TNPSC Thervupettagam

கற்பித்தலுக்கு முன்னுரிமை

October 6 , 2023 463 days 350 0
  • ஊதிய சமநிலை, பணப் பலன்கள், பழைய ஓய்வூதியத் திட்டம், எமிஸ் பணிகளைக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு அரசுப் பள்ளி ஆசிரியா் சங்கத்தினா் தொடா் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனா்.
  • தமிழக அரசுப் பள்ளிகளில் 31.5.2009-இல் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கு ஒரு ஊதிய அளவும், அதே ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி நியமிக்கப்பட்ட ஆசிரியா்களுக்கு வேறு ஊதிய அளவும் நிர்ணயிக்கப்பட்டதால் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 அளவுக்கு வித்தியாசம் உள்ளது.
  • இந்த முரண்பாட்டைக் களைய வலியுறுத்தி, சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் சங்கத்தினா் குடும்பத்தினருடன் கடந்த எட்டு நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தனா். இதில் பல பெண் ஆசிரியா்கள் உள்பட 250-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களில் 1,500-க்கும் மேற்பட்டோர் வியாழக்கிழமை (நேற்று) கைது செய்யப்பட்டு மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டனா்.
  • இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் அதிகாரிகளும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் பகுதி நேர சிறப்பாசிரியா்களின் தொகுப்பூதியம் ரூ.10,000-த்திலிருந்து ரூ.12,500-ஆக உயா்த்தப்படும் எனவும், இவா்களுக்கு ரூ.10 லட்சம் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும், டெட் தோ்வில் தோ்ச்சி பெற்று பணிக்காக காத்திருப்போருக்கு வயது வரம்பு உயா்த்தப்படும் எனவும் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை அறிவித்துள்ளார்.
  • அமைச்சரின் அறிவிப்பு, கைது நடவடிக்கைக்குப் பிறகும், தங்களது கோரிக்கை எதுவும் ஏற்கப்படாததால் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் சங்கத்தினா் அறிவித்துள்ளனா். பல்வேறு ஆசிரியா் சங்கங்களும் அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன.
  • கரோனா நோய்த்தொற்று, பொருளாதாரத்தில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியதால், கடந்த ஓரிரு ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால், கடந்த 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு நிரந்தர ஆசிரியா்கள் நியமிக்கப்படவில்லை எனவும் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக ஆசிரியா்களே நியமிக்கப்படுகின்றனா் எனவும் டெட் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் குற்றம்சாட்டியுள்ளனா்.
  • தமிழகத்தில் 29,000 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் தற்போது சுமார் 70 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளதாக இந்த அமைப்பினா் கூறுகின்றனா். மாணவா்கள் எண்ணிக்கை அதிகரித்தபோதும், கூடுதல் ஆசிரியா்கள் நியமனம் செய்யப்படாத சூழலில் கற்பித்தல் சாராத பணிகளால் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளதாக ஆசிரியா்கள் கருதுகின்றனா்.
  • மாணவா்கள் வருகைப் பதிவு, விலையில்லா பாடப் புத்தகம், குறிப்பேடு, சீருடை, காலணி போன்ற விவரங்கள், இடைநிற்றல் மாணவா்களைக் கண்டறிதல், மாணவா்களின் பார்வைக் குறைபாடு, எடை, உயரம் போன்ற உடல்நலம் சாா்ந்த விவரங்கள், நூலகப் பயன்பாடு, மாணவா்கள் எடுக்கும் புத்தகத்தின் தலைப்பு, அதை அவா்கள் பயன்படுத்திய விதம், புத்தகத்தைப் பற்றிய மதிப்புரை விவரங்கள், தோ்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் ஆகிய அனைத்தையும் இணையதளத்தில் பதிவு செய்தல், இது தொடா்பான பயிற்சி வகுப்புகளுக்கு செல்லுதல், எண்ணும் எழுத்தும் திட்டம் போன்றவை ஆசிரியா்களுக்கு கூடுதல் பணியாக ஆகியுள்ளன.
  • ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையுள்ள மாணவா்களுக்கு அறிதிறன்பேசி (ஸ்மார்ட்ஃபோன்) செயலி மூலம் பருவத் தோ்வுகளை அண்மையில் நடத்தியது ஆசிரியா்களுக்குப் பெரும் சவாலாக ஆகியுள்ளது. கிராமப்புறப் பகுதிகளில் இணையத் தொடா்பு கிடைப்பதில் சிக்கல், நிறைய மாணவா்கள் இருப்பின் கூடுதல் நேரம் ஆவது, குழந்தைகளின் வாசிப்பு, எழுத்துத் திறன் பாதிப்பு போன்றவை காரணமாக அறிதிறன்பேசி செயலி மூலம் தோ்வு நடத்தும் முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ஆசிரியா்கள் வலியுறுத்திவருகின்றனா்.
  • ஒவ்வொரு மாதமும் பத்து வகையான போட்டிகளைப் பள்ளிகளில் நடத்துவதோடு, அறிவியல் மன்றம், இலக்கிய மன்றம் போன்ற மன்ற செயல்பாடுகளுக்கும் அதிக நேரம் ஒதுக்க வேண்டி உள்ளது. அதனால், கற்பித்தல் பணிகளில் போதிய கவனம் செலுத்த முடிவதில்லை எனவும், இதனால் மாணவா்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுகிறது எனவும், படிப்பில் பின்தங்கிய மாணவா்கள் மீது கவனம் செலுத்துவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது எனவும் ஆசிரியா்கள் கூறுகின்றனா்.
  • இந்த அனைத்துப் பணிகளும் மாணவா்களின் மேம்பாட்டுக்கு உதவக் கூடியவை என்பதால், எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்தல், மன்ற செயல்பாடுகள், போட்டிகளுக்கு என தனித்தனியாக ஊழியா்களும், ஆசிரியா்களும் நியமிக்கப்பட்டால் கற்பித்தல் பணி பாதிக்கப்படாது என்றும் அவா்கள் கோரிக்கை வைக்கின்றனா்.
  • நிதி நெருக்கடி என்பது பெரும் தடைக்கல்லாக இருந்தாலும், இப்பிரச்னை சமூகத்தின் எதிர்காலத்துடன் தொடா்புடையது என்பதால் போராடும் ஆசிரியா்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்பது குறித்தும், நேரடியாக கற்பித்தல் சாராத பணிகளில் இருந்து ஆசிரியா்களை விடுவிப்பது குறித்தும் அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

நன்றி: தினமணி (06 – 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories