TNPSC Thervupettagam

கலைஞர் கோட்டத்தில் கவனிக்க வேண்டிய அரசியல்

June 22 , 2023 569 days 444 0
  • திருவாரூரில் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் நினைவைப் போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ‘கலைஞர் கோட்ட’மானது, திருவாரூர் தியாகேசர் தேர் வடிவிலேயே அமைந்துள்ளது. சிலவற்றைத் தவிர மற்ற எல்லா அம்சங்களிலும் இது அசலான திருவாரூர் தேர் போன்றே தோன்றும். சுற்றிலும் தொம்பைகள் அசைய, வண்ண வண்ணத் தேர் சீலைகள் போர்த்தி, செந்தூரச் சிவப்பில் சிகரம் வைத்து, சூரிய ஒளியில் மின்னும் செப்புக் கலசத்தோடு திருவாரூர் தேர் உயரத்திற்கே எழுந்துள்ளது ‘கலைஞர் தேர்’.
  • திருவிழாவில் வரும் ஐந்து ரதங்களைப் போலவே கலைஞர் கோட்டத்திலும் பெரிய தேருக்குப் பின்னால் சிறிய தேர்கள். தேரில் தொங்கும் தொம்பைகள் காற்றில் அசையும்போது தேரை நிலைக் கதியில் காட்டாமல் எப்போதும் ஓடும் கதியிலேயே நமக்குக் காட்டும். இதன் திறப்பு விழாவுக்கு வந்த விருந்தினர்களுக்கும், கட்டுமானப் பொறுப்பாளர்களுக்கும் அளித்த நினைவுப் பரிசுகளும் தேர் உருவங்கள்தான்.

புது மோகம் இல்லை

  • நானாகவே எதையும் கற்பனை செய்துகொள்ளவில்லை. உண்மையில் கருணாநிதியின் அன்பர்களுக்கு இந்தத் தேர் மீது ஒரு மோகம் பிறந்து நிலைத்துவிட்டது. உலகப் புகழ்பெற்ற புரி ஜகந்நாதர் தேரோட்டமும் கலைஞர் கோட்டம் திறந்தபோதே நிகழ்ந்துகொண்டிருந்தது. குஜராத் மாநிலம் அகமதாபாத்திலும், மேற்கு வங்கத்திலும், டெல்லியிலும், ஜார்க்கண்ட் ராஞ்சியிலும் அன்று ஜகந்நாதர் தேரோட்டம். தற்செயலாக அமைந்தது என்றாலும், ஜெகந்நாதர் தேரோட்ட கோலாகலத்தில் வடக்கு குலுங்கிக்கொண்டிருந்த அதே நாளில் தெற்கே கலைஞர் கோட்டத்திலும் இன்னொரு தேர் ஒடத் துவங்கியிருக்கிறது!
  • கருணாநிதிக்கு தன் ஊர் மேல் இருந்த பாசத்தை அடையாளப்படுத்த தியாகேசர் தேரைப் போன்ற நினைவுச் சின்னம் பொருத்தமானதுதான். தேர் அந்த ஊருக்கு அடையாளமாகிவிட்டது. கலைஞர் கோட்டத்தைத் திறந்த முதல்வர் ஸ்டாலின் அவர் தாயார் தன் கணவருக்குக் கட்டிய கோயில் என்று அதைக் குறிப்பிட்டார். மனத்தை நெகிழச் செய்த சொற்கள்.
  • முதல்வர் ஸ்டாலின் ‘கோயில்’ என்று சொல்லியது வெறும் உருவகம் மட்டுமல்ல. கோயிலில் இருப்பதுபோலவே கலைஞர் கோட்டத்திலும் பூ முனையோடு வாழை மரங்களாகத் தூண்கள். கான்க்ரீட் தன்மையை ஒட்டி இந்தப் பூ முனை நவீன வடிவியலில் உருவம் பெற்றுள்ளது. நுழைவாயிலுக்கும் கோயில் கொடுங்கைபோலவே அடக்கத்தின் அழகோடு ஒரு மேற்கூரை. 

வியப்போடு வரும் திகைப்பு

  • இதைப் பார்க்கும்போது கட்டுமானத்தின் நேர்த்தியும், அழகும் தரும் வியப்பைத் தாண்டி ஓர் இனிமையான திகைப்பும் வருவது இயல்பு. திராவிடச் சிந்தனை மரபின் போக்கை இன்றைக்கும் நிர்ணயிக்கும் நிலையில் இருப்பவர் கருணாநிதி. திராவிடச் சிந்தனையோ தேர்த் திருவிழா போன்ற மதம் சார்ந்த சடங்கு நிகழ்வுகளுக்கு எதிராக இல்லை என்றாலும் அவற்றிலிருந்து சித்தாந்த அளவில் தன்னை விலக்கி வைத்துக்கொண்ட ஒன்று. தியாகேசர் தேர் வடிவிலான கலைஞர் கோட்டமும் திராவிட மரபுச் சிந்தனையும் ஒன்றுக்குள் ஒன்றாக அமைந்த உறவை நாம் எப்படி புரிந்துகொள்வது?
  • பார்த்தவுடன் வரும் திகைப்பு தெளியும்போது இப்படி ஒரு கேள்வி எழுவது இயற்கை. அந்த உறவு கலைஞர் கோட்டத்தை உருவாக்கியவரின் சொந்த விருப்பம் என்று எளிமைப்படுத்திக் கடப்பது எனக்கு நிறைவைத் தரவில்லை.

திறந்திருக்கும் வாசல்

  • ஒன்றை ஒன்று எப்போதும் எதிர்கொள்ளும் நிலையில் உள்ள இரண்டு கலாச்சாரங்கள் அவ்வப்போது நெருங்குவதும் விலகுவதும் சமூக இயக்கத்தில் புதிதல்ல. அவ்வாறே, ஒன்று மற்றொன்றின் புற அம்சங்களை வரித்துக்கொண்டு இரண்டுக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்துக்கொள்வதும் உண்டு.
  • தன் வசீகரத்தின் வலிமையால் கோயில் கட்டடக் கலை - அது மதச் சடங்குகளோடு பிணைந்ததாக இருந்தாலும் - திராவிட மரபுக்குள் செல்ல வழிகண்டது என்று சொல்ல இயலும். அதற்கு மறுமுனையில் நின்றுகொண்டு திராவிடச் சிந்தனை மரபு தன்னைக் கோயில் கலைகளுக்கு அந்நியப்படுத்திக்கொள்ளாமல் ஒரு சிறிய வாசலை திறந்துவைத்தது என்றும் இதை விளக்கலாம். இரு பக்கமும் ஒன்றை ஒன்று நோக்கிய நகர்வு இருக்கிறது என்பது உண்மைதானே!
  • தமிழ்நாட்டில் ஒரு நூற்றாண்டு காலமாக இந்த நகர்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. கருணாநிதியின் நூற்றாண்டு விழா துவக்கத்தில் திருவாரூர் கலைஞர் கோட்டத்தின் தேர் இந்தச் சமூக இயங்கு விசைகளின் போக்குக்கு குறியீடாக அமைந்திருக்கிறது என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

நெகிழ்ந்துகொண்ட மரபு

  • முதல் முறையாக முதல்வர் பொறுப்பேற்றபோது, 1970இல் புதிய தேர் ஒன்றைச் செய்து பல ஆண்டுகளாக நின்றுபோயிருந்த திருவாரூர் தேரோட்டத்தை மீண்டும் நடத்தினார் கருணாநிதி. பல நேரங்களில் நான் கருப்புச் சட்டையில் பார்த்திருந்த மன்னை நாராயணசாமி புதிய தேர் உருவாகி நடந்த முதல் தேரோட்டத்தை வடம்பிடித்து துவக்கிவைத்தார். அப்போது அவர் கருணாநிதி அரசில் அமைச்சர். அன்றைய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டி.வி.ஆண்டனி. அவரும் அவருடைய மனைவியுமாக தேர் தெப்பக் குளம் கீழ்க் கரையில் இருந்தபோது அதைப் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.
  • தேரோட்டம் என்ற திருவிழாவுக்குத் திராவிட மரபு தானாகவே நெகிழ்ந்து கொடுத்ததையும் தேரின் சமயம் கடந்த வசீகரத்தையும் அன்று ஒரே நேரத்தில் கண்டேன். வள்ளுவர் கோட்டமும் திருவாரூர் தேராகவே அமைத்திருப்பதை இந்த நெகிழ்வுத்தன்மையின் இன்னோர் அடையாளமாக நாம் கொள்ளலாம். கோயில் கட்டடக் கலை தன்னை மதம், கோயில் சம்பிரதாயங்களுக்குள் முடக்கிக்கொள்ளாமல் அவற்றின் சாயலைக் கழித்துக்கொண்டு மதச்சார்பற்ற தளங்களுக்குள் விரித்துக்கொள்வதாகவும் கொள்ளலாம். அழகியலாகப் பார்த்தாலும் சரி; அரசியலாகப் பார்த்தாலும் சரி; எப்படியும் தமிழ்நாடு எல்லாவற்றுக்கும் புதிய அர்த்தம் ஒன்றைக் கொடுக்கத் தவறுவதே இல்லை!

நன்றி: அருஞ்சொல் (22  – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories