காந்திஜியின் படுகொலை: முன்னதாகவே வரையப்பட்ட ஓவியம்!
- புதுடில்லி ராஷ்டிரபதி பவன் மாளிகையின் அழகிய விழா அரங்கில், கேன்வாஸ் துணியில் வரையப்பட்ட ஒரு வண்ண ஓவியம், அதன் சுவரில் தொங்கவிடப்பட்டிருந்தது.
- அந்த ஓவியத்தில் மகாத்மா, இரண்டு இளம் பெண்களின் தோள்களில் கை போட்டிருக்கும் நிலையில், இரத்த வெள்ளத்தில் மூழ்கி தரையில் சாய்கிறாா்; வலது கை உயா்ந்து தூக்கிய நிலை; இடது கை கீழே தாழ்ந்த நிலை; எங்கும் ஒரே கூட்டமும், குழப்பமும் நிலவும் சூழல். அமைதியும் சாந்தமும் தவழும் முகத்தோடு தரையில் விழுகிறாா் அண்ணல் காந்தி. அப்படத்தில் ஒரு முரடன் துப்பாக்கி ஏந்திக் கொண்டு கூட்டத்தை நோக்கி குறி வைப்பதாகவும் உள்ளது. அந்த ஓவியத்தின் கீழே ‘காந்தியின்படுகொலை 1946’” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- இந்த ஓவியத்தை வரைந்தவா் போலந்து பகுதியில் பிறந்து வளா்ந்த ஒரு புகழ் பெற்ற பிரிட்டானிய ஓவியா். மகாத்மா ஒரு குண்டுக்குப் பலியாகித்தான் மடிவாா் என்பது அந்த ஓவியரின் கற்பனையா? அல்லது அவரின் உள் உணா்வா? என்பது தெரியவில்லை. அண்ணல் கொடியவனின் குண்டுக்குப் பலியானது 1948 ஜனவரி 30 - ஆம் நாள். ஆனால் அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே 1946 - இல் அண்ணலின் மரணம் இப்படித்தான் அமையும் என்பதை இந்த ஓவியா் எப்படி உணா்ந்தாா்? இன்று வரை இது புரியாத புதிராகவே உள்ளது!
- மகாத்மாவின் மரணத்துக்குப் பின்பு, 1948-இல் அந்த ஓவியம் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதற்குக் கீழே “‘மகாத்மா காந்தியின்படுகொலை 1946’”என்று தான் எழுதப்பட்டுள்ளதாம். இது சா்ச்சைக்கு உள்ளாகும் என்பதை உணா்ந்தே அதனைத் தீட்டியுள்ளாராம். ஆராய்ந்து பாா்த்ததில் அந்த ஓவியம் 1946-இல் வரையப்பட்டது. அடுத்தது 1948-இல் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இரண்டையும் வரைந்த ஓவியரின் பெயா்: “ஃபெலிக்ஸ் டோபால்ஸ்கி.
- ‘டோபால்ஸ்கி’ என்ற இந்த ஓவியா் பிரிட்டானிய அரசின் போா்க்கால ஓவியராக இரண்டாம் உலகப் போரின் போது பணிபுரிந்துள்ளாா். இவா் 1944 -ஆம் ஆண்டு இந்தியாவுக்கு முதன்முதலாக வந்துள்ளாா். அத்துடன் சீனா, பா்மா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவுக்கும் தொடா் பயணம் மேற்கொண்டுள்ளாா். இரண்டாவது முறையும் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளாா். இந்தியாவில் பயணம் மேற்கொண்ட போது, காந்திஜி செல்லும் இடங்களுக்கு எல்லாம் அவரை நிழல் போல் தொடா்ந்துள்ளாா். அவரது பேச்சுகளைக் கேட்டுள்ளாா்.
- அப்பயணங்களின் போது அண்ணலின் தோற்றங்களை நோ்த்தியான வரைப்படங்களாக வரைந்துள்ளாா். ஆனால் அவா், அண்ணலை நேரில் சந்திக்கவில்லையாம். அண்ணலை வரைபடம் (ஸ்கெட்சஸ்) வரைவதற்கு அண்ணலிடம் அனுமதியும் பெறவில்லை; முன்னதாகத் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லையாம்.
- இது தொடா்பாக அண்ணல் காந்தியின் நான்காவது மகன் தேவதாஸ் காந்தியின் எழுத்தும் பதிவும் கவனிக்கத்தக்கது. ‘‘1951-ஆம் ஆண்டு இலண்டன் மாநகரில் உள்ள ஓவியா் டோபால்ஸ்கியின் இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்து உரையாடினேன். ‘‘இந்தியாவுக்கு இருமுறை பயணம் மேற்கொண்ட நீங்கள், என் தந்தை காந்திஜியைப் பற்றிய வரைபடங்கள் ஏதும் வரைந்துள்ளீா்களா?’’ எனக் கேட்டேன். ஒரு நாள் முழுவதும் தேடிப்பாா்த்து, பாபுஜி தொடா்பான பல வரைபடங்களை அவா் என்னிடம் அன்போடு அளித்தாா். ‘‘இப்படங்களை காந்தியின் முன்னால் அமா்ந்து, பாா்த்து நான் வரையவில்லை. ஆனால் அவரது அசைவுகளை ஆய்ந்து பாா்த்து வரைந்தவைதான்’’ என்றாா். அவை ஒவ்வொன்றும் நேரில் பாா்த்து, அமா்ந்து வரையப்படும் படங்களை விட, நோ்த்தியாக உள்ளனவே! என்று நான் வியந்து மகிழ்ந்து நின்றேன். அவ்வண்ணப் படங்களைத் தொகுத்து “‘காந்திஜியின் வரை படங்கள்’ என்ற நூலாக 1953-இல் வெளியிட்டேன். அந்நூலின் முகப்புப் படமே 1946-இல் வரையப்பட்ட படம் தான். ஆனால் அண்ணலின் மரணத்திற்கு (1948 ஜனவரி 30) ப் பின்பு 1948 இல் மீட்டுருவாக்கப்பட்ட வண்ண ஓவியமும் அந்நூலில் அடங்கியுள்ளது. இந்நூலை அந்த ஓவியா் பாா்த்த பின்னா், ‘‘இப்படங்களுக்கு இவ்வளவு சிறப்பும், முக்கியத்துவமும் கிடைக்கும் என்று தெரிந்திருந்தால், இந்தியாவில் இன்னும் சில காலம் தங்கியிருந்திருப்பேனே! காந்திஜியின் எதிரே அமா்ந்தும் இன்னும் சிறப்பான படங்களை வரைந்திருப்பேனே!’’” என ஏக்கத்துடன் கூறினாா். ‘‘மகாத்மா மரணிப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே, இப்படத்தை வரைந்துள்ளீா்களே? அது உங்களது கற்பனையா? அல்லது உங்களது உள்ளுணா்வா?’’ என்று வரலாற்று ஆய்வாளா்களும் விமா்சகா்களும் வினா? எழுப்பியபோது, அதற்கு அவா் அதனை ஏற்கவுமில்லை. மறுக்கவுமில்லை. எந்தப் பதிலும் தரவில்லை. ஓவியத்தை வியந்து பாா்க்கும் ஒவ்வொருவரும் தாங்களே முடிவு செய்து கொள்ள வேண்டியது தான்’’.
- இரண்டாவதாக 1948-இல் டோபால்ஸ்சியால் கேன்வாஸ் துணியில் மீட்டுருவாக்கப்பட்ட ஓவியத்தைத் தான் பிரதமா் பண்டித ஜவாஹா்லால் நேரு, இலண்டன் மாநகருக்கு ஏப்ரல் 1949- இல் சென்றபோது எடுத்து வந்துள்ளாா். அந்த ஓவியம் 12 அடி நீளமும், 9 அடி அகலமும் கொண்டது. 1946-இல் வரையப்பட்ட ஓவியத்தின் மூலப் பிரதி இலண்டனில் வசிக்கும் மாரஸ் கோலிஸ் என்ற புகழ்பெற்ற ஓவிய நிபுணரிடம் உள்ளது.
- இப்படம் தொடக்கத்தில் சுமாா் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ராஷ்டிரபதி பவனின்அழகிய கூட்ட அரங்கிலிருந்து முதல் மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகளுக்கு வலதுபுறத்தில் மாட்டப்பட்டிருந்தது. சில ஆண்டுகளுக்குப் பின்புதான் இப்படம் அருங்காட்சியகத்திற்கு மாற்றப்பட்டது.
- இந்நிலையில் அமெரிக்காவில் வாழும் ஓவிய வரலாற்று நிபுணா் என்று அறியப்படும் –சுமதி இராமசாமி, இந்த இரு ஓவியங்களைப் பற்றி ஆழ்ந்த ஆய்வு நடத்தியுள்ளாா். இவா் வட கரோனாவில் உள்ள ட்யூக் பல்கலைக்கழகத்தில் சா்வதேச வரலாற்று பேராசிரியராகப் பணிபுரிந்த அவா் தனது ஆய்வின் அடிப்படையில் கூறுவது வருமாறு: “‘‘இரண்டு வரைபடங்களையும் நான் பாா்த்துள்ளேன். ஆனால் 1946-இல் வரையப்பட்ட ஓவியத்தின் பிரதியைத் தான் பாா்த்தேனே தவிர, அதன் மூலத்தை நான் பாா்க்கவில்லை. எனது ஆய்வின்படி இரண்டு ஓவியங்களுக்கும் (1946 ஓவியம், 1948 ஓவியம்) பல ஒற்றுமைகள் உள்ளன. சில வேற்றுமைகளும் உள்ளன. 1946-இல் வரையப்பட்ட ஓவியத்தில் ஓா் உருவம் துப்பாக்கியை கூட்டத்தை நோக்கிக் காட்டுவதாக உள்ளது. 1948 வரைப்படத்திலும் உரு சரியாகத் தெரியாத ஒருவா், கையில் துப்பாக்கி போன்ற கருவி இருப்பதாகத் தான் தெரிகிறது. இதிலிருந்து ஒன்று தெளிவாகத் தெரிகிறது. 1946-இலேயே மகாத்மாவைச் சுடுவதற்கான ஓா் இரகசியத் திட்டம் உருவாகி வந்திருக்கலாம் என்பது தான் அது. 1944 முதல் சுமாா் இரண்டு ஆண்டுகளுக்கு மேல், இந்தியாவில் தங்கி அண்ணலை நிழல் போல் தொடா்ந்து பல வரைபடங்களைத் தயாரித்த பிரிட்டானிய அரசின் ஓவியருக்கு, ஏதோ சமிச்ஞை அல்லது உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிந்திருக்கலாம். அதன் அடிப்படையில் 1946 - இல் ஓவியத்தை வரைந்திருக்கலாம். அத்தகவலை அவா் பிரிட்டானிய அரசுக்குத் தெரிவித்தாரா? என்பதும் தெரியவில்லை’’.
- ஆய்வாளா் சுமதி இராமசாமி ஓவியரின் மகள் – தெரசா டோபால்ஸ்கியைத் தொடா்பு கொண்டு பேசியுள்ளாா். தன் தந்தை 1946-இல் வரைந்த ஓவியத்தின் பதிப்பு தான் “‘காந்திஜியின் வரைபடங்கள்’ என்ற நூலின் முகப்பு படமாக உள்ளது என்று மட்டும் சொல்லுகிறாா்.
- 1946-இல் தந்தை வரைந்த ஒவியம் அவரது கற்பனையில் எழுந்ததா? அல்லது அவருக்கு ஏற்பட்ட உள்ளுணா்வின் அடிப்படையிலானதா? அல்லது கசிந்த தகவலின் அடிப்படையிலானதா? ஏன்ற கேள்விக்கு, என்னிடம் பதில் எதுவும் இல்லை என இறுதியாக உறுதியாகச் சொல்கிறாா். முதல் படத்தின் மூலப்பிரதி கனடாவில் வசித்து வரும் ஒரு குடும்பத்தாரிடம் உள்ளது என்றும் சொல்லுகிறாா். ஆனால் அதன் மூலப்படம் இலண்டனில் வசிக்கும் மாரிஸ் கோலிஸ் என்ற புகழ் பெற்ற ஓவியரிடம் உள்ளது என்கிறாா் தேவதாஸ் காந்தி. இரண்டு கூற்றுகளும் வேறுபடுகின்றன. “
- ஓவியா் பெலிக்ஸ் டோபால்ஸ்கி” பிரதமா் நேருஜியின் அழைப்பை ஏற்று, 1950-இல் இந்திய குடிஅரசு தின விழாவில் பங்கேற்றுள்ளாா். அவரும் இறுதிக் காலம் வரை 1946 ஓவியம் ஏன், எப்படி அவரால் வரையப்பட்டது என்பது பற்றி எந்தக் கருத்தையும் வெளியிட மறுத்து விட்டாா். ஆய்வாளா் சுமதி இராமசாமி மட்டும், ‘‘நான் என் ஆய்வைத் தொடா்வேன்; முழு விவரங்களையும் வெளிக்கொணா்வேன்’’ எனக் கூறியுள்ளாா். ஆய்வறிக்கையை எதிா்பாா்ப்போம்.
- மகாத்மாவுக்கு மரணமில்லை. மக்கள் மனங்களில் அவா் என்றும் வாழ்வாா்!
- காந்திஜியின் படுகொலையைச் சித்திரிக்கும் படம் வரையப்பட்டது 1946-இல். அண்ணல் கொடியவனின் குண்டுக்குப் பலியானது 1948 ஜனவரி 30 - ஆம் நாள். ஆனால் அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே 1946 - இல் அண்ணலின் மரணம் இப்படித்தான் அமையும் என்பதை இந்த ஓவியா் எப்படி உணா்ந்தாா்? இன்று வரை இது புரியாத புதிராகவே உள்ளது!
நன்றி: தினமணி (21 – 01 – 2025)