- மருத்துவத் துறையில் அலோபதி மருத்துவம் செலுத்திவரும் செல்வாக்கு, கரோனா வைரஸ் தாக்குதலுக்கான சிகிச்சையில் வெளிப்படையாகவே தெரிகிறது. கரோனாவுக்கு எதிராகப் பல்வேறு வகையான தொகுப்பு மருந்துகளும் சோதித்துப் பார்க்கப்படும் நிலையில் பாரம்பரிய மருத்துவத்தின் அடிப்படையில் மருந்துகளைப் பயன்படுத்துவதற்குப் பொதுநல வழக்குப் போட வேண்டிய நிலைதான் இருக்கிறது.
- இத்தனைக்கும் சீனாவில் கரோனாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அங்குள்ள பாரம்பரிய மருந்துகள் பயன்படுத்தப்பட்டு, குறிப்பிடத்தக்க பலனையும் அவை அளித்திருக்கின்றன. இந்தியாவில் பாரம்பரிய மருத்துவ முறைகள் பரிசோதித்துப் பார்க்கப்படுவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டாலும் அதன் விகிதாச்சாரம் என்ன என்பது பெரும் கேள்வி.
மருந்து எதுவும் உறுதிசெய்யப்படவில்லை
- கரோனாவுக்கான சிகிச்சையில் இதுவரை முழுமையாக நோய் தீர்க்கும் மருந்து என்று எதுவும் உறுதிசெய்யப்படவில்லை. இதற்கு முன் ‘சார்ஸ்’, ‘மெர்ஸ்’ ஆகிய வைரஸ்கள் தாக்கியபோது கையாளப்பட்ட மருந்துகள் மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன.
- எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை நிலைப்படுத்தும் மருந்துகளும், மலேரியா காய்ச்சலுக்கு அளிக்கப்பட்ட மருந்துகளும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.
- இந்த மருந்துகள் உடனடியாக முழுமையான பயனைத் தராவிட்டாலும் நோயின் தீவிரத்தைக் குறைத்து, கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் தேறி குணமாவதற்கு உதவுகின்றன.
மரபுவழி மருத்துவர்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும்
- செயற்கை சுவாசம் தேவைப்படும் நிலையில் இருப்பவர்களுக்கு மரபுவழி மருத்துவத்தால் உடனடி பலனை அளிக்க முடியாமல் இருக்கலாம். ஆனால், அத்தனை தீவிர நிலையை எட்டாதவர்களுக்குக் காய்ச்சல், சளி, செரிமானப் பிரச்சினை உள்ளிட்ட ஏனைய கோளாறுகளுக்கு மரபுவழி மருத்துவ முறைகளைப் பரீட்சிப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? சித்தா, ஆயுர்வேதம் தொடங்கி ஹோமியோபதி, அக்குபங்ச்சர் வரை நம் முன்னுள்ள சாத்தியங்களைப் பரிசோதித்துப் பார்க்க அந்தந்தத் துறையினருக்கும் ஒரு வாய்ப்பை வழங்கலாம். ஆப்பிரிக்காவை ‘பிளேக்’ சூறையாடிய காலகட்டத்தில் தன்னார்வலராகத் தொண்டாற்றச் சென்ற காந்தி, மண் சிகிச்சையை அவர்களிடம் பரீட்சித்ததையும் அதில் கணிசமான வெற்றி அவருக்குக் கிடைத்ததையும் இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
- கரோனாவுக்கு எதிரான போரில் அலோபதி மருத்துவ முறையைப் பின்பற்றும் மருத்துவர்களோடு மரபுவழி மருத்துவர்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும். மரபுசார் அறிவும் நாம் கடந்துவந்திருக்கும் காலத்தின் அறிவியல் வெளிப்பாடுதான். மக்கள் ஒரு போராட்டத்தைச் சந்திக்கும் இந்நாட்களில் ஒன்றிணைந்த செயல்பாடுக்கான உத்வேகம்தான் எல்லாவற்றிலும் முதன்மையானது!
நன்றி: தி இந்து (15-04-2020)