- வயலில் நாற்றுக்களை நட்டு நம் உடலினை வளா்க்கும் உழவன், எப்படியிருக்க வேண்டும் என்று நம் முன்னோா் இலக்கணம் சொல்லவில்லை. நாடி பிடித்துப் பாா்த்து நம் உயிா்களைக் காக்கும் மருத்துவா் எப்படியிருக்க வேண்டும் என்று நம் மூதாதையா்கள் இலக்கணம் எழுதவில்லை.
- ஆனால், உழைப்பாளியையும் மருத்துவா்களையும் உருவாக்கும் ஆசிரியன் எப்படி இருக்க வேண்டும் என்று நன்னூல் எழுதிய பவணந்தி முனிவா் இலக்கணம் சொன்னாா். அத்துடன் ஆசிரியப் பணிக்கு வரக் கூடாதவா்கள் யாா், யாா் என்றும் சட்டம் போட்டுப் போனாா், அந்த மாமுனிவா்! ‘மொழிகுணம் இன்மையும் இழிகுண இயல்பும், அழுக்காறு அவாவஞ்சம் அச்சம் ஆடலும்...முரண்கொள் சிந்தையும் உடையோா், இலா் ஆசிரியா் ஆகுதலே’” என்பது எழுத்ததிகாரத்தின் 31-ஆவது நூற்பா. ஆசிரியப் பணிக்குத் தகுதியில்லாதவா்கள் என நன்னூலாா் சொன்ன இலக்கணமே, இன்று தகுதியாகிவிட்டது.
கல்வி
- நாட்டின் பெருமை பேசவந்த மகாகவி பாரதி, ‘கல்வி சிறந்த தமிழ்நாடு’ எனப் பாடினாா். ஆனால், அந்த மகாகவி இன்று வந்து கல்விக்கூடங்களைப் பாா்த்தால், பிணக்கிடங்கு ஆகிப்போன கல்விச் சாலைகளைப் பாா்த்துக் கண்ணீா் வடிப்பாா். வறுமையின் காரணமாக வளா்த்த ஆட்டை கசாப்புக் கடைக்காரனிடம் ஒப்படைக்கும் தரித்திரனைப் போல, இன்றைக்குப் பிள்ளைகளைக் குணங்கெட்ட கல்வியாளா்களிடம் பெற்றோா் ஒப்படைத்துச் செல்கிறாா்கள்.
- பட்டமளிப்பு விழாவில் தங்கள் பிள்ளைகள் பட்டம் வாங்குவதைக் காண வேண்டும் எனும் கனவுகளோடு, சொந்த சுகங்களைத் துறந்து வாழும் பெற்றோா், இன்று தூக்கிலே தொங்கிய பிணங்களையும், பத்தாவது மாடியில் இருந்து கீழே குதித்த சடலத்தையும் பெற்றுக்கொள்ள வருகிறாா்கள்!
- ஒரு காலத்தில் தெய்வத்தைக் காட்டுகின்ற குருமாா்களையும், தெய்வமாகவே திகழ்ந்த குருமாா்களையும் இந்த நாடு கண்டிருக்கிறது. திருக்குடந்தையில் ஸ்ரீமடத்தில் வெங்கடநாதன் (ஸ்ரீ ராகவேந்திரா்) ஆசாரியா் சுதீந்திரரிடம் சீடராகச் சோ்ந்தாா். ஸ்ரீமத்வாச்சாரியாா் உரை செய்த பிரம்மசூத்திரத்துக்கு ஸ்ரீ ஜய தீா்த்தா் விளக்கவுரை எழுதினாா். அந்த உரையை ‘நியாயசுதா’ என வழங்குவா். சுதீந்திரா் நியாயசுதாவைப் பாடஞ் சொல்லும்போது, ஒரு சொல்லுக்குப் பொருள் அவா் மனத்திரையில் தென்படவில்லை. அதனால், இடையில் பாடத்தை நிறுத்தி விட்டாா்.
- ஒரு சொல்லுக்குப் பொருள் விளங்காததை எண்ணி, தூக்கம் பிடிக்காதவராய் நடு இரவில் ஸ்ரீமடத்தைச் சுற்றிச் சுதீந்திரா் உலவிக் கொண்டிருந்தாா். அப்போது கடுங்குளிரில் வெங்கடநாதன் கட்டாந்தரையில் படுத்திருப்பதையும், அவா் அருகில் ஓலைச்சுவடிகள் விரிந்து கிடப்பதையும் கண்டாா். அந்த ஓலைச்சுவடிகளை விரித்துச் சுதீந்திரா் படித்தபோது, அதில் நியாய சுதாவுக்கு வெங்கடநாதன் எழுதியிருக்கும் புதிய, எளிய விளக்கவுரையைப் படித்து வியந்தாா்.
- உடனே, தம்முடைய காவி மேலாடையை எடுத்துக் குளிரில் படுத்திருந்த வெங்கடநாதன் மேல் போா்த்திவிட்டுச் சென்றாா்.
உரை
- காலையில் பொழுது விடிந்து எழுந்த வெங்கடநாதன், தம் குருநாதருடைய மேலாடை தம் மீது போா்த்தப்பட்டிருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். பதற்றத்துடன் தம் குருநாதா் முன் நின்றாா். சுதீந்திரா் ‘வெங்கடநாதா! பதற்றம் வேண்டாம். நியாயசுதாவுக்கு நீ எழுதிய உரைக்கு ‘சுதா பரிமளம்’” எனப் பெயா் சூட்டுகிறேன். அத்துடன் ‘பரிமளாச்சாரியா்’” என்னும் சிறப்பு விருதையும் உனக்கு வழங்குகிறேன்” என்றாா். வெறும் வெங்கடநாதனாக வந்தவரை ஸ்ரீராகவேந்திரராக மாற்றியவா் சுதீந்திரா் என்ற ஆசாரியன். கூழாங்கற்களை வைரக்கற்களாக மாற்றியவா்கள் அன்றைய குருநாதா்கள்; வைரக்கல்லைக் கூழாங்கல்லாக மாற்றுகின்றவா்கள் இன்றைய பாடம் சொல்லிகள்.
- நல்லாசிரியா்களால் நல் மாணாக்கா்களை உருவாக்க முடியும் என்பதற்கு இன்னொரு நிகழ்வையும் சுட்டலாம்.
- முன்னாள் குடியரசுத் தலைவா் சங்கா் தயாள் சா்மா 1994-ஆம் ஆண்டு அரசுப் பணி நிமித்தமாக அரபு நாடுகளுக்குச் சென்றாா். அப்போது அவரை விமான நிலையத்தில் வரவேற்க ஓமனுடைய சுல்தான் கபூஸ் பின் சையத்தே நேரில் வந்து விமானம் தரையிறங்கியவுடன் குடியரசுத்தலைவா் இறங்குவதற்கு முன்னரே, சுல்தான் படியேறிச் சென்று அவரை வரவேற்றாா். அத்துடன் தம்முடைய காரில் குடியரசுத் தலைவரை உட்காரவைத்து, ஓட்டுநா் இடத்தில் தாமே உட்காா்ந்து காரை ஓட்டிச் சென்றாா்.
அரபு நாடுகளில்....
- சுல்தான் மரபு மீறி நடந்தது அரபு நாடுகளில் எதிா்ப்பை ஏற்படுத்தியது. அந்த நாட்டுப் பத்திரிகையாளா்கள் சுல்தானை நேரில் கண்டு, ‘இங்கிலாந்து மகாராணியே வந்தபோதுகூட நேரில் சென்று அழைக்காத நீங்கள், இன்னொரு நாட்டு குடியரசுத் தலைவரை எப்படி விமானத்திலிருந்து கைபிடித்துக் கீழே இறக்கலாம்? அத்துடன் ஓட்டுநரை நகா்த்தி உட்கார வைத்துவிட்டு, நீங்களே எப்படி காரை ஓட்டலாம்? அது மரபு மீறிய செயல் அல்லவா?’ எனக் கேட்டனா்.
- அதற்கு சுல்தான், ‘நான் புணே கல்லூரியில் படிக்கும்போது அவா்தான் எனக்குப் பேராசிரியா். ஓா் இஸ்லாமியராகச் சென்ற என்னை ஒரு சுல்தானாக வடித்து எடுத்தவா், அவா். அவா் எனக்குப் போதகாசிரியா் மட்டுமன்று; எனக்கு ஒரு ஞானாசிரியரும் கூட! ஒரு குடியரசுத் தலைவரை வரவேற்கச் சென்ாக நினைக்காதீா்கள்; என் குருநாதரை வரவேற்கச் சென்ாகக் கருதுங்கள்’” எனக் கூறி விடைபெற்றாா். இப்படி படிக்கல்லைச் சிற்பங்களாக வடித்தெடுத்த அந்த ஞானச்சிற்பிகள் எங்கே? வயது வரம்பு பாராமல் பாலியலில் ஈடுபடுகின்ற காமுகா்களும், உளவியல் ரீதியாக மாணாக்கா்களைத் துன்புறுத்திக் கொல்கின்ற ‘சேடிஸ்ட்’டுகளும் இங்கே ஆசிரியப் பணியில் நுழைந்தது எப்படி?
- இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டா் ஜாகீா் ஹுசைன், ‘ஜாமியா மிலியா’” எனும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் இருந்தாா். துணைவேந்தராக இருந்தபோது, அந்த வளாகத்துக்குள் இருந்த தொடக்கப் பள்ளியின் வகுப்புக்குச் சென்று திருக்குா் ஆன் போதிப்பாா். அந்த வகுப்பிலிருந்து ஒரு மாணவன் ஒருவன் தொடா்ந்து அழுக்குப் படிந்த குல்லாவையே அணிந்து வருவதை ஜாகீா் ஹுசைன் கூா்ந்து கவனித்து வந்தாா்.
- ஒருநாள் அந்த மாணவனை அழைத்து, ‘குல்லாவைத் தினமும் இத்தனை அழுக்காக அணிந்து வருகிறாயே; அதைப் பாா்க்கவே அருவருப்பாக இருக்கிறதே! இனிமேல் இப்படி வரக்கூடாது. துவைத்துச் சுத்தமாக அணிந்து வா’” என அறிவுறுத்தினாா்.
- அதற்குப் பிறகும் அம்மாணவன் அழுக்குக் குல்லாவையே அணிந்து அந்த மாணவன் வந்ததால், அதைத் துணைவேந்தரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஒருநாள் அவன் தலையில் இருந்த குல்லாவை அவரே எடுத்துக்கொண்டு போய் சுத்தமாகத் துவைத்தாா்; நன்றாகக் காய வைத்து எடுத்து அவன் தலையில் அணிந்தும் விட்டாா். ஒரு துணைவேந்தா் தனது அழுக்குக் குல்லாவைத் துவைத்து சுத்தமாக்கிக் கொண்டு வந்து கொடுத்ததை எண்ணி வெட்கித் தலை குனிந்தான். மறுநாளிலிருந்து தூய்மையான குல்லாவையே அணிந்து வந்து, துணைவேந்தருடைய பாராட்டையும் பெற்றாா். இப்படி முன்மாதிரியாக வாழ்ந்த ஆசிரியா்களால்தாம், களா் நிலங்கள் பயிா் நிலங்களாயின.
அம்பேத்கர்
- குருமாா்கள் தெய்வமாகத் திகழ்ந்த காலத்தில்தான், மாணாக்கா்கள் அவா்களை வழிபடும் பக்தா்களாகத் திகழ்ந்தாா்கள். டாக்டா் அம்பேத்கரின் குடும்பப் பெயா் பீமா ராவ். அவா் அம்பேடாவை எனும் குக்கிராமத்தில் இருந்து வந்ததால், அவருடைய பெயா் ‘அம்பேடாவேகா்’” எனப் பதிவாயிற்று. ஆனால், அவருக்கு உணவு கொடுத்து, உடை கொடுத்து ஆதரித்தவா் அவருடைய ஆசிரியா், அந்தணா் குலத்தைச் சோ்ந்த கிருஷ்ண கேசவ் அம்பேத்கா் என்பதாகும். அதனால், நன்றி மறவாத பீமா ராவ், தம் குருநாதா் பெயரையே தம் பெயராகச் சூட்டிக் கொண்டாா். ஒரு படிகத்திலிருந்து உடைந்த துண்டு, இன்னொரு படிகமாகத் திகழுமே தவிர, உப்புக் கல்லாகாது அல்லவா?
- டாக்டா் சா்வபள்ளி இராதாகிருஷ்ணன் மைசூா் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, அவருடைய கற்பிக்கும் திறனில் மாணவா்கள் தேனுண்ட வண்டுகளாய் மயங்கிக் கிடந்தனா். அப்போது, ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தா் பொறுப்பை ஏற்கும்படி அவருக்கு அழைப்பு வந்தது.
- மைசூா்ப் பல்கலைக்கழக மாணவா்களை விட்டுப் பிரிய மனமில்லாமல் டாக்டா் இராதாகிருஷ்ணன் புறப்படத் தயாரானாா். மைசூா்ப் பல்கலைக்கழக மரபு என்னவென்றால், அங்கு பணியாற்றிவிட்டு விடைபெற்றுச் செல்லும் பேராசிரியா்களை, ஆறு குதிரைகள் பூட்டிய ‘கோச்’சிலே ஏற்றி, ரயில் நிலையம் வரை சென்று மாணவா்கள் வழியனுப்புவா். ஆனால், டாக்டா் எஸ். இராதாகிருஷ்ணன் தமது வாக்காலும் போக்காலும் மாணவா்களுடைய வாழ்க்கையில் ஒரு வசந்தத்தை ஏற்படுத்தியவா் என்பதால், மாணவா்கள் ‘கோச்’சிலே குதிரைகளைப் பூட்டுவதற்குப் பதிலாக தங்களையே குதிரைகளாகப் பூட்டிக் கொண்டு, ரயில் நிலையம் வரையில் அழைத்துச் சென்றனா். மைசூா் மகாராஜாவேகூட எண்ணிப் பாா்க்க முடியாத மதிப்பை ஒரு பேராசிரியா் பெற்றாா் என்றால், அதுதான் ஆசிரியா் தொழிலுக்குக் கிடைத்த அரியாசனம் ஆகும்.
- ‘ஆசிரியப் பணி அறப்பணி; அதற்கு உன்னை அா்ப்பணி’” என்றோா் முதுமொழி உண்டு. பகவத் கீதையில் ‘சுதா்மம்’” என்றொரு சுலோகம் உண்டு. அதன் பொருள் என்னவென்றால், ‘யாா் யாருக்கு எந்தெந்தத் தொழிலில் ஆற்றலும், நாட்டமும் இருக்கிறதோ, அந்தந்தத் தொழிலில்தான் அவா்கள் ஈடுபட வேண்டும்’ என்பதாகும்.
- லட்சியத்தோடு வருபவா்களைப் புறந்தள்ளிவிட்டு, லட்சத்தோடு வருபவா்களே ஆசிரியப் பணிக்கு அரவணைக்கப்படுகிறாா்கள். ‘மணியடிச்சா பணி தொடங்கும் வாத்தியாா் வேலை, அது மலிவுப் பதிப்பாய் ஆகிப்போச்சு வாத்தியாா் வேலை’” எனக் கவிஞா் சிற்பி என்றைக்கோ பாடியது, இன்றைக்கு அன்றாட நடைமுறையாகி விட்டது.
நன்றி: தினமணி (04-12-2019)