TNPSC Thervupettagam

காந்தியும் அம்பேத்கரும் முரண்பாடும் ஒற்றுமையும்

January 30 , 2025 4 hrs 0 min 17 0

காந்தியும் அம்பேத்கரும் முரண்பாடும் ஒற்றுமையும்

  • காந்தியடிகளின் நினைவு தினத்தில் அம்பேத்கர் குறித்து ஏன் பேச வேண்டும்? தன் வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை காந்தியுடன் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்த ஒருவர் குறித்து இந்நாளில் பேச என்ன இருக்கிறது? காந்தியை மகாத்மா என்று ஏற்றுக்கொள்ளாதவர் அம்பேத்கர். அம்பேத்கர் கருத்துக்கு எதிராக காந்தியும் தனது இதழ்களில் தொடர்ந்து பதில் எழுதிக்கொண்டே இருந்தார்.
  • இப்படி இவர்களுக்குள் இருந்த பல முரண்பாடுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், காந்தியின் வாழ்க்கையில் நடைபெற்ற மிக முக்கியமான மனமாற்றங்களுக்கு அம்பேத்கர் எந்த அளவுக்குத் தாக்கம் செலுத்தினார் என்று பார்த்தோமானால், இவர்களுக்குள் இருந்தது பகை முரண் அல்ல என்பது நன்றாகத் தெரியும்.

தீண்​டா​மைக்கு எதிரான தலைவர்:

  • 1948 ஜனவரி 30இல் காந்தி சுட்டுக்​கொல்​லப்​பட்​டதற்கு முன்பாக அவரைப் படுகொலை செய்ய ஏழு முறை முயற்சிகள் நடைபெற்றுள்ளன. அந்த ஏழு முயற்சி​களும் காந்தியடிகளுக்கும் அம்பேத்கருக்கும் நடைபெற்ற பூனா ஒப்பந்த உரையாடலுக்குப் பின்பே நடைபெற்றன. காந்தி​யடிகள் ஆப்ரிக்​காவில் இருந்த காலத்​திலிருந்தே தீண்டா​மைக்கு எதிராகக் குரல் கொடுத்து​வந்​தவர்​தான். தன் மனைவி கஸ்தூர்​பாவைக் கொண்டு ஓர் ஒடுக்​கப்​பட்​ட​வரின் மலச்சட்​டி யைச் சுமக்கச் சொல்லும் அளவுக்குத் தீண்டா​மைக்கு எதிராகச் சொந்த வாழ்வில் செயல்பட்டவர்.
  • 1915இல் இந்தியா வந்த பிறகு அகமதா​பாத்தில் அவர் தொடங்கிய ஆசிரமத்தில் ஒடுக்​கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைத் தங்கவைத்​தார். அதற்காக காந்தியை வைணவப் பிரிவினர் ஊரைவிட்டே ஒதுக்​கி​வைத்​தனர். அவர் ஆசிரமத்​துக்கு நிதி கொடுத்​தவர்கள் தங்கள் நிதியை நிறுத்​திக்​ கொண்​டனர். ஆனாலும் காந்தி தன் ஆசிரமத்தைத் தொடர்ந்து நடத்தினார்.
  • “தீண்டாமை ஒரு பாவகரமான செயல். அதைப் பின்பற்றுகிற நீங்கள் எல்லாம் இந்து மதத்தின் ஜெனரல் டயர்கள்” என்றும், “நாம் ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெறப் போராடு​கிறோம். பெரும்​பான்மை மக்களைச் சமமானவர்களாக நடத்தாமல் தீண்டாமைக் கொடுமையால் பிரித்து வைத்திருக்​கும்வரை நமக்கு சுயராஜ்யம் சாத்தியமே இல்லை” என்றும் 1920களிலேயே - அதுவும் காங்கிரஸ் மாநாடு​களில் நின்று​கொண்டு கடுமை​யாகப் பேசிய​வர்தான் காந்தி. ஆனாலும் சாதிய அமைப்பு குறித்​தும், இந்து மதப் புனிதம் குறித்தும் காந்திக்கு இருந்த பார்வை மிகப் பழமையானது. அப்போதெல்லாம் காந்தி​யடிகளின் இக்கருத்​துக்கு எதிராக யாரும் வீதியில் இறங்கிப் போராட​வில்லை.

கிளம்பிய எதிர்ப்பு:

  • 1932 பூனா ஒப்பந்​தத்தை ஒட்டியும் அதற்குப் பின்பும் அம்பேத்​கருடன் நடைபெற்ற உரையாடல்கள் காந்தி​யிடம் பெரும் மனமாற்​றத்தை ஏற்படுத்தின. அதுவரை தீண்டா​மைக்கு எதிரான கருத்​துகள், அவருடைய தனிப்பட்ட கருத்து​களாகவே பார்க்​கப்​பட்டன. அம்பேத்​கருடனான உரையாடலுக்குப் பின் அது, ‘ஹரிஜன இயக்கம்’ என்று தேசிய இயக்கத்தின் வேலைத் திட்டமாக மாறியது.
  • தீண்டா​மைக்கு எதிராக காந்தி​யடிகள் தொடர் சுற்றுப்​பயணம் மேற்கொள்ளத் தொடங்கி, அது சூறாவளியாக வீசத் தொடங்கியவுடன், அவருக்கு எதிராக இந்து மகா சபையினர் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட எதிர் இயக்கத்தைத் தொடங்கினார்கள்.
  • முதல் முறையாக இந்தியாவில் காந்திக்கு எதிரான இயக்கம் தீவிரமடைந்தது அப்போது​தான். அதன் உச்சமாக 1934 ஜூன் 25ல் புனேவில் அவர் சென்று​கொண்​டிருந்த கார் மீது குண்டு வீசி, அவரைக் கொலை செய்யும் முதல் முயற்சி நடைபெற்றது. அம்பேத்கரை காந்தி சந்தித்து உரையா​டாமல் இருந்​திருந்தால் இந்தக் கொலை முயற்சியே நடந்திருக்​காது.
  • ஆனாலும் தீண்டா​மைக்கு எதிரான காந்தியின் இயக்கம் சுணக்​கமில்​லாமல் தீவிரமடைந்தது. கோயில் நுழைவுப் போராட்டம், தலித் அல்லாதோர் தலித்து​களைச் சாதிமறுப்புத் திருமணம் செய்து​கொண்டால் மட்டுமே அவர்களை ஆசிர்​வ​திப்பது என்று அவர் பணி இன்னும் வேகமெடுத்தது. “இந்து மதத்தின் புனிதத்தை நீங்கள் கெடுக்​கலாமா?” என்று காந்தியை நோக்கி வீசப்பட்ட கேள்வி​களுக்கு, “என்னுடைய செயலால் இந்து மதம் அழிந்தால் அழியட்டும்.
  • நான் கவலைப்​பட​வில்லை. நான் இந்து மதத்தைக் காப்பாற்ற வரவில்லை. இந்து மதத்தின் முகத்தை மாற்றவே விரும்​பு​கிறேன்” என்று கடுமையாகப் பதிலளித்​தார். இதையடுத்து, “காந்​தி​யையும் அவரைப் பின்பற்றுகிறவர்​களையும் இந்து இல்லை என்று மக்கள்​தொகைக் கணக்கெடுப்பில் குறிக்க வேண்டும்” என்று ஆங்கில அரசுக்குக் கடிதம் எழுதி​னார்கள் அப்போதைய மடாதிபதிகள்.
  • இப்படி இந்து மதப் பற்றாளர்களின் கருத்​து​களுக்கு எதிராக காந்தி செயல்​பட்​டார். அந்த அளவுக்கு காந்தி​யடிகளுக்கும் இந்து மதப்பற்றாளர்களுக்கும் இடையே தீராப் பகையைத் தொடங்கி​வைத்தவை அம்பேத்​கருடனான காந்தி​யடிகளின் உரையாடல்களே. ஆனாலும், காந்தி​யடிகளின் தீண்டாமை ஒழிப்புப் பணிகளை அம்பேத்கர் முழுவதும் அங்கீகரிக்க​வில்லை. பல நேரம் கடிந்தே சொல்லி​யுள்​ளார். “காந்தி ஓர் ஆச்சாரமான இந்து​தான். இவரால் தீண்டாமை ஒழிக்​கப்​ப​டாது.
  • அமெரிக்​காவில் கறுப்​பினத்​தவர்​களுக்​காகப் போராடிய கேரிசன் போலல்ல காந்தி” என்றே விமர்​சித்தார். ஆனால் மறுமுனையில் காந்தி​யடிகளோ, “டாக்டர் அம்பேத்​கரின் விமர்​சனத்தை என்னால் புரிந்​து​கொள்ள முடிகிறது. என் மீது துப்பு​வதற்​குக்கூட அவருக்கு உரிமை உண்டு. அனைத்து உயர் சாதி இந்துக்​களும் தீண்டத்​த​காதவர்களை நடத்தும் முறை பாவம். நம் மீது காறி உமிழ்​வதற்கு அவர்களுக்கு முழு உரிமை உண்டு. அதைச் செய்தால் நான் ஏற்றுக்​கொள்​வேன்” என்று பதிலளிக்​கிறார். ஆனால், இவ்வளவு கனிவான பதிலைத் தன்னை எதிர்க்கும் இந்து மதப் பற்றாளர்களுக்கு எதிராக காந்தி​யடிகள் சொன்ன​தில்லை.

காந்தி - அம்பேத்கர் உறவு:

  • இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு அம்பேத்கரை ஜின்னா தன் நாட்டுக்கு அழைத்​தார். காரணம், 1946இல் அன்றைய வங்காள மாகாணத்​திலிருந்தே அம்பேத்கர் தேர்வுசெய்​யப்​பட்​டிருந்​தார். அது பாகிஸ்தான் வசமானது. ஆனால், காந்தி​யடிகள் இதில் தலையிட்டு, அம்பேத்கரை மும்பை மாகாணத்​திலிருந்து மீண்டும் தேர்வுசெய்ய வலியுறுத்​தி​னார்.
  • அதோடு, அவரை இந்தியாவின் முதல் அமைச்​சர​வையில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதையும் தனது விருப்பமாக முன்வைத்​தார். இந்து மதப் பற்றாளர்களிடம் இருந்த பகை முரண்போல் ஒரு நாளும் காந்திக்கும் அம்பேத்​கருக்கும் இடையே இருந்த முரண்கள் பகை கொண்டதாக இருந்​த​தில்லை.
  • காந்தி​யடிகளைப் பொறுத்​தவரையில் இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் அன்றைக்கு இருந்த நேரு, நேதாஜி, அம்பேத்கர், பி.சி.ஜோஷி என எல்லாருமே அவரின் பிள்ளை வயது உடையவர்களே. அதனால் ஒரு தந்தையின் முறுக்கோடே அவர் எல்லாரிடமும் நடந்து​கொண்​டார். தான் எடுத்த முடிவில் ஒருநாளும் அவர் பின்வாங்​கியது கிடையாது.
  • சில பிள்ளைகள் அவர் பேச்சைக் கேட்கும். சில பிள்ளைகள் அவரோடு முரண்​பட்டு நிற்கும். ஆனாலும் அவர் தனது முடிவை முரண்​படும் பிள்ளைக்காக மாற்றிக்​கொண்​டதே​யில்லை. அதற்காக வருத்​தப்​பட்​டது​மில்லை. ஆனால், ஒரே ஒரு பிள்ளை அவரின் மனசாட்​சியைத் தூங்க​வி​டாமல் செய்தது. அந்தப் பிள்ளைக்​காகவே அவர் பல நேரம் மனம் மாறினார். அந்தப் பிள்ளை அண்ணல் அம்பேத்கர்!
  • ஜனவரி 30: மகாத்மா காந்தி நினைவுதினம்

நன்றி: இந்து தமிழ் திசை (30 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories