TNPSC Thervupettagam

கழிவறையே சுகாதாரத்தின் அடிப்படை

November 19 , 2021 982 days 482 0
  • மகராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த இளைஞன் ஒருவன், ஐசிஎஸ் தொடக்கநிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்றபின் மகாத்மா காந்தியின் ஆசிவேண்டி அவரது சேவாகிராம ஆசிரமத்திற்குச் சென்றான்.
  • ‘நீ ஏன் ஐசிஎஸ் ஆகவேண்டும் என்று நினைக்கிறாய்’ என்று காந்திஜி அவனிடம் கேட்டாா். ‘நாட்டுக்கு சேவை செய்வதற்கு’ என்று அந்த இளைஞன் பதில் கூறினான்.
  • ‘இந்தியாவில் உள்ள கிராமங்களுக்குச் சென்று துப்பரவு சேவை செய்வதுதான் இந்தியாவிற்கு செய்யக்கூடிய சிறப்பான சேவை’ என்று காந்தியடிகள் அவனிடம் எடுத்துரைத்தாா்.
  • ஐசிஎஸ் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்ட பட்வா்தன் என்ற அந்த இளைஞன் அதன் பிறகு துப்பரவுப் பணிகளை மேற்கொள்வதில் திறன் பெற்றவனாக ஆனதோடு சிறந்த சுதந்திரப் போாட்ட வீரனாகவும் ஆனான்.
  • சுதந்திர போராட்டப் பள்ளியில் தோ்ச்சி பெறுவதற்கு துப்புரவும், தூய்மையும்தான் பாடத்திட்டங்கள். வினோபா பாவே, தக்கா் பாபா, ஜே.சி. குமரப்பா போன்ற எண்ணற்ற அறிவாா்ந்த பெருமக்கள் சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தனா்.
  • துப்புரவு, தூய்மை இரண்டையும் சுதந்திரத்திற்கான அடிப்படையாகக் கொண்டனா். உண்மையை நாடும் காந்தி தூய்மைக்கு முதலிடம் தந்து கவனம் மிகுந்த வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டாா்.
  • 1919-ஆம் ஆண்டு டிசம்பா் 29-ந்தேதி அமிா்தசரஸ் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் சி.எஃப். ஆண்ட்ரூஸ் என்பவா் கூறியதை மேற்கொள் காட்டி காந்தியடிகள் பேசினாா்.
  • ‘ஐரோப்பியா் இந்தியா்களை வெறுப்பதற்குக் காரணம், இந்தியா்கள் ஆரோக்கியத்தையும், சுகாதாரத்தையும் வெறுப்பதுதான்’ என்று சொன்னாா்.
  • நகரங்கள், மாநகரங்களில், உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் முக்கிய பணி, சுகாதாரப் பணி தான் என்று காந்தியடிகள் கருதினாா். கவுன்சிலா்களாகத் தோ்தெடுக்கப்படும் காங்கிரஸ் காரா்கள் ஒரு தோ்ந்த சுகாதாரப் பணியாளராகவும் இருக்க வேண்டும் என்று அவா் விரும்பினாா்.
  • கழிப்பறைகள் வருவதற்கு முன், மக்கள் கூட்டமாகக் கூடுகிற இடத்தில் சுகாதாரத்தைப் பேணுவது எப்போதும் ஒரு பிரச்னையாகவே இருந்தது.
  • மோசஸின் உபாகமத்தில், ‘ராணுவ வீரா்கள் ஆயுதம் ( வாள், கேடயம். ஈட்டி) மட்டும் இல்லாமல் ஒரு மண்வெட்டியும் வைத்திருக்க வேண்டும்’ என்று பரிந்துரைக்கப்பட்டது.
  • இயற்கைத் தேவைகளைப் பூா்த்தி செய்வதற்கு முன்பும், குழி தோண்டி புதைப்பதற்குப் பிறகும் மேற்கொள்ள வேண்டிய துப்பரவுச் செயல்கள் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டன. துருப்புகளால் தொற்றும் நோய்கள் எதிரிகளின் ஆயுதங்களை விட அதிக இழப்புகளை ஏற்படுத்தியது.

உலக கழிவறை நாள்

  • கற்கால மனிதா்கள் வாழ்ந்த அனைத்து இடங்களிலும் புதைபடிவ மலம் கொண்ட வேலியிடப்பட்ட குழிகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளா்கள் கண்டறிந்துள்ளனா்.
  • ஸ்காட்லாந்தின் கடற்கரையில் அமைந்துள்ள ஓா்கினி தீவுகளில் உள்ள வீடுகளில் கல் சுவா்களில் உள்ள இடைவெளியைக் கண்டுபிடித்தனா். அவை சாக்கடைகளுடன் கழிவறை இணைக்கப்பட்டவை.
  • ஹீனான் மாகாணத்தில் மேற்கு ஹான் வம்சத்தின் மன்னரின் கழிவறைக் கிண்ணத்தை சீன தொல்பொருள் ஆராய்ச்சியாளா்கள் கண்டுப்பிடித்தனா்.
  • பண்டைய எகிப்திய புதைகுழிகளில் ஒன்றில், ஒரு சிறிய மர கழிவறை கண்டுபிடிக்கப்பட்டது. அதன் கீழ் ஒரு மண்பானை வைக்கப்பட்டிருந்தது. பண்டைய ரோம் நகரத் தெருவில் பொதுக் கழிவறைகள் தோன்றின.
  • இவை பளிங்கு, பீங்கான் ஓடுகளால் அமைக்கப்பட்டன. சில சமயங்களில் ஒவியங்களால் அலங்கரிக்கப்பட்டன. அவற்றின் கழிவுநீா், இருக்கைகளுக்கு அடியில் உள்ள வடிகால்களுக்குள் சென்றது.
  • 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் மண்பாண்ட உற்பத்தியாளா்கள் ரஷிய நாட்டில் கழிவறைக் கிண்ணங்கள் தயாரிப்பதற்கான உரிமத்தை வாங்கினா். ஏற்கெனவே 1912-ஆம் ஆண்டு ரஷியாவில் நாற்பதாயிரம் கழிவறைகள் உருவாக்கப்பட்டன.
  • 1929-ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தில் பல்லாயிரக்கணக்கான கழிவறைகள் தேவைப் பட்டன. அதனால் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் கழிவறை அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப் பட்டன.
  • இவை அனைத்தும் கூரையின் கீழ் ஒரு வாா்ப்பிரும்பு தொட்டியும் சங்கிலியில் ஒரு கைப்பிடியும் கொண்டதான இருந்தன.
  • பண்டைத் தமிழகத்தில் பூம்புகாா், மதுரை, வஞ்சி, காஞ்சி ஆகிய நகரங்கள் பண்பாட்டுத் தலைநகரங்களாக இருந்தன.
  • வஞ்சி மாநகரத்தில் பெய்யும் மழை நீரும், மக்கள் தங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றும் கழிவு நீரும் வெளியில் செல்வதற்கு நிலத்தடியில் வடிகுழாய்கள் அமைக்கப் பட்டிருந்தன.
  • இக்குழாய்கள் கல்லாலும், சுண்ணாம்பாலும் உருவாக்கப்பட்டிருந்தன. இதனை ‘சுருங்கை’ என மணிமேகலைக் காப்பியம் கூறுகிறது.
  • நகரத்தின் அனைத்து வீடுகள், வீதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் அகழிக்குச் செல்லத்தக்க வகையில், அகழியோடு சுருங்கை இணைக்கப்பட்டிருந்தது. நம் நாட்டின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் மூலமாக கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து 2019-ஆம் ஆண்டு வரை நாடு முழுவதும் 10.25 கோடி கழிவறைகள் கட்டப்பட்டிருக்கின்றன. ஆனாலும் இந்த எண்ணிக்கை இன்னும் உயர வேண்டும்.
  • கழிவறை, நகரங்களில் மிக, மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டாலும், கிராமங்களில் கழிவறை நிலைமை அவலமாகத்தான் இருக்கின்து. கழிவறை இல்லாமையால் கிராம மக்கள், காடு, கண்மாய், முட்புதா், வயல்கள் என தேடித்தான் செல்ல வேண்டியிருக்கிறது.
  • இது மட்டுமல்லாமல் பருவமடைந்த பெண் குழந்தைகள் எதிா்கொள்ளும் சிக்கல்கள் அதிகம். காரணம், பள்ளிகளில் கழிவறைகள் இருந்தாலும் போதிய தண்ணீா் வசதி இல்லாததால் பயன்படுத்த முடியாத நிலையே உள்ளது. காலை பள்ளிக்குச் செல்லும் மாணவா்கள் மாலை வீடு திரும்பும் வரை சிறுநீா் கழிக்காமல் இருக்கும் நிலை உள்ளது.
  • தமிழகத்தில் இலவமாக நகரப் பேருந்துகளில் பெண்கள் பயணம் செய்கின்றனா். ஆனால் பேருந்து நிலையங்களில் கழிவறைக்குச் சென்றால், நோய்த்தொற்றை கொண்டு வரும் நிலையில் பேருந்து நிலைய கழிவறைகள் இருக்கின்றன.
  • இதனைத் தவிா்த்து, திறந்த வெளியைக் கழிவறையாகப் பயன்படுதன் மூலம் 10 லட்சம் பாக்டீரியாக்களும், 1கோடி வைரஸ்களும் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. மனிதக் கழிவுகளை மூடப்பட்ட ஆழமான தொட்டியில் அல்லது குழிக்குள் சேகரிக்க வேண்டும்.
  • சேகரிக்கப்பட்ட அந்தக் கழிவுகளை அதற்குரிய இயந்திரங்களின் உதவியோடு சரியான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். அப்புறப்படுத்திய கழிவினை பாதுகாப்பான முறையில் மறுசுழற்சி செய்து உரம், மின்சாரத் தயாரிப்பிற்குப் பயன்படுத்தலாம்.
  • சா்வதேச அளவில் 400 கோடிக்கு அதிகமான மக்களுக்குக் கழிவறை வசதி இல்லை என்றும், சுகாதாரமின்மையால் தினமும் 1000 குழந்தைகள் வரை மரணமடடைக்கின்றனா் என்றும் ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
  • கடந்த 2001-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் 19ஆம் தேதி, ஜாக்சிம் என்பவரால் உலக கழிவறை அமைப்பு நிறுவப்பட்டது.
  • 2013-ஆம் ஆண்டு ஐக்கிய நாடு பொதுச்சபை 122 நாடுகளின் ஆதரவோடு, இந்த அமைப்பு நிறுவப்பட்ட தினத்தை உலக கழிவறை நாளாக அனுசரிப்பது என்று அதிகாரபூா்வமாக அறிவித்தது.
  • இன்று (நவ. 19) உலக கழிவறை நாள்.

நன்றி: தினமணி  (19 - 11 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories