TNPSC Thervupettagam

கலையும் கல்விக் கனவுகள்: அரசின் பொறுப்பு என்ன

April 12 , 2023 597 days 337 0
  • ஐஐடி, ஐஐஎம், மத்தியப் பல்கலைக்கழகங்கள் ஆகிய கல்வி நிறுவனங்களில் பயின்று வந்த பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சாதி – பழங்குடி மாணவர்களில் கிட்டத்தட்ட 20,000 பேர், கடந்த ஐந்து ஆண்டுகளில் படிப்பைக் கைவிட்டிருப்பதாக மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டிருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
  • அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தின்படி 2018 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில், 19,256 மாணவர்கள் இந்த உயர்கல்வி நிறுவனங்களிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். மத்தியப் பல்கலைக் கழகங்களிலிருந்து, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 6,901 பேரும், பட்டியல் சாதியைச் சேர்ந்த 3,596 பேரும், பழங்குடி மாணவர்கள் 3,949 பேரும் வெளியேறியிருக்கிறார்கள்.
  • ஐஐடி கல்வி நிறுவனங்களிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் 2,544 பேர், பட்டியல் சாதியினர் 1,362 பேர், 538 பழங்குடி மாணவர்கள் வெளியேறியிருக்கிறார்கள். ஐஐஎம் கல்வி நிறுவனங்களிலிருந்து 133 பிற்படுத்தப்பட்டோர், 143 பட்டியல் சாதியினர், 90 பழங்குடிகள் வெளியேறியிருக்கிறார்கள்.
  • வெளியேறியிருக்கிறார்கள் எனச் சொல்லப்பட்டாலும், பல்வேறு அழுத்தங்களின் காரணமாக அந்த இளைஞர்கள் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள் என்றே கருத வேண்டியிருக்கிறது. கவலையூட்டும் இந்தப் போக்கின் பின்னணி குறித்து மத்திய அரசு ஆய்வு நடத்தியதா என திமுக எம்.பி திருச்சி சிவா எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மத்தியக் கல்வித் துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார், இலவசக் கல்வி, கல்வி நிறுவனங்கள் அதிகரிப்பு, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு எடுத்துவருவதாகக் குறிப்பிட்டிருக்கிறார். பொருளாதார ஏற்றத்தாழ்வை அகற்றும் நோக்கம் கொண்ட எந்த ஒரு அரசும் செய்கிற/ செய்ய வேண்டிய முன்னெடுப்புகள் இவை என்பதில் சந்தேகமில்லை.
  • ஆனால், இந்தியச் சமூகத்தின் சாபக்கேடான சாதியப் படிநிலையின் கீழ்நிலையில் வைக்கப் பட்டிருக்கும் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தையே தொலைக்கும் நிலைக்குச் செல்வதற்கான அசல் காரணங்களைக் கண்டறிவதுதான் அரசின் முக்கியக் கடமை.
  • குறிப்பாக, ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சாதியப் பாகுபாடு நிலவுவதாக எழும் குற்றச்சாட்டுகளைப் புறந்தள்ளிவிட முடியாது. சில நேரம் தற்கொலை எனும் அசம்பாவிதத்தை நோக்கி மாணவர்களை இந்த அழுத்தங்கள் தள்ளிவிடுகின்றன. பிப்ரவரி மாதம் மும்பை ஐஐடியில் பயின்றுவந்த பட்டியல் சாதி மாணவர் தர்ஷன் சோலங்கி, தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு சமீபத்திய உதாரணம்.
  • சாதிரீதியிலான பாகுபாடும் ஏளனமும்தான் அவரது தற்கொலைக்குக் காரணம் எனச் சக மாணவர்கள் குற்றம்சாட்டியிருந்த நிலையில், மும்பை ஐஐடி சார்பில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு அதற்கு முகாந்திரமே இல்லை என மறுத்துவிட்டது. கூடவே, அவரது கல்வித் திறனில் இருந்த குறைபாடே தற்கொலைக்குக் காரணம் என்றும் வாதிட்டது. ஆனால், சக மாணவரே சாதியரீதியாகப் பேசியதால் அவர் தற்கொலை செய்துகொண்டதாகத் தற்போது தெரியவந்திருக்கிறது.
  • இதுபோன்ற தருணங்களில், அரசின் விசாரணை அமைப்புகள் பாரபட்சத்துக்கு இடமின்றி முழுமூச்சுடன் விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டியது அவசியம். உயர்கல்வி வளாகங்களில் எதன் அடிப்படையிலும் ஏற்றத்தாழ்வு நிகழ்வதில்லை என்பதை உறுதிப்படுத்துவதும் கட்டாயம். அப்போதுதான் ஆயிரக்கணக்கான மாணவர்கள் உயர் கல்வியிலிருந்து விலகிச் செல்லும் அவலம் முடிவுக்கு வரும்!

நன்றி: தி இந்து (12 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories