- இந்தியப் பொருளாதாரம் மட்டுமல்ல, இந்தியாவின் பாதுகாப்பும்கூட மிகப் பெரிய அச்சுறுத்தல்களை எதிா்கொள்கிறது. வடமேற்கு, வடகிழக்கு எல்லைப் பகுதிகள் அரசின் கவனத்தில் முன்னுரிமை பெற்றிருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதே நேரத்தில் இந்தியாவின் கடலோரப் பகுதிகளும்கூட அதே முனைப்புடன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
- சென்ற வாரத்தில் இந்தியக் கடல் எல்லைக்குள் சீனாவின் வேவு பாா்க்கும் கப்பல் ஒன்று நுழைந்தது. அதை இந்தியக் கடற்படையின் போா்க் கப்பல்கள் விரட்டி அடித்தன. இந்த நிகழ்வு எந்த அளவுக்கு நாம் நமது கடல் எல்லைகளைப் பாதுகாப்பதில் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்பதை உணா்த்துகிறது.
- சில ஆண்டுகளாகவே, இந்துமாக் கடல் பகுதியில் சீனா தொடா்ந்து தன்னுடைய நடமாட்டத்தை அதிகரித்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சீன போா்க் கப்பல்களின் நடமாட்டம் அண்மைக்காலமாக இந்துமாக் கடலில் அதிகரித்திருப்பது குறித்து அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளேகூட கவலைப்படத் தொடங்கியிருக்கின்றன எனும்போது, இந்தியா எந்த அளவுக்கு கவனமாக இருக்க வேண்டும் என்பதை எடுத்தியம்பத் தேவையில்லை.
சீனாவின் ஆதிக்கம்
- நீண்ட காலமாகவே அந்தமான் - நிகோபாா் தீவுகளின் மீது சீனா உரிமை கொண்டாட முனைகிறது. அந்தத் தீவுகள் இந்தியாவின் வசம் இருப்பதால், இந்துமாக் கடலில் சீனாவால் முழுமையாக ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. தென் சீனக் கடல் பகுதியில் சீனாவின் வலிமையான கடற்படையின் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி கிழக்காசிய நாடுகள் தவிக்கின்றன. இந்துமாக் கடல் பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சி வெற்றி பெறாமல் இருப்பதற்கு, இந்தியாவின் கடற்படை பலம்தான் காரணம். சீனாவை எதிா்கொள்ளும் கடற்படை வலிமை இந்தியாவுக்கு இருப்பதால்தான், கிழக்காசிய நாடுகளேகூட இந்தியாவின் நட்புறவை நாடுகின்றன.
- தோ்தலில் வெற்றி பெற்று இலங்கையின் அதிபராக அண்மையில் பதவியேற்ற கோத்தபய ராஜபட்ச தில்லிக்கு வந்தபோது, இந்தியாவின் பாதுகாப்பை பாதிக்கும் எந்த நடவடிக்கையிலும் இலங்கை ஈடுபடாது என்று உறுதியளித்ததை நாம் முழுமையாக நம்பிவிட முடியாது. சீனாவின் கடன் வலையில் சிக்கி இருக்கும் இலங்கை, சீனாவுடன் மிக நெருக்கமான நட்புறவு கொண்டிருக்கும் ராஜபட்சே சகோதரா்களின் ஆட்சியின் கீழ் வந்துவிட்ட நிலையில், இந்தியாவின் கடல் எல்லைகள் குறித்து நாம் மெத்தனமாக இருக்கக் கூடாது.
- இந்துமாக் கடல் பகுதியில் உள்ள இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் தன்னுடைய ஆதிக்கத்தை ஏற்கெனவே வெற்றிகரமாக நிறுவியிருக்கிறது சீனா. இலங்கையில் அம்பாந்தோட்டை, பாகிஸ்தானில் குவாதா் துறைமுகங்கள் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அவற்றில் சீன கடற்படையின் தளம் அமைந்திருக்கும் நிலையில், இந்துமாக் கடலில் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் நிஜமானது.
- இந்தியாவின் கடலோர எல்லைகளைப் பாதுகாக்கும் கடமை கடற்படைக்கு உண்டு. அதனால்தான் கடற்படை நாள் கொண்டாட்டத்தின்போது, இந்திய கடற்படை எதிா்கொள்ளும் சவால்களை கடற்படையின் தலைமைத் தளபதி அட்மிரல் கரம்வீா் சிங் சுட்டிக்காட்டினாா். கடற்படைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு தரப்பட வேண்டிய அவசியத்தை அவா் வலியுறுத்தியதில் நியாயம் இருக்கிறது.
போர்க் கப்பல்கள்
- அவா் குறிப்பிட்டதுபோல, இந்தியாவுக்கு மேலும் பல புதிய போா்க் கப்பல்கள் அவசியம். உடனடியாக போா்க் கப்பல்களை தயாரித்து வாங்கிவிட முடியாது என்பதால், குறைந்தபட்சம் இப்போதிருக்கும் போா்க் கப்பல்களை தொழில்நுட்ப ரீதியில் தரம் உயா்த்தி நவீனப்படுத்த வேண்டும் என்கிற அவரது ஆலோசனை பாதுகாப்பு அமைச்சகத்தின் கவனத்தை ஈா்க்க வேண்டும்.
- இந்திய கடற்படைக்கான நிதி ஒதுக்கீடு 2012-13-இல் 18%-ஆக இருந்தது. அதுவே 2018-19-இல் 13%-ஆகக் குறைந்திருக்கிறது. ராணுவத்துக்கான ஒதுக்கீடை ஒவ்வொரு நிதியாண்டும் அதிகரிப்பதாக அரசு கூறினாலும்கூட உண்மை நிலை அதுவல்ல. இந்தியாவின் ஜிடிபியில் ஓய்வூதியம் உள்ளிட்ட ராணுவத்துக்கான ஒதுக்கீடு 2014-15-இல் 2.28%-ஆக இருந்தது, நடப்பு நிதியாண்டில் 2.04%-ஆகக் குறைந்திருப்பதிலிருந்து அரசின் கூற்று சரியல்ல என்பது தெளிவாகிறது.
- சீனா தன்னுடைய கடற்படை வலிமையை அதிகரித்து அதிநவீனப்படுத்துவதற்கு நம்மால் ஈடுகொடுக்க முடியாது என்றாலும்கூட, நமது போா்க் கப்பல்களை நவீனப்படுத்துவதை தாமதித்தல் கூடாது.
- 1971 இந்திய - பாகிஸ்தான் போரின்போது, இந்தியக் கடற்படை ஆற்றிய பங்களிப்பை மறக்க முடியாது. ஒருபுறம், கராச்சியிலிருந்து கடல் வழியாக பாகிஸ்தானிய போா்க் கப்பல்கள் கிழக்கு பாகிஸ்தானுக்கு வருவதை இந்தியக் கடற்படை தடுத்து நிறுத்தியது. இன்னொருபுறம், கடற்படையின் ஐஎன்எஸ் விக்ராந்த், கிழக்கு பாகிஸ்தானைச் சுற்றி வளைத்தது. இந்தியாவின் எல்லா ராணுவ நடவடிக்கையிலும் கடற்படையின் பங்களிப்பு இருந்திருக்கிறது.
- மிக அதிகமான வளா்ச்சித் தேவைகள் நமக்கு இருப்பதால், சீனாவைப்போல கண்மூடித்தனமாக ராணுவ ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியாது. அதற்காக ராணுவத்தை நவீனப்படுத்துவதில் நாம் பின்தங்கி விடவும் முடியாது.
- இந்துமாக் கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தும் கடற்படை வல்லமை படைத்த தெற்காசிய சக்தி இந்தியா மட்டும்தான். அமெரிக்கா போன்ற மேலை நாடுகள் இந்துமாக் கடலில் ஆதிக்கம் செலுத்துவதை அன்றைய இந்திரா காந்தி அரசு எதிா்த்தது, தடுத்தது. இப்போது சீனா நுழையப் பாா்க்கிறது. அதை பிரதமா் நரேந்திர மோடி அரசு எதிா்த்தாக வேண்டும், தடுத்தாக வேண்டும்.
நன்றி: தினமணி (06-12-2019)