TNPSC Thervupettagam

காசநோயின் புதிய ஆபத்துகள்

May 20 , 2023 601 days 934 0
  • காசநோய் என்பது இந்தியாவுக்குப் புதிதல்ல. இந்தியாவில் பொ.ஆ.மு. (கி.மு.) 1500இலிருந்தே காசநோய் இருப்பதாக வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன. இந்த நோயை ஒழிப்பதற்கான ‘தேசியக் காசநோய் ஒழிப்பு’த் திட்டம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவருகிறது. இருப்பினும், ஒரு காலத்தில் ஏழைகளின் நோய் என்று அறியப்பட்ட காசநோய், தற்போது அனைவரையும் பாதிக்கும் ஒன்றாக மாறிவிட்டது.
  • உலக அளவில் காசநோயால் ஆண்டுதோறும் நான்கு கோடி பேர் பாதிக்கப்படுகின்றனர்; அவர்களில் ஒரு கோடி (25%) பேர் இந்தியர்கள். காசநோய் ஆபத்திலிருந்து மக்களைக் காக்கும் நோக்கில் இந்திய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
  • 2025க்குள் காசநோயை முற்றிலும் ஒழித்துவிடுவதை இலக்காக நிர்ணயித்துள்ளது. இருப்பினும், இந்த இலக்கு சாத்தியமா என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்; காரணம், இந்தியாவில் ‘மருந்துக்குக் கட்டுப்படாத காசநோய்’ (Drug-resistant tuberculosis (DR-TB)) அந்த அளவுக்கு வேகமாகவும் வீரியத்துடனும் பரவிவருகிறது.

மருந்துக்குக் கட்டுப்படாத காசநோய்:

  • பொதுவாக, காசநோய்க்கான சிகிச்சை இரண்டு கட்டங்களாக அளிக்கப்படும். முதல் கட்டத்தில், ஐசோனியசிட் (isoniazid), ரிஃபாம்பிசின் (rifampicin), பைரசினமைடு (pyrazinamide), எதாம்புடால் (ethambutol) ஆகிய நான்கு முதல்நிலை மருந்து களின் தொகுப்பு இரண்டு மாதங்களுக்கு அளிக்கப் படும்.
  • இரண்டாம் கட்டத்தில், ஐசோனியசிட், ரிஃபாம்பிசின், எதாம்புடால் ஆகிய மருந்துகள் மட்டும் கூடுதலாக நான்கு மாதங்களுக்கு வழங்கப்படும். பல ஆண்டுகளாகத் தொடரும் இத்தகைய நுண்ணுயிர் எதிர்ப்பு (antibiotic) மருந்துகளின் பயன்பாடு அல்லது அவற்றின் தவறான பயன்பாடு போன்ற காரணங்களால், அந்த மருந்துகளுக்குக் கட்டுப்படாத திறனைப் பாக்டீரியாக்கள் பெற்று விடுகின்றன. இதுவே ‘மருந்துக்குக் கட்டுப்படாத காசநோய்’.
  • ‘மருந்துக்குக் கட்டுப்படாத காசநோயா’னது ‘பல மருந்துகளுக்குக் கட்டுப்படாத காசநோய்’ (MDR), ‘விரிவான மருந்துக்குக் கட்டுப்படாத (XDR) காசநோய்’ என இரண்டு வகையாக உள்ளது. இந்த இரண்டு வகைகளால் ஏற்படும் பாதிப்புகளும் இறப்புகளும் சமீப ஆண்டுகளில் நாடு முழுவதும் வேகமாக அதிகரித்துவருகின்றன.

மக்களின் அறியாமை:

  • மருந்துகளின் தவறான பயன்பாடு மட்டுமல்லாமல்; மனிதர்களின் அறியாமையும் இந்த நிலை ஏற்படுவதற்கும் பரவுவதற்கும் ஒரு காரணியாக உள்ளது. ஆரம்பத்தில் இருமல் மட்டுமே காசநோயின் ஒரே அறிகுறியாக இருப்பதால், அது ‘மருந்துக்குக் கட்டுப்படாத காசநோய்’ என்று உறுதி யாகத் தெரிவதற்கு முன்னரே நிலைமை கைமீறிச் சென்று விடுகிறது; பலருக்கும் பரவிவிடுகிறது.
  • இந்தியக் காசநோய் அறிக்கை 2023இன்படி, காசநோய் அறிகுறி உள்ளவர்களில் சுமார் 64 சதவீதம் பேர் மருத்துவச் சிகிச்சையை நாடு வதில்லை; முக்கியமாக, இந்தியாவில் கண்டறியப்பட்டு இருக்கும் ‘பல மருந்துகளுக்குக் கட்டுப்படாத காசநோய்’ நோயாளிகளின் எண்ணிக்கை 63,801 என உள்ளது.

சிக்கலான சிகிச்சை:

  • ‘மருந்துக்குக் கட்டுப்படாத காசநோய்’க்கான சிகிச்சைக்குக் குறைவான மருந்துகளே உள்ளன, புதிய மருந்துகள் பரவலாகக் கிடைப்பதும் இல்லை. இந்த மருந்துகள் இரைப்பை அழற்சி, தலைவலி, நரம்பியல் பாதிப்பு, மனச்சோர்வு, காது கேளாமை போன்ற பக்க விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.
  • ‘மருந்துக்குக் கட்டுப்படாத காசநோய்'க்கான சிகிச்சை செலவும் மிக அதிகம். வழக்கமான காசநோய்க்கான சிகிச்சைக் காலம் ஆறு மாதங்கள். ஆனால், ‘மருந்துக்குக் கட்டுப்படாத காசநோய்'க்கான சிகிச்சை இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கலாம். அந்தக் காலகட்டத்தில், ஒரு நாளைக்கு 20 மாத்திரைகள் என மொத்தம் 14,000 மாத்திரைகள் தேவைப்படும். இரண்டு ஆண்டுகளுக்கான சிகிச்சை செலவு ஒரு லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை ஏற்படலாம்.

பரிசோதனை:

  • ‘மருந்துக்குக் கட்டுப்படாத காசநோ’யைக் கண்டறியச் சிறப்புப் பரிசோதனைகள் தேவைப்படு கின்றன. இந்தப் பரிசோதனைகள் பெரும்பாலும் விலை உயர்ந்தவை; பரவலாகவும் கிடைப்பதில்லை. இந்தக் குறையைக் களையும் நோக்கில், அரசாங்கம் கூடுதல் நிதியை ஒதுக்கிவருகிறது. நாட்டில் TrueNAT/ CBNAAT பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 2014இல் வெறும் 40 ஆக இருந்தது. தற்போது 5,090 ஆக அது உயர்ந்துள்ளது.
  • தற்போது, காசநோய்க்கான மருந்துகளின் கட்டுப்படாத தன்மையைக் கண்டறிய 80 ஆய்வகங்கள் நாட்டில் உள்ளன. லைன்சோலிட், பைராசினமைடு போன்ற மருந்துகளுக்கான கட்டுப்படாத தன்மையைக் கண்டறியும் திறனை அவை பெற்றுள்ளன.

நல்வாய்ப்பை இழக்கலாமா?

  • ‘மருந்துக்குக் கட்டுப்படாத காசநோய்’ சிகிச்சைக்கு உதவும் பெடாகுலைன் (Bedaquiline), டெலாமனிட் (Delamanid) எனும் இரண்டு புதிய மருந்துகளின் காப்புரிமைகள் இந்த ஆண்டில் காலாவதியாக உள்ளன. அவை தற்போது அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
  • சந்தையில் வாங்குவது என்றால், ஒரு நாளைக்குச் சுமார் ரூ.2,000 வரை செலவாகும். ‘மருந்துக்குக் கட்டுப்படாத காசநோய்’க்கான புதிய குறுகிய கால மருந்துகளை உருவாக்க அரசாங்கம் முயற்சி எடுத்துவருகிறது. ஐசிஎம்ஆரின் புதிய மருந்து மும்பையில் பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது;
  • பல குறுகிய கால, பயனுள்ள மருந்துகள் தற்போது உலகளவில் கிடைக்கின்றன. குறைந்த பக்கவிளைவுகளைக் கொண்டதாகவும் அவை உள்ளன. இந்த மருந்துகள் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டு, குறைந்த விலையில் விற்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும். முக்கியமாக, காப்புரிமை காரணமாக இத்தகைய அத்தியாவசிய மருந்துகளின் மீதான ஏகபோக உரிமை எவருக்கும் இல்லை என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். இல்லையென்றால், காசநோயை ஒழிக்கும் நல்வாய்ப்பை இழக்க நேரிடும்.

எப்படிப் பரவுகிறது?

  • பாதிக்கப்பட்ட நபர் இருமும்போதோ, பேசும் போதோ, தும்மும்போதோ இந்த நோய்க்கிருமி காற்றில் பரவுகிறது. மற்றொரு நபர் அதை சுவாசிக்கும்போது, அவரது நுரையீரலில் அது குடியேறுகிறது. அது அங்கு மறைந்திருக்கும் அல்லது பெருகும். காசநோய் உள்ளவர்கள் ஓர் ஆண்டுக்குள் நெருங்கிய தொடர்பில் உள்ள ஐந்து முதல் 15 நபர்களைப் பாதிக்க வாய்ப்பு உண்டு.

நன்றி: தி இந்து (20 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories