TNPSC Thervupettagam

காந்தியைப் பேசுதல்: ஹிட்லருக்கு ஒரு கடிதம்!

August 21 , 2019 1982 days 1014 0
  • “ஹிட்லர், முஸோலினி பற்றி உங்களுக்குத் தெரியாது. தார்மீகரீதியிலான எந்த எதிர்வினையையும் அவர்களிடமிருந்து பெற முடியாது. அவர்களுக்கு மனசாட்சியோ ஈவிரக்கமோ கிடையாது, உலகத்தினரின் கருத்தைப் பற்றி எந்த அக்கறையும் அவர்களுக்குக் கிடையாது. அவர்களை எப்படி அகிம்சையால் எதிர்கொள்ள முடியும்” என்று அந்த கிறித்தவ இறைப் பணியாளர்கள் காந்தியிடம் கேட்டார்கள்.
  • 1938. இரண்டாம் உலகப் போர் இப்போதோ அப்போதோ வந்துவிடும் என்று உலகமே நடுங்கிக்கொண்டிருந்த நேரம். போர் தொடங்குவதற்கும் முன்பே ஜெர்மனியில் ஹிட்லரின் நாஜிக்களும் இத்தாலியில் முஸோலினியின் பாஸிஸ்ட்டுகளும் யூதர்களை வேட்டையாடிக் கொண்டிருந்தார்கள். இந்தச் சூழலையெல்லாம் வெகு தூரத்திலிருந்து காந்தி மிகுந்த துயரத்துடன் கவனித்துக்கொண்டிருந்தார்.
போரில் நம்பிக்கையில்லை
  • “என் அனுதாபங்களெல்லாம் யூதர்களுக்கு. ஜெர்மானியர்களால் யூதர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு வரலாற்றில் முன்னுதாரணமே இல்லை. முற்காலத்துக் கொடுங்கோலர்களெல்லாம் ஹிட்லர் அளவுக்கு வெறிபிடித்திருக்கவில்லை. மனித இனத்துக்காக ஒரு போர் நடத்துவதற்கான நியாயம் உண்டென்றால், ஒரு இனத்தின் அழிப்பைத் தடுக்கும் விதத்தில் ஜெர்மனிக்கு எதிராக நடத்துவதற்கு நியாயம் இருக்கிறது. எனினும், நான் எந்தப் போரிலும் நம்பிக்கை கொண்டவனல்ல” என்று எழுதினார்.
  • மேலும், ஜெர்மானியர்களுக்கு அவர் ஒரு ஆலோசனையை வழங்கினார். ஜெர்மானிய அழித்தொழிப்புக்கு எதிராக அகிம்சையையும் ஒத்துழையாமையையும் முன்வைக்கும்படி கூறினார். தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் இது வெற்றியைக் கொடுத்தது என்றும், அதைவிட உலக அளவிலான ஆதரவு யூதர்களுக்கு இருப்பதால் முயன்றுபார்க்கலாம் என்றும் கூறினார். ஒருவர் விடாமுயற்சியோடு முயன்றுபார்த்தால், ஒட்டுமொத்த இனத்துக்குமே அது தொற்றிக்கொண்டுவிட நிச்சயம் பலன்கொடுக்கும் என்றார். இதைவிட ஒருபடி இன்னும் மேலே போய், தங்களை அழிக்க வருபவர்களிடம் தங்களை ஒப்புக்கொடுக்கும்படி கூறினார். நாஜிக்களின் மனசாட்சியை உலுக்கவும் உலகத்தினர் ஆதரவைப் பெறவும் யூதர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.
  • காந்தி இப்படியெல்லாம் கூறியதுதான் உலகெங்கும் பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்புகளைக் கிளப்பியது. ஜெர்மானியர்கள் தங்களை காந்தி அவமானப்படுத்திவிட்டதாகக் கூறினார்கள். தங்கள் நாட்டைப் பற்றி காந்தி புரிந்துகொள்ளவில்லை என்றார்கள். யூதர்களிடமிருந்து வேறுவிதமான எதிர்ப்பு வந்தது. ஹய்யீம் கிரீன்பெர்க் என்ற யூதரின் எதிர்ப்பு வித்தியாசமானது.
சர்வாதிகாரிகளிடம் அகிம்சை
  • “மகாத்மா மீது எனக்குப் பெருமதிப்பு இருக்கிறது. தன் நாட்டுக்காரர்களிடமிருந்து அவர் நாயகத்தன்மையை எதிர்பார்க்கிறார். ஆனால், யூதர்களிடமிருந்து அதிநாயகத்தன்மையை எதிர்பார்க்கிறார். யூதர்களிடையே ஒரு காந்தி தோன்றினால், 5 நிமிடங்கள் செயல்பட முடியும். ஆனால், அதற்குள் கில்லட்டினுக்கு அழைத்துச்செல்லப்பட்டுப் படுகொலை செய்யப்படுவார்” என்றார் கிரீன்பெர்க். அவரின் விமர்சனத்துக்கும் காந்தி பதில் வைத்திருந்தார். “சர்வாதிகாரிகளிடம் அகிம்சையைப் பரீட்சித்துப்பார்ப்பது ரொம்பவும் கஷ்டமாகத்தான் இருக்கும் என்றாலும் முயன்று பார்க்கலாம். இதுபோன்ற தீவிரமான நிலைகளில்தான் அகிம்சையின் உண்மையான பண்பைப் பரீட்சித்துப்பார்க்க முடியும். துயருறுபவர்கள் அதற்கான பலனைத் தங்கள் வாழ்நாளில் பார்க்க முடியும் என்று சொல்ல முடியாது. தங்கள் கொள்கையில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு பொறுமையுடன் போராடினால் பலன் நிச்சயம். அகிம்சையைவிட மேலான உத்தரவாதத்தை வன்முறை தந்துவிட முடியாது” என்றார்.
  • காந்தி பரிந்துரைக்கும் அணுகுமுறை யூதர்களாலும், ஏன் நம்மாலும் ஏற்றுக்கொள்ள முடியாததுபோல்தான் இருக்கும். ஆனாலும், உலகப் போர் முடிந்தபோது, சுமார் 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். இந்த விஷயத்தில் காந்தி சற்று அப்பாவியாகவே இருந்தார் என்கிறார் காந்தி வரலாற்றாசிரியர் குஹா. எனினும், அவர் வேறு சில சாத்தியங்களை காந்தி விஷயத்தில் பரிசீலித்துப்பார்க்க முடியும் என்கிறார்.
யூதர்களிடையே ஒரு காந்தி
  • யூதர்களிடையே ஒரு காந்தி தோன்றினால் அவர் 5 நிமிடங்களில் கொல்லப்படலாம். ஆனால், ஜெர்மானிய கிறிஸ்தவரிடையே ஒரு காந்தி தோன்றியிருந்தால் எப்படி இருந்திருக்கும்? அதற்கான ஒரு வாய்ப்பு வரலாற்றில் வந்தது. டைட்ரிஸ் போன்ஹோஃபர் என்ற ஜெர்மானிய மதபோதகர் 1920-களில் காந்தியைப் பற்றிக் கேள்விப்பட்டு வெகுவாகக் கவரப்பட்டிருக்கிறார். ஜெர்மானிய திருச்சபைகள் எல்லாம் அப்போது எழுச்சிபெற்றுவந்த நாஜிஸத்துக்குத் துணைபோய்க்கொண்டிருந்த வேளையில், ஏசுவின் மலைப் பிரசங்கத்தின் செய்தியை ஜெர்மானிய கிறிஸ்தவம் மறுபடியும் உணர்வதில் காந்தி உதவ முடியும் என்று அவர் நம்பினார். 1930-களின் தொடக்கத்தில் காந்தி ஆசிரமத்துக்கு வந்து தங்கி, ஆசிரம வாழ்க்கையையும் சத்தியாகிரக நெறிமுறைகளையும் கற்க விருப்பம் கொண்டு, காந்திக்குக் கடிதமும் போட்டிருந்தார். அவரை காந்தி ஆவலுடன் வரவேற்றார். எனினும், ஏதோ காரணத்தால் அவரால் இந்தியாவுக்கு வர இயலாமல் போய்விட்டிருக்கிறது. போன்ஹோஃபர் இந்தியாவுக்கு வந்து காந்தியிடம் அகிம்சை, சத்தியாகிரகம், ஒத்துழையாமை போன்றவற்றைக் கற்றுச் சென்றிருந்தால் என்ன நடந்திருக்கலாம் என்று குஹா கற்பனைசெய்து பார்க்கிறார். நாஜிஸம் தீவிரமடையாத அந்தக் கட்டத்தில், போன்ஹோஃபர் ஜெர்மனியில் யூதர்களையும் மனசாட்சியுள்ள ஜெர்மானியர்களையும் ஒருங்கிணைத்து சாத்விக முறையில் போராடியிருந்தால் அதனால் ஏதாவது மாற்றம் ஏற்பட வாய்ப்பிருந்திருக்கும் என்று குஹா கற்பனைசெய்து பார்க்கிறார். ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றில் தங்கள் போராட்டங்களுக்கு காந்தியைப் பின்பற்றியிருக்கிறார்கள் என்பதை இங்கே நினைவில் கொள்ளலாம்.
  • யூதர்கள் விவகாரத்தில் காந்தியின் அப்பாவித்தனத்தைப் பற்றி மேலே குறிப்பிட்டோம். அது மனிதர்கள் மீது எல்லையில்லா நம்பிக்கை வைத்திருந்ததன் அடையாளம். ஹிட்லர், முஸோலினிகூட திருத்தப்படவே முடியாதவர்கள் அல்ல என்று அவர் நம்பினார். அந்த நம்பிக்கையின் விளைவாக ஹிட்லருக்கு ஒரு கடிதத்தையும் காந்தி எழுதினார்.
பிரிட்டனுக்குத்தான் ஆதரவு
  1. “மனித குலத்தின் நன்மைக்காக உங்களுக்குக் கடிதம் எழுதும்படி என் நண்பர்கள் என்னைத் தூண்டிக்கொண்டே இருந்தார்கள். ஆகவே, இந்த முறையீட்டை நான் செய்துகொள்கிறேன். ஒரு விஷயம் மிகத் தெளிவு. மனித குலத்தை மூர்க்க நிலைக்குக் கொண்டுபோய் நிறுத்திவிடும் ஒரு போரைத் தடுக்கக்கூடிய ஒரே ஒரு ஆள் இந்த உலகத்திலேயே தற்போது நீங்கள்தான். உங்களுக்கு எந்த அளவுக்குப் பெறுமானம் கொண்டதாக இருந்தாலும் ஒரு விஷயத்துக்காக நீங்கள் இப்படிப்பட்ட விலையைத் தர வேண்டுமா? போர் என்ற வழிமுறையை முனைப்போடும் அதில் ஓரளவுக்கு வெற்றியோடும் தவிர்த்துவந்திருக்கும் ஒருவனின் முறையீட்டை நீங்கள் காதுகொடுத்துக் கேட்பீர்களா?”
  2. இப்படிப் போகிறது அந்தக் கடிதம். எனினும், அப்போதைய பிரிட்டிஷ் அரசு அந்தக் கடிதத்தை அனுப்பாமல் முடக்கிவிட்டது என்கிறார் குஹா.
  3. எது எப்படியோ செப்டம்பர் 1, 1939-ல் போலந்தை ஜெர்மனி ஊடுருவியதன் மூலம் இரண்டாம் உலகப் போர் தொடங்கிவிட்டது. இரண்டு நாட்கள் கழித்து ஜெர்மனி மீது பிரிட்டனும் பிரான்ஸும் போரை அறிவித்தன. இந்தியர்களின் அனுமதி இல்லாமலேயே இந்தியாவும் போரில் கலந்துகொள்கிறது என்று பிரிட்டன் அறிவித்ததை காந்தி, காங்கிரஸ் தலைவர்கள், இந்திய மக்கள் என்று யாராலும் ஜீரணிக்கவே முடியவில்லை. தங்களை ஆக்கிரமித்திருக்கும் நாடுதான் என்றாலும், ஜெர்மனுக்கு எதிரான போரில் பிரிட்டனுக்குத்தான் ஆதரவு என்று காந்தி கூறினார். அதேநேரம், இந்தியாவை அடிமைப்படுத்திக்கொண்டு, ஜனநாயகத்துக்கான போர் என்று சொல்லிக்கொண்டு, ஜெர்மனியை எதிர்த்துப் போரிடுவது முரண் என்றார். போர் முடிந்ததும் இந்தியாவுக்குச் சுதந்திரம் என்று ஒப்புக்கொண்டால், இந்தியர்கள் போரில் பிரிட்டனுக்கு ஆதரவாகப் பங்குபெறுவார்கள் என்று காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியது. போரில் பங்குகொள்வது பற்றி காந்திக்கு உடன்பாடில்லை என்றாலும், காங்கிரஸின் தீர்மானத்தில் அவர் தலையிடவில்லை. பிரிட்டனோ அழுத்தம்திருத்தமாக இதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டது.

நன்றி: இந்து தமிழ்  திசை(21-08-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories