TNPSC Thervupettagam

கல்வியே நமக்கு ஆதாரம்

October 17 , 2023 452 days 366 0
  • கல்வி தொடர்பாக தனியார் நிகழ்ச்சியில் ஒலித்த விவாதக் குரல்கள் இவை: “குறைந்தபட்சம் அடிப்படைக் கல்வி அவசியம் இல்லையா..?”, “கல்வி அவசியம்தான். ஆனால், இங்குள்ள கல்வி அமைப்பு எனக்கு உகந்ததாக இல்லை. அதில் என்னைத் திணிக்க வேண்டாம்”.
  • பொதுத் தளத்தில் இது ஆரோக்கியமான விவாதத்துக்கு வழிவகுத்திருக்கிறது. கல்வி தொடர்பான சிக்கல் ஆழமாகவே நம் மன நிலையில் பதிந்திருக்கிறது. காரணம், கற்றல் முறையில் நம்மிடையே ஏராளமான குழப்பங்களும் ஒவ்வாமைகளும் புதைந்திருக்கின்றன.

சமூகச் சிக்கல்

  • கல்வி அமைப்பில் ஆசிரியர் - மாணவர்கள் ஆரோக்கியமாக இயங்காதபடி சமூகச் சிக்கல்கள் இங்குப் பல உள்ளன. கரோனாவுக்குப் பிறகு வழக்கமான கல்வி முறைக்கு மாணவர்களைக் கொண்டுவருவது ஆசிரியர்களுக்குப் பெரும் சவாலாக உள்ளது.
  • அதுவும் பதின் பருவத்திலுள்ள மாணவர்களைக் கையாள்வது ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அசாத்தியமான விஷயமாகவே இருந்து வருகிறது. இந்தச் சூழலில் பெருகிவரும் ‘இன்புளுயன்சர்கள் கலாச்சாரம்’ கல்வி குறித்தான மாணவர்களின் புரிதலைக் கூடுதல் சிக்கலாக்கியிருக்கிறது.
  • பொருளாதாரம் சார்ந்து வலிமையான குடும்பப் பின்னணி யிலிருந்து வரும் பிள்ளைகள் கல்வி கற்றலில் சிரமங்களை எதிர்கொள்ளும்போது, கல்வியைத் தவிர்த்து அவர்கள் வேறு திறன்கள் சார்ந்து செயல்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால், வறுமை நிலையிலிருந்து வரும் மாணவருக்கு மேற்கூறிய வாய்ப்பு இல்லாத சூழலில் கல்வியே அம்மாணவருக்கான ஆயுதமாகிறது. இதனை மாணவர்களுக்கு உணர்த்தவே இலவச காலை உணவுத் திட்டம் உள்பட பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களை தமிழ்நாடு அரசும் முன்னெடுத்து வருகின்றது.

கல்விதான் ஆதாரம்

  • அந்த வகையில் மாணவர்களுக்குக் கல்வியின் அவசியம் குறித்துக் கல்வியாளர் ச. மாடசாமி கூறும்போது, “ஒவ்வொருவருக்கும் ஒரு தேவை இருக்கிறது. அதையொட்டிய பார்வை இருக்கிறது. வசதி படைத்தோர்க்குக் கல்விக்கூடம் என்பது வேலை தேடித் தரும் ஒரு நிறுவனம் மட்டும்தான். ஆனால், அடித்தட்டு மக்களுக்கு அவ்வாறு இல்லை.
  • எளிய பிள்ளைகளுக்குக் கல்வி, கண் போன்றது; அடிமைத்தனத்தில் இருந்தும் மூடநம்பிக்கைகளில் இருந்தும் விடுதலை தரும் வெளிச்சமும் கல்விதான். அப்படியான கல்வியைப் பிடித்தபடிதான் தங்களை அழுத்திய சுமைகளிலிருந்து லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் விடுபட்டு வந்திருக்கிறார்கள். சிலருக்கு உயர் இடங்களுக்குப் போவதற்குக் கல்வி ஓர் உபாயம். ஆனால், மிகப் பலருக்குக் கல்விதான் ஆதாரம். கல்வியின் பக்கம் நிற்பதுதான் நியாயம்” என்கிறார்.

கல்வி முறையில் சிக்கல்

  • அடிப்படைக் கல்வி மட்டுமல்ல, உயர் கல்வியும் அவசியம் என்று கூறும் கல்விச் செயற்பாட்டாளர் உமா மகேஸ்வரி, கல்வி அமைப்பில் உள்ள சிக்கல்களையும் பகிர்ந்துகொண்டார்.
  • தொடர்ந்து அவர் பேசும்போது, “இந்தப் பதவியில் இன்னார்தான் இருக்க வேண்டும் என்றில்லாமல் உயர் இடங்களுக்குச் செல்ல அனைவருக்கும் உரிமையும் தகுதியும் உள்ளது என்பதைக் கல்வி கற்றதனால்தான் அறிந்து கொண்டோம். இதில் கல்வி அவசியமன்று என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இன்றைய கல்வி முறை, மாற்றங்ளைப் பெற்றிருக்கிறது.
  • இதில் வசதி வாய்ப்புகள் உள்ளன. ஆனால், மாணவர்களுக்கு நாம் காட்டும் கல்வி முறையானது சிந்தனை நோக்கி இல்லாமல் போட்டித் தேர்வுகளை மையப்படுத்தியே இருக்கிறது. இதைப் படித்தால் இவ்வளவு மதிப்பெண்கள் கிடைக்கும். இவ்வாறுதான் நமது கல்வி முறை இயங்குகிறது.
  • அப்போதெல்லாம் ஆரம்பக் கல்வியை முடித்து நடுநிலைப் பள்ளிக்கு வரும் மாணவர்களில் ஐந்து அல்லது ஆறு பேர்தான் எழுதப் படிக்கத் தெரியாத நிலையில் இருப்பார்கள். ஆனால், இப்போது ஐந்து பேருக்குத்தான் எழுதப் படிக்கத் தெரியும் என்ற நிலை உள்ளது. இன்ஸ்டகிராமில் வரும் ‘லைக்கு’களைத்தான் அவர்கள் வெகுமதிகளாகக் கருதுகிறார்கள்.
  • கல்வியில்தான் நமக்கு எதிர்காலம் இருக்கிறது என்று எண்ணும் மாணவர்கள் குறைந்து வருகிறார்கள். நடிகர்களையும் இன்புளுயன்சர்களையும்தான் அவர்கள் உதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். இந்த எண்ணம் ஏற்பட நாம் மாணவர்களைக் குறைகூறமுடியுமா?
  • தமிழக அரசு, பள்ளிக் கல்வியில் மாணவர்கள் நலன் சார்ந்து நிறைய திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஆனால், அவையெல்லாம் முறையாக மாணவர்களிடம் கொண்டுசேர்க்கப்பட்டிருக்கிறதா? மாணவர்களுடன் பொறுமையாக அமர்ந்து பேசுவதற்கு ஆசிரியர்களுக்கு உண்மையாகவே நேரம் இல்லை. பள்ளிக் கல்வி சார்ந்து அரசு அறிவிக்கும் திட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பாளர்களாகவே ஆசிரியர்கள் உள்ளனர்.
  • ஆசிரியர்களைச் சுற்றி நிறைய பணிச்சுமைகள் அதிகரித்து நெருக்கடிகள் உருவாகியுள்ளன. இந்தச் சூழலில் மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள் என ஆசிரியர் அறிவதற்கு வாய்பில்லாமல் போகிறது. ஆசிரியர்களும் தாங்கள் கற்பிக்கும் திறனை மேம்படுத்திக் கொள்ளும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஆனால், அதற்கான சூழல்கள் இங்கு ஏற்படவேயில்லை என்பது வருத்தமான ஒன்று.
  • சமூகத்தைக் கட்டமைப்பது கல்விதான். கல்வியே நம்மை முன்னோக்கி எடுத்துச் செல்லும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் வகுப்பறைகளில் கல்வி இல்லை. இதை எல்லாம் கவனத்தில் கொண்டு தேவையான நடவடிக்கையும், மாற்றத்தையும் கொண்டு வருவது அவசியமாகிறது" என்றார்.

நன்றி: இந்து தமிழ் திசை (17 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories