- ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம், சாதி, வர்க்கம், பொருளாதார ஏற்றத்தாழ்வு, பாலினச் சமத்துவமின்மை போன்றவை நிறைந்திருக்கும் சமூகத்தின் மிகச்சிறிய அலகாகத்தான் குடும்ப அமைப்பு இருக்கிறது. குடும்பத்தின் பெரிதாக்கப்பட்ட வடிவமாகச் சமூகம் இருக்கிறது. இந்தக் குடும்ப அமைப்பிலிருந்து வெளிவரக்கூடிய குழந்தைகள்தாம் சமூகத்தில் உள்ள பள்ளிகளில் நுழைகிறார்கள். குடும்பமும், அவர்கள் வசிக்கும் தெருவும், ஊரும், மாணவர்களின் புழங்குகிற வெளியாக இருக்கின்றன.
- இங்கெல்லாம் தான் அவர்கள் அதிக நேரம் செலவிடுகின்றனர். பள்ளியில் அவர்கள் கற்கும் நேரம் ஐந்திலிருந்து ஆறு மணி நேரமே. இங்குக் கற்பித்தலோடு, நீதிபோதனை, நன்னெறிக் கல்வி, நூலக வாசிப்பு என்று விழுமியங்களை ஆசிரியர்கள் கற்பித்தாலும், வீட்டுச் சூழலின் தாக்கமே மாணவர்களிடத்தில் மிகுந்து காணப்படுகிறது. ‘ஆண் பெண் சமம்’, ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று கற்பித்தாலும் அதைப் பழகுகிற இடமாக வீடும் ஊரும் இல்லை.
- இந்தச் சூழலுக்கு இடையே கடந்த பதினைந்து ஆண்டுகளாகவே பள்ளிகளில் மாணவர்கள் இடையே சாதியப் பாகுபாடும் இருந்துவருகிறது. தங்கள் சாதியைக் குறிக்கும்விதமாக கையில் கயிறுகளை அணிந்து வருதல், பட்டியலின மாணவர்களை இழிவாகப் பேசுதல், துன்புறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவது இருக்கவே செய்கிறது. இவை தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்குப் போகும்போதுதாம் தாக்குதல்களாக நிகழ்கின்றன.
- அண்மையில் நாங்குநேரி பெருந்தெருவில் வசித்துவரும் பட்டியலின மாணவர் ஒருவரை, அவருடன் படிக்கும் சக மாணவர்களே வீட்டுக்குள் நுழைந்து அரிவாளால் வெட்டிச் சாய்த்திருக்கிறார்கள். அதைத் தடுக்கவந்த அவருடைய தங்கைக்கும் வெட்டுகள் விழுந்திருக்கின்றன. மிகப்பெரிய கொடூரம் இது. தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது இச்சம்பவம்.
இதன் பின்னுள்ள அரசியல்தான் என்ன?
- இதை நாம் ஆராய வேண்டியுள்ளது. முதலில் பள்ளிக்கூடத்தில் கற்பிக்கப்பட்டு வருகிற கல்வியின் பயன் என்ன என்ற கேள்வி அழுத்தமாக எழுகிறது. மாணவர்களைத் தேர்ச்சி அடிப்படையிலும் மதிப்பெண் அடிப்படையிலும் தயார்செய்யும் கல்வி, சமூகம் சார்ந்த விழுமியங்களை, மாணவர்களிடம் ஏற்படுத்தத் தவறியதாகவே நம் கல்வி அமைப்பு முறை இருக்கிறது. எனவே, பாடத்திட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.
- வழக்கமான தமிழ் உள்ளிட்ட பாடங்களைக் கொண்ட பாடத்திட்டத்தில், சமூக நீதி, பெண் கல்வி, பெண்ணுரிமை, ஆண் பெண் சமத்துவம், இடஒதுக்கீட்டின் கூறுகள் போன்றவற்றை உள்ளடக்கமாக வைத்து, மற்ற பாடங்களைப் போலவே இதிலும் தேர்ச்சி மதிப்பெண்ணை நிர்ணயிக்கலாம்.
- இவற்றைப் படிக்கும்போது அவை குறித்த புரிதல்கள் மாணவர்களிடம் ஏற்படும். இரண்டாவது, பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் பலர் சாதிய மனோபாவத்துடன் இருக்கிறார்கள். தம்முடன் பணிபுரியும் சக ஆசிரியர்களிடம், மாணவர் களிடமும் சாதிப் பாகுபாட்டினை இவர்கள் காட்டுகிறார்கள்.
- ஆசிரியர்களுக்கும் சமூக நீதி குறித்த பயிற்சிகளும் உரையாடல்களும் அரசால் வழங்கப்பட வேண்டும்.
- மூன்றாவது, குடும்பம் என்பது குழந்தைகளின் வளர்ப்பில் மிகப்பெரிய தாக்கத்தைச் செலுத்துகிறது. சாதி, ஆண் உயர்ந்தவன், பெண் தாழ்ந்தவள், சாதிப் பெருமிதம், இவற்றை ஊட்டியே குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள்.
- தாம் சார்ந்திருக்கும் தெருவும் ஊரும் எத்தகைய பொது மனநிலையில் இருக்கின்றனவோ அதே மனநிலையில் குழந்தைகளும் வளர்கிறார்கள். ‘போலச் செய்தல்’ என்பது ஒரு போதைப்பொருளாகக் குடும்பங்களால் வளர்த்தெடுக்கப்படுகிறது.
- நான்காவது, பள்ளிகளில் செயல்படும் பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக்குக் குழு ஆகியவற்றிலும் அரசியல் கட்சிகளும், சாதியமும் ஆட்சி செய்கின்றன. இது சார்ந்த பதவிகளில் பெரும்பாலோர் ஆதிக்கச் சாதியினராகவே இருக்கிறார்கள். பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தாலும், அவர்களுக்கு எந்த அதிகாரமும் இருப்பதில்லை.
- ஆக, நாங்குநேரி போன்ற கொடூரச் சம்பவங்கள், பள்ளி மாணவர்களால் அரங்கேறுகிறது என்பது கல்வி அமைப்பின் தோல்வியாகவே தெரிகிறது. இப்படிச் செய்வது இயல்பானது என்றும் இதற்காகக் குற்ற உணர்வு கொள்ள வேண்டியது இல்லை என்றும் மாணவர்களின் உளவியலில் பதிய வைக்கப்பட்டிருக்கிறது.
- எனவே, முதலில் குடும்பங்களிலிருந்து மாற்றம் தொடங்க வேண்டும். பள்ளிகளில் ஆசிரியர்கள் சமத்துவத்தை முதலில் தாங்கள் கற்க வேண்டும். இது ஒரு கூட்டு முயற்சி. பெற்றோர்கள், ஆசிரியர்களோடு சமூகமும் கல்வித்துறையும் இணைந்து சில செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
- முற்போக்கு கருத்துகளையும் சிந்தனைகளையும் மக்களிடையே விதைக்க வேண்டும். குறிப்பாகப் பள்ளிக்கூடங்களைச் சாதி, மதம், அரசியல் ஆகியவற்றிலிருந்து துண்டிக்க வேண்டும். ஒருவரையொருவர் குறை சொல்லாமல் அனைவரும் பொறுப்புகளையும் கடமைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
- கல்விக் கூடங்கள் வெறும் கல்வியை மட்டும் கற்பிக்கும் காட்சிக்கூடமல்ல! அவை மாற்றத்துக்கான கூடமாகவும் மாற வேண்டும். அது நம் அனைவரின் கைகளிலும் மனங்களிலுமே இருக்கிறது. பள்ளிக்கூடங்கள் விரிந்த வானமாகட்டும். மாணவர்கள் சிறகடித்துப் பறக்கும் பறவைகளாகட்டும்.
நன்றி : இந்து தமிழ் திசை (15– 08 – 2023)