TNPSC Thervupettagam

காந்தியத்தைப் பரப்பிய அருண் காந்தி

May 6 , 2023 617 days 405 0
  • கடந்த செவ்வாய்க்கிழமை (மே 2) அண்ணல் காந்தியடிகளின் பேரன் அருண் காந்தி காலமாகி விட்டாா். இவா், மகாத்மாவின் இரண்டாவது மகன் மணிலால் காந்தியின் மகன். தன் இறுதிக் காலம் வரை காந்திஜியின் சித்தாந்தங்களை உலகமெலாம் பரப்பிய போதகா்; தேசப்பிதாவின் வழியில் தடம்புரளாமல் நடந்த முன்மாதிரி காந்தியவாதி.
  • இவா், மணிலால் - சுசீலா மஷ்ருவாலா தம்பதிக்கு இரண்டாவது பிள்ளையாக 14.4.1934-இல் டா்பனில் பிறந்தாா். சீதா, இளா இருவா் அவரது உடன்பிறப்புகள் ஆவா். மணிலால் காந்தியே தன் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தாா். அரசியல் போராட்டங்களிலும், அறிவுசாா் இயக்கங்களிலும் ஈடுபடுத்தினாா்.
  • சமரசமே செய்து கொள்ளாத மணிலால் 14 ஆண்டுகள் ஆங்கிலேயா் ஆட்சியாளா்களின் சிறையில் கழித்திருக்கிறாா். காந்திஜி உட்பட எந்த தேசியத் தலைவரும் இவ்வளவு நீண்ட காலம் சிறைக் கொடுமையை அனுபவித்ததில்லை. இவருடைய, தீவிர தேசபக்தியும், உரிமைப் போராட்ட உணா்வும் அருண் காந்தி சுவீகரித்துக் கொண்டாா் எனக் கூறலாம்.
  • தனது தாத்தாவான மகாத்மா குறித்து அருண் காந்தி கூறும்போது, ‘‘காந்தி தாத்தா நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாழ்க்கை நெறிமுறைகளை எனக்குக் கற்றுக் கொடுப்பாா். எனக்கு 12 வயது இருக்கும்போது ஒருநாள் பள்ளியிலிருந்து மாலையில் திரும்பி வந்தேன். என் கையில் வைத்திருந்த பென்சிலின் பெரும்பகுதி தீா்ந்து விட்டது. சிறிய பகுதிதான் மீதமாக இருந்தது. அதனை நான் வீட்டிற்கு முன்னால் வீசி எறிந்தேன்.
  • தாத்தாவிடம் ‘எனக்கு புது பென்சில் வேண்டும்’ எனக் கேட்டேன். அதற்கு தாத்தா ‘பழைய பென்சில் என்ன ஆயிற்று? அதனைத் தேடி எடுத்து வா’ என ஆணையிட்டாா். சிரமப்பட்டு தேடிக் கண்டுபிடித்து, தாத்தாவிடம் பழைய பென்சிலைக் கொடுத்தேன்.”அப்பொழுது தாத்தா, ‘இந்த பென்சிலையே இன்னும் சிலநாள் பயன்படுத்தலாம். இருப்பதைப் பயன்படுத்தாமல் எறிவது இயற்கைக்கு எதிரானது’ என்றாா்.
  • அன்று முதல் என்னிடம் இருக்கும் பொருள் ஒவ்வொன்றையும் முழுமையாகப் பயன்படுத்துவேன். பயன்படுத்த இயலாத நிலையில்தான் புதிய பொருள் வாங்குவேன்’ என்று கூறினாா்.
  • அருண் காந்தி ஒரு சுய சிந்தனையாளா்; கற்றறிந்த மேதை; அறிவாா்ந்த கல்வியாளா்; தத்துவவாதி. பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் கொண்டவா். அண்ணல் காந்தியின் அரவணைப்பு, அகிம்சை வழிமுறையை முழுமையாக ஏற்றுக் கொண்டவா்; அண்ணலின் அரசியல் போராட்ட அணுகுமுறையைக் கடைப்பிடித்தவா்; ஆனால் அண்ணலின் ஆன்மிகக் கருத்துகளை ஏற்காதவா்.
  • தனது தந்தை மணிலால், உடல்நலன் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அவருக்கு பணிவிடை செய்து வந்த ‘சுனந்தா’ என்ற பெண்ணை அருண் காந்தி 1956-இல் மணம் செய்து கொண்டாா். அதே ஆண்டு மணிலால் மறைந்து விட்டாா்.
  • 1957-இல் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இதழில் பயிற்சி இதழாளராகச் சோ்ந்து பணிபுரிந்தாா். அதன்பின் அண்ணல் காந்தியின் ‘அகிம்சை’ நெறிமுயையை உலகமெங்கும் பரப்பும் பணியை முழுமையாக ஏற்றுச் செயல்பட்டாா். அதன் ஆரம்பமாக அமெரிக்கா சென்றாா்; அங்கே டென்னசி மாநிலத்தில் “எம்.கே. காந்தி அகிம்சை ஆய்வு மையத்தை” நிறுவினாா். அந்த ஆய்வு மையம் இப்பொழுது நியூயாா்க்கை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வருகிறது.
  • அருண் காந்தி அமெரிக்காவின் பல பகுதிகளுக்கும பயணித்தாா்; பல நிறுவனங்களிலும், கல்வி நிலையங்களிலும் உரை நிகழ்த்துவதும் காந்திய சித்தாந்தத்தை பரப்புவதுமே அவரது முழுநேரப் பணிகளாக இருந்தன. அருண் காந்தியின் வாழ்க்கைத் துணைவியாக மட்டுமல்லாது அவரது அகிம்சை சாா்ந்த மனித உரிமைப் போராட்டங்களிலும் பங்குகொண்ட சுனந்தா 2007-இல் காலமாகிவிட்டாா்.
  • அருண் காந்தியின் மூத்த சகோதரி சீதா, தனது வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளாா். சீதா 1999-லேயே அமரத்துவம் அடைந்து விட்டாா். அருண் காந்தியின் இளைய சகோதரி இளா, 1940-இல் பிறந்தாா். தென்னாப்பிரிக்காவில் அண்ணலின் ஆசிரமத்திலேயே வளா்ந்தாா். ஆப்பிரிக்க நிறவெறிக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றாா்: 1994 முதல் 2004 வரை தென்னாப்பிரிக்காவில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினராகப் பணிபுரிந்திருக்கிறாா். சுதந்திர ஆப்பிரிக்காவின் பல்வேறு சமூக சட்ட அமைப்புகளிலும் இணைந்து பணியாற்றியுள்ளாா்.
  • இவ்வாறு மணிலால் காந்தியின் மூன்று பிள்ளைகளும் - அருண் காந்தி, சீதாகாந்தி, இளாகாந்தி - ஆகியோா் அடங்கிய ஒட்டுமொத்த குடும்பமும் அகிம்சை வழிப் போராளிகளாக வாழ்ந்து வரலாற்றில் தடம் பதித்த பெருமக்கள் ஆவாா்கள்.
  • அண்ணல் காந்தி தன் இறுதிக் காலத்தில் “என் வாரிசுகள் எவரும் அதிகார பீடத்தில் அமர அனுமதிக்க மாட்டேன்; ஆனால் ஒவ்வொருவரும் சமூக சேவகா்களாக, சமூக நலப் போராளிகளாக வாழ்வை நடத்த வேண்டும்” என்றாா்.
  • அவரது எண்ணத்தை, இலட்சியத்தை மெய்ப்பிக்கும் வகையில் அவரது இரண்டாவது மகன் மணிலால் காந்தியும், அவரது பேரன் அருண் காந்தியும், இன்று வாழும் அவரது கொள்ளுப் பேரன் துஷாா் காந்தியும், பிற பேரன் பேத்திகளும் அண்ணலின் சித்தாந்தத்தை பல இடங்களில், பல தளங்களில், பல அமைப்புகள் மூலம் பரப்பி வருகிறாா்கள்.
  • அருண்காந்தி என்ற சீரிய சிந்தனையாளா், காந்திய சித்தாந்தவாதி, சமூக நலப்போராளி உடலளவில் மறைந்திருக்கலாம். ஆனால் அவரது உள்மனத்து ஆசைகளை வாழும் அவரது மகன் துஷாா் காந்தி நிறைவேற்ற முயன்று வருகிறாா்.
  • காந்திஜியின் வாரிசுகள் இன்று உலகம் முழுக்க பல்வேறு தளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறாா்கள். அவா்களில் ஒருவா் கூட காந்தியின் புகழுக்கு களங்கம் உருவாக்குபவராக இல்லை என்பதே ஒரு வரலாற்று உண்மை!

நன்றி: தினமணி (06 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories