- மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
- எதிர்பார்த்ததைவிட அதிகமான அறிவிப்புகளுடனும், தொலைநோக்கு நிதி நிர்வாக திட்டங்களுடனும் தயாரிக்கப்பட்டிருக்கும் நிதிநிலை அறிக்கை என்று இதை வகைப்படுத்துவது தான் சரியாக இருக்கும்.
- முன்கூட்டியே வெள்ளை அறிக்கையை வெளியிட்டு, தான் புத்திசாலி என்பதை நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் உணா்த்தி இருக்கிறார்.
- தமிழகத்தின் நிதிநிலைமை மோசமாக இருப்பதையும், அதிகரித்து வரும் கடன் சுமையையும் வெள்ளை அறிக்கை மூலம் ஏற்கெனவே வெளிப்படுத்தி விட்டதால், நிதிநிலை அறிக்கை குறித்த எதிர்பார்ப்புகள் குறைந்துவிட்டன. அதனால், இப்போதைய அறிவிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
- கடந்த ஓராண்டுக்கும் மேலாக உலக அளவில் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திப் பொருளாதாரத்தைத் தடம்புரளச் செய்திருக்கும் கொவைட் 19 கொள்ளை நோய்த் தொற்றுப் பின்னணியில், எல்லா அரசுகளும் திணறிக் கொண்டிருக்கின்றன.
- இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், பொருளாதாரம் ஸ்தம்பித்திருப்பதும், அதனால் அரசுக்கான வரி வருவாய் வறண்டு போயிருப்பதும் எதார்த்த உண்மை. அதில் தமிழகம் மட்டும் விதிவிலக்காக இருந்துவிட முடியுமா என்ன?
- முந்தைய ஆட்சியில் கடந்த மார்ச் 11-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்க்கப்பட்ட வருவாய் வரவு ரூ.2,18,991.96 கோடி என்றால், இப்போது அதுவே ரூ.2,02,495 கோடி என்று மறு மதிப்பிடப்பட்டுள்ளது.
- அரசின் செலவினங்களும் (ரெவின்யூ எக்ஸ்பென்டிசா்) ரூ.2,60,409.26 கோடியிலிருந்து ரூ.2,61,188.57 கோடியாக அதிகரித்திருக்கிறது.
- அதனால், முன்பு எதிர்பார்க்கப்பட்ட வருவாய் பற்றாக்குறையான ரூ.41,417.30 கோடி இப்போது ரூ.58,692.68 கோடியாக அதிகரித்திருக்கிறது.
- இந்தப் பின்னணியில்தான் நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தனது நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார்.
- தோ்தல் வாக்குறுதிகளுக்காக திமுகவால் தரப்பட்ட வாக்குறுதிகளைவிட, தமிழகத்தின் நலன் கருதிக் கூறப்பட்ட வாக்குறுதிக்கு அவா் முன்னுரிமை அளித்திருக்கிறார் என்பதைப் பாராட்ட வேண்டும்.
திமுக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை
- ‘வருவாயில் ஏற்பட்ட சரிவை நிறுத்தி, நிதிநிலைமையைச் சீா்படுத்துவது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் முக்கியமானது. ஒரே நேரத்திலோ, ஒரே ஆண்டிலோ அதனைச் செய்துவிட முடியாத அளவுக்கு அந்தப் பணி கடினமாக உள்ளதால், குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வரை தொடா் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்’ என்கிற அவரது நிதிநிலை அறிக்கைக் கருத்து வரவேற்புக்குரியது. ஒரு நிர்வாகியின் பார்வை அதில் தெரிகிறது.
- தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சமாகக் கருதப்பட வேண்டியது, கணினி மயமாக்கலுக்கும், இணையவவழி நடவடிக்கைகளுக்கும் நிதியமைச்சா் கொடுத்திருக்கும் முன்னுரிமை.
- அனைத்து தமிழக பொது சேவைகளில் மின்னணு அளவீட்டு முறைகள் அறிமுகப் படுத்தப் படுவதும், அரசின் அனைத்துக் கொள்முதல்களில் மின்னணுக் கொள்முதல் கண்டிப்பாகப் பின்பற்றப்படுவதும் மிகப் பெரிய நிர்வாக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
- அதன் மூலம் இடைத்தரகா்களும், ஊழல்கள் நடப்பதும் தடுக்கப்படும். இணையவழி செயல்பாட்டின் தொடக்கத்தை அறிவிப்பதாக அமைந்திருக்கிறது, முதன்முறையாகத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் காகிதமில்லா நிதிநிலை அறிக்கை. இதுதான் இந்த நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சம் (ஹைலைட்).
- பத்து ஆண்டுகளில் ஆயிரம் தடுப்பணைகள், கதவணைகள்; காசிமேடு மீன்பிடித்தளம் மேம்பாடு; தமிழ்நாடு சித்தா பல்கலைக்கழகம்; நான்கு இடங்களில் டைடல் பூங்காக்கள்; ஒன்பது மாவட்டங்களில் புதிய சிப்காட் பூங்காக்கள்; துணிநூல் துறைக்காக தனி இயக்குநரகம்; ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் மூன்று கோடி ரூபாய் செலவில் விளையாட்டரங்கங்கள்; 15 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 65 கோடியில் திறன்மேம்பாட்டு மையங்கள் போன்றவை வரவேற்புக்குரிய தேவையான அறிவிப்புகள்.
- மத்திய அரசின் உதவியுடன்தான் பேருந்துகள் வாங்குவதிலிருந்து பெரும்பாலான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
- பொதுவாக, மாநில அரசுகள் அதை வெளியில் தெரிவிப்பதில்லை. கிராமப்புற வீட்டுவசதி திட்டமும், குடிநீா் வழங்கும் திட்டமும் மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும் என்று வெளிப்படைத் தன்மையுடன் அறிவித்திருப்பது நிதியமைச்சரின் நோ்மையைக் காட்டுகிறது.
- ஒருபுறம் அரசின் கடன் சுமை; இன்னொருபுறம் நிதிப்பற்றாக்குறை. இதற்கிடையிலும், மகளிர் சுயஉதவிக் குழுவுக்கு ரூ.2,756 கோடி கடனை தள்ளுபடி செய்து, புதிதாக ரூ.20,000 கோடி கடன் வழங்க நடவடிக்கை என்று அறிவித்திருப்பதும், பேரவை உறுப்பினா்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூபாய் மூன்று கோடியாக அதிகரித்திருப்பதும், ஏற்கெனவே பேரிழப்பில் இயங்கும் போக்குவரத்துத் துறையை மேலும் கடனாளியாக்க ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்குவதும் நிதியமைச்சரை நிர்வாகி அல்லாத சாதாரண அரசியல்வாதியாக்கிக் காட்டுகின்றன.
- நிதிச்சுமை இல்லாத பல வாக்குறுதிகள் கடந்த நூறு நாளில் ஏற்கெனவே நிறைவேற்றப் பட்டிருக்கின்றன.
- தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்கிற குற்றச்சாட்டை எதிர்கொள்ளாமல் இருப்பதற்கு பெட்ரோலுக்கு ரூ.3 குறைத்து வழங்கப்படுகிறது.
- கொடுத்துவிட்ட வாக்குறுதிகள்; பற்றாக்குறையான நிதியாதாரம்; - இதற்கிடையில் குறைந்த காலவெளியில் தயாரித்து வழங்கியிருக்கும் நிதிநிலை அறிக்கை என்கிற அளவில் பாராட்டலாம்.
நன்றி: தினமணி (14 – 08 - 2021)