TNPSC Thervupettagam

காசு பணம் துட்டு அணா

February 12 , 2024 162 days 204 0
  • ‘வரவு எட்டணா, செலவு பத்தணா, அதிகம் ரெண்டணா, கடைசியில் துந்தனா’ என்பது பல காலம் பிரபலமாக இருந்துவரும் திரைப்படப் பாடல். ‘பாமா விஜயம்’ (1967) படத்தில் கண்ணதாசன் எழுதியது. பாடலில் வரும் ‘அணா’க்களைப் பிறகு பார்ப்போம். துந்தனா என்றால் என்ன? இன்றைய தலைமுறைக்குத் தெரிந்திருக்காது. அது ஓர் இசைக்கருவி. ஒற்றைக் கம்பி உள்ளது, தம்பூரா போன்றது.
  • பழைய காலத்தில் தெருவில் பாடிப் பிச்சை எடுப்பவர்கள் இந்த வாத்தியத்தைப் பயன்படுத்துவர். இசையைப் பரப்பிக்கொண்டு தெருக்களில் யாசகம் கேட்க வருவர். இதனால், ஒருகட்டத்தில் பிச்சை எடுப்பதன் குறியீடாகவே துந்தனா மாறிவிட்டது. சரி, அணாக்கள்?

பல்வேறு நாணயங்கள்

  • வரவு எட்டணாவாக இருந்து, செலவு பத்தணாவாகச் செய்தால் அதாவது வரவுக்கு அதிகமாகச் செலவு செய்தால், இறுதியில் பிச்சை எடுக்கும் நிலைமைதான் நேரும் என்பதைத்தான் அந்தப் பாடல் வரி சொல்கிறது. புதிய நாணய முறை அதாவது, 100 பைசா சேர்ந்தது ஒரு ரூபாய் என்கிற தசம அடிப்படையிலான நாணய முறை 1955 இல் சட்டமாகி, 1957 இல் நடைமுறைக்கு வந்தது.
  • ‘1925 பிப்ரவரி 12, வியாழன் அன்று உ.வே.சாமிநாதையர் காலை காப்பிக்கு 0 - 1 - 6, தயிருக்கு 1 - 1 - 3’ செலவு செய்திருக்கிறார். 1951இல் ஒரு நாள், ‘இன்று தமிழ்ப் புத்தகாலயத்திலிருந்து ரூபாய் 4 - 0 - 0 பெற்றுக்கொண்டேன்’ என்று நாள்குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார் கு.அழகிரிசாமி. ஆ.இரா.வேங்கடாசலபதியின் சமீபத்திய நூல் ஒன்றின் தலைப்பு ‘வ.உ.சி.யும் காந்தியும்: 347 ரூபாய் 12 அணா’ என்பதாகும்.
  • அன்று மட்டுமல்ல, இன்றும் தமிழ் வாசகர்களால் புரிந்துகொள்ளப்படுகிற நாணய முறையாகவே அணா என்பது இருக்கிறது என்பதற்குச் சான்று, கடைசியாகக் குறிப்பிட்ட நூல் தலைப்பு. ரூபாய் - அணா - பைசா என்கிற இறங்கு வரிசையில் இந்த நாணய முறை எண்ணில் வடிவம் கொண்டது. ஒரு ரூபாய் என்பது 16 அணா. ஒவ்வொரு அணாவுக்கும் 12 காசு என்பது இந்தக் கணக்கு முறை.
  • பைசாவுக்குக் கீழேயும் நாணய முறை உண்டு, அது தம்பிடி. சமீபத்தில் ஓர் அரசியல் தலைவர், “நான் ஒரு செப்புக்காசுகூட யாரிடமிருந்தும் பெற்றதில்லை” என்று தனது நாணயத்தைப் பற்றிச் சூளுரைத்ததைப் பத்திரிகைகளில் படித்திருக்கலாம். மதிப்பில் குறைந்ததாகக் கருதப்படும் செப்புக் காசு பல நூற்றாண்டுகள் புழக்கத்தில் இருந்தது. செப்பு, வெள்ளி, பொன் போன்ற உலோகங்களில் மட்டுமல்ல, தோலில்கூட நாணயங்கள் தயாரிக்கப்பட்டன. செப்புக் காசின் மிகக் குறைந்த அலகு சல்லி என்பது.

சல்லியும் அம்மன் காசும்

  • சல்லிதான் மிகக் குறைந்த நாணய அலகு. சிறியதாக இருப்பதற்குச் சல்லி (அ) ஜல்லி என்று பெயர். கருங்கல்லைச் சின்ன சின்னதாக உடைத்தால் அது கருங்கல் சல்லி. ‘சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களேடா’ என்பது வடிவேலனார் வாக்கு.
  • ‘மனிதன் ஒரு மகத்தான சல்லிப் பயல்’ என்று ஜி.நாகராஜன் எழுதினார். சல்லியைப் பயன்படுத்திச் சிறுமனம் படைத்த மனிதர்களை அவர் வரையறுத்தார். அந்த ஜல்லிகளைச் சிறு மூட்டையாக மாட்டின் இரு கொம்புகளில் கட்டிவிடுவர். அதை எடுப்பதற்காக மாட்டை அடக்க நடக்கும் போட்டியே ஜல்லிக்கட்டாக மாறியதாகச் சிலர் சொல்வதுண்டு.
  • திருவிதாங்கூர் நாணய முறையில் 16 காசு ஒரு சக்கரம் எனப்பட்டது. நான்கு சக்கரம் ஒரு பணம். ஏழு பணம் ஒரு ரூபாய். தமிழ்ப் பரப்புக்குள் இருந்த ஒரே சமஸ்தானமான புதுக்கோட்டை சமஸ்தானத்தில் செயல்பாட்டில் இருந்தது அம்மன் காசு. அம்மன் ஜல்லி என்றும் இது அழைக்கப்பட்டது. மிகச் சிறு அம்சத்துக்கு அம்மன் ஜல்லி என்பது குறியீடாயிற்று.
  • சிறு விஷயத்துக்கும் பயன்பட மாட்டான் என்பதை அம்மன் ஜல்லிக்கு ஒப்பிட்டுச் சொல்வது அக்கால வசைகளில் ஒன்று. பெரியார் பல இடங்களில் அதைப் பயன்படுத்தியுள்ளார். புதுக்கோட்டை மன்னர்களின் வழிபடு தெய்வம் பிரகதாம்பாள். எனவே, அவரது உருவம் காசுகளில் பொறிக்கப்பட்டது. அதனாலேயே அது அம்மன் காசு என்று அழைக்கப்பட்டது.

நிலைத்துவிட்ட டச்சுத் துட்டு

  • 1957 இல் அறிமுகமான புதிய நாணய முறையிலும் பைசா இருந்தது; பழைய நாணய முறையிலும் பைசா உண்டு. அதனால் புதிய முறையில் அமைந்த பைசா என்பதைப் புலப்படுத்த அதை நயா பைசா என்றார்கள். நயா என்கிற இந்திச் சொல்லுக்குப் புதிது என்று பொருள். அப்போதும் மொழி ஓர்மையுள்ள தமிழர்கள் புதுக் காசுகள் என்று எழுதினர்.
  • துட்டு (duit) என்பது டச்சு மொழிச் சொல் என்கிறார் அருளி; தெலுங்கு என்கிறார் பெப்ரீஷியஸ். சென்னையில் செல்வாக்குடன் இருந்த டச்சுக்காரர்கள் போய்விட்டார்கள். ஆனால், அவர்களது துட்டு பேச்சுவழக்கில் தங்கிவிட்டது. காசு என்கிற சொல் பணத்தைப் பொதுவாகக் குறிக்கிறது.
  • எனினும் குற்றம் உட்பட வேறு ஏழு பொருள்களும் அதற்கு உண்டு. காசு என்பது யாப்பிலக்கணத்தில் வாய்ப்பாட்டுச் சொல்லாகவும் உள்ளது. தாலியில் பெண்கள் கோத்துக்கொள்வதற்கும் காசு என்று பெயர். மார்கழியில் ஆண்டாளின் பாவைப் பாட்டில் வரும் காசு கலகலக்கும்.
  • பணம் என்கிற சொல் பொதுவாகச் செல்வத்தைக் குறிக்கிற சொல். ஆனால், நாணயத்தினால் உருவாகிற செல்வத்தையே இன்று அது பெரும்பாலும் குறிக்கிறது. காசு லேசு அல்ல. காசைச் சம்பாதிப்பதும், பராமரிப்பதும் அவ்வளவு சுலபமல்ல. ‘காசா லேசா! காசாலே சா’ என்று சாபமிடுவோரும் உண்டுதானே!

நன்றி: இந்து தமிழ் திசை (12 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories