- காந்தி 1931-ல் இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து சென்றிருந்தார். அப்போது அவரது உதவியாளர்கள் அவரிடம் ஒரு வார இறுதியில் ஆக்ஸ்ஃபோர்டுக்குச் சென்று ஓய்வெடுத்து, ‘பேச்சுவார்த்தையில் இடம்பெற்றுள்ள கொள்கைரீதியிலான பெரும் கேள்விகள்’ குறித்துச் சிந்திக்கலாம் என்று கூறினார்கள்.
- அது சில பிரிட்டிஷ் தலைவர்களை அலுவல்ரீதியில் அல்லாமல் சந்தித்து ஓய்வாகப் பேசுவதற்கான வாய்ப்பாகவும் அமையும் என்றார்கள். தத்துவவாதியும் பேலியோல் கல்லூரியின் முதல்வருமான ஏ.டி.லிண்ட்ஸே காந்திக்கு அழைப்பு விடுத்து அதை காந்தி ஏற்கவும் செய்கிறார்.
அக்டோபர் 26 அன்று, அங்கு தன் செயலர் மகாதேவ்
- தேசாய், மகன் தேவதாஸ், அவருடைய ஆங்கிலேயே சிஷ்யை மீரா பென், நண்பர் சி.எஃப்.ஆண்ட்ரூஸ் ஆகியோருடன் சென்றுசேர்ந்தார். காந்தியின் பாதுகாப்புக்காக ஒரு துப்பறியும் காவலர் கூடவே வந்தார். உருச் சிறுத்த காந்திக்கு முன்னால் அவர் பிரம்மாண்டமாகத் தெரிந்தார். அவர் தனது மற்ற கடமைகளை ஆற்றினாரோ என்னவோ எனக்குத் தெரியாது, ஆனால் கல்லூரியில் ஆட்டுப் பால் கொடுப்பார்களா என்று காந்தி கேட்டதால், பக்கத்தில் உள்ள குன்றிலிருந்து ஒரு ஆட்டை அந்தத் துப்பறிவாளர் கொண்டுவந்தார். மரம் ஒன்றில் கட்டப்பட்ட அந்த ஆடு மிகவும் உதவியாக இருந்தது.
இந்தியர்களிடம் ஆற்றிய உரை
- இதற்கிடையே ஆக்ஸ்ஃபோர்டில் படித்துக்கொண்டிருந்த 50 இந்திய இளங்கலைப் பட்டதாரிகளிடம் உரையாற்றுவதற்கு காந்தி நேரம் ஒதுக்கினார். “மாணவர்களிடையே நான் எப்போதும் இயல்பாக உணர்வேன், ஏனெனில், நானும் ஒரு மாணவனே” என்று காந்தி தன் உரையை ஆரம்பித்தார். “நீங்கள் என்னைக் குறுக்குக் கேள்விகள் கேட்டீர்கள் என்றால், நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் நம்மைப் பற்றி நன்கு அறிந்துகொள்ளலாம். தயவுசெய்து என்னுடன் சகஜமாக இருப்பீர்களா? நான் ஒன்றும் மண்ணியல் பரிசோதனைக்கான பொருள் அல்ல” என்றார்.
- அவரிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி, இந்தியப் பெண்களின் எதிர்காலம் குறித்தது. “எதிர்கால இந்தியாவில் பெண்களின் நிலை இதுதான்... அவர்கள் ஆண்களைவிட மேலானவர்களாக நடத்தப்படவில்லை என்றாலும், ஒவ்வொரு விதத்திலும் ஆண்களுக்குச் சமமாகவே நடத்தப்படுவார்கள்” என்றார். சோஷலிஸத்தின் படைப்பூக்க சக்தி
யைப் பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்குக் கண்ணிசைக்காமல் இப்படிப் பதிலளித்தார் காந்தி: “வன்முறையைச் சார்ந்து இல்லையென்றால் அது படைப்பூக்க சக்தியாக இருக்கும்.”
- “இங்கிலாந்தின் நன்னம்பிக்கை குறித்து நம்புகிறீர்களா?” என்று ஒரு ஆங்கிலேயர் காந்தியிடம் கேட்டார். “மனித குலத்தின் நன்னம்பிக்கை குறித்து நம்பும் அளவுக்கு, இங்கிலாந்தின் நன்னம்பிக்கை குறித்தும் நம்புகிறேன். மனித சக்தியின் ஒட்டுமொத்தமும் நன்மையை நோக்கியே செலுத்தப்பட வேண்டும் என்ற முடிவுக்கு நான் நிச்சயம் வந்திருக்கிறேன். இல்லையென்றால், இந்த உலகம் என்றோ அழிக்கப்பட்டிருக்கும். இதன் விளைவாக, நான் இங்கிலாந்தை நம்புகிறேன். இங்கிலாந்தால் ஒன்றல்ல... பல முறை நான் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதன் இயல்பு ஒருநாள் மாறி, அது நல்விளைவாக எதிரொலிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
எந்த அளவுக்கு கிறித்தவர்
- காந்தி அந்தச் சிறிய ஊரின் அழகில் மயங்கிப்போனார் என்று ‘ஆக்ஸ்ஃபோர்டு மெயில்’ இதழ் எழுதியது. கவிஞர் எட்வர்டு ஜான் தாம்ப்ஸன் வீட்டுக்குப் போகும் வழியில், அவர் காரை விட்டுப் பல முறை இறங்கி, அந்த ஊரின் கோபுரங்களையும் கூம்பு வடிவக் கட்டிடங்களையும் பாலங்களையும் கல்லூரியின் சதுர வடிவ முற்றங்களையும் கண்டு வியந்திருக்கிறார்.
- பிற்பாடு, லிண்ட்ஸேவின் வீட்டில் மதன் மோகன் மாளவியா, சரோஜினி நாயுடு மற்றும் பல பிரிட்டிஷ் நாடாளுமன்றவாதிகளையும் காந்தி சந்தித்தார். அந்தப் பார்வையாளர்களில் லிண்ட்ஸேவின் மகனும் ஒருவர், வேல்ஸில் ஆசிரியராக இருந்தவர். அவர் தயக்கத்துடன் இந்தக் கேள்வியைத் துணிந்து கேட்டார்: “மக்கள் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள், நீங்கள் எந்த அளவுக்கு கிறிஸ்தவர்?”
- இந்து மதத்திலிருந்து காந்தி எவ்வளவு தூரம் கிறிஸ்தவத்துக்குப் பயணித்திருக்கிறார் என்பதைக் கேட்கும் கேள்வி இது. சமயோசிதமான காந்தி, புத்திசாலித்தனமும் அறிவாற்றலும் கொண்டவரும் உண்மையாக இருப்பவருமான காந்தி, அந்தக் கேள்வியை லாகவமாகத் தவிர்த்துவிட்டார். வேறொரு விஷயத்தையே அந்தக் கேள்வி அர்த்தப்படுத்துவதாக அவர் எடுத்துக்கொண்டார்.
- எந்த அளவுக்கு இயேசுவின் போதனைகளை காந்தி பின்பற்றினார்? இயேசு என்ற முன்னுதாரணத்தைப் பின்பற்றியதன் மூலம் எந்த அளவுக்கு ஆழமாக அவர் சென்றிருக்கிறார்? எவ்வளவு உயரம் சென்றிருக்கிறார்? அந்தச் சமயத்தில்தான் லிண்ட்ஸே அறையில் நுழைகிறார். “அட, இதோ உங்கள் தந்தை வருகிறார், அவரால் சொல்ல முடியுமா, எந்த அளவுக்கு அவர் ஒரு கிறிஸ்தவர் என்று. அவராலோ என்னாலோ சொல்ல முடியாது” என்றார் காந்தி.
- காந்தியைப் பொறுத்தவரை நாம் ஒவ்வொருவரும் எந்த அளவுக்கு ஆன்மிக வளர்ச்சியை அல்லது சுயத்தின் நிறைவை அடைந்திருக்கிறோம் என்று பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். அப்படிச் சொல்வதன் மூலம், காந்தி தனது அறவியல் மற்றும் மதம் சார்ந்த சிந்தனையின் இரண்டு மையப் புள்ளிகளைத் தெரிவிக்கிறார்.
- முதலாவதாக, மதமாற்றத்தின் பயனின்மை. மதமாற்றம் என்ற செயலானது ஒரு மனிதர், முழுமுற்றாக ஒரு மதத்தையோ அல்லது இன்னொரு மதத்தையோ சார்ந்தவரே. இரண்டையும் ஒரே நேரத்தில் சார்ந்தவரல்ல என்று கருதுவதோடு அல்லாமல், மற்ற மதங்களைவிட உயர்வான மதம் ஒன்றில் அவர் இருக்க வேண்டும் என்றும் கருதுகிறது.
- ஒரு மதம், இன்னொரு மதத்தைவிட உயர்வானது என்ற கருத்தையும், குறுகலான பார்வை கொண்டதும் ஒரே ஒரு மதம் சார்ந்து மட்டும் இருக்க வேண்டும் என்பதுமான கருத்தையும் காந்தி நிராகரிக்கிறார். இரண்டாவதாக, பல மதங்கள் மீது பிடிப்புடன் இருப்பதன் முக்கியத்துவம்.
- காந்தி நம்பியதுபோல் ஒட்டுமொத்த விவாதப் புள்ளியும் ஆழமாகச் செல்வதையும் உயரமாகச் செல்வதையும் சார்ந்ததென்றால், ஏன் ஒரு இந்துவால் இயேசுவின் போதனைகளைப் பின்பற்ற முடியாது? ஏன் இயேசுவின் போதனைகள் ராமர், கிருஷ்ணர், புத்தர், குருநானக் அல்லது கபீர் போன்றவர்களின் போதனைகளுடன் தொடர்பற்றவையாக இருக்க வேண்டும்? ஒரே ஒரு இடத்திலிருந்து தாக்கம் பெறும் வகையில் ஒருவர் ஏன் தன்னைக் குறுக்கிக்கொள்ள வேண்டும்?
தங்கள் மரபிலிருந்தே மீட்சி
- ஆணும் பெண்ணும் ஞானமடைவதற்கான மூலாதாரங்களைத் தேடிக்கொள்ள முடியும் என்றும், தங்கள் மரபிலிருந்தே தங்களுக்கான மீட்சியைக் கண்டடைய முடியும் என்றும், மேல் அடையாளத்தை மட்டும் மாற்றிக்கொள்ளும் அவசியம் இல்லை என்றும் அவருடைய கிறிஸ்தவ நண்பர்களுக்கு அவர் அறிவுறுத்துவதாகத் தோன்றியது. எந்த மதமும் முற்றிலும் தன்னைக் கட்டுப்படுத்தி வைத்திருக்க முடியாது என்று பொதுவானவர்களுக்கு, குறிப்பாகச் சொல்வதென்றால் சக இந்துக்களுக்கு அவர் சொல்வதாகத் தோன்றியது.
- உண்மையிலேயே சில விஷயங்களில், அவரது சொந்தக் கருத்துகளையெல்லாம் பார்த்தால், அவர் முழுக்க இந்து என்று சொல்ல முடியாத வகையில் கிறிஸ்தவத்தோடு பின்னிப்பிணைந்திருக்கும். அதேபோல் அவருடைய பல கருத்துகள் முழுக்க கிறிஸ்தவம் என்று சொல்லிவிட முடியாதவகையில் இந்து, சமணக் கருத்துக்களோடு பின்னிப்பிணைந்திருக்கும்.
- காந்தி ஒரு இந்துவாகவே இறந்தாலும், அப்படியே சற்றும் மாறாமல் வாழ்ந்திருந்தாலும் அவர்தான் தன் காலத்தில் எந்த மனிதரைவிடவும் இயேசுவின் ஆன்மாவை அதிக அளவில் உள்வாங்கிக்கொண்ட நபராக விளங்கினார். இயேசுவின் போதனைகளுக்கு காந்தி எதிர்வினையாற்றினார் என்றும் நாம் சொல்லலாம்; ஏனெனில், தான் பல்வேறு மரபுகளிலிருந்து பெற்றுக்கொண்டவற்றோடு ஒப்புக்கொள்ளத்தக்க கருத்துகளை அவர் அவற்றில் கண்டார்.
கூட்டுச் செயல்பாடு
- அரசியல்வாதியாக ஆக முயலும் ஒரு புனிதர் என்று காந்தியைக் கருதக் கூடாது என்றும், ஆனால் புனிதராக ஆக முயலும் அரசியல்வாதியாகக் கருத வேண்டும் என்றும் லிண்ட்ஸேவின் நண்பர் அவரிடம் கூறினார். ஆனால், காந்தியைத் தங்கள் விருந்தினராகப் பெற்றிருந்ததில் ஒரு புனிதரைத் தங்கள் வீட்டில் வைத்திருந்த உணர்வையே லிண்ட்ஸேவும் அவரது மனைவியும் பெற்றிருந்தார்கள்.
- காந்தியின் இயல்புகளில் லிண்ட்ஸேவை மிகவும் ஈர்த்தது என்னவென்றால் எளிய, படிப்பறிவற்ற மக்களால் புரிந்துகொள்ள முடியாதது எதுவும் கடவுளின் சித்தமாக இருக்க முடியாது என்று அவர் நம்பியதுதான். காந்தியைப் பொறுத்தவரை சமூக மாற்றமானது, ஒவ்வொரு தனிநபரின் தார்மீக இயல்பில் ஏற்படும் மாற்றத்தால் மட்டுமே கொண்டுவர முடியும். காந்தி சந்தேகமில்லாமல் சுயத்தில் ஏற்படும் மாற்றத்துக்கு அழுத்தம் கொடுத்தார் எனினும், கூட்டுச் செயல்பாட்டுக்கு அவர் முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கருதுவது அபத்தம்.
- சமூக, அரசியல் சிந்தனைக்கு காந்தியின் மகத்தான பங்களிப்புகளுள் ஒன்று என்னவெனில் அதிகாரம், செல்வம், பிராபல்யம் ஆகியவற்றின் தளையில் சிக்கிக்கொள்ளாதவர்களும் நன்னம்பிக்கை கொண்டவர்களுமான சாதாரண மக்கள் ஒன்றுசேரும்போது, அளப்பரிய படைப்பூக்க சக்தி வெளிப்படுகிறது என்பதை நிரூபித்ததுதான்.
- அந்த ஒற்றுமையானது நியாயமற்ற, சுரண்டலான சமூக வழமைகள், அரசியல் கொடுங்கோன்மை ஆகியவற்றுக்கு மிகவும் வலுவான எதிர்ப்பைக் காட்ட முடியும். உலகை மாற்றுவதற்கான சக்தியானது சாதாரண ஆண்கள், பெண்களின் கூட்டான அகிம்சை சக்திகளிலிருந்து பாய்கிறது.
- இந்தப் பாடத்தை உயரமான இடத்தில் இருப்பவர்களும், சக்தி மிக்கவர்களும், சமூகரீதியான வைதீகத்தில் மூழ்கிக்கிடப்பவர்களும், சர்வாதிகார எண்ணங்களால் இயங்குபவர்களும் தங்களுக்குத் தாங்களே நெருப்பு வைத்துக்கொள்ளும்வகையில் புறக்கணிக்கிறார்கள்.
நன்றி: இந்து தமிழ் திசை (03-12-2019)