TNPSC Thervupettagam

கலப்படப் பால்!

December 24 , 2019 1672 days 1263 0
  • மனிதனின் பேராசைக்கு அளவே கிடையாது. ஆனால், சக மனிதர்களின் உயிருடன் விளையாடுவதாக அந்தப் பேராசை இருப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாது.
  • கோடிக்கணக்கான மக்களின் குறிப்பாக, அனைத்துப் பொருளாதாரப் பிரிவுகளையும் சார்ந்த குழந்தைகளின் அடிப்படை உணவாக பால் இருந்து வருகிறது. அந்தப் பாலில் கலப்படம் செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மறுக்கப்படுகிறது என்பது மட்டுமல்லாமல், அவர்களது ரத்தத்தில் நச்சு கலக்கப்படுகிறது. 

கலப்படப் பால்

  • கடந்த ஐந்து ஆண்டுகளாகவே பாலில் காணப்படும் கலப்படம் குறித்து அவ்வப்போது ஆய்வுகள் வெளிவருகின்றன. 2015-இல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் பாலில் காணப்பட்ட ஸ்டார்ச்ஃபார்மலின், டிடர்ஜென்ட், ஹைட்ரஜன் பெராக்சைட் உள்ளிட்ட வேதிப் பொருள்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. நாடு தழுவிய அளவில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைச் சாலைகளில் ஆய்வு செய்யப்பட்டது. நுகர்வோர் நலனுக்கு எதிராக இத்தகைய கலப்படங்கள் செய்யப்படுவது குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
  • மகாராஷ்டிர மாநிலத்தில் 2014-இல் நடத்தப்பட்ட ஆய்வில்,  அங்கே உள்ள 90 பால் பண்ணைகளில்  எடுக்கப்பட்ட பாலின் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவை எல்லாமே ஏதாவது ஒரு வகையில் பாலில் கலப்படம் செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தின.
  • அந்தப் பால் பண்ணைகளில் சில, பிரபல நிறுவனங்களால் நடத்தப்படுபவை. அந்த நிறுவனங்களின் இலச்சினையுடன் (பிராண்ட்) சந்தைப்படுத்தப்படுபவை. நுகர்வோரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவை. அந்த நிறுவனங்கள் தங்களது விநியோகஸ்தர்கள் மீது குற்றம் சுமத்தி, கலப்படப் பழியிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள முயன்றன. அந்த நிறுவனங்களின் மீதுள்ள நம்பிக்கையால்தான் அந்தப் பாலை நுகர்வோர் விரும்பி வாங்கினர் என்பதால், அவர்களைப் போய்ச் சேரும்வரை  தங்களால் சந்தைப்படுத்தப்படும் பாலின் தரத்துக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டிய கடமை நிறுவனங்களுக்கு உண்டு. 

நடவடிக்கைகள்

  • இந்தப் பிரச்னை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மத்திய, மாநில அரசுகள், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துடன் இணைந்து, பாலில் செய்யப்படும் கலப்படத்துக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. 
  • ஏனைய உணவுப் பொருள்களில் செய்யப்படும் கலப்படங்களிலிருந்து பாலில் செய்யப்படும் கலப்படத்தைப் பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதிகபட்ச தண்டனை வழங்குவதாலேயே கலப்படம் குறைந்துவிடும் என்கிற எதிர்பார்ப்பும் சரியல்ல. ஏனைய மாநிலங்கள் உணவுக் கலப்படத்துக்கு ஆறு மாத சிறைத் தண்டனையும் அபராதமும்தான் விதிக்கின்றன.
  • ஏற்கெனவே கலப்படத்துக்கு அதிகபட்ச தண்டனையான ஆயுள் தண்டனை விதிக்கும் உத்தரப் பிரதேசம்,  ஒடிஸா, மேற்கு வங்கம் ஆகியவைதான் கலப்படத்தில் முன்னணியில் இருக்கின்றன.

புள்ளிவிவரம்

  • கலப்படம் செய்யப்படும் பால்தான் தேசிய அளவில் 70%  விற்கப்படுகிறது. ஆனால்,  பெரும்பாலும்  தண்ணீர் கலப்படமாக இருப்பதால் தண்ணீரில் காணப்படும் வேதிப் பொருள்கள்தான் பாலின் தரத்தைக் குறைக்கின்றன. 
    அண்மையில் ஓர் ஆய்வு அறிக்கை வெளியாகியிருக்கிறது. கடந்த மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 50,000 பேருக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 1,100 நகரங்களிலிருந்து  பாலின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
  • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இந்த ஆய்வை தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம்  நடத்தியது.
  • அந்த ஆய்வில் 13 கலப்படப் பொருள்கள், 3 மிக முக்கியமான வேதிப் பொருள்கள் பரிசோதிக்கப்பட்டன. பூச்சிக்கொல்லி மருந்து, ஆஃப்லாடாக்ஸின் எம்-1, ஆன்ட்டிபயாட்டிக்ஸ் ஆகிய மூன்று வேதிப் பொருள்களும் அந்த மாதிரிகளில் சோதனை செய்யப்பட்டன.
  • பீதியை ஏற்படுத்தும் வகையில் கலப்படம் இல்லை என்றும், மனிதர்களின் ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் எதுவும் இல்லை என்றும் அந்த ஆய்வு தெரிவித்தது என்றாலும், தனியார் நிறுவனத்தின் அந்த ஆய்வு முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இல்லை.
  • இப்போதுதான் முதன்முறையாக பாலில் ஆஃப்லாடாக்ஸின் எம்-1 காணப்படுவது தெரியவந்திருக்கிறது. ஆஃப்லாடாக்ஸின் எம்-1 என்பது, பொதுவாக மாட்டுத் தீவனங்களிலிருந்தும்மாடுகளுக்கு வழங்கப்படும் வைக்கோலிலிருந்தும் பாலில் கலந்திருக்க வேண்டும். 

மாதிரிகளின் ஆய்வுகள்

  • மிக அதிக அளவிலான ஆஃப்லாடாக்ஸின் எம்-1 -இன் அளவு தமிழ்நாடு, தில்லி, கேரளம் ஆகிய மாநிலங்களிலிருந்து எடுக்கப்பட்ட  மாதிரிகளில் காணப்பட்டிருப்பதும் நம்மை  நிமிர்ந்து உட்கார வைத்திருக்கிறது.
  • பதப்படுத்தப்படும் பாலில் கலப்படம்  செய்யப்படுவதைக் கண்டறிந்து, தண்டனை மூலம்  தடுத்துவிட முடியும். ஆனால், மாட்டுத் தீவனத்திலிருந்தும், வைக்கோல் போன்ற பொருள்களிலிருந்தும் மாடுகளின் ரத்தத்தில் கலந்துவிடும் ஆஃப்லாடாக்ஸின் எம்-1-க்கு யாரைக் குற்றப்படுத்துவது என்கிற கேள்வி எழுகிறது.
  • ஆஃப்லாடாக்ஸின் பி-1, எம்-1 போன்ற வேதிப் பொருள்கள் புற்றுநோய்க் காரணிகள் என ஆய்வுகள் கூறுகின்றன. பாலில் காணப்படும் ஆஃப்லாடாக்ஸின் எம்-1 கலப்படம், பால் பொருள்களான வெண்ணெய், பாலாடைக் கட்டி (சீஸ்) போன்றவற்றிலும் காணப்படுவது கவலையை அதிகரிக்கிறது.
  • உணவுப் பொருள்களில், குறிப்பாக, பாலில் எந்தவொரு கலப்படமாக இருந்தாலும் அது மன்னிக்க முடியாத குற்றம். மிகப் பெரிய ஆபத்து. அதற்குத் தீர்வுகாண வேண்டியது அரசின் கடமை.

நன்றி: தினமணி (24-12-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories