- கர்னாடக இசையில் 400-க்கும் மேற்பட்ட கத்தோலிக்கக் கிறிஸ்தவப் பாடல்களை இயற்றியவர் செல்லையா. ஆங்கிலப் பேராசிரியர், எழுத்தாளர், திராவிட இயக்கச் சிந்தனையாளர் எனப் பன்முகம் கொண்ட ஆளுமை அவர். சிறிய வட்டத்துக்குள் பெரிய சாதனைகள் புரிந்துகொண்டிருந்த செல்லையாவுக்கு சென்னையின் குருக்குள் லூத்தரன் இறையியல் கல்லூரி முனைவர், கலாரத்னா பட்டம் வழங்கிக் கௌரவித்தது.
- இசைப் பயணத்தின் உச்சகட்டமாக, அவரது மறைவுக்கு ஓராண்டுக்கு முன் வீரமாமுனிவரின் ‘தேம்பாவணி’யில் உள்ள 20 பாடல்களுக்கு இசையமைத்து வெளியிட்டார்.
- கர்னாடக இசையில் கிறிஸ்தவப் பாடல்கள் இயற்றியதும், கடவுளைப் பாடிக்கொண்டே திராவிட இயக்கத்தில் பங்கெடுத்ததும் என செல்லையாவின் வாழ்க்கை சுவாரஸ்யம் நிரம்பியது.
- கர்னாடக இசை மேல் செல்லையாவுக்கு ஏற்பட்ட காதல் மயக்கம், அவரது இளம் பருவத்தில் தினமும் அதிகாலை திருப்பலியை முடித்துவிட்டு, அருகே உள்ள வெள்ளை விநாயகர் கோயிலுக்கு ஓடவைத்தது. திண்டுக்கல்லில் எங்கெங்கு கோயில்கள் உள்ளனவோ அங்கெல்லாம் அவரைப் படையெடுக்க வைத்தது.
- கோயிலில் ஒலிக்கும் பக்திப் பாடல்கள் மீது செல்லையாவுக்கு அலாதி ஆர்வம். திருவிழாக்களில் பக்தர்களோடு பக்தராக அமர்ந்து பாடல்களை மெய்ம்மறந்து கேட்கும் செல்லையாவின் இயல்பு, அவரது குடும்பத்தினரையும் சக கத்தோலிக்கர்களையும் திகைப்பில் ஆழ்த்தினாலும் அவர் அந்த ஈர்ப்பின் மயக்கத்திலேயே திளைத்திருந்தார்.
அமுதே வழியே அகல் விளக்கே
- திருச்சி தூய வளனார் கல்லூரிக்குச் சென்று, தான் தேர்ந்தெடுத்த ஆங்கில இலக்கியப் பாடங்களைக் கேட்டாரோ இல்லையோ கல்லூரியின் எதிரே அமைந்திருக்கும் கோயிலில் நடைபெறும் கச்சேரிகளை அதிகம் கேட்டார். அக்காலகட்டத்தில்தான், சாருகேசி ராகத்தில் அமைந்த ‘அமுதே வழியே அகல் விளக்கே’ என்ற தனது முதல் பாடலை இயற்றினார்.
- மேற்கத்திய இசை வடிவையே வழிபாட்டுக்குப் பயன்படுத்திய அக்கல்லூரியின் லூர்து அன்னை ஆலயத்தில் என்றும் இல்லாத வழக்கமாக ஆர்மோனியம், மிருதங்கத்துடன் இப்பாடலை அரங்கேற்றினார். அன்று தொடங்கிய பயணம் அவர் மறையும் வரை தொடர்ந்துகொண்டிருந்தது.
- மற்ற கிறிஸ்தவப் பாடல்களில் பெருமளவு இடம்பெறும் ‘இயேசு’ என்ற வார்த்தை, செல்லையா இயற்றிய பெரும்பாலான பாடல்களில் பயன்படுத்தப்பட்டதில்லை. ‘இறைவன்’, ‘ஆண்டவர்’ போன்ற வார்த்தைகளையே அதிகமாகக் கையாண்டார். இதனால்தான், அவரது பாடல்கள் ஒரு குறிப்பிட்ட மதத்துக்கானதாக இருக்கவில்லை.
- இதைப் பற்றிக் கேட்டபோது, “எனது பாடல்கள் மதச்சார்பற்ற கிறிஸ்தவப் பாடல்கள்” என்றார். ‘சங்கீதங்கள்’ என்ற விவிலியப் பகுதியின் அடிப்படையில் பூர்வி கல்யாணி ராகத்தில் இயற்றிய ‘ஆண்டவர் என் ஆயன்’ பாடலும், தாகூரின் கவிதையைத் தழுவி தேஷ் ராகத்தில் இயற்றிய ‘ஆயிரம் நரம்பு உன் யாழினிலே’ ஆகிய பாடல்கள் செல்லையாவின் பாடல்களில் மெச்சத்தக்கவை.
தமிழ் கிறிஸ்தவ இசையின் தூதர்
- சென்னை லயோலா கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக 30 ஆண்டு காலத்திலும், கல்லூரியின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராகப் பணிபுரிந்த காலத்திலும் பல்வேறு தமிழ் இசை, பல்சமய ஆய்வு, நாட்டுப்புற இசை வடிவங்கள் சார்ந்து சொற்பொழிவு ஆற்றியிருக்கிறார்.
- 1996-ம் ஆண்டு இசையின் தலைநகரான ஆஸ்திரிய நாட்டின் வியென்னா, இன்ஸ்ப்ரூக் நகரங்களில் நடத்தப்பட்ட பன்னாட்டு சமயம் சார்ந்த இசை காங்கிரஸானது செல்லையாவை கர்னாடக இசையில் இயற்றப்பட்ட தமிழ் கிறிஸ்தவப் பாடல்கள் குறித்து சொற்பொழிவு ஆற்றுமாறு அழைப்புவிடுத்தது. அக்கருத்தரங்கில் செல்லையா அரங்கேற்றிய மோகனம், பாகேஸ்வரி, சுனாதனவினோதினி, சண்முகப்பிரியா ராகங்களில் அமைந்த தமிழ்ப் பாடல்களை அந்நாட்டு மக்கள் எல்லோரும் கேட்க வேண்டுமென வானொலியில் நேரலையாக ஒலிபரப்பியது.
- தமிழ் கிறிஸ்தவ இசையின் தூதராக அவர் சென்றிருந்தாலும், இந்நிகழ்வின் மூலம் தமிழ் இசையின் தொன்மையையும் பெருமையையும் அவர் ஐரோப்பிய மக்களுக்கு எடுத்துக்காட்டினார். அக்கருத்தரங்கின் முடிவில் செல்லையாவின் பேட்டியை பிபிசி வானொலி ஒலிபரப்பியது. அந்தப் பேட்டியில், “கர்னாடக இசைக்கும் மேற்கத்திய இசைக்கும் தொடர்பு ஏதேனும் உள்ளதா? ஐரோப்பியர்கள் கர்னாடக இசையைப் புரிந்துகொள்வார்களா?” என்ற கேள்விக்கு, “இசை என்பது புரிந்துகொள்ளக்கூடிய பொருள் அல்ல; அது மனிதகுலத்தினர் எவராக இருந்தாலும் உணர்ந்து ரசிக்கப்படக்கூடிய உன்னதக் கலை வடிவம்” என்று பதில் சொன்னார்.
- ஜெர்மனியைச் சேர்ந்த கர்னாடக இசை ஆராய்ச்சியாளர் லுட்விக் பெஸ்க் தொகுத்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட ‘தி ஆக்ஸ்போர்டு இல்லஸ்டிரேடட் கம்பேனியன் டு சவுத் இந்தியன் கிளாஸிக்கல் மியூசிக்’ என்ற புத்தகத்தில், பேராசிரியர் செல்லையா சுயமாக கர்னாடக இசையைக் கற்றுக்கொண்டவர் என்றும், 400-க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியவர் என்றும், தென்னிந்திய இசை வடிவங்களில் கமகம், சுத்த ராகங்கள், முறையான ஒலிப்பெயர்ச்சி போன்றவை இந்திய மற்றும் மேற்கத்திய இசை வடிவங்களிலிருந்து கர்னாடக இசை எங்ஙனம் மாறுபடுகிறது என்பதில் ஆராய்ச்சிசெய்கிறார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடவுளும் திராவிடர் கழகமும்
- கத்தோலிக்கக் கிறிஸ்தவ மரபில் தோன்றி, இசைப் பணியைத் தனது வாழ்க்கையாக ஏற்றுக்கொண்ட செல்லையா, திராவிடர் கழகத்தில் இலக்கியப் பணியாற்றியது பலரது புருவங்களை உயர்த்தியது. அவரது இலக்கியப் பணி மென்மேலும் மெருகு பெற்று, திராவிடர் கழகத்தின் பருவ வெளியீடான ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ இதழின் ஆசிரியர் குழுவில் அவரைப் பொறுப்பேற்க வைத்தது. இயேசுவையும் மரியன்னையையும் எழுதிய கைகள், கடவுள் மறுப்புக் கொள்கை இதழில் ஆழ்ந்த அறிவுசார் கட்டுரைகளையும் வரைந்தன.
- அவர் உயிரினும் மேலாக பாவித்த தமிழ் இறை இசைப் பணிக்கு எள்ளளவும் குந்தகம் இன்றி, திராவிட இயக்கக் கொள்கையை எவ்வித மனமாச்சரியமும் இல்லாமல் ஏற்றுக்கொள்ள இயலும் என்பதை செல்லையா நிறுவியிருக்கிறார்.
- கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர்கள்தான் திராவிடர் கழகம் போன்ற அறிவுசார் அமைப்புகளில் பணியாற்ற முடியும் என்ற மாயையையும் அவர் தகர்த்தெறிந்திருக்கிறார். கிறிஸ்துவின் சீடனாய் வாழ எவ்வளவு முயற்சி எடுத்தாரோ அதே அளவு முயற்சியில் பெரியாரின் கொள்கைகளைக் கொண்டுசென்றதிலும் வெற்றிபெற்றிருக்கிறார்.
- செல்லையா இசையை மட்டுமே கெட்டியாகப் பிடித்துக்கொண்டவர் அல்ல. தீவிரமான பேராசிரியர் மட்டும் அல்ல. அவருக்கு இன்னும் பல சுவாரஸ்யமான முகங்கள் இருந்தன. அனைத்து வயதினருடனும் சகஜமாகப் பழகும் சுபாவம் அவருக்கு இருந்தது. யாரையும் புண்படுத்தாத நகைச்சுவை உணர்வால் எல்லோரையும் தன் பக்கம் ஈர்த்தார். அவர் ஒரு டென்னிஸ் விளையாட்டு வீரரும்கூட. தன் கடைசி காலகட்டத்தில் இளைஞர்போல சமூக வளைதளங்களில் சமூகப் பிரச்சினைகளை நகைச்சுவையோடு பகடிசெய்துகொண்டிருந்தார்.
- அவர் வயது 80 ஆக இருந்தாலும், இளவயதுக்காரர்களுடன் இளைஞராகவும், குழந்தைகளுடன் குழந்தையாகவும் பழக ‘வயது மறுப்பு உத்தி’களைப் பிரமாதமாகப் பயன்படுத்தினார். செல்லையாவுடன் நெருங்கிப் பழகிய உறவினர்களிடமும் நண்பர் வட்டங்களிடமும் அவரது மறைவு இன்னும் மனதில் பதியப்பெறாமலும் ஏற்றுக்கொள்ளப்படாமலும் உள்ளது!
நன்றி: இந்து தமிழ் திசை (10-12-2019)