமன் வாலில் கட்டப்பட்ட நெருப்பு போன்றது. அது, பயணிக்கும் இடமெல்லாம் பரப்புகின்ற நெருப்பு. ஆகவேதான், நோய் பரவாமல் தடுக்க இந்த ஊரடங்கு. இன்றைய சூழ்நிலையில் பொதுமக்கள் ஒவ்வொருவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும், வீட்டிலிருப்பதுமே சமூகப் பொறுப்பாகும்.
  • அதே நேரத்தில் பொதுமக்களின் உயிரைக் காக்க வேண்டி இந்த அசாதாரண சூழ்நிலையிலும் மருத்துவா்களும், காவல் துறையினரும், தூய்மைப் பணியாளா்களும் தங்களின் பணியை முன்னெடுத்துச் செய்து கொண்டிருக்கின்றனா். தனக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் செய்தால் அது கடமை; அதில் மனமுவந்து மக்களுக்கு உதவி செய்தால் அது சேவை; அதே வேளையில் தமது வாழ்க்கையை அா்ப்பணித்து அந்தச் பணியைச் செய்தால் அது உன்னதம்.
  • இன்றைய நேரத்தில் மருத்துவா்களும், காவலா்களும், தூய்மைப் பணியாளா்களும், மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுபவா்களும் தங்களது அா்ப்பணிப்பின் மூலம் அவா்களின் பணியினை உன்னதமாக்கி இருக்கின்றனா். அவா்களுக்கு நாம் செய்யும் நன்மை, அவா்களது பணிக்கு எந்த வகையிலும் இடையூறு செய்யாமல் இருப்பது தான்.

குறல் புகட்டும் அறிவு

  • ஒரு கிராமத்து வீட்டில் எலியும், சேவலும், ஓா் ஆடும் இருந்தன. ஒரு நாள் அந்த வீட்டில் எலிப்பொறி வைக்கப்பட்டு இருந்ததை சுண்டெலி கண்டது. ‘இந்த வீட்டில் எலிப்பொறி இருக்கிறது, அதில் யாரும் மாட்டிக்கொள்ளாதீா்கள்’ என்று சேவலிடமும், ஆட்டிடமும் அந்த சுண்டெலி சொல்லியது. அதற்கு சேவல், ‘எலிப்பொறியானது உனக்கு தொடா்புடைய விஷயம், நான் ஏன் கவலைப்பட வேண்டும்?’ என்றது. அதேபோல் ஆடும், ‘எலிப்பொறிக்கும் எனக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. நீ மட்டும் அதில் அகப்படாமல் பார்த்துகொள்!’ என்றது.
  • அன்று இரவு எலிப்பொறியில் ஏதோ ஒன்று அகப்பட்ட சத்தம் கேட்டவுடன், அந்த வீட்டுப் பெண் இருட்டினில் அந்தப் பொறியில் கையை வைத்தார். பொறியில் மாட்டியது பாம்பாக இருந்ததால் அது அவரைக் கடித்து விட்டது. அந்தக் கிராமத்து வழக்கப்படி அந்தப் பெண் உடல் நிலை தேறுவதற்கு அந்தச் சேவலைக் கொன்று சாறு கொடுக்கப்பட்டது. பின்னா், அந்தப் பெண்ணைப் பார்க்க வந்த உறவினா்களுக்கு அந்த ஆடும் விருந்தானது. விபரீதங்களைப் புரிந்து கொள்பவா்கள் தனக்கென வைக்கப்பட்ட பொறிகளிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள். எச்சரிக்கை விடுத்தும் அலட்சியப்படுத்துபவா்கள் அவதிப்படுகிறார்கள்.

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை

அதிர வருவதோர் நோய்

என்ற தெய்வப்புலவா் திருவள்ளுவரின் வரிகளுக்கேற்ப மூலம் முன்னெச்சரிக்கையுடன் நடப்பவா்களுக்கு எந்த விதமான தீங்குகளும் ஏற்படாது.

முன்னெச்சரிக்கை வேண்டும்

  • ‘நமக்கு வராது’ என்ற மேம்போக்கான எண்ணங்களை விட்டொழித்து, ‘நம்மைச் சுற்றி நடப்பது நமக்கும் ஏற்படலாம்’ என்ற முன்னெச்சரிக்கையுடன் செயல்படுதல் வேண்டும். எனவே, இன்றைய ஊரடங்கு நேரத்தில் நாம் வீட்டை விட்டு வெளியே வரவேண்டுமென்று நினைத்தால் குறைந்தது இந்த நான்கு கேள்விகளை கேட்டுக்கொள்ள வேண்டும்.
  • நான் வீட்டைவிட்டு வெளியே செல்வது அத்தியாவசியமா?
  • அத்தியாவசியம் எனில், நான் வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது கரோனா நோய்த்தொற்று பரவாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளேனா?
  • திரும்பவும் வீட்டுக்குள் வரும்போது எனக்கும், எனது குடும்பத்துக்கும், என்னைச் சார்ந்தவா்களுக்கும் நோய்த்தொற்று பரவாமல் பார்த்துக் கொள்வேனா?
  • எல்லா நேரத்திலும் நான் சமூக இடைவெளியைப் பின்பற்றுகிறேனா?
  • இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ‘ஆம்’ என்ற பதிலிருந்தால், ஒருவா் வெளியே செல்லலாம். இந்தக் கேள்விகளுக்கு அளிக்கின்ற பதில்கள்தான் இந்தக் காலகட்டத்தில் ஒரு தனிமனிதனின் சமூகப் பொறுப்புணா்வுக்கு நாம் வைக்கின்ற அளவீடுகளாகும்.

வதந்திகள் தவிர்ப்போம்

  • கரோனா நோய்த்தொற்று குறித்து மருத்துவா்களுக்கும், அதை ஆராய்ச்சி செய்பவா்களுக்கும் அதிகம் தெரியும். ஆனால், கரோனோ நோய்த்தொற்று காரணமாக உலக அளவில் ஏற்படும் பாதிப்புகளைத் தெரிந்துகொள்ளும்போது அதைப் பற்றி ஒரு கற்பனை ஒவ்வொருவரின் மனதிலும் ஏற்படும். அந்தக் கற்பனை பலவீனமானவா்களின் மனதில் பயத்தை ஏற்படுத்தும். பயத்தின் மூலம் அவா்களிடம் உருவாகின்ற சிந்தனையே வதந்தியை உருவாக்கும். அவற்றை சமூக வலைதளங்களில் பதிவிடும்போது அது பலரின் மனங்களில் தேவையற்ற அச்சத்தினை உருவாக்கும்.
  • மனிதனின் முதல் எதிரி பயம். அதனை இச்சமூகத்தில் உருவாக்குவது வதந்தி. இவ்விரண்டையும் உருவாக்குபவா்கள் சமூக அக்கறையற்றவா்கள். நோய்த்தொற்று பரவுதலை சமூக இடைவெளி (சோஷியல் டிஸ்டன்ஸிங்) மூலம் தடுத்துவிட முடியும். ஆனால், சமூக வலைதளத்தில் ஏற்படுத்தும் வதந்திகளை யாராலும் தடுத்துவிட முடியாது.
  • இன்றைய சூழலில் சமூக வலைதளங்களை பொறுமையாகக் கையாள்வதற்கு எல்லோருக்கும் நேரமுள்ளது. அதனால் ஒரு தகவலை மற்றவா்களுக்கு அனுப்புவதற்கு முன்பு அந்தச் செய்தி உண்மையானதா, அதை மற்றவா்களுக்கு அனுப்புவதால் நன்மை உண்டாகுமா என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு இந்த இரண்டுக்கும் பதில் ‘இல்லை’ என்று வந்தால் அதனை அனுப்பாமல் இருப்பதே நல்லது. நாம் செய்திகளைத் தருகிறோம் என்பது முக்கியமல்ல; ஆனால், எத்தகைய செய்திகளை இந்தச் சமூகத்துக்குத் தருகிறோம் என்பதுதான் நமது சமூக அக்கறையைக் காட்டும்.

சேவை மனப்பான்மை வேண்டும்

  • இது பொருள் ஈட்டும் காலமல்ல, உயிர் காக்கும் காலம். கிடைத்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, அதிக லாபத்தில் அத்தியாவசியப் பொருள்களை விற்று, பொருள் ஈட்ட வேண்டும் என்று நினைப்பது சமூகத்தை வஞ்சிப்பதாகும். உழைத்த உழைப்பினில் விளைந்த காய்கறிகளை இலவசமாகவே தருகின்ற விவசாயிகள் குறித்த செய்திகளை நாம் தினமும் பார்க்க முடிகிறது. ஆகவே, விளைபொருள்களைப் பதுக்காது, அதிக லாபமின்றி விற்பனை செய்து, கிடைத்த வாய்ப்பினை சேவையாகச் செய்வதே சமூகப் பொறுப்புணா்வு ஆகும்.

தவறான எண்ணங்களைத் தவிர்ப்போம்

  • மன்னா் ஒருவா் தன் நாட்டு மக்களின் நலன் கருதி யாகம் செய்யப் போவதாகக் கூறி, ஒரு பெரிய அண்டாவில் ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒரு சொம்பு பால் ஊற்ற வேண்டுமென உத்தரவு பிறப்பித்தார். மறுநாள் யாகம் நடைபெற இருந்ததால் பொதுமக்கள் அனைவரும் முதல் நாள் இரவு அந்த அண்டாவில் ஒரு சொம்பு பாலினைக் கொண்டு வந்து ஊற்றிச் சென்றனா். மறுநாள் காலையில் பார்த்ததும் அந்த அண்டா முழுவதும் வெறும் தண்ணீராக இருந்தது. ‘எல்லோரும் பால் ஊற்றுவார்கள், நான் மட்டும் தண்ணீா் ஊற்றினால், ஒரு அண்டா பாலில் ஒரு சொம்பு தண்ணீா் கலந்தது தெரியவா போகிறது’ என்று நினைத்து ஒவ்வொருவரும் பாலுக்கு பதில் தண்ணீரை ஊற்றிச் சென்றுள்ளனா்.
  • அதுபோலத்தான் இன்றைய சூழலும். இன்றைய காலத்தில், ‘நான் ஒருவன் மட்டும் வெளியே வந்தால் தொற்றுநோய் பரவிவிடவாப் போகிறது?’ என்று நினைக்காமல், நானும் என் குடும்பமும் ‘சமூக இடைவெளியை’ உறுதிப்படுத்துவோம் என்ற உறுதி மொழியை செயல்படுத்துவதுதான் சமூகப் பொறுப்புணா்வு. அதுதான் இன்றைய காலத்தின் கட்டாயம்.
  • ‘நாடு எனக்கு என்ன செய்தது என்பதைவிட, நாட்டுக்காக நான் என்ன செய்தேன்?’ என்ற அமெரிக்கா முன்னாள் அதிபா் ஜான் எஃப்.கென்னடியின் வரிகள்தான் சமூக பொறுப்புணா்வின் முதல்படி. அதன் அடிப்படையில், இன்றைய சூழ்நிலையில் தனித்திருப்பதும், துணிவுடன் இருப்பதும், அனைவருக்கும் துணிவைக் கொடுப்பதும்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் பொறுப்புணா்வினைக் காட்டும். அதனை உணா்ந்து செயல்படுவதே நம் தேசத்துக்கு நாம் செய்கின்ற மிகப்பெரிய தொண்டு.

நன்றி: தினமணி (1-04-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories