TNPSC Thervupettagam

கல்விமுறை எப்படி மாறும்

July 9 , 2023 552 days 359 0
  • சட்டை பைக்குள் ஒரு குட்டி உலகத்தையே வைத்திருக்கும் மாணவர்களிடம் தகவல்களைப் பரிமாறும் கற்பித்தல் முறை கேலிக்குரியதாக மாறியுள்ளது.
  • உலகளவில் மிகச் சிறந்த ஆசிரியர்களும் பேராசிரியர்களும் நடத்தும் வகுப்புகளைப் பலமுறை பார்த்துப் பார்த்துக் கற்றுக் கொள்ளும் மாணவர்களிடம் பாடப்பகுதியை வாசித்து விளக்கம் சொல்லும் கற்பித்தல் முறை நகைப்புக்குரியதாகி வருகிறது. அப்படியானால் என்னதான் செய்வது?
  • அச்சடிக்கப்பட்டவை அனைத்தும் உண்மையா? பெரியவர்கள், அதிகாரிகள் கூறுவது அனைத்தும் சரியா? காலங்காலமாகத் தொடர்ந்து வருவதாலேயே அவற்றை நாமும் பின்பற்ற வேண்டுமா? ஆதாரமற்ற ஒரு கருத்தை உண்மையென்று நம்புவதால் ஏற்படும் விளைவுகள் எவை? இக்கேள்விகளுக்கு எப்படி விடை கண்டுபிடிப்பது? நம்பகமான ஆதாரங்களைக் கண்டுபிடிப்பது எப்படி? கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அலசுவது எப்படி? புரிந்துகொண்ட கருத்தைப் பிறருக்குப் புரியும்படி பகிர்வதற்கான வழிகள் எவையெவை? போன்ற வினாக்களை மனத்தில் வைத்து இனி கற்பித்தல் செயல்பாட்டை ஆசிரியர் வடிவமைக்க வேண்டும். குழந்தைகளின் ஈடுபாட்டை உறுதி செய்ய வேண்டும்.

சுயக்கருத்துக்கு முதலிடம்

  • பாடப்பகுதியைப் பற்றிய தங்கள்கருத்துகளைக் கூறவும் விவாதிக்கவும் மாணவர்களுக்கு அளிக்கப்படும் வாய்ப்பு அவர்களது ஈடுபாட்டைஉறுதி செய்யும். ஒரு கருத்தை எடுத்துரைக்கும்போது அதற்கான காரணத்தையும் வேறுபல எடுத்துக்காட்டுகளையும் கூறும் கட்டாயத்திற்கு மாணவர்கள் தள்ளப்படுகிறார்கள். அதனால் பாடக்கருத்தைக் கவனித்தேயாகவேண்டும்.
  • மாணவர்கள் கூறிய கருத்து என்பதுஅவர்கள் சுயமாகச் சிந்தித்தது, தேடியெடுத்த தகவல்களின் ஆதாரத்தோடு நிறுவப்பட்டது. அதனாலேயே பிற மாணவர்கள் மாற்றுக் கருத்தைக் கூறும்போது இயல்பாகவே கவனிக்கத் தலைப்படுகிறார்கள். அங்கு ஆரோக்கியமான விவாதத்திற்கான களம் அழகாக அமைந்துவிடுகிறது. விவாதிக்க விவாதிக்க பாடக் கருத்து அவர்களை அறிமாலேயே அவர்தம் மனத்தில் பதியும்.

மூன்று முக்கிய காரணங்கள்

  • பல்கலைக்கழகங்கள் மூன்று முக்கியக் காரணங்களுக்காக தங்கள்பாடச்சேர்க்கை முறையை மாற்றியுள்ளன. மிகவும் நெகிழ்வுத் தன்மையைப் புகுத்தியுள்ளன. முன்பு அறிவியல் வழியைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு வரலாறோ, இசையோ, இலக்கியமோ கற்பதற்கான வாய்ப்பில்லை. இப்போதுமாணவர்கள் விரும்பினால் அப்படிப்பட்ட வாய்ப்பை வழங்க பல்கலைக்கழகங்கள் முன்வருகின்றன.
  • இம்மாற்றத்திற்கான முதற்காரணம் மாணவர்கள் விருப்பத்தோடு தேர்வு செய்யும்போது முழுமனதோடு ஈடுபடுவதற்கான பொறுப்பு அவர்களுக்கு வந்துவிடுகிறது. தவறான முடிவு என்று புரிந்து கொண்டால் இடையே மடைமாற்றுவதற்கும் பல்கலைக்கழகங்கள் வாய்ப்பு வழங்குகின்றன. இதன் மூலம் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கும், அவற்றைப் பரிசோதித்துப் பார்ப்பதற்கும் விளைவுகளுக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கும் மாணவர்கள் திறன் பெறுகிறார்கள்.
  • இரண்டாவது காரணம் தகவல் தொழில்நுட்பத்தின் பிரம்மாண்ட வளர்ச்சியும் அவற்றின் அசுரத்தனமான தாக்குதலும்தான். ஒரு வேலையில் சேர்ந்து அதில் சிலமுறை பதவி உயர்வு பெற்று அதிலிருந்து ஓய்வு பெறலாம் என்ற பரம்பரை எண்ணம் தவிடு பொடியாகிவிட்டது. ஒருவர் தன்னுடைய பணிக்காலத்தில் குறைந்தது மூன்று வேறுபட்ட வேலைகளுக்கு மாறியேயாக வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
  • ஒரே துறையில் இருந்தாலும் வேறுவேறு வேலைக் கலாச்சாரம் கொண்ட நிறுவனங்களில் வேலை செய்ய வேண்டி வருகிறது. அங்கெல்லாம் தன்னைப் பொறுத்திக் கொள்ளவும், துறையில் தனக்கேயான முத்திரை பதிக்கவும் பல பாடங்களைக் கற்பது கூடுதல் வாய்ப்பை வழங்குகிறது. பல்துறை அறிவு வளர வளர எல்லாவற்றையும் இணைக்கும் கண்காணாத் தொடர்பையும் அவர்களால் கண்டுபிடிக்க முடிகிறது. இதனால் ஏற்றத்தாழ்வோடு சிந்திப்பதை விடுத்து அனைத்தையும் மதிப்போடு அணுகும் மனப்பாங்கு வந்துவிடுகிறது.
  • மூன்றாவது காரணம் மிகவும் முக்கியமானது. சில வருடங்கள் வேலை செய்துவிட்டு, ஒரு நாள் திடீரென வேலையிழந்து நிற்கும் நிலையை இப்போது அடிக்கடி காண்கிறோம். அந்த நாட்களில் தொடர்ந்து கற்பதற்கு தாங்களாக விரும்பித் தேர்வு செய்த துறை பெரிதும் உதவும். அல்லது விரும்பிய பாடத்தைக் கற்பதிலுள்ள மனநிறைவு அவர்களை மீண்டும் கற்றலை நோக்கித் தள்ளும்.
  • மகிழ்ச்சி தரும் செயலை மீண்டும் மீண்டும் செய்வது மனித இயல்பல்லவா?

நன்றி: தி இந்து (09 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories