பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காடு அதற்கு மட்டும் சொந்தமாக இருக்கலாம். ஆனால், அது இருப்பதால் பெய்யும் மழை உலக நாடுகளுக்குக் கொடையாகவும் உரிமையுள்ளதாகவும் திகழ்கிறது. கனிம வளத்துக்காகவும் தொழில் துறை வளர்ச்சிக்காகவும் அந்த அமேசான் காட்டின் பெரும் பகுதியை வேறு பயன்பாட்டுக்கு மாற்றிக்கொண்டிருக்கிறார் பிரேசில் அதிபர் ஜைர் பல்சானரோ. புவி வெப்பமாவதால் ஏற்படும் தீமைகளையும் மாற்றங்களையும் உணர்ந்துள்ள உலகம், அதற்கு மேலும் காரணமாக இருக்கப்போகும் அமேசான் காடு அழிப்பை வேடிக்கைபார்த்துக் கொண்டிருக்க முடியுமா?
தங்கள் நாட்டு எல்லையில் உள்ள மழைக்காடுகளை அழிப்பது பிரேசிலைப் பொறுத்தவரையில் சட்டபூர்வமாக சரியானதாக இருக்கலாம்; இது பிரேசிலின் இறையாண்மை பற்றிய விஷயம் மட்டுமல்ல, மழைப் பொழிவு, புவி வெப்பநிலை உயர்வு ஆகியவற்றுடனும் சம்பந்தப்பட்டிருப்பதால் உலக நாடுகள் நேரடியாகவே தலையிடத் தகுந்த காரணம் இருக்கிறது. உலக அளவில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் கடமை ஐக்கிய நாடுகள் சபைக்கும் சமூகத்துக்கும் இருக்கிறது.
இயற்கை – அழிப்பு
வருமானம், வளர்ச்சி, வேலைவாய்ப்புக்காக இயற்கையை அழிக்கும் பிரேசில் அதிபருடன் பேசி, அவருக்குக் கிடைக்கும் வருவாயைவிட அது ஏற்படுத்தப்போகும் அழிவின் மதிப்பு அதிகம் என்பதை உணர்த்த வேண்டும். புவி வெப்பத்தைக் குறைக்க 2015-ல் நடந்த பாரீஸ் ஒப்பந்தத்தில் 195 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. அதில் காடுகளை அழிக்கக் கூடாது என்பது முக்கிய அம்சம். அப்படியும் பிரேசில் அழிப்பதைத் தடுக்கும் வழிமுறை ஏதும் உலக நாடுகளால் கண்டுபிடிக்கப்படவில்லை.
பேச்சுவார்த்தை மூலமே இதைத் தீர்க்க முடியாவிட்டால் ஐநா சபை பாதுகாப்பு கவுன்சில், ஐநா சட்டத்தின் கூறு 42-ன் படி பிரேசில் மீது நடவடிக்கை எடுக்கலாம். ராணுவப் படைகளைக் கொண்டும் நடவடிக்கை எடுக்க இப்பிரிவு அதிகாரம் அளிக்கிறது. போர் நடக்கும் பகுதியில் குடிமக்களைப் பாதுகாக்க சில பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக ஐநா இதன்படி அறிவித்தது. பிரேசிலின் அமேசான் காட்டைச் சுற்றிலும்கூட இப்படி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அங்கு காடழிப்பு இயந்திரங்களும் ஆள்களும் செல்லவிடாமல் தடுக்கலாம். ஆனால், இதைத் தங்கள் இறையாண்மையில் தலையிடும் செயலாகக் கருதி பிரேசில் தனது ராணுவத்தை எதிர் தாக்குதலுக்குப் பயன்படுத்தினால் ஏராளமான உயிர்ச் சேதம் ஏற்படும். அத்துடன் மிகப் பெரிய சேனைகளை அங்கு கொண்டு சென்றால் அதன் மூலமும் காடுகளுக்குச் சேதம் ஏற்படும்.
பொருளாதாரத் தடை
ஐநா சாசனத்தின் 41-வது கூறின்படி பிரேசில் மீது பொருளாதாரத் தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம். இது வழிக்குவராத நாட்டையும் தலைவர்களையும் பொது நன்மைக்காகச் செயல்படுமாறு வலியுறுத்த ஏற்படுத்தப்பட்டது. ஆனால், இந்தத் தடை நடவடிக்கைகள் முழு வெற்றியைத் தரும் என்பதும் நிச்சயமில்லை. ஏனென்றால், இத்தகைய நடவடிக்கைகளால் சாமானியர்கள் அவதிப்படுவார்கள்.
அவர்களுக்கு வேலைவாய்ப்பு, வருமானம் போய்விடும். மருந்து-மாத்திரைகள் கிடைக்காது. இருந்தாலும், இப்படிப்பட்ட நடவடிக்கை மூலம்தான் பிரேசில் ஆட்சியாளர்களைத் தங்கள் செயலால் ஏற்படவிருக்கும் தீமைகளின் விளைவுகளை உணரச்செய்ய முடியும். ஐநா என்ன செய்யப் போகிறது?