TNPSC Thervupettagam

காந்தியயைப் பேசுதல்: தீண்டாமை எனும் பெரும் பாவம்

August 14 , 2019 1920 days 1063 0
  • தன் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சியைப் பற்றி இப்படி எழுதியிருக்கிறார் காந்தி: “நடந்த விஷயம் துயரத்தை ஏற்படுத்துகிறது. தியாகி ஆவதற்கு எனக்கு எந்த ஆசையும் இல்லை. ஆனால், அப்படித்தான் நடக்குமென்றால் அதை எதிர்கொள்ள நான் தயார். என்னைக் கொல்வது எளிது. ஆனால், என்னைக் கொல்வதன் மூலம் கூடவே அப்பாவிகள் சேர்ந்து கொல்லப்படக்கூடிய, அல்லது படுகாயமடையக்கூடிய வாய்ப்புகளைப் பற்றி அவர்கள் ஏன் யோசித்துப்பார்ப்பதில்லை?... எது எப்படி இருப்பினும் இந்தச் சம்பவத்தால் தாழ்த்தப்பட்டோர் நலனுக்காகப் போராடுவதற்குக் கூடுதல் பலமே கிடைத்திருக்கிறது.”
  • ஆண்டு 1934. அதாவது, காந்தி கொல்லப்படுவதற்கு 14 ஆண்டுகளுக்கும் முன்பு. தனது ‘ஹரிஜன் யாத்திரை’ உச்சகட்டத்தை எட்டியிருந்த தருணம். அப்போது ஜூன் வாக்கில் புனேவுக்கு காந்தி வந்திருந்தார். அவர் வருவதற்கு முன்பே அவருக்கு இந்து சனாதனிகளிடமிருந்து தீவிர எதிர்ப்பு புறப்பட்டது. நூற்றுக்கணக்கான இந்து சனாதனிகள் திரண்டு, முன்னே ஒருவர் கறுப்பு ஆடையணிந்து கறுப்புக் குதிரையில் காந்திக்கு எதிராக ஊர்வலம் சென்றார்கள் என்று ராமச்சந்திர குஹா தனது சமீபத்திய நூலில் தெரிவிக்கிறார். ‘ஆலயப் பிரவேச சட்டத்தை எதிர்ப்போம்’, ‘இந்து மத அழிப்பாளரான காந்திக்கு வரவேற்பு கொடுக்காதீர்’ என்றெல்லாம் பதாகைகள் ஏந்திச் சென்றார்கள் என்று குஹா குறிப்பிடுகிறார்.
உயிர் தப்பினார் காந்தி
  • ஜூன் 25, 1934 அன்று மாலை புனேவில் உள்ள முனிசிபாலிட்டி அரங்கில் காந்தி பேசுவதாக இருந்தது. அங்கு பெருங்கூட்டம் திரண்டு காந்தியை வரவேற்று, அவரது உரையைக் கேட்கக் காத்திருந்தது. 7.30 மணியளவில் கார் ஒன்று அந்தக் கட்டிடத்துக்குள் நுழைந்தது. அது காந்தி வரும் கார் என்று நினைத்து சாரண மாணவர்கள் வரவேற்பு இசையை முழங்கத் தொடங்கினார்கள். அந்தச் சமயத்தில் மேலிருந்து ஒரு வெடிகுண்டு காரை நோக்கி எறியப்பட்டது. அந்தக் குண்டு குறிதவறிக் கீழே விழுந்து வெடித்தது. இதில் ஒரு போலீஸ்காரர் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர். குண்டு எறிந்தவர்கள் யாரும் பிடிபடவில்லை.
  • தீண்டாமையை ஒழிக்க காந்தி மேற்கொண்ட பிரச்சாரங்கள்தான் இந்த முதல் தாக்குதலுக்குக் காரணம். தன் உயிரைப் பணயம் வைத்து தீண்டாமையை காந்தி அழிக்க நினைத்ததைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்களின் வெறிச்செயல் அது. தீண்டாமைக்கு எதிராக காந்தி தனது உயிரை எப்படிப் பணயம் வைத்தார்? 1932-ல் புனே ஒப்பந்தத்துக்கு முன்பாக சிறையில் காந்தி மேற்கொண்ட உண்ணாவிரதம்தான் அது. இந்த உண்ணாவிரதமும் அதைத் தொடர்ந்து தீண்டாமைக்கு எதிராக காந்தியின் செயல்பாடுகள் ஏற்படுத்திய விளைவுகளும் அவர் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சியோடு நெருங்கிய தொடர்புடையவை.
தனித்தொகுதி முறை
  • முன்பாக, 1931-ல் லண்டனில் நடந்த இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் காங்கிரஸ் சார்பாக காந்தியும், தாழ்த்தப்பட்டோர் சார்பாக அம்பேத்கரும், மேலும் பல தரப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டார்கள். இந்த வட்டமேசை மாநாட்டின் முடிவில் தாழ்த்தப்பட்டோருக்குத் தனித்தொகுதி வழங்குவது பற்றிய சட்டம் நிறைவேற்றப்படும் என்று பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டோனால்டு அறிவித்தார். அந்தத் தனித்தொகுதி என்பது தற்போது இருப்பதைவிட வேறுபட்டது. தாழ்த்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த வேட்பாளரைத் தாழ்த்தப்பட்டோர் மட்டுமே சேர்ந்து தேர்ந்தெடுப்பார்கள். பொதுவான வேட்பாளருக்கும் தாழ்த்தப்பட்டோர் வாக்களிப்பார்கள்.
  • தாழ்த்தப்பட்டோர் இந்து மதத்திலிருந்து பிரிந்துசென்றால் இம்முறைக்குப் பிரச்சினை இல்லை. ஆனால், அதனுள்ளே இருக்கும்போது இந்தத் தேர்தல் முறையால் பெரும் பிளவு ஏற்படும் என்று காந்தி கருதினார். தாழ்த்தப்பட்ட மக்களையும் சாதி இந்துக்கள் தேர்ந்தெடுத்தால்தான் இணக்கம் நிலவும் என்று கருதினார். மேலும், தனித்தொகுதி முறை வந்தால் சாதி இந்துக்கள் கோபத்தில் பாதுகாப்பே இல்லாத தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கட்டற்ற வன்முறையை ஏவி அழித்தொழிப்பில் ஈடுபடக்கூடும் என்றும் அஞ்சினார்.
  • இன்னொரு பக்கத்தில், அம்பேத்கரோ பொதுத் தொகுதி முறையில் தேர்ந்தெடுக்கப்படும் தாழ்த்தப்பட்ட இன வேட்பாளர் சாதி இந்துக்களின் கையாளாகத்தான் இருக்க முடியும் என்று கருதினார். இதனால், சாதி இந்துக்களை எதிர்த்து சட்டமன்றங்களிலோ நாடாளுமன்றத்திலோ ஒரு தாழ்த்தப்பட்ட இன உறுப்பினரால் பேச முடியாது என்று கருதினார். பொதுக் கட்சியைச் சாராத ஒரு தலித் வேட்பாளர் வெற்றிபெறுவது எவ்வளவு கடினமாக இருக்கிறது என்ற சமீப கால நிதர்சனங்களைப் பார்க்கும்போது, அம்பேத்கரின் பயத்துக்குக் காரணம் இல்லாமல் இல்லை. அதே நேரத்தில், ஒரு தொகுதியில் தாழ்த்தப்பட்டோருக்கு ஒரு இடம், பொதுவானவர்களுக்கு ஒரு இடம் என்ற முறையால் இரண்டு தரப்பினருக்கிடையே பெரும் பிளவு ஏற்பட்டு, இதனால் தாழ்த்தப்பட்டோர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று காந்தி கருதியதிலும் உண்மை இல்லாமல் இல்லை.
அம்பேத்கருடன் உடன்பாடு
  • இந்தியா திரும்பிய பிறகு, ஒத்துழையாமை இயக்கம் காரணமாக காந்தி சிறை செல்ல நேர்ந்தது. இரட்டைத் தொகுதி முறை அமலுக்கு வரும் நிலையில் இருப்பதை அறிந்து பிரிட்டிஷ் பிரதமருக்குக் கடிதம் எழுதினார். பிரிட்டிஷ் பிரதமரிடமிருந்து சாதகமான பதில் வராததால் தனித்தொகுதி முறையை எதிர்த்து செப்டம்பர் 20, 1932-லிருந்து சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முடிவெடுத்தார். தனித்தொகுதி முறைக்கு எதிரான உண்ணாவிரதம் என்பதை உண்மையில் தீண்டாமைக்கு எதிரான உண்ணாவிரதமாகவே காந்தி மாற்றினார்.
  • செப்டம்பர் 20 அன்று உண்ணாவிரதம் தொடங்கியது. மொத்தம் ஆறு நாட்கள் நீடித்த உண்ணாவிரதத்தில் அம்பேத்கர் தரப்பும், இந்துக்கள் தரப்பும் ஓர் உடன்பாட்டுக்கு வந்தனர். அதுதான் புகழ்பெற்ற புனே ஒப்பந்தம். இதன்படி, தலித் உறுப்பினர்களை இரண்டு தரப்பும் சேர்ந்தே வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும். ஒப்பந்தம் ஒருபக்கம் இருக்கட்டும்... உண்ணாவிரதம் ஏற்படுத்திய அற்புத விளைவுகளைப் பார்க்க வேண்டுமே! இந்தியா முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான கோயில்கள் முதன்முறையாகத் தாழ்த்தப்பட்டோருக்காகத் திறந்துவிடப்பட்டன. பல இடங்களில் சமபந்தி நடைபெற்றது.
  • தாழ்த்தப்பட்டோரைக் கோயிலுக்குள் அனுமதிப்பது குறித்து பம்பாயில் ஒரு கோயிலின் முன்னே வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் அனுமதிப்பதற்கு ஆதரவாக 24,797 வாக்குகளும், எதிராக 445 வாக்குகளும் விழுந்தன என்று காந்தி வரலாற்றாசிரியர் லூயி ஃபிஷர் குறிப்பிடுகிறார். காந்தியின் உயிர் மீது கொண்ட அக்கறையானது தீண்டாமை என்பது பாவம் என்ற உணர்வை இந்திய மக்களிடம் ஏற்படுத்தியது.
  • புனே ஒப்பந்தத்தை ஒட்டி காந்தி இருந்த உண்ணாவிரதம்தான் நாடு முழுவதும் தீண்டாமைக்கு எதிராக ஒரே சமயத்தில் நிகழ்த்தப்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாடு. பெரும்பாலான மக்கள் காந்தியின் குரலுக்குச் செவிசாய்த்து தாழ்த்தப்பட்ட மக்களோடு கைகோத்தனர். 1934-ல் அவர் மீது நடந்த முதல் கொலை முயற்சியை அவருடைய உண்ணாவிரதம் ஏற்படுத்திய விளைவுகளுடன் வைத்துப் பார்த்தால், அவர் மீது சனாதனிகள் எந்த அளவுக்குக் கோபமாக இருந்தார்கள் என்பது புரியும். அந்தக் கோபம் இன்றும்கூடச் சிலரிடம் நீடிக்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை(14-08-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories