TNPSC Thervupettagam

காதியைக் காப்பாற்றுவோம்

August 15 , 2023 515 days 354 0
  • காதி என்றதும் நம் மனதில் தோன்றும் முதல் பிம்ப‌ம், மகாத்மா காந்திதான். கூடவே, இந்திய சுதந்திரப் போராட்டத்துடன் அதற்கு உள்ள தொடர்பும் நம் நினைவுக்கு வரும். காதி என்னும் மதிப்புக்குரிய இந்தக் கலை நமது பாரம்பரியம், கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்தது. இது, சமூகங்கள், குடும்பம் சார்ந்த‌ துணி உற்பத்தி செய்யும் ஒரு பழங்கால வழிமுறை, ஏன் வாழ்க்கை முறையும்கூட. மேலும், அருகமைப் பொருளாதாரத்தைச் சிறப்பாகவும் பரவலாகவும் நிலைநிறுத்தும் வழிமுறையாகவும் இது திகழ்கிறது.

ஒன்றிணைந்த கைகள்

  • கிராமங்களில் விவசாயிகள் பருத்தியை வளர்த்தனர். அங்கு நூற்ப‌தற்காகப் பெண்களுக்கு நூல் வழங்கப்பட்டது. நூலானது நெசவாளர்களுக்கு ஆடை நெய்ய அனுப்பப்பட்டது. அவர்கள் திறமையாகவும், படைப்பாற்றலுடனும் அதை ஆடையாக வடிவமைத்தனர். உள்ளூர் வாழ்வாதாரமும் அருகமைப் பொருளாதாரமும் பரந்துவிரிந்தன. இந்த இரண்டு விழுமியங்கள் காந்திக்கும் அவரது பொருளாதாரத் தத்துவத்தை வடிவமைத்த ஜே.சி.குமரப்பாவுக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் திகழ்ந்தன.
  • பல ‘கைகள்’ ஒன்றிணைந்து, கூட்டாகப் பலரின் ஈடுபாட்டுடன் ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டன. ஒரு பொத்தானைத் தட்டி, ஒரு பெரும் ஆலை/பெரு இயந்திரம் மூலம் குறைந்த நேரத்தில் பல நூறு ஆடைகள் தயாரிக்கப்படுவதைவிட மிக உயர்வானது இது. இதன் மூலம் பலர் பொருளாதாரரீதியாகவும் சுற்றுச்சூழல்ரீதியாகவும் தங்களைத் தக்க வைத்துக் கொண்டனர்.
  • இந்த வெகுமக்கள் உற்பத்தியில் காந்தியைக் கவர்ந்தது, பொருளாதாரம் அருகமைச் சமூகங்களின் கைகளில் தவழ்ந்ததும், உள்ளூரின் வாழ்வாதாரமாக விரிந்ததும் ஆகும். இந்த அருகமைப் பொருளாதாரம் முக்கியமாகப் பெண்களின் கைகளில் இருந்தது. ஏனெனில், இதில் 75% வேலைகள் பெண்களாலேயே செய்யப்பட்டன. அப்படிப் பெண்களுடைய கையில் பொருளாதாரம் வந்ததால், இது உடனடியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தது. குழந்தைகளின் கல்விக்காகவும் ஆரோக்கியத்துக்காகவும் அந்தப் பணம் செலவிடப்பட்டது.

பறிபோன வாழ்வாதாரம்

  • பரவலாக்கப்பட்ட இந்த உற்பத்தி முறையும் அருகமைப் பொருளாதாரமுமே இயந்திரத்துக்கும் முதலாளியத்துக்கும் தனிநபர் அடிமையாகாமல் இருக்க வழிவகுக்கும் என்று குமரப்பா வலியுறுத்தினார். கட்டற்ற இயந்திரமயமாக்கல் மக்களின் பொருள், தார்மிக உணர்வு, கலாச்சாரம் (material, moral and cultural) சார்ந்த சீரழிவையே ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.
  • நம் நாட்டுக்கு மேற்கத்திய செல்வாக்கு, தொழில்மயமாக்கல் ஆகியவற்றுடன் இயந்திரமயமாக்கல் பெரிய அளவில் வந்துசேர்ந்தது. இதனால் நமது கிராமப்புற இந்தியா மூலப்பொருள் வழங்குநராக மாறியது. பருத்தி போன்ற மூலப்பொருள்கள் மேற்குலகின் பெரிய ஆலைகளால் எடுத்துச் செல்லப்பட்டு, ஆடைகளாக மாற்றப்பட்டு திரும்பக் கொண்டு வரப்பட்டு நம‌க்கே விற்கப்பட்டன.
  • வேலையின் பெரிய பகுதியையும் அதன் வழியே கிடைத்த பொருளாதார நலனையும் அவர்கள் எடுத்துச்சென்றனர். பெரிய நூற்பாலைகள், கையால் நூல் நூற்கும் ஆயிரக்கணக்கான‌ பெண்களின் வேலையைப் பறித்துச்செல்கின்றன‌. ஒவ்வொரு பெரும் தொழிற்சாலையும் ஆயிரக்கணக்கான பெண்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கிறது. அதே போல் விசைத்தறிகளால், நூற்றுக் கணக்கான கைத்தறி நெசவாளர்கள் வாழ்வா தாரம் நிலைகுலைகிறது.
  • நம் நாட்டில் கைத்தறி பெருமளவு வேலைவாய்ப்பு வழங்கும் ஒரு தொழிலாகும். இது கிராமப்புற இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிக வேலைவாய்ப்பை அளிக்கும் துறை. அரசுத் தரவுகளின்படி, சுமார் 43 லட்சம் பேருக்கு வேலை வழங்குகிறது. எனவே, இந்தத் தொழில் புத்துயிர் பெறுவதும் வலுவூட்டப்ப‌டுவதும் மிகவும் முக்கியம்.
  • தன்னிறைவு, தற்சார்பு இரண்டையும் காதி நிலைநிறுத்துகிறது. காதி வெறும் ஆடை மட்டுமல்ல, அதைவிட அதிக மேன்மையுடைய ஒன்று: சுற்றுச்சூழலுக்கு உகந்தது; உள்ளூர்ப் பொருளாதாரத்தை நிலைநிறுத்துகிறது; கிராமப்புற வேலைவாய்ப்பை ஊக்குவிக்கிறது; அகிம்சைப் பொருளாதாரத்தை வலியுறுத்துகிறது; நிலைக்கும் தன்மையை உருவாக்குகிறது. அதனால்தான் காதி நமது சுதந்திரப் போராட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகவும் தேசியப் பெருமை, சுதந்திரப் போராட்டத்தின் அடையாளமாகவும் இருந்தது.

காதியின் இன்றைய நிலை

  • நாம் இந்த வார்த்தையை அதன் இயல்புடன் பயன்படுத்த முடியாத அளவுக்கு, இந்த வார்த்தையையே மத்திய அரசு கையகப்படுத்தியுள்ளது. காதி வாரியத்துக்கு ஒருவர் சந்தா செலுத்தாவிட்டால், எவ்வளவு தூய்மையாகவும் உண்மையாக இருந்தாலும் காதி என்ற சொல்லைப் பயன்படுத்த முடியாது. அதாவது மரபணு மாற்றப்படாத பருத்தியாக (அல்லது நாட்டு/ மரபு விதை) இருக்கலாம்; இது கையால் நூற்கப்பட்டு, கை நெசவு செய்யப்பட்டாலும்; காதி வாரியத்தில் பதிவு செய்யாத‌வராக இருந்தால் அது காதியாகக் கருதப்படுவதில்லை.
  • இது நியாயமற்றது மட்டுமல்ல, அபத்தமானதும்கூட. ஏனெனில், பல பிரச்சினைகளையும் காலாவதியான பல வழிமுறைகளையும் கொண்ட இந்தக் காதி வாரியம், கைவினைஞர்களுக்கு நியாயமான ஊதியத்தைக்கூட உறுதிப்படுத்தவில்லை. காதி என்னும் வார்த்தை அவர்கள் வசம் மட்டுமே இருப்பது நல்லதன்று.
  • மரபணு மாற்றப்பட்ட பி.டி. பருத்தி படையெடுப்பைக்கூட, காதி வாரியம் தடுக்கவில்லை. அதனால் நமது மரபு விதைகளும், விதை இறையாண்மையும், பன்மயமும் அழிந்தன. அதே போல் இது பருத்தி,பட்டு, கம்பளி, சணல் போன்ற இயற்கை இழைகளை ஊக்குவிக்காமல், செயற்கை இழைகளான‌ பாலியஸ்டரைக்கூட அனுமதித்து, இயந்திரமயமாக்கலுக்கு வழிவகுத்தது. ‘பாலிவஸ்திரம்’ என்று கூட முரண்பாட்டுடன் செயல்படுகிறது. காதி தன்னைத் தூய்மைப்படுத்திக்கொண்டு புத்துயிர் பெற வேண்டும். காதி, மக்களின் பொதுச் சொத்தாக மாற வேண்டும்.

தேசியக் கொடிக்கு வந்த சோதனை

  • இந்தியாவில் காதியில் மட்டுமே உற்பத்திசெய்யப்பட வேண்டிய பல பொருள்கள் இருந்தன (புடவை, வேட்டி, தேசியக் கொடி உள்ளிட்டவை). அரசுக் கொள்கைகள் மூலம் காதியின் நன்மைக்கும், நமது பாரம்பரியத்தைக் காக்கவும், காதி குழுக்களின் சந்தை நீடித்திருக்கவுமே காதி வாரியம் அமைக்கப்பட்டது. அப்படி இருக்க சமீப காலத்தில் இந்தப் பட்டியலிலிருந்து புடவை உள்ளிட்ட பலதும் நீக்கப்பட்டன.
  • இந்திய தேசியக் கொடி, காதியில் (கை நூற்பு, கை நெசவு) மட்டுமே செய்யப்பட வேண்டும், அதுவும் இயற்கை இழைகளான‌ கம்பளி/பருத்தி/பட்டு ஆகியவற்றால் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்று கொடிக்கான குறியீடு/கொள்கை 1947 முதல், நிறுவப்பட்டு வழக்கத்தில் உள்ளது. ஆலைகளில் உற்பத்தி செய்யக் கூடாது, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யவும் கூடாது. ஆக, பல்லாயிரக்கணக்கான காதி தொழிலாளர்களை உள்ளடக்கியது தேசியக் கொடி உற்பத்தி என்பது உண்மையில் மிகப் பெருமையான விஷயம்.
  • ஆனால், இந்தியக் கொடிக்கான குறியீட்டைத் திருத்தியதன் மூலம், மில்களில் தயாரிக்கப்பட்ட பாலிய‌ஸ்டர் தேசியக் கொடிகளை மத்திய அரசு கடந்த ஆண்டு அனுமதித்தது. அதைவிட சோகம், இறக்குமதியையும் அனுமதித்தது. இதனால் சீனா நமது தேசியக் கொடியை மிக அதிமாகத் தயாரித்து ஏற்றுமதி செய்தது. இதன் மூலம் மத்திய அரசே கொண்டுவந்த ‘ஆத்ம நிர்பர்’ என்ற தற்சார்பு, ‘மேட்-இன்-இந்தியா’, ‘லோக்கல்’ போன்ற அம்சங்கள் அனைத்தும் இழக்கப்படுகின்றன.
  • இந்தக் கொடி குறியீடு (Flag code) மீட்டெடுக்கப்பட வேண்டும். நமது தேசியக் கொடி காதியில் மட்டுமே இருக்கும் வகையில் அரசு மாற்ற வேண்டும். இது மரபணு மாற்றப்பட்ட ப‌ருத்தியில் அல்லது நாட்டு / மரபு பருத்தியிலிருந்து மட்டுமே தேசியக் கொடி தயாரிக்கப்படும் என்பதும் உறுதிசெய்யப்பட வேண்டும்.

நாம் செய்ய வேண்டியவை

  • நாம் அனைவரும் காதியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு மதிக்க வேண்டும். அதன் அகிம்சைத்தன்மை, அது வளர்க்கும் வன்முறை இல்லாப் பொருளாதாரம் ஆகியவற்றை நாம் அனைவரும் ஆதரிக்க வேண்டும். நாம் அனைவரும் கைவினைஞர்களால் உற்பத்தி செய்யப் பட்ட காதி தயாரிப்புகளையே வாங்க வேண்டும். நமது அன்பளிப்புகள்கூட காதியாகவே இருக்கட்டும்.
  • மரபணு மாற்றப்பட்ட விதைகளைத் தவிர்ப்பது, உள்நாட்டு/மரபு விதைகளைப் பயன்படுத்துவது, மேலும் பாலியஸ்டர் - வேதியியல் சாயங்களைத் தவிர்ப்பது போன்ற வழிமுறைகளால், காதியை மேலும் பரவலாக்குவதில் தீவிரமாக ஈடுபடலாம். சுற்றுச் சூழலுக்காகவும், நமது அடுத்த தலைமுறையின் நீடித்த தன்மைக்காகவும், ஊரக வாழ்வாதாரங்களுக்காகவும், காலநிலை நெருக்கடியைக் குறைக்கவும், மனித ஆற்றலை மட்டுமே நம்பும் சுற்றுச்சூழலுக்கு உகந்த‌ காதியை முழுமையாக ஆதரிப்போம், பரப்புவோம்.

நன்றி: இந்து தமிழ் திசை (15  – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories