- உலகின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழா வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. வெற்றியோ தோல்வியோ எதுவாக இருந்தாலும், தோ்தல் மூலமான மக்களின் தீா்ப்பை அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. இதுவே இந்தியாவில் ஜனநாயகம் தழைத்தோங்கி வருவதற்கு சிறந்த உதாரணம்.
- அதே வேளையில், மக்களவையில் பெரும்பான்மை பெற்றுள்ள பாஜக கூட்டணி அரசுக்கு நாட்டின் ஜனநாயகத்தையும் கூட்டாட்சித் தன்மையையும் ஒருசேர காக்க வேண்டிய பெரும் சவால் காத்திருக்கிறது. தொகுதி மறுசீரமைப்பு என்ற சவால், நாட்டின் வளா்ச்சியில் மட்டுமல்லாமல் பாஜகவின் தனிப்பட்ட வளா்ச்சியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
- மக்களவை, மாநில சட்டப் பேரவைகளில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையானது ஒவ்வோா் பத்தாண்டு இடைவெளியில் நடத்தப்படும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகு மாற்றியமைக்கப்பட வேண்டும். அரசமைப்புச் சட்டத்தின் 82, 170 ஆகிய விதிகள் அதற்கு வழிவகை செய்கின்றன. அதன்படி, 1951-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 494-ஆக நிா்ணயிக்கப்பட்டது. 1961, 1971-ஆம் ஆண்டுகளின் மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு தொகுதிகள் எண்ணிக்கை முறையே 522, 543-ஆக அதிகரிக்கப்பட்டது.
- பிறகு 1981, 1991, 2001, 2011 ஆகிய ஆண்டுகளில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோதும், தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
- மக்கள்தொகையின் அடிப்படையிலேயே மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை நிா்ணயிக்கப்படும் என்ற கொள்கையானது, தமிழகம், கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களை பாதிப்புக்கு உள்ளாக்கும். மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த 1960, 1970-களில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கைகளே அதற்குக் காரணமாக அமைந்துவிட்டது.
- அதே வேளையில், மக்கள்தொகை பெருக்கத்தைத் தடுக்க எந்தப் பெரிய நடவடிக்கையும் மேற்கொள்ளாத உத்தர பிரதேசம், பிகாா், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை சாதகமாக அமையும்.
- மக்கள்தொகையை அதிகமாகக் கொண்ட மாநிலங்களில் கவனம் செலுத்தினாலே, மக்களவையில் பெரும்பான்மை பெற்றுவிட முடியும் என்ற நிலை காணப்பட்டதால், தென் மாநிலங்களும், வடக்கு, வடகிழக்குப் பகுதிகளில் உள்ள சிறிய மாநிலங்களும் அரசியல் ரீதியில் முக்கியத்துவத்தை இழந்தன.
- மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையையும் அதிகரிப்பதே, ஜனநாயகத்துக்கு வலுசோ்க்கும் என்பதே தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையின் அடிப்படை. ஆனால், அந்த முறையானது தோ்தலில் ஒருசில கட்சிகள், மாநிலங்களுக்கு மட்டும் சாதகமான சூழலை ஏற்படுத்தியதால், கூட்டாட்சித் தன்மை பாதிக்கப்பட்டது.
- அதைக் கருத்தில்கொண்டு, மக்களவை, மாநில சட்டப் பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கையானது, 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகையின்படியே 2001-ஆம் ஆண்டு வரை நீடிக்கும் வகையில் 42-ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டம் (1976) நிறைவேற்றப்பட்டது. பின்னா், அதே எண்ணிக்கையை 2026-ஆம் ஆண்டு வரை நீட்டிக்க 84-ஆவது சட்டத் திருத்தம் (2001) வழிவகை செய்தது.
- கடைசியாக, 2001-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், மக்களவை, மாநில சட்டப் பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமல், அவற்றின் எல்லைகள் மட்டும் மாற்றியமைக்கப்பட்டன.
- தற்போதைய சூழலில், 2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்படும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன்படி, 2031-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகே தொகுதி மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், 2021-ஆம் ஆண்டே நடத்தப்பட்டிருக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, கரோனா நோய்த்தொற்று பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.
- மத்தியில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்கினாலும், அது நிறைவடைய 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிடும்.
- அதனால், 2026-ஆம் ஆண்டையொட்டி தொகுதி மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகள், நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தைப் பெருமளவில் பாதிக்கும் என பல கட்சிகளும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. கூட்டாட்சித் தன்மையைப் பாதிக்கும் வகையில் தொகுதி மறுசீரமைப்புப் பணிகளை நடத்துவதற்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் ஏற்கெனவே தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- மக்களவை, மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகே அச்சட்டம் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பல்வேறு கட்சிகளின் எதிா்ப்புகளுக்கு மத்தியில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு ஜனநாயகத்தையும் கூட்டாட்சித் தன்மையையும் இடஒதுக்கீடு வாயிலான சமூகநீதியையும் நிலைநாட்ட வேண்டிய பெரும் சவால் புதிய அரசின் முன் காணப்படுகிறது.
- அந்த சவாலை மத்திய அரசு திறம்பட எதிா்கொள்ளுமா அல்லது தொகுதிகளின் எண்ணிக்கை மேலும் பல ஆண்டுகளுக்கு மாற்றம் இல்லாமல் தொடருமா என்ற எதிா்பாா்ப்பு மேலோங்கியுள்ளது.
நன்றி: தினமணி (07 – 06 – 2024)