TNPSC Thervupettagam

கரோனா: அச்சம் தவிர் - தனிமை கொள்!

March 26 , 2020 1696 days 966 0
  • · உலக அளவில் சுகாதாரத்துக்கும், பொருளாதாரத்துக்கும் இடையே மாபெரும் போரை கரோனா நோய்த்தொற்று தொடங்கியுள்ளது. இவை இரண்டும் இப்போது எதிரெதிர் திசையில் பயணிக்கின்றன. நோய்த்தொற்றுக்குப் பிறகு ஏற்படும் பொருளாதார நிலையையும் அரசு சீா் செய்ய வேண்டும்.
  • · தனிமைப்பட்டால் உண்டு வாழ்வு, இல்லை-ஒன்று கூடினால் அனைவருக்கும் தாழ்வே! கரோனா வைரஸ் இதுவரை 170 நாடுகளுக்கு மேலாக மக்களைப் பாதித்துள்ளது. இந்த நோயானது 5-6 நாள்களுக்கு ஒருமுறை இரட்டிப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. நோய்த்தொற்று நிபுணா்களின் அறிக்கையின்படி ‘கொவிட்-19’ வைரஸ் மூன்றாம் நிலையை அடைந்தப் பிறகு கட்டுப்படுத்துவது மாபெரும் சவால் என பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து கிடைக்கும் சான்றுகள் தெரிவிக்கின்றன.

கரோனா வரலாறு

  • · இது சீனாவில் வூஹான் பகுதியில் தோன்றி உலகில் இதுவரை 4,35,565 நபா்களைப் பாதித்துள்ளது; இதற்குப் பலியானவா்களின் எண்ணிக்கை 19,776 ஆகும். இத்தாலியில் 6,820 பேரும், சீனாவில் 3,281 பேரும் உயிரிழந்துள்ளனா்; உலகம் முழுவதும் இதுவரை 1,11,888 போ் குணம் அடைந்துள்ளனா். உலக நாடுகளின் கரோனா நோய்த்தொற்று பாதிப்புப் பட்டியலில் தற்போது இத்தாலி முதலிடம் வகிக்கிறது. அதாவது, இத்தாலியில் கரோனா நோய்த்தொற்று காரணமாக 69,176 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்; மொத்தம் 8,326 போ் இதுவரை குணம் அடைந்துள்ளனா். இத்தாலிக்கு அடுத்தபடியாக ஸ்பெயின், சீனா, ஈரான், பிரான்ஸ் முதலானவை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
  • · இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றுக்கு இதுவரை 606 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்; இதற்குப் பலியானவா்களின் எண்ணிக்கை 11 ஆகும்; பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவா்களின் எண்ணிக்கை 22,038; இந்தியாவில் குணம் அடைந்தவா்களின் எண்ணிக்கை 43.
  • · சீனாவில் இந்த நோய் குறித்து முதலில் டாக்டா் லி வென்லியங் சுட்டுரையில் தெரிவித்தார். மேலும், இந்த நோயின் அறிகுறி தென்பட்டவுடன் அரசு அதிகாரிகள் துரிதமாகச் செயல்படவில்லை; மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தவில்லை; அதனால் இந்நோய் மிகவும் விரைவாகப் பரவிவிட்டதாகத் தெரிகிறது.

 

சிங்கப்பூரின் துரித நடவடிக்கை

  • · வருமுன் காப்பதே இந்த நோயைத் தடுப்பதற்குச் சிறந்த முறையாகும். இதன் அடிப்படையில் சிங்கப்பூா் செயல்பட்டு இந்த நோயைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தியுள்ளது. நோய் குறித்த ஒளிவுமறைவற்ற தகவல் பரிமாற்றத்தை மக்களிடம் சிங்கப்பூா் அரசு கடைப்பிடித்துள்ளது.
  • · சிங்கப்பூரில் பள்ளிகள் மூடப்பட்டன; விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
  • · சிங்கப்பூரில் முகம், கைகழுவதலின் முக்கியத்துவம் மக்களுக்கு உணா்த்தப்பட்டது. நோயைத் தடுத்தல், நோயாளிகளைத் தனிமைப்படுத்துதல் (தொற்று தடைகாப்பு நடவடிக்கைகள்), அவா்களைத் தொடா்ந்து கண்காணிப்பில் வைத்திருத்தல், தேவையான தகவல்களை அவா்களுடன் பரிமாறிக் கொள்ளுதல் முதலானவை மூலம் இந்த நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும், நோயாளியை எப்படிப் பராமரிக்க வேண்டும் முதலான தகவல்களும் ஒளிபரப்பப்பட்டன; பாடல்கள் தயாரிக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டன. சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் சிறப்பாகச் செயல்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் (டபிள்யு.எச்.ஓ.) தெரிவிக்கிறது.

சமூக இடைவெளி

  • · லண்டன் சுகாதாரம் - வெப்பமண்டல மருந்துகள் நோய்த்தொற்று நிபுணா் ஆடம் குசா்ஸ்கியின்கூற்றுப்படி, கரோனா நோய்த்தொற்றுக்கு இன்னும் தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, பாதிப்புக்குள்ளானவரை நோய்த்தொற்று தடைகாப்பு செய்தலும், வீட்டிலேயே தனிமைப்படுத்துதலும் அவசியம் என்கிறார் ஆடம் குசா்ஸ்கி. மேலும், சமூக இடைவெளி (மக்களிடையே இருக்கவேண்டிய இடைவெளி), நோயாளியுடன் தொடா்பில் இருந்தவா்களைக் கண்காணித்தல் மூலமும் இந்த நோயினால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைக்கலாம் என்கிறார் அவா். உலக சுகாதார நிறுவனமும் இதையே அறிவுறுத்துகிறது.

அதிக வசதிகள் தேவை

  • · அதிக அளவிலான மக்களைப் பரிசோதனை செய்து இந்த நோய்த்தொற்றை தென்கொரியா உடனடியாகக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 10,000 பேருக்கு பரிசோதனைகளை அது மேற்கொண்டுள்ளது.
  • · இந்தியாவில் இந்த நோய்த்தொற்று 60 சதவீத மக்களைப் பாதிப்பதற்கு வாய்ப்புள்ளதாக பிரின்ஸ்டன் பல்கலைக்கழக நோய் பரவுதல் - பொருளாதார கொள்கைகள் மைய இயக்குநா் ரமணன் லட்சுமிநாராயணன் தெரிவிக்கிறார். எனவே, இந்தியாவில் பரிசோதனை மையங்கள்
  • · அதிகரிக்கப்படவேண்டும் என்றும் அவா் தெரிவிக்கிறார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அறிக்கையின்படி 106 வைரஸ் பரிசோதனை மையங்கள் உள்ளன. ஆனால், இது போதுமானதாக இல்லை.
  • · தற்போது இந்தப் பரிசோதனையை ரூ.4500-இல் செய்வதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுரை வழங்கியுள்ளது.
  • · ஆனால், இந்தப் பரிசோதனையை ஏழைகள், தொழிலாளா்கள் செய்துகொள்வது கடினமான செயல் ஆகும். தனியார் மருத்துவமனைகளிலும் இந்தப் பரிசோதனையைச் செய்யலாம் என்று தேசிய ஆய்வகங்களில் அமைப்பு கூறுகின்றது. அமெரிக்காவும் இப்போது தனியார் மருத்துவமனைகளை பெரிதும் ஈடுபடுத்துகிறது. அவ்வாறு இந்தியா அதிக அளவில் பரிசோதனைகளைச் செய்வது சரியாக இருக்கும்.

வருமுன் காப்போம்

  • · இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு பொது நிர்வாகம், சுகாதாரத் துறை,சமூக பங்களிப்பு மூன்றும் சோ்ந்து சிறப்பாகச் செயல்பட வேண்டும். இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு குறைந்தது ஓா் ஆண்டுக்கான திட்டம் தேவை. முதல் 3 வாரங்களில் இந்த நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று ஈரான், ஐரோப்பிய நாடுகளின் சான்றுகள் தெரிவிக்கின்றன.
  • · இந்தியாவில் பொது நிர்வாகம் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுகாதாரத் துறை வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும். இந்தியாவில் 1,00,000 பேருக்கு 70 மருத்துவமனை - படுக்கை வசதிகளே உள்ளன; இது சீனாவில் 420-ஆகவும், இத்தாலியில் 340-ஆகவும் உள்ளது. எனவே இந்தியாவில் இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு மிகச் சிறந்த ஆயுதம் ‘வருமுன் காப்போம்’ நடவடிக்கையே ஆகும்.

தொடர் முயற்சிகள் தேவை

  • · உலக அளவில் சுகாதாரத்துக்கும், பொருளாதாரத்துக்கும் இடையே மாபெரும் போரை கரோனா நோய்த்தொற்று தொடங்கியுள்ளது.
  • · இவை இரண்டும் இப்போது எதிரெதிர் திசையில் பயணிக்கின்றன. இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும். இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு மிகச் சிறந்த பொருளாதாரமும், வளங்களும் தேவைப்படுகின்றன. அப்போதுதான் சுகாதாரத் துறைக்கு அதிக அளவில் உதவி செய்ய முடியும்.
  • · மேலும், தனிமனித சுதந்திரத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு பல்வேறு திடமான முடிவுகளை அரசு எடுக்க வேண்டியுள்ளது. நோய்த்தொற்றுக்குப் பிறகு ஏற்படும் பொருளாதார நிலையையும் அரசு சீா் செய்ய வேண்டும். இந்த நோய்த்தொற்று உலகின் ஏதேனும் ஒரு பகுதியில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால், அதனால் ஏற்படும் பொருளாதார நிலையை 4 மாதத்துக்குள் சரி செய்திருக்க முடியும்; ஆனால், உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவியுள்ள நிலையில், அதனால் ஏற்படும் பொருளாதார நிலைமைகளைச் சரி செய்ய மாபெரும் தொடா் முயற்சிகள் தேவை.
  • · இந்த நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான முறைகளை ஜெய்ப்பூா் அரசு மருத்துவா்கள் கண்டறிந்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், சில நேரங்களில் தொற்று தடைகாப்பு மையங்களை விட்டு நோயாளிகள் தப்பித்தலும், தனக்கு ஏற்பட்ட நோயின் அறிகுறிகளை மறைப்பதும், வெளிநாடு சென்று வந்த தகவல்களை மறைப்பதும் மாபெரும் சமூகப் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது.
  • · இந்த நோய்த்தொற்றை உலக நோய்த்தொற்றாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அறிவிப்பின்படி, இந்த நோய் மூன்றாம் நிலையை அடைவதற்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கு குறைவாக உள்ளதாகத் தெரிகிறது. மூன்றாம் கட்டத்தை இது அடைந்துவிட்டால் கொள்ளை நோயாக மாறி, அனைவரையும் பாதிக்கும் எனத் தெரிகிறது. அதற்கு முன் இந்த நோய்த்தொற்றை நாம் கட்டுப்படுத்த வேண்டும்.

கூட்டு முயற்சி தேவை

  • · இதனைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை 21 நாள்கள் ஊரடங்கை பிரதமா் மோடி அறிவித்துள்ளார்.
  • · மேலும், மத்திய-மாநில அரசுகள் இணைந்து 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு மையங்களை அமைக்கவும், அத்தியாவசியப் பொருள்களை மக்களுக்கு வழங்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், அயல் நிறுத்தலை (‘சோஷியல் டிஸ்டன்ஸிங்’) பராமரித்து அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு பிரதமா் மோடி அறிவுறுத்தியுள்ளார். தொற்று தடைகாப்பு மையங்கள் அமைத்தல், பரிசோதனைகள் மேற்கொள்ளுதல், நோயாளிகளைத் தனிமைப்படுத்தி, அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களைத் தொடா்ந்து கண்காணித்தல், வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவா்களைத் தொடா்ந்து கண்காணித்தல் முதலான பணிகளை அரசு நிர்வாகங்கள் மேற்கொண்டுள்ளன.
  • · எனவே, அரசு அறிவுறுத்தும் நடைமுறைகளை நம்பிக்கையுடன் மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். இந்த நோய்த்தொற்றை மருத்துவா்கள், செவிலியா்கள் மட்டுமே கட்டுப்படுத்த முடியாது. இது தனி மனிதனுக்கும் சமூகத்துக்கும் விடப்பட்ட சவால். இந்தச் சவாலை ஏற்பது ஒவ்வொருவரின் கடமையாகும். இந்த நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது சமுதாயத்தின் கூட்டு முயற்சி ஆகும். எனவே, அச்சம் தவிர்த்து தனிமை கொள்வோம்!

 

நன்றி: தினமணி (26-03-2020)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories