TNPSC Thervupettagam

கலைந்து போகுமா கல்விக் கனவு

May 19 , 2023 602 days 432 0
  • மத்திய அரசு உருவாக்கிய தேசியக் கல்விக் கொள்கையை (2020), தார்மிகரீதியாக எதிர்த்து வந்த ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். அதனால்தான், புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக, மாநில அளவிலேயே ஒரு கல்விக் கொள்கை உருவாக்கப்படுகிறது எனும் செய்தி பெரும் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருந்தது. ஆனால், மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கக் குழுவில் ஏற்பட்டிருக்கும் சலனம், இது தொடர்பான நம்பிக்கைகளைச் சிதறடித்துவிடுமோ எனும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
  • திமுக அரசின் முயற்சி: 1976இல் 42ஆவது சட்டத்திருத்தம் மூலம் கல்வி மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. பொதுப் பட்டியலில் இருந்தாலும், கல்விக் கொள்கை குறித்த முடிவுகளை எடுப்பதில் மாநிலங்களின் பங்கு நிராகரிக்கப்பட்டே வந்துள்ளது. கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாடு தவிர்த்த பிற மாநிலங்களில் கண்டுகொள்ளப்படவில்லை.
  • வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதே கல்வியில் வலதுசாரித்தன்மையைக் கொண்டுவரும் முயற்சிகள் தொடங்கிவிட்டன. மோடி பிரதமரான முதல் ஐந்தாண்டுகளில் இதற்கான தயாரிப்புகள் தீவிரமடையத் தொடங்கின. அவர் மீண்டும் பிரதமரான பின்னர் இப்பணிகள் வேகம்பெற்று, ‘தேசியக் கல்விக் கொள்கை 2020’ வெளியிடப்பட்டது. புதிய கல்விக் கொள்கையின் அரசியல் பின்னணி, அதன் அடிப்படைகள், அவற்றின் பாதிப்புகள் போன்றவற்றை விளக்கி தமிழில் பல நூல்கள் எழுதப்பட்டன; விரிவான பரப்புரைகளும் முன்னெடுக்கப்பட்டன.
  • இப்படியான சூழலில், தமிழ்நாட்டில் புதிதாகப் பொறுப்பேற்ற திமுக அரசு, தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை உருவாக்கக் குழு ஒன்றை அமைத்தது. இது உடனடியாக எட்ட முடியாத ஒன்றாக இருப்பினும் தமிழ்நாட்டின் பெரிய கல்விக் கனவாக இருந்தது. கருத்தியல் சார்ந்த மாற்றாக இது அமையும் என்றெல்லாம் பேசப்பட்டது லெ.ஜவகர்நேசன், ச.மாடசாமி, அருணா ரத்னம், ஆர்.ராமானுஜம் போன்றவர்கள் இக்குழுவில் இடம்பெற்றது மிகுந்த நம்பிக்கையளித்தது.

கவலைக்குரிய விஷயம்:

  • இந்நிலையில், இக்குழுவின் உறுப்பினரும் ஒருங்கிணைப்பாளருமான முன்னாள் துணைவேந்தர் லெ.ஜவகர்நேசன் விலகுவதாக அறிவித்தது அதிர்ச்சியைத் தருகிறது. ஜனநாயகமற்ற முறையில் தலைமை செயல்படுவதாகவும் த.உதயச்சந்திரன் போன்ற மூத்த ஆட்சிப்பணி அதிகாரிகளின் அழுத்தங்களால் கல்விக் குழு தடுமாறுவதாகவும், இது குறித்து முதல்வருக்குக் கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
  • இது தொடர்பாக வாதப் பிரதிவாதங்களும் நிகழ்கின்றன. இக்குழுவின் பணிகள் வெளிப்படையாகவும் அறிவியல்பூர்வமான ஆய்வுகள், தரவுகளின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், பொதுவெளியில் இவ்வாறு குற்றச்சாட்டு எழுந்தது கவலைக்குரியது.
  • ஜவகர்நேசன் ஒரு சிறந்த கல்வியாளர். இந்தியா, அயல் நாடுகளின் கல்விப்புல அனுபவம் உடையவர். கல்வி, ஒடுக்குமுறை, சமூகம் சார்ந்த ஆய்வு நூல்களையும் எழுதிவருபவர். ‘கல்வியைத் தேடி…’, ‘எதேச்சதிகார தேசியவாதத்தின் குறியீடு’ போன்றவை இவரது கல்வி நூல்களாகும்.
  • குறிப்பாக, ‘கல்வியைத் தேடி’ என்ற நூல் தேசியக் கல்விக் கொள்கையை விரிவாக ஆய்வுக்கு உள்படுத்தியுள்ள நூலாகும். ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகள்தான் கல்விக் கொள்கையை உருவாக்க முடியும் என்பதற்கு மாறாக சமூக நீதி, சமத்துவம், ஜனநாயகம் சார்ந்த கருத்தியல்கள் வழியே மாநிலக் கல்விக் கொள்கை உருவாவதற்கு உயரிய பங்களிப்பு தருபவராக அறியப்பட்டவர்.

சர்ச்சைகள்:

  • மாநில அரசின் கல்விசார்ந்த பல்வேறு செயல்பாடுகளில் மத்திய கல்விக் கொள்கையின் அம்சங்கள் இடம்பெற்றதைப் பல கல்வியாளர்கள் சுட்டிக்கொண்டே இருந்தனர். மேலும், வலதுசாரிகளை உள்நுழைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
  • கல்வித் தொலைக்காட்சிக்கு ஆர்எஸ்எஸ் சார்புடைய ஒருவர் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கடும் எதிர்ப்பால் அவர் திரும்பப் பெறப்பட்டார். இந்தச் சூழலில்தான், மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கக் குழு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.
  • இந்தக் குழுவுக்குக் கல்வியாளர் ஒருவரைத் தலைவராக நியமிக்காமல், டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசனை நியமித்தது ஆரம்பத்திலேயே சர்ச்சையானது. இது சட்ட ஆணையமோ விசாரணை ஆணையமோ அல்ல. மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்கும் குழுவுக்கு ஏன் முன்னாள் நீதிபதியைத் தேர்ந்தெடுத்தனர் என்பது தெரியவில்லை. மாநிலத் திட்டக் குழு உறுப்பினர்களும் இதில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு ஏற்கெனவே இருக்கும் வேலைப் பளுவில், இக்குழுவில் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது இன்னொரு கேள்வி.
  • எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் போன்ற பிரபலங்களும் இக்குழுவில் உண்டு. கல்விக்கு இவர்களால் ஏதேனும் பங்களிக்க முடியும் என்றபோதிலும் கொள்கை உருவாக்கத்தில் இவர்களது பங்கு கேள்விக்குரியதுதான். பெயருக்கு ஒரு குழுவை அமைத்துக்கொண்டு, அதிகார வர்க்கம் நினைப்பவற்றைக் கொள்கையாக வடிவமைக்க இவ்வாறு செய்தார்களா என்றும் சந்தேகங்கள் எழுந்தன. இப்போது எழும் குற்றச்சாட்டுகள் அந்தச் சந்தேகங்களுக்கு வலுசேர்க்கின்றன.

வெளிச்சத்துக்கு வந்த விவகாரங்கள்:

  • துணைக் குழுக்கள் அமைக்கவே பல மாதங்கள் ஆனதைக் கல்வியாளர்கள் சுட்டிக்காட்டிவந்தனர். 11 மாதங்களாகக் கல்விக் குழு எந்தச் செயல்பாடுகளுமின்றி முடங்கியிருந்தாக ஜவகர்நேசன் தற்போது குற்றம்சாட்டுகிறார். தேசியக் கல்விக் கொள்கையின் அம்சங்கள் இக்கொள்கையில் இடம்பெற வேண்டும் என ஆட்சிப்பணி அதிகாரிகள் சிலர் வலியுறுத்தியதாகவும் தனது கருத்துகள் ஏற்கப்படவில்லை எனவும், தான் ஒருமையில் அழைக்கப்பட்டதாகவும் மிரட்டப்பட்டதாகவும் ஜவகர்நேசன் கூறுகிறார்.
  • பொதுவாகவே, பாடநூல் உருவாக்கத்தின்போது சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை அடியொற்றியே பாடங்கள் உருவாக்கப்படும். அதனுடன் வரலாறு - கலைப் பாடங்களில் சிலவற்றைச் சேர்த்துப் பாட நூல்களைத் தயாரிப்பதுதான் வழக்கம். இன்றைக்கு, நீட் தேர்வை மையமாகக் கொண்ட அறிவியல் பாடநூல்களால் அதிகப் பாடச்சுமை ஏற்பட்டுள்ளது.
  • மத்திய அரசு நிர்ணயிக்கும் கற்றல் விளைவுகள் (Learning Outcomes), NAS போன்ற அடைவுத்தேர்வுகள் ஆகியவற்றைமுன்நிபந்தனைகளாகக் கொள்வதால் பாடநூல்கள் தரமின்றி வெறும் சுமையாக அமைகின்றன. இதே நிலை மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கத்திலும் நடைபெறுவது தற்போது வெட்டவெளிச்சம் ஆகியிருக்கிறது.
  • மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை உள்வாங்கி, மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டிய அவசியம் என்ன என்பது முக்கியமான கேள்வி. அதற்குப் பதிலாக அக்கொள்கையை அப்படியே செயல்படுத்திவிட்டுப் போகலாமே?

அரசு செய்ய வேண்டியவை:

  •  இதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கைகளை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வதில் தவறில்லை. அந்த வகையில், டாக்டர் ராதாகிருஷ்ணனின் பல்கலைக்கழகக் கல்விக் குழு (1948-49), லெட்சுமணசாமி இடைநிலைக் கல்விக் குழு (1952-53), டாக்டர் கோத்தாரி கல்விக் குழு (1964-66), 1968 முதல் தேசியக் கல்விக் கொள்கை, 1986 புதிய கல்விக் கொள்கை, 1992 செயல்திட்ட அறிக்கை, 1973, 1975, 1988, 2000, 2005 ஆகிய ஆண்டுகளின் தேசியக் கலைத் திட்ட வடிவமைப்பு, சுமையற்ற கற்றல் (1993) ஆகிய பல்வேறு அறிக்கைகளும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
  • மாறாக, டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் அறிக்கை (2016), கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கை (2019) போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான தேசியக் கல்விக் கொள்கை 2020இன் கூறுகளை மட்டும் உள்நுழைப்பதாகச் சந்தேகம் இருந்தது. ஜவகர்நேசன் அதைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்துள்ளார்.
  • சமூக நீதி, சமத்துவம், ஜனநாயகம், மதச்சார்பின்மை போன்ற கருத்தியல் சார்ந்து ‘திராவிட மாடல்’ அரசாகத் தன்னை அடையாளம் காட்ட விரும்பும் திமுக அரசு, இவ்விஷயத்தில் உடனடிக் கவனம் செலுத்த வேண்டும். மாநில உரிமை சார்ந்த அரசாக அப்போதுதான் அதன் அடையாளம் நிலைபெறும்!

நன்றி: தி இந்து (19 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories