TNPSC Thervupettagam

காத்திருக்கும் ஆபத்து!

January 4 , 2020 1839 days 1476 0
  • இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலகில் பல அணு சக்தி வல்லரசுகள் உருவாகிவிட்டன என்றாலும், பேரழிவை ஏற்படுத்தும் அணுஆயுத விபத்துக்கான சாத்தியம் மிக மிகக் குறைவு. அதேநேரத்தில் இயற்கைச் சீற்றங்களும், சுகாதார பாதிப்புகளும்தான் மனித இனம் எதிர்கொள்ள இருக்கும் பேரழிவுக்குக் காரணமாக இருக்கப் போகின்றன. 
  • மருத்துவ அறிவியல் ஆன்டிபயாட்டிக்கை கண்டுபிடித்தபோது இனிமேல் மனித இனத்தின் அனைத்து நோய்களுக்கும் தீர்வு காணப்பட்டதாக உலகம் மகிழ்ச்சி அடைந்தது. அந்த மகிழ்ச்சி இனியும் அதிக நாள்கள் நீடிக்கப்போவதில்லை என்பதற்கான வலுவான அறிகுறிகள் தோன்றத் தொடங்கிவிட்டன. ஆன்டிபயாட்டிக் மருந்துகளுக்குக் கட்டுப்படாத பல்வேறு நோய்த்தொற்றுகள் உருவாகியிருக்கின்றன. ஒட்டுமொத்த மருத்துவத் துறையையே அது அச்சுறுத்துகிறது.

ஆன்டிபயாட்டிக் மருந்துகளின் வீரியம்

  • ஆன்டிபயாட்டிக் மருந்துகளின் வீரியம் ஒன்றுக்கு இரண்டு மூன்று மடங்காக அதிகரித்தால் ஒழிய பல நோய்த்தொற்றுக்கள் கட்டுப்பட மறுக்கின்றன. சூடோமோனக் என்கிற நோய்த் தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அந்த நோய்த்தொற்று எந்தவிதமான ஆன்டிபயாட்டிக் மருந்தாலும் குணப்படுத்த முடியாததாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. ஆன்டிபயாட்டிக் மருந்துகளுக்குக் கட்டுப்படாத இதுபோன்று இன்னும் பல்வேறு நோய்த் தொற்றுகள் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வெளிப்படுகின்றன. 
  • எந்தவித ஆன்டிபயாட்டிக்குக்கும் கட்டுப்படாத  நோய்த் தொற்றுகளால் உலக அளவில் 7 லட்சத்துக்கும் அதிகமான நோயாளிகள் உயிரிழப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. முறையான, வலிமையான புதிய மாற்று மருந்து கண்டிபிடிக்கப்படாமல் போனால், ஆன்டிபயாட்டிக்குக்குக் கட்டுப்படாத நோய்த்தொற்றுகளால் அடுத்த 30 ஆண்டுகளில் ஆண்டுதோறும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் உயிரிழக்க நேரிடும்.
  • புற்று நோய், சர்க்கரை நோய், இதயம் தொடர்பான நோய்கள் ஆகியவற்றையெல்லாம்விட, மிகவும் கடுமையான பாதிப்பை மனித இனத்துக்கு ஆன்டிபயாட்டிக் எதிர்ப்புச் சக்தி ஏற்படுத்தக் கூடும் என்று மருத்துவத் துறை வல்லுநர்கள் அச்சப்படுகிறார்கள்.
  • ஆன்டிபயாட்டிக் மருந்துகளுக்கு நோய்த்தொற்றுகள் கட்டுப்படாத நிலைமை ஏற்பட்டிருப்பதற்கு மருத்துவர்கள் அதிக அளவில் ஆன்டிபயாட்டிக் மருந்துகளைப் பரிந்துரைத்ததும், தேவையில்லாத சாதாரண உடல் உபாதைகளுக்கெல்லாம் ஆன்டிபயாட்டிக் மருந்துகளைப் பயன்படுத்தியதும்தான் காரணம் என்கிற கருத்து பரவலாகக் காணப்படுகிறது. அது முழுமையான உண்மையல்ல.
  • உலக அளவில் நுண்ணுயிரிகளுக்கு ஆன்டிபயாட்டிக் எதிர்ப்புச் சக்தி ஏற்பட்டிருப்பதற்கு வேறு பல காரணங்களும் உண்டு. கோழி மற்றும் கால்நடை வளர்ப்பில் அதிகமாக ஆன்டிபயாட்டிக் பயன்படுத்தப்படுவது மிக முக்கியமான காரணம். வேளாண்மையிலும்கூட ஆன்டிபயாட்டிக் பயன்படுத்தப்படுகிறது. இதனால், பரவலாக மனித இன ரத்தத்தில் ஆன்டிபயாட்டிக் கலந்துவிடுவதால், நோய்த்தொற்றுகள் ஆன்டிபயாட்டிக்குக்குக் கட்டுப்படாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. 
  • நுண்ணுயிரிகள் (பாக்டீரியா) ஆன்டிபயாட்டிக்குக்குக் கட்டுப்படாத நிலைமை ஏற்பட்டிருப்பதற்கு வேறு சில முக்கியமான காரணங்களும் உண்டு.

எதிர்ப்பு சக்தி

  • நுண்ணுயிரிகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு ஏற்கெனவே ஆன்டிபயாட்டிக் எதிர்ப்புச் சக்தி பெற்ற அணுக்களிலிருந்து, எதிர்ப்புச் சக்தியைப் பெறும் ஆற்றலுடையவை. நுண்ணுயிரி தனது மரபணுவில் தனக்குத் தானே மாற்றம் செய்துகொள்ளும் தன்மையுடையது என்று அண்மைக்கால ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியிருக்கிறது. 
  • அதேபோல, நுண்ணுயிரிகள் தங்களை மாற்றிக்கொண்டு ஆன்டிபயாட்டிக்கிலிருந்து காப்பாற்றிக்கொள்ளும் சக்தியையும், நேரடியாகவே எதிர்வினையாற்றி ஆன்டிபயாட்டிக்கை எதிர்கொள்ளும் ஆற்றலையும் பெற்றிருக்கின்றன. எடுத்துக்காட்டாக  பென்சிலினின் வீரியத்தை சமன் செய்யும் ஆற்றல் கொண்ட என்சைம்களை சில நுண்ணுயிரிகள் உருவாக்குவது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 
  • கூடுதல் வீரியமுள்ள அல்லது புதிய ஆன்டிபயாட்டிக்குகளை உருவாக்குவதன் மூலம்தான் இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள முடியும்.
  • ஆனால், முதலீடும், கட்டுப்பாடுகளும் அதற்குத் தடையாக இருக்கின்றன. நுண்ணுயிரிகளை எதிர்கொள்ள வெற்றிகரமாக ஆய்வுகளை நடத்தி புதிய ரக ஆன்டிபயாட்டிக்குகளைத் தயாரித்த மருந்து உற்பத்தித் துறை, இப்போது ஆய்வுகளில் அக்கறை காட்டுவதில்லை. 

மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள்

  • உலகிலுள்ள 18 மிகப் பெரிய மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களில், 15 நிறுவனங்கள் ஆன்டிபயாட்டிக் தயாரிப்பையே நிறுத்திவிட்டன. கார்ப்பரேட் கலாசாரத்தால் மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து பெரிய நிறுவனங்களாக மாறுகின்றன.
  • ஆனால், அந்த நிறுவனங்கள் லாபம் ஈட்டும் மருந்துகளின் தயாரிப்பு குறித்து முனைப்புக் காட்டுகின்றனவே தவிர, புதிய ஆய்வுகளுக்குக் கணிசமான நிதி ஒதுக்கீடு செய்வதைக் குறைத்துவிட்டன. அதனால், ஆன்டிபயாட்டிக் ஆராய்ச்சி போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாமல் பின்னடைவைச் சந்திக்கிறது.
  • புதிய ஆன்டிபயாட்டிக்குகளை உருவாக்க நிறுவனங்கள் முன்வந்தாலும்கூட, அதற்கான அனுமதி பெறுவது பிரச்னையாக இருக்கிறது. உருவாக்கிய மருந்துகளைச் சோதனை செய்து பார்ப்பதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதால், புதிய ஆன்டிபயாட்டிக் கண்டுபிடிப்புக்கான முதலீட்டுக்கு யாரும் தயாராக இல்லை.
  • இந்தப் பிரச்னைக்கு  உலகம் உடனடியாக  தீர்வு காண முன்வராவிட்டால், நோய்த்தொற்று பாதிப்பால் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழக்க வேண்டிய அவலம் ஏற்படும். என்ன செய்யப் போகிறோம் என்று தெரியவில்லை.

நன்றி: தினமணி (04-01-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories