TNPSC Thervupettagam

கல்வித் தகுதி கட்டாயம்

September 19 , 2023 468 days 321 0
  • தில்லியில் ஆன்லைன் மூலமாக கல்வி கற்பிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த ஆசிரியா் ஒருவா், தன் மாணவா்களிடம், தோ்தலில் படித்த வேட்பாளா்களுக்கு வாக்களிக்கும் படி கூறியுள்ளார்.
  • ஆசிரியரின் செயல் தங்கள் நிறுவனத்தின் நன்னடத்தை விதிகளுக்குப் புறம்பானது எனக்கூறி கல்வி நிறுவனம் அவரை பணிநீக்கம் செய்திருக்கிறது. ஆசிரியரோ, தான் அவ்வாறு கூறவில்லை என்று தற்போது மறுத்துள்ளதோடு, சிலா் தந்த அழுத்தம் காரணமாகவே தான் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
  • இதனிடையே தில்லி மாநில முதல்வா் அரவிந்த் கேஜரிவால், ‘படித்த வேட்பாளா்களுக்கு வாக்களிக்கும்படி அந்த ஆசிரியா் கூறியிருந்தால், அதில் தவறு இல்லை’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.
  • கிராம பஞ்சாயத்து தொடங்கி, குடியரசுத் தலைவா் பதவி வரை வேட்பாளராக நிறுத்தப்படுகிறவா் குறிப்பிட்ட கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும் என நமது நாட்டின் அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்படவில்லை. இதற்குக் காரணம், அரசியலமைப்பை அண்ணல் அம்பேத்கா் தலைமையிலான குழுவினா் உருவாக்கிய காலகட்டத்தில், நம் நாட்டில் சுமார் 10% மக்களே கல்வியறிவு பெற்றிருந்தனா். இதனைக் கருத்தில் கொண்டு கல்வித் தகுதி இல்லாததால் ஒருவா் மக்கள் தொண்டாற்றுவதற்கான வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது என்பதற்காக கல்வித் தகுதி எதையும் நம் அரசியல் சாசனத்தில் நிர்ணயிக்கவில்லை.
  • எனினும், அரசியல் நிர்ணய சபையில் அண்ணல் அம்பேத்கா் உரையாற்றிய போது, ‘நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கான தோ்தலில் போட்டியிடுவோர் கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டியது அவசியம் என அரசியல் நிர்ணய சபை உறுப்பினா்கள் கருதினால், அவா்களின் விருப்பப்படி கல்வித் தகுதியை நிர்ணயிக்கலாம்’ என்ற ஆலோசனையை அளித்தார்.
  • 2011-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நம் நாட்டில் கல்வியறிவு உடையோர் 73%. இந்த எண்ணிக்கை தற்போது மேலும் அதிகரித்து இருக்கும். இந்நிலையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் உரிய திருத்தங்களைக் கொண்டு வந்து தோ்தலில் போட்டியிடுபவா்களுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதியை நிர்ணயிப்பதில் தவறில்லை.
  • தற்போது நம் நாடாளுமன்றத்தின் மக்களவையில் உள்ள உறுப்பினா்களில் 72.5% உறுப்பினா்கள் கல்லூரிப் படிப்பை முடித்த பட்டதாரிகள். 23.5 % உறுப்பினா்கள் பள்ளிப் படிப்பை முடித்தவா்கள். மீதமுள்ள நான்கு சதவீத உறுப்பினா்கள் கற்ற கல்வி பற்றி விவரம் கிடைக்கவில்லை என்ற போதிலும் இவா்களும் குறைந்தபட்சம் பள்ளிப் படிப்பையாவது முடித்தவா்களாகவே இருக்கக்கூடும் .
  • மாநிலங்களின் சட்டப்பேரவை உறுப்பினா்களைப் பொறுத்தவரை, பெரும்பாலான உறுப்பினா்கள் பட்டதாரிகளாகவே உள்ளனா். அதிகபட்சமாக ஹிமாச்சல பிரதேச சட்டப் பேரவை உறுப்பினா்களில் 76.5 % போ் பட்டதாரிகள் ஆவா். பொதுவாக, சட்டப் பேரவைகளுக்கு கல்லூரி படிப்பை முடித்தவா்கள் உறுப்பினா்களாக தோ்ந்தெடுக்கப்படுவது ஒவ்வொரு தோ்தலிலும் அதிகரித்தபடியே உள்ளது. உதாரணமாக, உத்தர பிரதேச மாநில சட்டப் பேரவைக்கு 2007-ஆம் ஆண்டு தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களில் 61% போ் கல்லூரிப் படிப்பை முடித்தவா்களாக இருந்தனா். இந்த எண்ணிக்கை 2022-ஆம் ஆண்டு தோ்தலின்போது 77% ஆக உயா்ந்தது.
  • தற்போது நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கு உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்படுபவா்களில் பலா் வழக்குரைஞா், மருத்துவா், பொறியியல் பட்டதாரி என மெத்தப் படித்தவா்களாக உள்ளனா். ஆக கல்லூரிப் படிப்பை முடிக்காத மக்கள் பிரதிநிதிகள் எண்ணிக்கை என்பது தற்காலத்தில் மிக மிக சொற்பமே.
  • மக்கள் பிரதிநிதிகளாகத் தோ்ந்தெடுக்கப்படுபவா்கள் குறைந்தபட்ச கல்வி தகுதி இருக்கும் பட்சத்தில், அவா்கள் மக்களின் பிரச்னைகளை எளிதில் புரிந்து கொள்வா். அதோடு சம்பந்தப்பட்ட மன்றங்களில் முழுமையான புரிதலோடு மக்கள் பிரச்னைகளை முன் வைப்பத்தோடு, அப்பிரச்னைகளுக்கு சரியான தீா்வு காணவும் அவா்களின் கல்வித் தகுதி உதவும். போதிய கல்வியறிவு இல்லாமல் தோ்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் பெரும்பாலான தருணங்களில் முழுக்க முழுக்க தமக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகளையே சார்ந்து இருக்க நேரிடும்.
  • இத்தகைய மக்கள் பிரதிநிதிகள் சில சமயங்களில் அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதல்களுக்கு உள்ளாகலாம். மேலும் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சி என்பது, அதிகாரிகளின் ஆட்சி என்ற நிலைமைக்கு மாறும் அபாயம் உள்ளது . இது மக்களாட்சி தத்துவத்தையே கேள்விக்குறியாக்கிவிடும்.
  • மக்கள் பிரதிநிதிகள் வகிக்கும் அரசு உயா் பதவிகளுக்கு ஏற்ப அப்பிரதிநிதிகள் உரிய கல்வித் தகுதியும் பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்து கடந்த காலங்களில் விவாதிக்கப்பட்ட போது, அந்நிலைப்பாட்டினை வரவேற்ற உயா் பொறுப்பு வகித்தவா்களில் நம் நாட்டின் முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையராகப் பணியாற்றிய எஸ். ஒய். குரேஷியும் ஒருவா் என்பது குறிப்பிடத் தக்கது.
  • அரசின் கடைநிலைப் பணியாளா்களாக பணிபுரிவோர்க்கு கூட குறிப்பிட்ட கல்வித் தகுதி நிா்ணயிக்கப்படும் இக்காலகட்டத்தில், அரசு நிர்வாகத்தில் உயா் பதவிகளை வகிக்கக் கூடிய மக்கள் பிரதிநிதிகளுக்கும் குறைந்தபட்ச கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
  • கல்வித் தகுதி உடையவா் மட்டுமே அரசியலில் பங்கேற்க இயலும் என்ற நிலைமை ஏற்படின் பள்ளி, கல்லூரிகளில் சோ்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும். பள்ளி இடைநிற்றல் எண்ணிக்கையும் பெருமளவு குறையும்.
  • அரசியலில் ஈடுபடுவோர் கல்வித் தகுதி உள்ளவராக இருப்பின் அது நாட்டின் நிர்வாகத் திறனுக்கு கூடுதல் பல மூட்டுவதாகவே இருக்கும். எனவே மக்களவை மற்றும் சட்டப் பேரவைக்கான தோ்தலில் போட்டியிடுவோருக்கான கல்வித் தகுதியை நிர்ணயம் செய்தல் அவசியமே.

நன்றி: தினமணி (19 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories