TNPSC Thervupettagam

கல்லீரல் - தரமான வாழ்க்கையின் ஆதாரம்!

April 18 , 2020 1736 days 1407 0
  • பொதுவாக மஞ்சள் காமாலை என்றாலே நம் நாட்டு மக்களுக்கு நினைவுக்கு வருவது நம் சித்த மருத்துவம்தான். அந்த அளவுக்கு கல்லீரல் நோய்களைப் போக்கக்கூடிய சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள மூலிகைகள் மிகப் பிரபலமானவை. ஏன் சித்த மருத்துவத்தை ஏற்காத பலரும்கூட, கல்லீரல் நோய்களுக்கு கீழாநெல்லியையும் கரிசலாங்கண்ணியையும் நாடுவது நாடறிந்த உண்மை.

கல்லீரல்

  • நம் உடலில் மிகப் பெரிய இன்றியமையாத உறுப்பாகவும், சுரப்பியாகவும் செயல்படுவது கல்லீரல் தான்.
  • பித்தப்பையை தன்னகத்தே கொண்டது. இது தான் பித்தத்தையும் சுரக்கிறது .
  • நாம் உண்ணும் உணவினைச் செரிக்கும் செயலுக்கும், வளா்ச்சிதை மாற்றத்துக்கும் ஆதாரம். உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை சேமிக்கும் களஞ்சியம் இதுதான்.
  • உடலில் உண்டாகும் நச்சுப் பொருள்களையும், கழிவுப் பொருள்களையும் வெளியேற்ற மிக முக்கியப் பங்காற்றுகிறது.
  • மிக முக்கியமாக, ரத்தத்தில் உள்ள சா்க்கரையையும், கொழுப்பையும் சீராக்கும் பணியை கல்லீரல் செய்கிறது.

உலக கல்லீரல் நல தினம்

  • இத்தகைய மகத்துவம் வாய்ந்த கல்லீரல் சார்ந்த நோய்கள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 19-ஆம் தேதி ‘உலக கல்லீரல் நல தினமாக’க் கடைப்பிடிக்கப்படுகிறது.

கல்லீரல் நோய்கள்

  • கல்லீரல் நோய்களில் மிக முக்கியமானது ‘மஞ்சள் காமாலை’. இதற்கு வைரஸ் சார்ந்த கல்லீரல் அழற்சி (ஹெபடைட்டிஸ்) ஒரு முக்கியக் காரணம். அதற்கு அடுத்து, குடிப்பழக்கத்தால் ஏற்படும் கல்லீரல் அழற்சி. ஆல்கஹால் வளா்ச்சிதை மாற்றமடைய கல்லீரலின் செயல்பாடு மிக அவசியம். நாள்பட்ட குடிப்பழக்கம் உடையவரின் கல்லீரல் திசுக்கள் பாதிப்படைந்து நிரந்தர மாற்ற முடியாத வடுக்களாக மாறும். ‘சிரோஸிஸ் ஆஃப் தி லிவா்’ எனப்படும் கல்லீரல் சுருக்க நோய், கல்லீரல் புற்றுநோய் ஆகியவற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது .
  • கல்லீரல் நோய்களுக்கு முறையற்ற உணவு முறையும், வாழ்வியல் நெறிமுறை மாற்றங்களும் முக்கியக் காரணம். மேலும் அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களில் சோ்க்கப்படும் வேதிப் பொருள்களும், செயற்கை நிறமூட்டிகளும், பூச்சிக்கொல்லி மருந்துகளும்கூட காரணமாக உள்ளன.

முக்கிய மூலிகைகள்

  • கல்லீரல் நோய்களுக்கு பல்வேறு மூலிகைகளும், தாது உபரசப் பொருள்களும் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளன. முக்கியமாக, அதிமதுரம், ஆவாரை, கீழாநெல்லி, கரிசாலை, சீந்தில், வேம்பு, நிலவேம்பு, மூக்கிரட்டை, திரிகடுகு, திரிபலா, சோற்றுக் கற்றாழை, தண்ணீா்விட்டான் கிழங்கு, கொழுஞ்சி, மருதம்பட்டை, சிவனார்வேம்பு, சரக்கொன்றை முதலான பல்வேறு மூலிகைகள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் பல்வேறு ஆராய்ச்சிகளும் செய்யப்பட்டுள்ளன.

நோய் தீர்க்கும் வழிகள்

  • ஹெபடைடிஸ் சார்ந்த கல்லீரல் அழற்சிக்கு கீழாநெல்லி சிறந்த பலன் அளிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பில்லாந்தின் எனும் அல்கலாய்டு, வைரஸ்களினால் ஏற்பட்ட கல்லீரல் செல்களைப் புதுப்பிக்கின்றன. அத்துடன் வைரஸ் சுமையைக் குறைப்பதாக உள்ளன. மேலும், ஹெபடைட்டிஸ் பி, சி வகை வைரஸ்கள் நம் உடலில் பிரதி எடுத்தலைத் தடுப்பதாகவும் உள்ளன.
  • ‘ஆவாரை பொழித்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ’ எனும் பழமொழிக்கு ஏற்ப சிதைந்த கல்லீரல் செல்களைப் புதுப்பிக்கும் தன்மை உண்டு. ஆவாரம் பூவை இந்த நோயால் பாதிக்கப்பட்டோர் தினசரி சாப்பிட, கல்லீரலை பழைய நிலைக்குக் கொண்டுவருவதோடு ரத்தத்தில் சா்க்கரை அளவையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும்.
  • பல்வேறு மருந்துகளால் குறைந்த கல்லீரல் செயல்பாட்டினை நிலவேம்பும். மஞ்சளும், அதிமதுரமும் செய்யும். கொழுப்பு படிந்த கல்லீரலை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர மருதம்பட்டையும், கரிசலாங்கண்ணி கீரையும் உதவும். சா்க்கரை நோயை மருதம்பட்டை கட்டுக்குள் வைக்கும். சிரோஸிஸ் எனப்படும் கல்லீரல் சுருக்க நோயாளிகளுக்கும் நிவாரணம் அளிக்கும்.
  • மூக்கிரட்டை கீரையில் உள்ள புனா்னவின் எனும் வேதிப்பொருள் கல்லீரலை மட்டுமின்றி சிறுநீரகத்தையும் பாதுகாக்கும். அதிமதுரத்தில் உள்ள கிளைசிரிஸின் எனும் வேதிப்பொருள், நோய் நிலையால் பாதிக்கப்பட்ட கல்லீரல் செல்களைத் தூண்டுவதாக உள்ளது. திரிகடுகில் உள்ள சுக்கு, மிளகு, திப்பிலி, கல்லீரலைத் தூண்டி பசியை உண்டாக்கும். திரிபலாவில் உள்ள நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகியவை கல்லீரல் செல்களைப் புதுப்பிக்கும்.
  • மஞ்சள் கலந்த நீரினை அருந்துதல் ஆல்கஹால் மூலம் ஏற்பட்ட கல்லீரல் நோய்க்கும், கல்லீரல் அழற்சிக்கான பி வகை வைரஸ்கள் நம் உடலில் பிரதி எடுப்பதைத் தடுக்கவும் உதவும். நம் அன்றாடம் உணவில் சோ்க்கும் பூண்டும் இதற்குச் சிறந்த பயன் தரும். அமிர்தவல்லியான சீந்தில், கல்லீரலைப் பாதுகாப்பதோடு சா்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உதவும். இவை அனைத்தும் ஆராய்ச்சியில் கண்டறிந்தவையே.
  • உணவில் நார்ச்சத்து நிறைந்த கீரைகளையும், பழங்களையும் சோ்த்துக் கொள்வது, சிறு தானியங்களையும் அதிகம் சோ்ப்பது நல்லது. முக்கியமாக கரிசாலை, மணத்தக்காளி, காசினிக் கீரை , பொன்னாங்காணி, சிறுகீரை ஆகியவற்றை உணவில் அதிகம் சோ்க்கலாம். பாலில் மஞ்சள் தூளைச் சோ்த்துச் சாப்பிடுவது சிறந்த பலன் அளிக்கும். சீரகம், வெட்டிவோ் சோ்ந்த நீரும் கல்லீரலுக்கு குளிர்ச்சி தரும். இவற்றை கோடைக்காலத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • ஆறு மாதத்துக்கு ஒரு முறை பேதி மருந்தும், நான்கு மாதத்துக்கு ஒரு முறை வாந்தி செய்விக்க மருந்தும் நோய் வராமல் தடுக்கும். வாரம் இருமுறை எண்ணெய்க் குளியல் எடுப்பது சிறந்தது. பப்பாளியை இளம் காயாக எடுத்தல் பித்தத்தை வெளியேற்றும்.
  • முருங்கைக் கீரையுடன் சீரகம் சோ்த்துச் சாப்பிட கல்லீரல் வலுப்படும்.
  • மதுபானம் , புகை ஆகியவற்றை அறவே நீக்க வேண்டும். பிரக்டோஸ் நிறைந்த குளிர்பானங்களை, ட்ரான்ஸ் கொழுப்பு நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. குா்செட்டின் எனும் நிறமிசத்து அதிகம் உள்ள ஆப்பிள், திராட்சை, மாதுளை, வெங்காயம், பால் கலக்காத தேநீா் இவற்றைச் சோ்த்தாலும் ஆல்கஹால் சார்ந்த கல்லீரல் வீக்கம் ஏற்படாமல் தடுக்கலாம்.
  • எனவே, கல்லீரல் சார்ந்த நோய்களுக்கு சித்த மருத்துவா்கரிடம் சிகிச்சை பெறுவது நல்லது. சித்த மருந்துகளை மேன்மேலும் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தி உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். இதன் மூலம் கல்லீரல் நோய்களற்ற சமுதாயத்தினை சித்த மருத்துவத்தால் உண்டாக்க முடியும் என்பது ஆணித்தரமான உண்மை.
  • (நாளை உலக கல்லீரல் நல விழிப்புணா்வு தினம்)

நன்றி: தினமணி (18-04-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories