கள ஆய்வுப் படைப்பாளி
- மறைந்த எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனின் நூற்றாண்டு இன்று தொடங்குகிறது. தமிழில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதிவந்த ராஜம் கிருஷ்ணன், நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என்று 70-க்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்தவர். சாகித்ய அகாடமி விருது, சோவியத் லேண்ட் நேரு விருது, சாஷ்வதி நஞ்சங்கோடு திருமலாம்பாள் விருது, பாரதிய பாஷா பரிஷத் விருது, திரு.வி.க. விருது போன்ற பல முக்கிய விருதுகளைப் பெற்றவர்.
மகத்தான படைப்புகள்:
- தமிழ்ப் பத்திரிகை உலகம் ஆரம்பம் முதலே இவரது எழுத்துக்களைப் பரிசளித்துக் கௌரவித்தது. தொடராகப் பதிப்பித்தது. மற்ற பெண் எழுத்தாளர்களைப் போல் குடும்ப அமைப்புக்குள் கிடைத்த அனுபவங்களை மட்டுமே எழுதுவது இவருக்கு உடன்பாடாக இல்லை. பெண் என்றால் குடும்பம் மட்டும்தானா? அதைத் தாண்டி சமூகம், பொருளாதாரம், அரசியல் என்று பல தளங்களில் அவள் சிந்திக்கக் கூடாதா? ஒரு புதிய எழுச்சியுடன் தனக்கான களங்களை நோக்கி அவர் பயணித்தார்.
- மின்பொறியாளரான கணவர் கிருஷ்ணனுக்கு குந்தா அணைக்கட்டில் வேலை கிடைத்ததால், ஊட்டியில் வசிக்கத் தொடங்கினார் ராஜம் கிருஷ்ணன். அங்கிருந்த படுகர் இனத்தவரைப் பற்றித் தகவல்களைத் திரட்டி அவர் எழுதிய நாவல் ‘குறிஞ்சித்தேன்’ (1960). அந்த மண்ணுக்கே உரிய பயிர்களைத் தவிர்த்துப் பணப்பயிர்களை நாடிச் செல்லும் புதிய பொருளாதாரத் தேடல் எப்படி அவர்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்தது என்பதை இந்த நாவலில் விவரித்துள்ளார்.
- குந்தா அணைத் திட்டத்தைத் தொடங்கிவைத்த பிரதமர் நேரு, “இது போன்ற திட்டங்களே இனி நம்முடைய கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள், குருத்வாராக்கள்” என்று முழங்கினார். அவருடைய வார்த்தைகளால் உந்தப்பட்ட ராஜம் கிருஷ்ணன், ‘அமுதமாகி வருக’ (1965) நாவலில், ஒரு அணைத் திட்டத்தை வெற்றிகரமாக உருவாக்கி, மின்சாரத்தைக் கொண்டுவந்து ஒளியூட்டும் பணிகளை அதன் பல்வேறு பரிமாணங்களுடன் விவரித்திருக்கிறார்.
- கோவாவில் வசிக்க நேர்ந்தபோது அந்த ஊரும் சூழலும் அதன் தனித்தன்மையும் ராஜம் கிருஷ்ணனை மிகவும் கவர்ந்தன. போர்த்துக்கீசியரிடமிருந்து கோவா விடுதலை பெற்ற வரலாற்றுப் பின்னணியுடன் ஒரு நீண்ட நாவலை எழுதினார். அகோதா கோட்டையின் தனிமைச் சிறையில் சூரியனையே பார்க்காமல் பல மாதங்களைக் கழித்த போராட்ட வீரர்களைப் பற்றி நெகிழ்ச்சியுடன் விவரித்த அந்த நாவல் ‘வளைக்கரம்’ (1967).
- மகாத்மா காந்தியின் நூற்றாண்டு விழாவையொட்டி (1968) காந்தியத்தின் தாக்கம் இந்த மண்ணில் எப்படி இருக்கிறது என்கிற கேள்வியுடன் அன்றைய யதார்த்தத்தைப் படம்பிடித்துக் காட்டிய நாவல் ‘வேருக்கு நீர்’ (1972). 1973ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது இந்த நாவலுக்கு அளிக்கப்பட்டது.
- சுதந்திர இந்தியாவுக்குப் பெரிய சவாலாக இருந்த சம்பல் கொள்ளையர், ஆச்சார்ய வினோபா பாவே, ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆகியோரின் முயற்சியால் தங்கள் ஆயுதங்களை விட்டுவிட்டுப் புதிய வாழ்வாதாரங்களைத் தேடத் தொடங்கிய காலம் அது. வன்முறையின் சுவடு முற்றிலுமாகத் தீர்ந்திருக்கவில்லை.
- ஆபத்து நிறைந்த இந்தச் சூழலில் பல முறை பயணம் செய்து கொள்ளையர் தலைவர்களைச் சந்தித்துத் தகவல் திரட்டினார் ராஜம் கிருஷ்ணன். அந்த மக்களின் வாழ்வில் கலந்திருந்த கோபத்தையும் துரோகத்தையும் வலியையும் அதன் நடுவில் இழையோடும் கருணையையும் ‘முள்ளும் மலர்ந்தது’ என்ற நாவலில் பதிவுசெய்தார். முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டு ஆச்சார்ய வினோபா அதில் கையெழுத்திட்டுக் கொடுத்து அவரை வாழ்த்தினார் (1974).
மனிதம் பேசிய எழுத்து:
- தூத்துக்குடி மீனவர் குடியிருப்பில் சில காலம் தங்கியிருந்து அந்த மக்களையும் அவர்களுடைய பொருளாதார நெருக்கடிகளையும் அவர்களைச் சுரண்டும் நிறுவனங்களையும் ‘அலைவாய்க் கரையில்’ (1978) நாவலில் ராஜம் கிருஷ்ணன் அடையாளம் காட்டியுள்ளார். வட்டார வழக்கும் அழகியலில் தோய்ந்த விவரிப்புகளும் அந்நாவலின் பலம்.
- தூத்துக்குடியில் உப்பளத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் இவரது கவனத்துக்கு வந்தது. தினமும் நாம் உணவில் சேர்க்கும் உப்புக்குப் பின்னால் அந்தத் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. கண்களைக் கூசவைக்கும் ஓர் உப்புப்படலத்தின் மீது கொளுத்தும் வெயிலில்தான் அவர்கள் வேலை நடைபெறும்.
- காலுக்குச் செருப்பு அணிய முடியாது. பனையோலையைச் சுற்றிக்கொள்வார்கள். சிராய்த்த காலில் உப்புத்துகள் பட்டு எரிச்சலைக் கொடுக்கும். உப்பைப் பார்த்துப்பார்த்துக் கண்கள் கூசிப்போகும். 40 வயதிலேயே பார்வையை இழந்து விடுவார்கள். கூலி உயர்வுக்காக அவர்கள் நடத்தும் போராட்டம்தான் ‘கரிப்பு மணிகள்’ (1979) நாவலின் மையப்பொருள்.
- 1980ஆம் ஆண்டு சர்வதேசக் குழந்தைகள் ஆண்டாக அறிவிக்கப்பட்டது. அதற்கு இரண்டு ஆண்டுகள் முன்புதான் சிவகாசியில் பட்டாசுத் தொழிற்சாலையில் வேலைபார்த்த குழந்தைத் தொழிலாளர்கள் ஒரு வேனில் பயணிக்கும்போது ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்ட செய்தி வெளிவந்தது. ராஜம் கிருஷ்ணன் சிவகாசிக்கும் அதன் சுற்றுப்புறங்களுக்கும் நேரில் சென்று குழந்தைத் தொழிலாளர்களின் நிலையைக் கண்டறிந்து ‘கூட்டுக்குஞ்சுகள்’ (1980) நாவலில் பதிவுசெய்தார்.
- மதுரை மாவட்டத்தின் உசிலம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பெண் சிசுக்கள் பிறந்தவுடன் கள்ளிப்பால் ஊற்றிக் கொல்லப்படும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. அந்தப் பகுதிகளுக்கு நேரில் சென்று சேகரித்த செய்திகளைக் கொண்டு ராஜம் கிருஷ்ணன் எழுதிய நாவல் ‘மண்ணகத்துப் பூந்துளிகள்’ (1988).
ஆளுமைகள் குறித்த ஆவணங்கள்:
- டாக்டர் ரங்காச்சாரி (1965), சுப்பிரமணிய பாரதி (1983), மணலூர் மணியம்மாள் (1991) ஆகிய மூன்று ஆளுமைகளைப் பற்றி வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களுடன் புதின வடிவத்தில் எழுதியிருக்கிறார் ராஜம் கிருஷ்ணன். மூன்றுமே மகத்தான வாழ்க்கை வரலாற்றுப் படைப்புகள். இதில் மணலூர் மணியம்மாள் என்ற பெண்மணியைப் பற்றி அவர் கள ஆய்வு செய்தபோது, அவருடன் இணைந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
- ஏற்கெனவே, ‘சேற்றில் மனிதர்கள்’ நாவலுக்காக தஞ்சைப் பகுதியில் விவசாயிகள் இடையே கள ஆய்வு செய்திருந்தார் ராஜம் கிருஷ்ணன். அப்போது அவர்கள் பாடிய நாட்டுப்புறப் பாடலில் மணியம்மாள் என்ற பெண்ணைப் பற்றிய பாடல் அவரது கவனத்தை ஈர்த்தது. மணியம்மாள் முதலில் காங்கிரஸ் இயக்கத்திலும் பிறகு கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் இருந்தவர் என்றும், விவசாயச் சங்கத்தில் ஈடுபாடு கொண்டவர் என்றும் சில தகவல்கள் கிடைத்தன.
- மேலும் விசாரித்தபோது, மணியம்மாள் ஒரு விதவை என்றும், தன் விதவைக் கோலத்தைத் துறந்துவிட்டு ஆண் உடை தரித்து சைக்கிளில் பயணித்து ஊரைவிட்டு ஒதுங்கி விவசாயக் கூலிகள் மத்தியில் வாழ்ந்தார் என்றும் தெரியவந்தது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களுக்கும் சென்று முக்கியத் தலைவர்கள் பட்டியலை ஆராய்ந்தபோது, அதில் மணியம்மாளின் பெயர் இடம்பெறவில்லை என்பது ராஜம் கிருஷ்ணனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
- வரலாற்றில் மூடி மறைக்கப்பட்ட மணியம்மாளின் வாழ்க்கையை வெளிச்சமிட்டுக் காட்டுவதற்காகக் கள ஆய்வு மேற்கொண்டார் ராஜம் கிருஷ்ணன். வாலாம்பாள் என்ற இயற்பெயர் கொண்ட மணியம்மாள் ஒரு வழக்கறிஞரின் மனைவி. விதவையான பிறகு ஒடுக்குமுறைக்கு ஆளானார்.
- மொட்டையடிக்கப்பட்டு, நார்மடி உடுத்தி வாழ்ந்தார். எந்த அமைப்பு தன்னை ஒடுக்கியிருக்கிறதோ, அதே அமைப்புதான் ஏழை எளிய மக்களையும் சாதியின் பெயரால் ஒடுக்கிவைத்து அவர்களின் உழைப்பைச் சுரண்டுகிறது என்பதை உணர்ந்துகொண்டார். வீட்டைவிட்டு வெளியேறினார்.
- தன் படிப்பறிவை விவசாயக் கூலிகளின் உரிமையை நிலைநாட்டப் பயன்படுத்த உறுதிகொண்டார். கிராப் வெட்டிக்கொண்டார். வேட்டியும் தொளதொளத்த அங்கியும் அணிந்துகொண்டார். பல இடங்களுக்குப் பயணிக்க வேண்டியிருந்ததால் சைக்கிள் ஓட்டப் பழகிக்கொண்டார்.
- தங்கள் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் தங்களுக்கு எதிராகச் செயல்படுவதைச் சகிக்க முடியாத பண்ணையார்கள் மணியம்மாளை மிரட்டிப் பார்த்தார்கள். ஆள் வைத்து அடித்தார்கள். மணியம்மாள் தற்காப்புக் கலையான சிலம்பம் கற்றுக்கொண்டார். அந்தக் காலத்தில் திருவாரூரிலும் அதைச் சுற்றியிருக்கும் கிராமங்களிலும், விவசாயிகளுக்கும் பீடித் தொழிலாளர்களுக்கும் சில உரிமைகளை மீட்டுக் கொடுத்திருக்கிறார். மணியம்மாள் என்ற வீரப் பெண்மணியின் மகத்தான வரலாறு ராஜம் கிருஷ்ணனால் ‘பாதையில் பதிந்த அடிகள்’ (1991) நாவல் மூலம் மீட்கப்பட்டது.
- இலக்கியவாதி என்ற அடையாளத்துக்குள் சமூக அக்கறை கொண்ட ஆய்வாளராக இயங்கியவர் ராஜம் கிருஷ்ணன். இதுவே அவரது தனித்தன்மை. அவரது படைப்புகள் சமகால சமூக அரசியல் வரலாற்றைப் படம்பிடித்துக் காட்டும் ஆவணங்கள்.
நன்றி: இந்து தமிழ் திசை (05 – 11 – 2024)