TNPSC Thervupettagam

கவலை அளிக்கும் உடல் பருமன் பிரச்னை

May 16 , 2024 63 days 82 0
  • குடும்பத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் குடும்ப வருமானம் குறைவாக இருந்ததாலும் அவர்கள் போதிய உணவின்றியும் ஆரோக்கியம் குன்றியும் காணப்படுகின்றனர். இது அவர்களின் வளர்ச்சியை பாதிக்கிறது. மத்திய-மாநில அரசுகளின் தொடர் முயற்சியால் உணவுக் குறைப்பாட்டினால் குழந்தைகள் பாதிக்கப்படுவது வெகுவாக குறைந்துள்ளது.
  • பொது விநியோகத் திட்ட அங்காடிகள் மூலம் இலவசமாக அரிசி மற்றும் கோதுமை வழங்கும் திட்டம், அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் திட்டம், பள்ளிகளில் சத்தான மதிய உணவுத் திட்டம் போன்ற திட்டங்களால் போதிய உணவு கிடைக்காத குழந்தைகளின் விகிதம் இரண்டு இலக்கத்தில் இருந்து ஒற்றை இலக்கத்திற்கு குறைந்துள்ளது. இருப்பினும் உலக சுகாதார நிறுவனம் வகுத்துள்ள வரையறைப்படி சத்து குறைவான குழந்தைகள் இருக்கவே செய்கின்றனர். போதிய அளவில் வைட்டமின் மற்றும் துத்தநாக சத்து இல்லாத குழந்தைகள் உள்ளனர்.
  • இது ஒரு புறம் இருக்க, தற்போது மருத்துவர்கள் மற்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கும் விஷயம் குழந்தைகளின் கூடுதல் உடல் பருமன். தேசிய குடும்ப நல ஆய்வறிக்கைப்படி, 5 வயதுக்குட்பட்ட, உடல் பருமன் அதிகமுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த 15 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்ந்துள்ளது.
  • இந்திய சமூக நல இதழ் சார்பாக இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்படும் அறிக்கையில் 15.8% பதின்மவயது குழந்தைகள் உடல் பருமன் அதிகரித்துக் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகள் பருமனாக உள்ளனர்.
  • காஞ்சிபுரத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 900 பதின்மவயது குழந்தைகளில் 52 பேர் அதிக எடையுள்ளவர்களாகவும் 168 பேர் மிக அதிக எடை உள்ளவர்களாகவும் இருந்தனர்.
  • கோவையில் 11 ஆயிரம் மாணவர்களிடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் மிக அதிக எடை கொண்ட மாணவர்கள் 8%, உடல் பருமன் உடையவர்கள் 6% இருந்தனர் (சர்வதேச சமூக கல்வி இதழ்).
  • 15 வயது வரை உள்ள குழந்தைகளின் உடல் எடை, இடுப்பு சுற்றளவு, உடல்நிறை குறியீட்டு எண் அடிப்படையில் உடல் பருமன் அதிகரித்துள்ள குழந்தைகளின் எண்ணிக்கை பெற்றோருக்கும் அரசுகளுக்கும் கவலை அளிக்கக் கூடிய விஷயமாகும்.
  • சிறுவயதில் உடல் பருமன் அதிகமாக உள்ள குழந்தைகள் வளர்ந்த பிறகு நீரிழிவு நோய், நுரையீரல் பாதிப்பு, எலும்பு தொடர்பான நோய்கள், இதய நோய், தூக்கம் தொடர்பான பிரச்னைகள் ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படுவதாக மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. ஆரோக்கியமின்மையும் இளவயது மரணங்களும் அச்சமூட்டுவதாக உள்ளன. உடல் பருமனால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு பெற்றோர்களுக்கு குறைவாகவே உள்ளது. குழந்தைகள் இளைத்தாலோ அல்லது எடை குறைந்தாலோ கவலைப்படும் நாம், உடல் எடை அதிகரித்தால் அது பிரச்னையாக இருக்கக் கூடும் என எண்ணுவதில்லை.
  • நகரமயமாதலின் விளைவாக திறந்தவெளிகளின் பரப்பளவு மிகவும் குறைந்துள்ளது. குடும்பங்களில் குழந்தைகளின் எண்ணிக்கை ஒன்று அல்லது இரண்டாகவே உள்ளது. குழந்தைகள் ஒன்றுசேர்ந்து அவர்களுக்குப் பிடித்தமான விளையாட்டுகளை திறந்தவெளியில் விளையாடுவதற்கான சூழல் குறைந்துவிட்டது. இந்த விளையாட்டுகளின் வழியாக உடற்பயிற்சி அவர்களுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது. இதனாலேயே பெரும்பாலான நேரங்களில் தொலைக்காட்சி, கைப்பேசி, கணினி என்று அமர்ந்துள்ளனர். இந்த நேரங்களில் அவர்கள் உட்கொள்ளும் நொறுக்குத் தீனிகளின் அளவு அதிகமாக உள்ளது. அவர்கள் விரும்பி உண்ணும் அடைக்கப்பட்ட உணவுப் பண்டங்கள், பானங்களில் உள்ள சுவையூட்டிகளின் சேர்க்கையால் பசி இல்லாவிட்டாலும் தேவைக்கு அதிகமாக உண்கின்றனர்.
  • ஆரோக்கியமான உணவை உட்கொள்வதற்கும் உடல் பருமனை கட்டுக்குள் வைத்திருப்பதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நல்ல உணவு, போதிய உணவு பற்றிய புரிதல் பெற்றோர்களுக்கு ஏற்பட வேண்டும்.
  • நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிலுள்ள கலோரி அளவை தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. இது இணையத்தில் எளிதாக காணக் கிடைக்கிறது. உணவுக் கட்டுப்பாடு என்றால் விரும்பிய உணவை சாப்பிடாமல் நாக்கைக் கட்டிப்போடுவதல்ல. நாம் என்ன உணவை வேண்டுமானாலும் விரும்பி சாப்பிடலாம். ஆனால் அதன் ஊட்ட அளவை கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • ஒவ்வொரு வளர்ந்த ஆணும் பெண்ணும் தங்கள் உடல் உழைப்பின் தன்மைக்கு ஏற்ப உணவின் அளவை ஒரு நாளைக்கு 2500 கலோரியில் இருந்து 3000 கலோரிக்குள் கட்டுப்படுத்த வேண்டும். இந்த அளவைவிட அதிகமாக சாப்பிடும் ஒவ்வொரு உணவும் உடல் பருமனை அதிகரிக்கும் என்பதை அறிந்திருக்க வேண்டும்.
  • நமது பண்பாடு உணவு உபசரிப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதாகும். சாதாரண வீட்டு விருந்தானாலும் திருமண விருந்தானாலும் பல வகை உணவுகள் பரிமாறுவது இயல்பு. இது தவிர்க்க முடியாத ஒன்று. விருந்துகளில் சுவையுடன் பரிமாறப்படும் உணவுகள் உடல் பருமனுக்கு வழி வகுக்கும். அங்கு கலோரி கணக்கு பார்க்க முடியுமா? விருந்து உண்ணும் நாட்களில் அடுத்தடுத்த வேளை உணவு அளவை குறைத்துக் கொள்வது நன்மை பயக்கும்.
  • குழந்தைகள் பள்ளி வளாகத்திலோ அல்லது காலை மாலை நேரங்களில் மைதானங்களிலோ குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் எளிய உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதை அல்லது கூடி விளையாடுவதை உறுதி செய்ய வேண்டும். வெளியிடங்களில் சிறார்கள் கூடி விளையாடுவதுதான் இதில் முக்கியம்.
  • குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் பழக்கம் குழந்தைகளின் உணவின் அளவை கண்காணிக்க பயன்படும். சிறார்கள் ஆரோக்கியமான, அளவான, சரிவிகித, போதுமான உணவை உட்கொள்வதில் பெற்றோர்கள் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.

நன்றி: தினமணி (16 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories