- கர்ப்பக் காலத்தில் பெண்கள் மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகளில் தைராய்டு பரிசோதனையும் அவசியம். தைராய்டு குறைபாடு இருக்கிறதா எனப் பரிசோதித்து அதற்கான சிகிச்சையைப் பெறுவது நல்லது.
- கர்ப்பமான பெண்கள் பாதுகாப்பாகக் குழந்தை பெறவும், தாய் - சேய் ஆரோக்கி யத்துக்கும் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல திட்டங்களைச் செயல்படுத்திவருகின்றன. இதன் மூலம் தாய்-சேய் இறப்பு விகிதம் நம் நாட்டில் வெகுவாகக் குறைந்துள்ளது. கருவுற்ற பெண்களுக்குப் பொதுவான உடல் பரிசோதனையுடன் ரத்தச் சர்க்கரை, ரத்த அழுத்தம், ரத்த அணுக்கள், ரத்த வகை, ரத்தசோகை அளவைக் கண்டறியும் பரிசோதனைகளும் மேற் கொள்ளப்படுகின்றன. ஆனால், பெண்களுக்கு தைராய்டு நோய் களைக் கண்டறியும் பரி சோதனைகள் இன்னும் பரவலாகச் சென்றடையாமல் இருப்பது அறியாமையே.
- உலக அளவில், 3-5% பெண்கள் கர்ப்பக் காலத்தில் ஹைபோ தைராய்டிசம் நோயினால் பாதிக்கப் படுகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை கர்ப்பக் காலத்தில் 11.07% பெண்களுக்கு ஹைபோ தைராய்டிசம் இருப்பது பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
ஹைபோ தைராய்டிசம்
- கர்ப்பக் காலத்தில் பல்வேறு தைராய்டு நோய்களும் மிகை தைராய்டு பாதிப்பும் ஏற்படும். இருப்பினும் ‘ஹைபோ தைராய்டிசம்’ எனப்படும் தைராய்டு குறை பாதிப்பினால் பெரும்பாலான கர்ப்பிணிகள் பாதிக்கப்படுகின்றனர். கர்ப்பிணிகளுக்கு ஹைபோ தைராய்டிசம் இருந்து, அதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால் அது கர்ப்பிணியையும் சிசுவையும் பாதிக்கும்.
- கர்ப்பக் காலத்தில் பெண்ணின் உடலில், உடலியக்கங்களில் பல மாறுதல்கள் ஏற்படும். அதேபோல் தைராய்டு சுரப்பியிலும் அது சுரக்கும் ஹார்மோன்களின் அளவுகளிலும் மாறுதல் நிகழும். குறிப்பாகக் கர்ப்பமான முதல் மூன்று மாதங்களில் கர்ப்ப கால ஹார்மோனின் தூண்டுதலால் (ஹியூமன் கோரியானிக் கோனாடோட்ரோபின்(hCG)) டி 4 ஹார்மோனின் அளவு சற்று அதிகரிக்கும். மேலும், இதனுடன் தைராக்ஸினோடு சேரும் புரதத்தின் அளவு அதிகரிப்பதால் கருவுற்ற பெண்களுக்கு டி3 மற்றும் டி4 ஆகிய இரண்டு தைராய்டு ஹார்மோன்களின் அளவுகளுமே சற்று அதிகரிக்கும்.
காரணங்கள்
- உணவில் உள்ள அயோடின் குறைவதால் ஹைபோ தைராய்டிசம் ஏற்படும்.
- உடலில் உருவாகும் எதிர்ப் புரதத்தினால் ஏற்படுகிற தன்னுடல் தாக்கு (ஆட்டோ இம்யூன் தைராய்டிடிஸ்) நோயினால் ஏற்படலாம்.
- கர்ப்பத்திற்கு முன் ‘சப் கிளினிக்கல் ஹைபோ தைராய்டிசம்’ உள்ள பெண் களுக்குக் கர்ப்பக் காலத்தில் ஹைபோ தைராய்டிசம் ஏற்படக் கூடும்.
பரிசோதனைகள்
- வழக்கமான அடிப்படைப் பரிசோதனைகளுடன், டி3 (T3) மற்றும் டி4 (T4) எனப்படும் தைராய்டு ஹார்மோன்களின் அளவு, டி.எஸ்.ஹெச். எனப்படும் தைராய்டு சுரப்பியைத் தூண்டும் ஹார்மோனின் அளவு (Thyroid Stimulating Hormone Test), தைராய்டு பெராக்ஸிடேஸ் எதிர்ப் புரதத்தின் அளவு (TPO) ஆகியவற்றைக் கண்டறியும் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்.
- இந்தப் பரிசோதனைகளின் அடிப்படையில் தைராய்டு குறைபாட்டை உறுதி செய்ய வேண்டும். ‘அல்ட்ராசவுண்டு ஸ்கேன்’ எனப்படும் உணர்திறன் இமேஜிங் நுட்பப் பரிசோதனையையும் செய்துகொள்ளலாம்.
பாதிப்புகள்
- கருச்சிதைவு அடிக்கடி ஏற்படும்.
- பிரசவத்திற்குப் பின் அதிக ரத்தப்போக்கு ஏற்படும்.
- தசை வலி, பலவீனம் உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்படும். ரத்தச்சோகை, நஞ்சுக்கொடி பிறழ்வுகள் ஏற்படலாம்.
- மேலும், இதயப் பாதிப்புகள், ரத்த அழுத்தம் அதிகரித்து முன்-எக்லாம்ப்சியா எனும் பெரும் பாதிப்பைக் கொண்டு வரலாம்.
குழந்தைக்கு...
- தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பு குறைவதால் கருவின் வளர்ச்சி பாதிக்கப்படும். நரம்பியல் பாதிப்புகளும் உடல் வளர்ச்சி பாதிப்புகளும் ஏற்படலாம்.
- மூளை வளர்ச்சி குன்றுவதால் அறிவுத்திறன் குறைவுள்ள குழந்தைகளாக இவர்கள் பிறப்பார்கள். பிறவியிலேயே ஹைபோ தைராய்டிசம் கொண்ட குழந்தைகளாகப் பிறப்பார்கள்.
சிகிச்சை முறைகள்
- ஆரம்பநிலை ஹைபோ தைராய்டிசம் உள்ளவர்களுக்கு டி.எஸ்.ஹெச் ஹார்மோனின் அளவு அதிகரித்து, தைராய்டு பெராக்ஸிடேஸ் எதிர்ப் புரதமும் இருந்தால் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- வெளிப்படையான ஹைபோ தைராய்டிசம் ஏற்பட்டவர்களுக்கு ஆரம்பத்தில் ஹைபோ தைராய்டிசம் தன்மைக்கு ஏற்ப 1.6 முதல் 2 மைக்ரோகிராம் அளவுள்ள மருந்தை ஒரு கிலோ உடல் எடைக்கு எனக் கணக்கிட்டுச் சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.
- தினமும் 100 முதல் 150 மைக்ரோகிராம் அளவு வரை தைராக்ஸின் மருந்து, கர்ப்பிணிகளுக்குத் தேவைப்படலாம்.
- மீண்டும் டி.எஸ்.ஹெச் அளவைக் கண்டறி யும் பரிசோதனையை 4 முதல் 6 வாரங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும்.
கர்ப்பக் காலத்தில்...
- கர்ப்பிணிகள் தங்களின் முதல் மூன்று மாதக் கர்ப்பக் காலத்தில் டி.எஸ்.ஹெச் அளவை 2.5mIU/L என்கிற அளவில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
- அதன் பிறகு கர்ப்பிணிகள் தங்கள் இரண் டாவது மற்றும் கடைசி மூன்று மாதக் கர்ப்பக் காலத்தில் டி.எஸ்.ஹெச் அளவை 3mIU/L என்கிற அளவில் வைத்திருக்க வேண்டும்.
- பெண்ணின் கருப்பையில் வளரும் சிசுவால் முதல் 20 வாரங்கள் வரை தானாகவே தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்ய முடியாது. எனவே, இந்த நாள்களில் தாயின் தைராய்டு ஹார்மோன் இவர்களுக்குத் தேவைப்படும்.
ஹைபோ தைராய்டிசம் உள்ள பெண்கள்
- கர்ப்பம் அடைவதற்கு முன்பே ஹைபோ தைராய்டிசத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் கர்ப்பக் காலத்தில் தாங்கள் உட்கொள்ளும் ஹைபோ தைராய்டிசத்துக்கான தைராக்ஸின் மருந்தின் அளவை மருத்துவரின் ஆலோசனை யைக் கேட்டு அதிகரிக்க வேண்டும். ஏனென்றால், கர்ப்பக் காலத்தில் தைராய்டு ஹார்மோனின் தேவை அதிகரிக்கும்.
வரும் முன் காப்பது
- ஒவ்வொரு கர்ப்பிணியும் தினமும் 250 மிகி அளவு அயோடின் சத்து தங்களுக்குக் கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. உணவின் மூலம் இந்த அளவைப் பூர்த்திசெய்ய முடியாதவர்கள், மருத்துவர்களின் பரிந்துரைப்படி அயோடினைப் பயன்படுத்த வேண்டும்.
- பிரசவத்திற்குப் பிறகும் தாய்மார்களுக்கு டி.எஸ்.ஹெச் முதலான தைராய்டு பரிசோதனைகளை ஆறு வாரத்தில் செய்வதுடன் குழந்தையின் உடல் நிலை யையும் கண்காணிக்க வேண்டும்.
- புரோக்கோலி, முட்டைகோஸ், காலிஃபிளவர், முள்ளங்கி, டர்னிப், பிரஸ்ஸல்ஸ் முளைகள், தோட்டக்காய் இலைகள், கடுகு இலைகள் போன்ற காய்கறிகளை தைராய்டு பிரச்சினைகள் உள்ளவர்கள் தவிர்த்துவருகிறார்கள். ஆனால், இந்த உணவு வகைகளை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டியதில்லை; குறைந்த அளவு சாப்பிடலாம் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
நன்றி: இந்து தமிழ் திசை (22 – 06 – 2024)