TNPSC Thervupettagam

கல்விக் கொள்கை: மூத்த கல்வியாளர் பார்வை

August 18 , 2020 1618 days 837 0
  • புதிய தேசிய கல்விக் கொள்கை பற்றி பத்ரி சேஷாத்ரி வலது பார்வையிலும், பிரின்ஸ் கஜேந்திரபாபு இடது பார்வையிலும் இந்து தமிழ்நாளிதழில் கடந்த வாரம் எழுதியிருந்தார்கள்.
  • ஒரு ஆசிரியன் என்ற பார்வையில் என் கருத்துகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். முதலில் தேசிய கல்விக் கொள்கையா, தேசியக் கல்விக் கொள்கையா என்று பார்ப்போம். தேசிய கல்விக் கொள்கை என்பது நாடு முழுமைக்கும் பொதுவான கல்விக் கொள்கை என்று பொருள்படும். அதன் உள்ளடக்கம் உருவாக்குவோரால் முடிவுசெய்யப்படும்.
  • தேசியக் கல்வி என்பது தேசியத்தை மையப்படுத்துகிறது. தேசியக் கல்வி என்ற சொல்லாடலை முதன்முதலாக அரவிந்தர் அறிமுகப்படுத்தினார்.
  • சுதந்திரமும் தேசியக் கல்வியும் பிரிக்க முடியாத இரட்டைகள் என்றும், தேசியக் கல்வியே சுதந்திரத்தை முழுமையாக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
  • அவரது கூற்றுக்குச் செயல்வடிவம் தந்திட டாக்டர் ராஷ் பிகாரி கோஷ் கொல்கத்தாவில் தேசியக் கல்விக்கான ஒரு நிறுவனத்தை அமைத்தார். நாடு முழுதும் தேசியப் பள்ளிகள் தோன்றத் தொடங்கின.
  • பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய் முன்ஷி ஹன்ஸ்ராஜுடன் இணைந்து பல தேசியக் கல்வி நிறுவனங்களைத் தம் பகுதியில் தோற்றுவித்தார். அன்னி பெசன்ட் காசியிலும், டாக்டர் பட்டாபி சீதாராமையா மசூலிப்பட்டணத்திலும் தேசியக் கல்வி அமைப்புகளைத் தோற்றுவித்தனர்.
  • ஆங்கிலத்தை முன்னிறுத்திய கல்விக்கு மாறாக, நமது நாட்டு மொழிகளை மையப்படுத்தியதாக இருப்பதே தேசியக் கல்வியின் அடையாளமாகக் கருதப்பட்டது.
  • காந்தியடிகளின் ஆதாரக் கல்வித் திட்டத்தின் உயிர்நாடியும் அதுவே. தேசியக் கல்வியையும் நம் நாட்டு மொழிகளினின்று பிரிக்க முடியாது என்பதே தேசியக் கல்வி இயக்கம் வலியுறுத்துகிறது. தாகூரின் சாந்திநிகேதனும் இந்த அடிப்படையிலேயே இயங்கியது.
  • இன்று விவாதத்துக்கு உட்படும் தேசிய கல்விக் கொள்கை தேசியக் கல்வியல்ல என்பதை இவ்வரலாறுகள் விளக்குகின்றன.
  • வரலாற்றுப் பாடம் இன்றும் அரசர்கள், போர்கள் என்றே அமைந்திருப்பது தேசியக் கல்விக்கு முரண்பட்டது. மக்கள் வாழ்க்கையையும் இயக்கங்களையும் முன்னிறுத்திய வரலாறே தேசியக் கல்வியின் பார்வையாகும்.
  • ஆங்கிலவழிக் கல்வியை ஏற்கும் கல்விக் கொள்கை தேசியக் கல்வியாகாது. ஒரு சடங்காகக் கல்விக் கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன. தேசிய நோக்கு இல்லாத கொள்கையால் எப்பயனும் இல்லை. கல்வி இயந்திரத்தனமாகவே தொடரும். அதற்கு வேண்டியது உயிரோட்டம். அவ்வுயிரோட்டத்தைத் தரக்கூடியது தேசியமே.
  • எப்படிப்பட்ட குடிமக்களை உருவாக்க வேண்டும் என்ற தெளிவில்லாத இக்கொள்கை நம் கல்வி நிறுவனங்களுக்குத் தேவையான உந்துசக்தி எதையும் தராது என்பதே என் கருத்து.

நன்றி: தி இந்து (18-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories