TNPSC Thervupettagam

காந்தியைப் பேசுதல்: கல்வியும் போராட்டத்தின் ஒரு பகுதி

July 24 , 2019 1988 days 1258 0
  • காந்தியின் வாழ்க்கையில் அவர் முன்னெடுத்த முக்கியமான போராட்டங்களைப் பற்றிப் பேசிச் செல்கையில், தன்னுடைய அரசியல் வாழ்க்கை நெடுகிலும் கல்விச் சிந்தனைகளையும் அவர் தூக்கிச் சுமந்ததை இங்கே எழுத வேண்டும். எப்படி சமூக – பொருளாதாரக் கட்டமைப்பு சார்ந்து தீவிரமான கருத்துகள் காந்திக்கு இருந்தனவோ அதேபோல கல்வித் துறை சார்ந்தும் தீவிரமான கருத்துகள் அவருக்கு இருந்தன. கல்வியைப் பிழைப்புக்கான கருவியாகச் சுருக்கும் கல்வி முறைக்கு எதிராக அவர் வாழ்நாள் நெடுகிலும் பேசிவந்தார். ஓராண்டு காலம் நீடித்த அவருடைய சம்பாரண் போராட்டம் போன்ற போராட்டக் களங்களில் ஏனைய ஏற்பாடுகளை மேற்கொள்வதைப் போலவே சம்பந்தப்பட்ட பிராந்தியங்களில் புதிய பள்ளிக்கூடங்கள் தொடங்குவதையும் மாற்றுக் கல்வி முறையை அறிமுகப்படுத்துவதையும் ஒரு பகுதியாகக் கொண்டிருந்தார்.
  • காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்த காலகட்டத்திலேயே இந்தியாவில் நடைமுறையில் இருந்த மெக்காலேயின் கல்வித் திட்டமானது கல்வியின் அடிப்படைக்கே எதிரானது என்பதைக் கண்டுகொண்டார். “கல்வியைப் பொறுத்தவரை மெக்காலே இட்ட அடித்தளமானது நம்மை அடிமைப்படுத்திவிட்டது” என்று 1909-ல் ‘இந்திய சுயராஜ்ஜியம்’ நூலில் எழுதினார் காந்தி. ஆங்கிலேயர் தமக்கு வேண்டிய குமாஸ்தாக்களையும் இதர பணியாளர்களையும் உருவாக்குவதற்கான இந்தக் கல்வித் திட்டத்தை உதறித் தள்ளினால்தான் இந்தியாவால் உண்மையான சுதந்திரத்தை அடைய முடியும் என்று கருதினார் காந்தி. “குழந்தை, மனிதன், இவர்களின் உடல், அறிவு, ஆன்மா ஆகியவற்றிலிருந்து சிறந்தனவாயுள்ள சகலத்தையும் வெளிப்படுத்துவதுதான் கல்வி என்று நான் கருதுகிறேன். படித்திருப்பது கல்வியின் முடிவு அல்ல; ஆரம்பமும் ஆகாது. ஆணும் பெண்ணும் கற்றவர்களாக இருப்பதற்குள்ள உபாயங்களில் ஒன்று மாத்திரமே அது. படித்திருப்பது, அதனளவில் கல்வியாகிவிடாது” என்கிறார் காந்தி.
  • மதிப்பெண்களை இலக்காகக் கொண்டதாகக் கல்வியை உருமாற்றி, அளவுக்கு மீறிய முக்கியத்துவத்தை மதிப்பெண்களுக்குக் கொடுத்து, மாணவர்களுக்கு எந்த அளவுக்கு மன அழுத்தத்தையும் நெருக்கடியையும் கொடுத்திருக்கிறோம் என்பதுடன் காந்தியப் பார்வையை நாம் பொருத்திப் பார்க்க வேண்டும். மருத்துவக் கல்லூரியிலோ பொறியியல் கல்லூரியிலோ ஒரு இடத்தை வாங்குவதற்குள் பெற்றோருக்கும் மாணவருக்கும் உயிர்போய் உயிர் வருகிறது. இதுதான் உண்மையான கல்வியா? மனத்தை மலரச் செய்யும், ஒருவரின் சிறந்த தன்மைகளை வெளிக்கொண்டுவரும் கல்வி இந்த அளவுக்கு நம்மை நெருக்கடிகளுக்குள் ஆட்படுத்துமா என்பதைக் கிட்டத்தட்ட நூற்றாண்டுக்கு முன்பு காந்தி பேசியதுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
வாழ்க்கைக்குப் பயன்படாத கல்வி
  • மெக்காலே கல்வி முறையின் குறைபாடுகளைப் பற்றி 1937-ல் ‘ஹரிஜன்’ இதழில் காந்தி எழுதினார். அவற்றுள் சில கருத்துகள் முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகும் இந்தியாவில் பொருந்தக்கூடியனவாக இருப்பது நம்முடைய சுயராஜ்ஜியம் எந்த அளவுக்கு மக்களுடைய சுயராஜ்ஜியமாக இருக்கிறது என்ற கேள்வியையே எழுப்புகிறது. காந்தி குறிப்பிடும் குறைபாடுகள்: நமது மரபுக்கும் பண்பாட்டுக்கும் முரண்பட்டதாக மெக்காலே கல்வி முறை உள்ளது. 2.இந்தக் கல்வியானது, குழந்தையை அதன் சமூகச் சூழலிலிருந்தும் உடல் உழைப்பிலிருந்தும் பிரித்துவிடுகிறது. 3.அரசுக்கும் தனியாருக்கும் மாணவர்களைப் பணியாளர்களாக மாற்றுவதற்கான பயிற்சிதான் இன்றைய கல்வி. 4.இந்தக் கல்வி முறையால் மாணவர்களின் மனத்தில் சமுதாய உணர்வு இன்றி சுயநல உணர்வு புகுந்துவிட்டது. 5.இந்தக் கல்வி முறையின் பெரும் பகுதி வாழ்க்கைக்குப் பயன்படுவதில்லை. 6.பொதுமக்களின் கல்வி முன்னேற்றத்தைப் பற்றி இன்றைய கல்வி முறை எண்ணிப் பார்ப்பதே கிடையாது. 7. அனைத்துக் குழந்தைகளுக்கும், அவரவர் தேவை உணராமல், இயந்திர முறையில் ஒரே மாதிரியான கல்வியை வழங்குகிறார்கள். 8.கல்வி முறையும் தேர்வுகளும் கல்வியை மாணவர்களின் உள்ளத்தில் பயத்தை உருவாக்கிப் பெரிய சுமையாகவே மாற்றிவிடுகிறது.
கைத்தொழிலுக்கு முக்கியத்துவம்
  • தென்னாப்பிரிக்காவில் காந்தி அமைத்த டால்ஸ்டாய் பண்ணையிலேயே கல்வி குறித்த பரிசோதனை முயற்சிகள் தொடங்கிவிட்டன. குழந்தைகள் கைத்தொழில் கற்றுக்கொள்வதற்குப் பிரதான இடம் கொடுக்கப்பட்டது. அவரவர் தாய்மொழியில் கல்வி கற்றுக்கொடுக்கப்பட்டது. காந்தியின் பிள்ளைகளும் எந்தப் பள்ளிக்கும் போய்க் கல்வி கற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹரிலாலைத் தவிர அவரது மற்ற மூன்று பிள்ளைகளுக்கும் வீட்டிலும் காந்தியின் ஆசிரமங்களிலுமே கல்வி கற்பிக்கப்பட்டன. தென்னாப்பிரிக்கா, இந்தியா என்று இரண்டு மாபெரும் போராட்டங்களுக்கு நடுவிலும் அவருக்குக் கல்வி பற்றிய சிந்தனைகளுக்கு இடம் இருந்திருக்கிறது. ஏனெனில், நாட்டு விடுதலையில் கல்விக்கு உள்ள பங்கை அவர் உணர்ந்திருந்தார். காந்தியின் ஆதாரக் கல்விக் கொள்கையானது, மெக்காலே கல்வி முறையுடனான மோதல், இந்தியாவின் மரபான கல்வி முறை குறித்த அவரது சுயதேடல் ஆகியவற்றின் விளைவாகப் பிறந்தது.
காந்தியக் கல்வி
  • காந்தியின் கல்விக் கொள்கைகளைச் சுருக்கமாக இப்படிப் பட்டியலிட்டுக்கொள்ளலாம்: கல்வி என்பது ஒரு குழந்தைக்கு ஒட்டுமொத்தமாக ஆளுமை வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். வெறுமனே போதிப்பதாக மட்டுமல்லாமல் இதயம், மூளை, உடலுறுப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதாக இருக்க வேண்டும். 2. கைத்தொழில் மூலம் கல்வி கற்பிக்கப்பட வேண்டும். படிக்கும்போதே உடலுழைப்பில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் உடலுழைப்பாளர்களை இழிவாகப் பார்க்கும் மனநிலை அகலும். வெறும் புத்தகங்களும் பாடங்களும் மட்டும் போதாது. புத்தகங்கள் மாணவர்களைவிட ஆசிரியர்களுக்கே அவசியமானவை.
  • நல்ல கல்வியின் அடிப்படை என்பது உயர்ந்த பண்புகள் கொண்ட பொறுப்பான குடிமக்களை உருவாக்குவதே. அகிம்சை, சத்தியம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நல்ல கல்வியானது உணர்த்தும்.
  • கல்வி நிறுவனங்கள் தற்சார்பைக் கொண்டிருக்க வேண்டும். தாம் உற்பத்தி செய்யும் பொருட்களைக் கொண்டே செயல்படும் வல்லமை கல்வி நிறுவனங்களுக்கு வேண்டும். கல்வி நிறுவனங்கள் உருவாக்கும் பொருட்களைக் கொள்முதல் செய்துகொள்ளும் பொறுப்பு அரசாங்கத்துடையது.
  • தாய்மொழி வழிக் கல்வி என்பது மிக முக்கியமானது. தாய்மொழி வழியாகக் கற்பிக்கப்படும்போதுதான் கல்வியின் உண்மையான நோக்கம் நிறைவேறும்.
  • அனைத்துக் குழந்தைகளுக்கும் முதல் 7 வருடங்களுக்கு ஆரம்பக் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். அது அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.
  • கல்வி முறையை இந்தியக் கிராமப்புற மக்களை மனதில் வைத்துக்கொண்டு உருவாக்க வேண்டும். மேட்டிமைவாதிகளையும் நகரவாசிகளையும் மட்டும் கணக்கில் கொண்டு கல்வியானது தீர்மானிக்கப்படக் கூடாது.
  • காந்தியின் கல்விக் கொள்கைகளை  சுதந்திர இந்தியா உதாசீனப்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். மாறாக, மெக்காலே கல்வி முறையின் நவீன வடிவத்தை அது சுவீகரித்துக்கொண்டது. இதன் விளைவாக, கல்வியானது மேலும் மேலும் வணிகமயமாகவும் ஆன்மாவற்றதாகவும் ஆனது. புதிதாகக் கொண்டுவர முனையப்படும் கல்விக் கொள்கையானது அதை மேலும் விஸ்தரிப்பதாகவே அதன் வரைவைப் பார்க்கும்போது தோன்றுகிறது.
  • காந்தி கேட்கிறார், “படிப்பறிவோ கற்றலோ அல்ல, உண்மையான வாழ்க்கைக்கான கல்விதான் ஒரு மனிதரை உருவாக்குகிறது. ஒருவருக்கு எல்லாம் தெரிந்து, ஆனால் தனது அண்டை அயலாருடன் சகோதரத்துவத்துடன் வாழத் தெரியவில்லை என்றால் என்ன செய்வது?” நாம் உண்மையாகவே இந்தியாவுக்கு ஒரு அசலான கல்விக் கொள்கையை உருவாக்க விழைகிறோம் என்றால், அது பதில் தேடும் ஆதாரக் கேள்வியாக இதுதான் இருக்க முடியும்!

நன்றி: இந்து தமிழ் திசை (24-07-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories