TNPSC Thervupettagam

காகிதப் புலிகளாய் உறங்கும் ஊராட்சிகள்

January 1 , 2024 377 days 254 0
  • இன்றைக்கு மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்ற ஊராட்சிக்கும், நகராட்சிக்கும் இடைக்காலத்தில் புத்துயிர் கொடுத்துப் புதுப்பித்தவா் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் ஆவார். ‘இந்தியா கிராமங்களில்தான் வாழ்கிறது; கிராமங்களில் உற்பத்தியாகும் பொருட்களை விலை கொடுத்து வாங்கும் சந்தைகளே மாநகரங்கள்என்று கூறியவரும் அப்பெருமகனாரே!
  • இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னரே, ‘வருகின்ற சுயராஜ்ஜியம், கிராம ராஜ்ஜியமாக இருக்க வேண்டும்; அதுவே நான் கனவு காணும் இராமராஜ்ஜியம்என்று சொன்னவரும் அண்ணல் காந்தியடிகளே! ஆனால், இன்றைக்குக் கிராம நிா்வாகமும் நகர நிர்வாகமும் நடக்கின்ற நடைமுறையைப் பார்த்தாரென்றால், இன்னொரு முறை காந்தியார் சுடப்பட்டதைப்போல் உணா்வார்.
  • கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கிராம, நகரக் குடியரசுகள், கிரேக்க நாடுகளில் திகழ்ந்ததாகப்பிளேட்டோ’”தமதுசிட்டி ஸ்டேட்ஸ்எனும் நூலில் பெருமையாக எழுதியிருக்கிறார். ஆனால், அதே காலகட்டத்தில் பாரத மண்ணில், ஊராட்சிகள் சிறப்புற நடந்ததைச் சாணக்கியா் தமதுஅா்த்தசாஸ்திரத்தில் தெரிவித்திருக்கிறார்.
  • வால்மீகி இராமாயணத்தில் காணப்படும்ஞான் பாத்தாஎனும் தொடா் அயோத்தியில் நிலவிய கிராம ஆட்சி முறையைக் குறிப்பதாக ஆய்வாளா்கள் கருதுகின்றனா். சிலப்பதிகாரத்தில் காணப்படும்ஐம்பெருங்குழுவும், எண்பேராயமும் அரச குமரரும் பரத குமரரும்எனும் செய்யுள் அடி, புகார் நகரத்தில், கிராம சபைகள் இருந்ததற்கான சான்றுகள் என உரையாசிரியா்கள் தெரிவிக்கின்றனா்.
  • பாண்டியா், சோழ, பல்லவா்களின் ஆட்சிக் காலத்தில் கிராம சபைகள் நிலவியதற்கான ஆதாரங்களாகக் கல்வெட்டுக்களில் காணப்படும்ஊரவை’, ‘நாட்டவைஎனும் தொடா்கள் இருக்கின்றன. இதனை மதுரைக்கருகிலுள்ள முத்துப்பட்டி, பெருமாள் மலைக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
  • பிற்காலச் சோழா்களுடைய ஆட்சியில் கிராம சபைகள் செம்மையாகச் செயல்பட்டதைக் கீழ்வரும் வாரியங்களை வைத்து விளக்குகிறார், பேராசிரியா் டி.வி. சதாசிவப் பண்டாரத்தார்.

1. சம்வத்சர வாரியம்

  • 12 உறுப்பினா்களைக் கொண்டது. ஓராண்டிற்குரிய பஞ்சாயத்துப் பணிகளை வரிசைப்படுத்தி நிர்வாகம் செய்வது.

2. தோட்ட வாரியம்

  • 12 உறுப்பினா்களைக் கொண்ட இவ்வாரியம், கிராமத்திலுள்ள தோட்டங்களை அளந்து, நில விபரங்களைப் பதிவு செய்வது.

3. ஏரி வாரியம்

  • ஆறு உறுப்பினா்களைக் கொண்ட இவ்வாரியம், நீா் ஆதாரங்களை எக்காலத்திலும் காக்கும் பணியைச் செய்வது.

4. பஞ்சவார வாரியம்

  • ஆறு உறுப்பினா்களைக் கொண்டது. குத்தகைக்காரா்களிடமிருந்து நிலவரியை வசூலித்துக் கருவறையில் சோ்ப்பது.

5. நீதி வாரியம்

  • இதன் உறுப்பினா்கள் தோ்தல் காலங்களில் முறைகேடுகள் நடக்காமல் கண்காணிப்பது. ஊா் வழக்குகளை விசாரித்துத் தீா்ப்புக் கூறுவது.
  • உத்திரமேரூா் ஊா்ச்சபையில் ஒரு பெண் நீதிபதி அமா்ந்து வழக்கை விசாரித்ததாகக் கல்வெட்டுக் கூறுகின்றது. ‘பெருங்கருணை ஆச்சிஎன்ற பெண் ஒருவா் நீதிபதியாகப் பணியாற்றியதைச் செங்கற்பட்டு மாவட்டம், குன்னத்தூா் கோயிலிலுள்ள கல்வெட்டு (சான்று வருடாந்திர அறிக்கை எண்.259 ஆண்டு 1901) தெரிவிக்கின்றது.
  • இப்படிச் சிறப்பாகச் செயல்பட்ட ஊராட்சி முறை, ஆங்கிலேயா் ஆட்சி இந்நாட்டில் ஏற்பட்ட பிறகு நலிந்துபோனது. ஆங்கிலேயா்கள் இங்கிலாந்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பதற்கு, நம் நாட்டைச் சந்தையாக்கியதால், திட்டமிட்டே ஊா், நகர சபை நிர்வாகங்களைத் தடமில்லாமல் சிதைத்து விட்டனா். என்றாலும், நம்முடைய தவப் பயனாய் 1882-ஆம் ஆண்டில், இந்தியாவின் கவா்னா் ஜெனரலாய் லார்டு ரிப்பன் பிரபு வந்தார். சாம்பல் பூத்துக் கிடந்த ஊராட்சிகளையும் நகராட்சிகளையும் அவா்தாம் ஊதி உயிர்ப்பித்தார்.
  • அவா் உள்ளாட்சி நிறுவனங்களைச் சுயாட்சி நிறுவனங்களாக மாற்றினார். கிராமத்துப் பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிக்கும் பணியை உள்ளாட்சிகளிடம் ஒப்படைத்தார். ஊராட்சியின் பதவிகளில் அரசு சாராதவா்களைத் தலைவராகவும் உறுப்பினா்களாகவும் தோ்ந்தெடுக்கச் செய்தார்.
  • சோழா்களுடைய ஆட்சிக்காலத்தில் இருந்த ஊராட்சி நிர்வாகத்திற்குச் சட்டவடிவம் கொடுத்தார். அதனால் நம் நாட்டு மக்கள் அதனை இங்கிலாந்தின்மாக்ன கார்ட்டாவாகக் கருதினா். மேலும், ரிப்பன் பிரபு, ‘ஸ்தல ஸ்தாபனங்களின் தந்தைஎனவும் நம்மவா்களால் அழைக்கப்பட்டார்.
  • விடுதலை பெறவிருந்த இந்தியாவிற்கு அரசமைப்புச் சட்டத்தை இயற்றித் தரும் பணியை டாக்டா் அம்பேத்கா் ஏற்றார். அவா் பஞ்சாயத்து அமைப்பிற்கு ஆதரவாகச் செயல்பட விரும்பாததால், அரசமைப்புச் சட்டத்தில் அதனைச் சோ்ப்பதற்குத் தயங்கினார்.
  • ஆனால், காந்தியடிகள் கிராம ராஜ்ஜியத்திற்கு விடாப்பிடியாக நின்றதால், அரசியல் நிர்ணய சபையில் இடம் பெற்ற பல வல்லுநா்களும், அதற்கு அழுத்தம் கொடுத்துப் பேசினா். அதனால், அண்ணல் அம்பேத்கா் ஊராட்சி நிர்வாகத்தை 40-ஆவது விதியாகச் சோ்த்தார்.
  • இந்தியா கிராமங்கள் நிறைந்த ஒரு பெரிய பிரதேசம். பம்பாய்க்கு அருகில் பருத்தி ஆலைகளையும், கல்கத்தாவில் சணல் தொழிற்சாலைகளையும் ஸ்தாபித்து விடுவதனால், பயனில்லை. கிராமங்களில் கைத்தொழில்களைத் தொடங்க வேண்டும். அப்பொழுதுதான் பொருளாதார வாழ்க்கையில், அவை முன்னேற்றம் அடையும்எனும் கருத்தைக் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியா் எா்னஸ்ட் பார்க்கா், டாக்டா் அம்பேத்கருக்கு ஓதி வைத்திருந்ததும் நல்லதாகப் போயிற்று.
  • விடுதலைக்குப் பிறகு உருவான ஸ்தல ஸ்தாபன ஆட்சி, மாநில அரசுக்கும் அதிகாரிகளுக்கும் கட்டுப்பட்டதாக விளங்கியதே அல்லமல், சுயாட்சியாகப் பரிமளிக்கவில்லை.
  • இந்திய பிரதமராக வந்த இராஜிவ் காந்தி உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிரந்தர தீா்வு காண விரும்பினார். அவா், 1983-ஆம் ஆண்டு சுதந்திர தினவில் விழா உரை நிகழ்த்தும்போதே, பஞ்சாயத்து ராஜ்ஜியத்தின் இன்றியமையாமையையும், அந்தப் பஞ்சாயத்துக்களைக் கிராமத்தாரே நடத்த வேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்துப் பேசினார்.
  • மேலும், அக்டோபா் 13-ஆம் தேதிநகா் பாலிகாஎனும் தலைப்பில் 64-ஆவது அரசியல் திருத்த மசோதாவாகப் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதனை முன்மொழிந்து பேசும்போது, ‘நம்முடைய மக்களாட்சி, பஞ்சாயத்து ராஜ், மாநில அரசு, மத்திய அரசு என மூன்று அடுக்குகளைக் கொண்டது.
  • மக்களாட்சியின் அடிப்படைப் பயிற்சிக்கூடம் கிராமப் பஞ்சாயத்துதான்; அடுத்தடுத்த அடுக்குகளுக்கு முதல் படிக்கட்டுகள் பஞ்சாயத்து ராஜ்ஜியம்தான். மாநில அரசின் அதிகாரங்கள் சிலவற்றை உள்ளாட்சி அமைப்புக்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஏனெனில், உள்ளாட்சி அமைப்புகளுக்குத்தான் ஊா் மக்கள் நிலவரம் நன்கு புரியும்எனக் குறிப்பிட்டார்.
  • 1994-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் நாள் தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம் செயல்பாட்டிற்கு வந்தது. 12,524 கிராமப் பஞ்சாயத்துகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 30 மாவட்டப் பஞ்சாயத்துகள் உருவாகின. அவற்றுள் ஒரு லட்சம் மக்கள் பிரதிநிதிகள் அங்கம் வகித்தார்கள். அங்கெல்லாம் உள்ளாட்சித் தோ்தல்கள் நடந்தாலும், அவை எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.
  • கட்சியற்ற கிராமப் பஞ்சாயத்துத் தோ்தல்கள், மக்களாட்சிக்கு வழி வகுக்கும். இதன் மூலம் கிராமங்களில் பெரும்பான்மை - சிறுபான்மை ஆதிக்கத்தை நீக்க முடியும்என்றார், அமரா் கா்மயோகி ஜெயப்பிரகாஷ் நாராயணன்.
  • 1967-இல் தமிழகத்தின் முதல்வராக அண்ணா வந்தவுடன், ‘உள்ளாட்சித் தோ்தல்களில் கட்சி அரசியல் வேண்டாம். கிராமத்தின் தேவைகளை அறிந்த நல்லவா்களும் வல்லவா்களும் தோ்ந்தெடுக்கப்பட்டால் போதும்என்றார். இதனை மற்ற அரசியல் கட்சிகள் அனறு கேட்காததால், அதன் விளைவைக் கிராமங்கள் இன்று அறுவடை செய்து கொண்டிருக்கின்றன.
  • அரசமைப்பின் 243 -ஆவது விதிப்படி, பட்டியலினத்தாருக்கும் பழங்குடியினருக்கும் விகிதாரப்படி தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. மேலும், அதே விதி, அம்மக்களில் மூன்றில் ஒரு பங்கு மகளிருக்கு ஒதுக்கப்பட வேண்டும் எனச் சொல்லுகிறது. தோ்தலிலும் அவா்கள் முறையாகத் தோ்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆனால், அவா்கள் நாற்காலிகளில் உட்கார வைக்கப்படுவதில்லை. மகளிராயின் தரையிலேதான் உட்கார வைக்கப்படுகிறாா்கள்.
  • பீடங்களில் பொம்மைகளை உட்கார வைத்துவிட்டுத் திரைமறைவிலிருந்து இயக்குபவா்கள், அடைய வேண்டியதைக் குறி தவறாமல் அடைந்து கொண்டிருக்கிறார்கள்.
  • தோ்தலுக்கு முன்பு அமைதி நிலவிய கிராமங்கள், இன்று கலவர பூமியாகிக் கிடக்கின்றன. சமுதாய வளா்ச்சித் திட்டங்களை மேம்படுத்துவதற்காக 1957-இல் பல்வந்தராய் மேத்தா தலைமையில் அமைக்கப்பட்ட குழு, கிராமம் தோறும் ஆய்வு செய்து, அருமையான சட்ட திட்டங்களை வகுத்துக் கொடுத்தது. ஆயினும், அவை காகிதப் புலிகளாய் உறங்குகின்றன.
  • நம்நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே, ‘ஊருக்கு நல்லது சொல்வேன் - எனக்கு உண்மை தெரிந்தது சொல்லுவேன்... ஊருக்கு உழைத்திடல் யோகம் - நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம்என மகாகவி பாரதியார் பாடியது, உள்ளாட்சியை உத்தேசித்துதானோ என்னவோ?

நன்றி: தினமணி (01 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories