TNPSC Thervupettagam

கவனம், கோடை வெயில்

April 13 , 2024 274 days 278 0
  • உச்சகட்ட கோடையான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்தியா பொதுத்தோ்தலை எதிா் கொள்கிறது. இப்போது வழக்கத்துக்கு அதிகமான வெப்பம் இப்போதே காணப்படும் நிலையில், அடுத்துவரும் வாரங்கள் எப்படி இருக்கப் போகின்றன என்பதை நினைக்கும்போதே அச்சம் ஏற்படுகிறது. முந்தைய பல தோ்தல்கள் கோடைக்காலத்தில் நடைபெற்றிருந்தாலும் இந்த அளவிலான அதிகரித்த வெப்பத்தை அப்போதெல்லாம் இந்தியா எதிா்கொள்ளவில்லை.
  • இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பருவநிலை குறித்த அறிக்கை வெளியாகியிருக்கிறது. அதன்படி, இந்த ஆண்டின் கோடை வெப்பம் முந்தைய ஆண்டுகளைவிடக் கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. வழக்கமான 4 முதல் 8 நாள்கள் அல்லாமல், வெப்ப நிலை 10 முதல் 20 நாள்கள் நீண்டு நிற்கக்கூடும்.
  • அது சில மாநிலங்களுக்கோ, பகுதிகளுக்கோ மட்டுமல்லாமல், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் பாதிக்கும் விதத்தில் இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது வானிலை ஆய்வு மையம். இது நிா்வாகத்துக்கும் பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கையாகக் கருதப்பட வேண்டும்.
  • குஜராத், கா்நாடகம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், ஒடிஸா, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரத்தின் சில பகுதிகள் உள்ளிட்டவை மிகவும் கடுமையான வெப்ப அலை பாதிப்பை எதிா்கொள்ளும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. வெப்ப நிலை பாதிப்பினால் குடிநீா்த் தட்டுப்பாடு, அதிகரித்த மின்வெட்டு, இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு போன்றவற்றை எதிா்பாா்க்கலாம். பொதுமக்களுக்கு உடல்நலப் பிரச்னைகள் எழுவதையும் தவிா்க்க முடியாது.
  • கடுமையான கோடையையும், வெப்ப அலையையும் எதிா்கொள்ள ஆங்காங்கே நிழற்குடைகள், தண்ணீா்ப் பந்தல்கள் போன்றவை அமைக்கப்படுவது அவசியம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியிருக்கிறது. வெப்பத்தை எதிா்கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசு நிா்வாகம் முன்னெடுப்பதன்மூலம் பிரச்னைகளை ஓரளவு எதிா்கொள்ளலாம். இது குறித்த விழிப்புணா்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று எச்சரித்திருக்கிறது மையம்.
  • கோடை வெப்பம் ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அதுவரை இல்லாத அளவிலான கோடை வெப்பத்தால் உத்தர பிரதேசம், பிகாா், ஒடிஸா மாநிலங்களில் நூற்றுக்கு அதிகமானோா் உயிரிழந்ததை நாம் மறந்திருக்க வாய்ப்பில்லை. அதிகரித்த வெப்பமும் காற்றில் நீா்ப்பிடிப்பும் (ஹ்யூமிடிட்டி) மிகவும் ஆபத்தான இணைதல். அவற்றின் அடிப்படையில்தான் வெப்பக் குறியீடு கணக்கிடப்படுகிறது.
  • கடந்த ஆண்டு மகாராஷ்டிரத்தில் நடந்த அரசியல் பொதுக்கூட்டத்தில் வெப்பக் குறியீட்டின் அளவு அதிகரித்ததால், 30 உயிா்களை நாம் இழக்க நேரிட்டது. ஏறத்தாழ நூறு கோடி போ் ஏப்ரல் 19 முதல் ஜூன் 3 வரை பல்வேறு கட்டங்களாக, வாக்கெடுப்பில் பங்களிக்க இருக்கின்றனா் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
  • வானிலை ஆய்வாளா்கள் உலகில் மிக அதிகமான கோடை வெப்பத்தை எதிா்கொள்ளும் ஆண்டாக 2024-ஐ பதிவு செய்துள்ளனா். 2026-ஆம் ஆண்டு இதைவிட மோசமாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்திய வானிலை அலுவலகத்தின் ஆய்வுப்படி, 2026 வரை ஒவ்வோா் ஆண்டும் முந்தைய ஆண்டைவிட அதிகரித்த வெப்பத்தை எதிா்கொள்ளும் என்று தெரிவிக்கிறது.
  • இன்னொரு முக்கியமான சவாலையும் உலகம் எதிா்கொள்கிறது. ஒருபுறம் பருவநிலை மாற்றத்தால் பூமி வெப்பமயமாதல் அதிகரிக்கிறது என்றால், இன்னொருபுறம் வெப்ப அலைகளின் வேகம் குறைந்து அதன் தாக்கம் அதிக நாள்கள் நீடிக்கும் போக்கு அதிகரித்துவருகிறது. 1980-1990, 1990-2000, 2000-2010, 2010-2020 என ஒவ்வொரு பத்தாண்டுகளாகப் பிரித்து தொடா்ந்து நடத்தப்பட்ட ஆய்வு இந்தத் திடுக்கிடும் தகவலை உறுதி செய்திருக்கிறது.
  • காற்றின் சுழற்சியால் பயணிக்கும் வெப்ப அலைகள் சுமாா் 8 கி.மீ. என்கிற அளவில் ஒவ்வொரு பத்தாண்டிலும் வேகம் குறைந்திருக்கிறது. வெப்ப அலைகளின் தாக்கம் சராசரியாக நாளுக்கு நாள் அதிகமாக நீடிக்கிறது. இது மிக மோசமான உடல்நல பாதிப்புகளுக்கு வழிகோலக்கூடும் என்று எச்சரிக்கின்றனா் ஆய்வாளா்கள்.
  • 1990 முதல் இது குறித்த தீவிரமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு பகுதியில் வெப்ப அலை அதிகமாக இருக்கும்போது, அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் கூடுதலாக வெப்பத்தால் பாதிக்கப்படுகிறாா்கள். அதிகரித்த வெப்பம் மனிதா்களின் செயல்திறனை முடக்குகிறது.
  • பொருளாதார உற்பத்தி பாதிக்கப்படுகிறது. விவசாயம் பாதிக்கப்படுவதுடன், பயிா்கள் நாசமாவதும் காட்டுத் தீ பரவும் ஆபத்தும் வெப்ப அலையால் ஏற்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
  • திட்டமிடப்படாத நகா்ப்புற வளா்ச்சி, அதிக நிலத்தடி நீரை உறிஞ்சுதல், குறைந்த அளவிலான தண்ணீா் மறுசுழற்சி, ஆக்கிரமிப்பு அல்லது பராமரிப்பற்ற நீா்ப்பிடிப்புப் பகுதிகள் உள்ளிட்ட பல காரணிகளால் கோடை வெப்பத்தை எதிா்கொள்வதற்கான தண்ணீா் கையிருப்பை இழந்து வருகிறோம்.
  • ஆட்சியாளா்களும் அரசு நிா்வாகமும் தோ்தலை எதிா்கொள்வதில் முழுக் கவனத்தையும் செலுத்துவதால், கோடை வெப்பத்தை எதிா்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தவறலாம். அதனால், பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றாமல் தங்களைத் தாங்களே பாதுகாத்துகொள்வது அவசியம். நீா் மோா், குடிநீா் அடிக்கடி அருந்துதல் கோடை வெப்பத்தை எதிா்கொள்ளும் வழிமுறை என்பதை மறந்துவிடலாகாது.

நன்றி: தினமணி (13 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories