TNPSC Thervupettagam

கரோனா இறப்பு இழப்பீடு: மத்திய அரசின் உதவியின்றி சாத்தியமாகுமா?

October 7 , 2021 1148 days 538 0
  • கரோனா தொற்று பாதிப்பால் இறந்தவர்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், அது குறித்து 6 வாரங்களுக்குள் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்று கடந்த ஜூன் 30 அன்று உத்தரவிடப் பட்டது.
  • மத்திய சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய பிரமாணப் பத்திரத்தில் கரோனா தொற்று பாதிப்பால் இறந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் திட்டமிட்டுள்ள விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இழப்பீட்டுத் தொகையானது இறப்புச் சான்றிதழ்களைச் சரிபார்த்து 30 நாட்களுக்குள் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • பிரமாணப் பத்திரத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இறப்புச் சான்றிதழில் கரோனா என்று குறிப்பிடப்படாவிட்டாலும் அதைக் காரணம்காட்டி இழப்பீட்டை மறுக்கக் கூடாது, கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற விவரங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது போன்ற முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
  • கரோனா தாக்குதலுக்கு ஆளாகி, மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறுகையில் இறந்தவர்களுக்கு கரோனா என்று காரணம் குறிப்பிடாமல் நுரையீரல் அல்லது இதயப் பாதிப்பு என்று இறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டதால் அரசு அறிவித்த பொருளாதார உதவிகளைப் பெற முடியவில்லை என்ற குற்றச்சாட்டுகள் ஏற்கெனவே நிலவிவரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது.
  • மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர் அந்தக் குடும்பத்துக்கான வருமானத்தை ஈட்டியவர் எனில், இத்தகைய இழப்பீடு நிச்சயம் உதவிகரமாக இருக்கும்.
  • இழப்பை அது முழுமையாக ஈடுசெய்துவிட முடியாது என்றாலும் அத்தியாவசியத் தேவைகளை நிறைவுசெய்துகொள்ள உதவும்.
  • ஆனால், கரோனா தொற்றின் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் இழப்பீட்டுக்காக நாடு முழுவதும் மொத்தமாகச் சில ஆயிரம் கோடிகளை இழப்பீடாக அளிக்க வேண்டியிருக்கும்.
  • மாநில அரசுகளைப் பொறுத்தவரை, அவற்றின் பேரிடர் நிவாரண நிதிக்கான தனியாதாரங்கள் எதுவுமில்லை. நிதிக் குழுவின் பரிந்துரைகளையே அவை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன.
  • தமிழ்நாடு, கேரளம், மஹாராஷ்டிரம் போன்று பெருந்தொற்றால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் இழப்பீட்டுக்காகப் பெரும் நிதி ஒதுக்கீட்டைச் செய்ய வேண்டியிருக்கும்.
  • ஏற்கெனவே பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும் சிகிச்சைகளுக்காகவும் மாநிலங்கள் தங்களது பேரிடர் நிதியிலிருந்து பெருமளவில் செலவழித்துள்ளன.
  • தமிழ்நாட்டில் கரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகையைக்கூட இன்னும் அளிக்க முடியவில்லை.
  • இந்நிலையில், தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மாநிலங்களுக்குப் போதிய நிதியுதவி செய்யப்பட்டால் மட்டுமே, கரோனா இறப்புக்கான இழப்பீடு பாதிக்கப் பட்டவர்களுக்கு உரிய காலத்தில் சென்று சேர முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (07 - 10 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories