TNPSC Thervupettagam

கற்பிக்கப்படும் கல்வி தரமாக இருக்க வேண்டாமா?

December 25 , 2024 7 hrs 0 min 27 0

கற்பிக்கப்படும் கல்வி தரமாக இருக்க வேண்டாமா?

  • ஆறு முதல் 14 வயதுள்ள குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி அளிக்கும் சட்டம் (Right to Education Act), 2019-ம் ஆண்டு மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டு, அடுத்த கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இதன்படி, 1 முதல் 8-ம் வகுப்பு வரை தேர்வு கிடையாது. இதில் 2019-ம் ஆண்டு மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. மாநில அரசுகள் விரும்பினால் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை நடத்தலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டது.
  • குஜராத், டெல்லி, மத்தியப் பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் தேர்வு முறையை கொண்டு வந்தன. தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, சைனிக் பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு மீண்டும் தேர்வு முறையை கொண்டு வந்து சமீபத்தில் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து இந்த விவகாரம் மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
  • தேர்வு இல்லாமல் தேர்ச்சி வழங்கப்படுவதால் பள்ளிக் கல்வியில் பயில வேண்டிய அடிப்படைக் கல்வியில் மாணவர்கள் பின்தங்கி விடுகின்றனர். இது மாணவர்கள் உயர்கல்வியை நெருங்கும்போது பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது மத்திய அரசின் வாதம். ஆனால், 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு தேர்வு முறையை கொண்டு வந்தால் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்துவிடும் என்பது தமிழக அரசின் வாதம். எனவே, தமிழகத்தில் தேர்வு இல்லாத முறையே தொடரும் என்று கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
  • 8-ம் வகுப்புக்கு கீழ் பயிலும் மாணவர்கள் அடிப்படை அறிவை வலுவாக பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டு வரப்படும் இந்த நடைமுறைக்கு இடைநிற்றல் அதிகரிக்கும் என்பது சரியான பதிலாக அமையாது. கல்வித்தரத்தை தியாகம் செய்து மாணவர்களை தக்க வைப்பது எந்தவிதத்திலும் பலனளிக்காது. மேலும், மத்திய அரசின் உத்தரவில், தேர்ச்சி பெறாத மாணவர்களை வெளியில் அனுப்ப வேண்டும் என்று சொல்லவில்லை. அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, 2 மாதங்களில் மறுதேர்வு நடத்தி வாய்ப்பளிக்க வேண்டும். அதிலும் தேர்ச்சி பெறாவிட்டால் அதே வகுப்பில் அவர்கள் தேர்ச்சி பெறும் வரை கல்வி புகட்ட வேண்டும் என்றுதான் கூறப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்பதால் மாணவர்கள் கற்பதிலும், ஆசிரியர்கள் கற்பிப்பதிலும் சுணக்கம் இருப்பதாக புகார் இருந்து வருகிறது. அதே மாணவர்கள் 9, 10, 12 என மேல்நிலைக் கல்விக்கு வரும்போது கீழ் வகுப்புகளில் கற்றுத் தேற வேண்டியதை அறியாமல் வருகின்றனர். அவர்களுக்கு அடிப்படைக் கல்வியையும் சேர்த்து கற்பிக்க வேண்டிய இரட்டை பொறுப்பு மேல்நிலைக் கல்வியை கற்பிக்கும் ஆசிரியர்களின் தலையில் விழுகிறது. எனவே, கல்வித்தரத்தை முன்வைத்து எடுக்கப்படும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடாமல் மாநில அரசு ஏற்றுக் கொண்டு அமல்படுத்துவதே தரமான மாணவர்களை உருவாக்க வழிவகுக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (25 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories