TNPSC Thervupettagam

கவர்னர் ஜெனரல், வைஸ்ராய், ஜனாதிபதி... என்ன வித்தியாசம்?

August 17 , 2020 1619 days 1916 0
  • ஆண்டுதோறும் இந்திய சுதந்திர நாளை நாம் கொண்டாடும்போதெல்லாம் மவுன்ட்பேட்டன் முன்னிலையில் ஜவாஹர்லால் நேரு பிரதமராகப் பதவியேற்றுக்கொள்ளும் அந்த கருப்பு-வெள்ளைப் புகைப்படமும், ‘நாம் விதியோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தோம்என்ற பிரபலமான நேருவின் சொற்பொழிவும் நினைவில் வந்துபோகும்.
  • இந்தியாவின் சுதந்திர நாளை ஆகஸ்ட் 15 என்று மவுன்ட்பேட்டன் முடிவுசெய்ததற்குக் காரணம் இரண்டாண்டுகளுக்கு முன்பு 1945-ல் அதே நாளில்தான் இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்தது என்றும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது.
  • பிரிட்டிஷ் பிரதமர் க்ளமென்ட் அட்லீ இந்தியாவுக்கு முழுமையான தன்னாட்சி அதிகாரத்தை வழங்க 1948 ஜூன் 30-ம் தேதியைத்தான் முதலில் அறிவித்திருந்தார்.
  • அந்தக் காலக்கெடுவுக்குள் அரசமைப்புச் சட்டத்தை இயற்றும் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அந்தப் பணிகளை மேற்பார்வையிட மவுன்ட்பேட்டனும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.
  • அரசமைப்புச் சட்டத்தை இயற்றி முடிக்கக் காலதாமதமாகும், அதுவரையில் வகுப்புக் கலவரங்களைச் சமாளிக்க முடியாது என்ற நிலையில்தான் அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னமே ஆகஸ்ட் 15, 1947 என்று நாள் குறிக்கப்பட்டது.

டொமினியன் அந்தஸ்து

  • ஆகஸ்ட் 15-ம் தேதியை நாம் சுதந்திர நாளாகக் கொண்டாடினாலும் 1950 ஜனவரி 26 அன்று இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்படும் வரைக்கும் அதன் அரசமைப்பு முழுமையான சுதந்திர நாடாக இல்லாமல் டொமினியன் அந்தஸ்து கொண்டதாக மட்டுமே இருந்தது.
  • அதாவது, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கீழ் தன்னாட்சி பெற்ற பிராந்தியமாகவே இந்தியா இருந்தது. மவுன்ட்பேட்டனும் அவரை அடுத்து ராஜாஜியும்; நேருவும் அவருடைய சகாக்களும்கூட ஆறாவது ஜார்ஜ் மன்னரின் பிரதிநிதிகளாகவே பொறுப்பு வகித்தார்கள்.
  • ராணுவ அதிகாரிகளும் நீதிபதிகளும்கூட பிரிட்டிஷ் ஆட்சியின் பெயரால்தான் நியமிக்கப்பட்டார்கள். 1950-க்குப் பிறகுதான் ராஷ்டிரபதி (ஜனாதிபதி) என்ற பெயரில் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இந்தியர்களில் முதலாவதும் கடைசியுமாக ராஜாஜி மட்டுமே கவர்னர் ஜெனரல் பதவி வகித்தவர்.
  • ஜூன் 1948-ல் மவுன்ட்பேட்டன் நாடு திரும்ப முடிவெடுத்ததும், அவரிடத்தில் ராஜாஜி நியமிக்கப்பட்டார். நவீன இந்தியாவின் வரலாற்றைப் படிக்கத் தொடங்கும் மாணவர்களுக்கு கவர்னர் ஜெனரல், வைஸ்ராய் போன்ற பதவிகளைக் குறித்து ஒரு சின்ன குழப்பம் எழுந்து தெளிவாவது வழக்கம்.

கவர்னர் ஜெனரல், வைஸ்ராய், ஜனாதிபதி

  • 1773 முதல் வாரன் ஹேஸ்டிங் தொடங்கி அன்றைய கல்கத்தாவிலுள்ள வில்லியம் கோட்டைஆளுநர்கள், ‘வங்க ஆளுநர்கள்என்று அழைக்கப்பட்டுவந்தனர்.
  • 1828 முதல் வில்லியம் பெண்டிங் தொடங்கி அவருக்குப் பின் வந்தவர்கள் இந்தியாவின் கவர்னர் ஜெனரல்என்று அழைக்கப்பட்டனர். 1858-ல் கவர்னர் ஜெனரல் முறை முடிவுக்கு வந்தது.
  • கானிங் தொடங்கி 1947-ல் மவுன்ட்பேட்டன் வரையில் பிரிட்டிஷ் அரசின் பிரதிநிதிகளாக வைஸ்ராய்கள் நியமிக்கப்பட்டனர்.
  • கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநர்களுக்குப் படிப்படியாக அதிகாரங்கள் வழங்கப்பட்டு அவர்கள் பிரிட்டிஷ் இந்தியா குறித்த முடிவுகளை எடுக்கும் கவர்னர் ஜெனரல் ஆனார்கள்.
  • 1857-ல் தோல்வியில் முடிந்த முதலாவது இந்திய சுதந்திரப் போருக்குப் பிறகு, பிரிட்டிஷ் அரசு நேரடியாக ஆட்சிப் பொறுப்பை ஏற்று, தனது பிரதிநிதியை நியமிக்கும் முறையைக் கொண்டுவந்தது.
  • கவர்னர் ஜெனரல், வைஸ்ராய் என்று தமிழ் வரலாற்று நூல்கள் அப்படியே ஒலிபெயர்த்தே வழங்குகின்றன என்றாலும் அதற்குப் பதிலாக இலங்கை வரலாற்றாசிரியர்கள் ஆள்பதிநாயகம், பதிலரையர் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள்.
  • இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த 1950 ஜனவரி 26-ம் தேதியிலிருந்து இந்தியா முழுமையான சுதந்திர நாடாகிவிட்டது. இதற்கிடையில் காஷ்மீர், ஜுனாகத், ஹைதராபாத், மணிப்பூர், திரிபுரா ஆகியவை அடுத்தடுத்து இந்தியாவுடன் இணைந்தன. இந்த இணைப்புகள் அனைத்தும் டொமினியன் என்ற பெயரிலேயே மேற்கொள்ளப்பட்டன என்பதில் ராஜதந்திரக் கணக்குகளும் உண்டு.
  • (கோவா 1961, பாண்டிச்சேரி 1962, சிக்கிம் 1975 ஆண்டுகளில் இணைந்தன.) இந்தியா தனது டொமினியன் நிலைக்கு மூன்றாண்டுகளிலேயே முடிவுகட்டிவிட்டது. பாகிஸ்தானுக்கு மேலும் ஆறு ஆண்டுகள் பிடித்தன. 1956-ல்தான் பாகிஸ்தான் முழுமையான சுதந்திர நாடானது.
  • இந்தியாவும் பாகிஸ்தானும் டொமினியன் நிலையிலிருந்துதான் முழுச் சுதந்திரத்தைப் பெற்றன என்றபோதும் அதுவும்கூட கனடா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய மற்ற டொமினியன்களுக்குப் பிடிக்கவில்லை. அதற்குக் காரணம், வெள்ளை இனத்தவருக்கும் கறுப்பினத்தவருக்கும் ஒரே அரசியல் மதிப்புநிலையா என்ற நிறவெறிதான்.

நன்றி: தினமணி (17-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories