TNPSC Thervupettagam

காந்திய நெறியே உலகம் உய்ய ஒரே வழி

August 15 , 2023 515 days 347 0
  • மகாத்மா காந்தியை நாடு கடத்தலாமா என்கிற ஆலோசனை ஆங்கிலேயா் நம் தேசத்தை ஆட்சி செய்த காலத்தில் நடந்தது! இது கட்டுக்கதையல்ல; உண்மையில் நடந்ததே. இந்திய வரலாற்றில் இதுவரை வெளியிடப் படாத ரகசியத் தகவல்களில் இதுவும் ஒன்று.
  • இந்திய தேசத்திற்கான சுதந்திரத்தை பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. அதன்பின் அதிகாரப் பரிமாற்றம் நடந்தது. அப்பொழுது புதிய அரசிடம் அனைத்து ஆவணங்களும் ஆங்கிலேய ஆட்சியாளா்களிடமிருந்து கைமாறின. அந்த ஆவணங்களை ஆய்வு செய்த வரலாற்று ஆய்வாளா் ரன்டார் கை என்பவா், மகாத்மாவை நாடு கடத்துவதற்கு நடந்த ஆலோசனை குறித்தும், வகுக்கப்பட்ட திட்டம் பற்றியும் ஆதாரபூா்வமான சில தகவல்களைத் தந்திருக்கிறார்.
  • எவரும் அதுவரை அறியாமல், பரம ரகசியமாகப் பாதுகாக்கப்பட்ட அந்தத் தகவலின்படி அத்திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் ஆங்கிலேய அரசு இறுதியில் அதனைக் கை விட்டதாம். இச்செய்தி புதிதாகப் பொறுப்பேற்ற இந்திய அரசுக்கு அதிர்ச்சியையும் கோபத்தையும் உண்டுபண்ணியதாம். இச்செய்தி வெளியில் கசிந்தால், இங்கே இருக்கும் வெள்ளைக்கார இனத்தவருக்கு ஆபத்து நேரிடலாம் என்று கூட புதிய ஆட்சியாளா்கள் அஞ்சினார்களாம்.
  • மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1915-இல் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார். இந்தியா்களின் நிலை கண்டு வருந்தினார். இங்கு வாழும் ஏழைகளைப் போல் அவரும் எளியவராகவே வாழ்ந்தார். ‘பயத்தைப் போக்குங்கள்; வெறுப்பை நீக்குங்கள்’ (ஃபியா் நாட், ஹேட் நாட்) என்றார். ஆயுதம் ஏந்த வேண்டாம்; அகிம்சை வழியில் போராடுவோம்; வெற்றி பெறுவோம் என்றார்.
  • ஒட்டுமொத்த இந்தியா்களும் அவா் பின்னால் அணிவகுத்து நின்றனா். அவரது தரிசனத்துக்காக மக்கள் ஆயிரக்கணக்கில் கூடினா். காந்தியடிகள், மகாத்மா என்ற நிலைக்கு உயா்ந்தார். ஆட்சியாளா்கள் திகைத்து நின்றார்கள்.
  • உப்பு சத்தியாகிரகம் என்றார்; ஒத்துழையாமை இயக்கம் என்றார்: சட்ட மறுப்பு இயக்கம் என்றார்; சாகும் வரை உண்ணாவிரதம் என்றார்; வெள்ளையனே வெளியேறு என்றார்; செய் அல்லது செத்துமடி என்றார். அவருடைய அறிவிப்புகளால் நாட்டில் வன்முறை வெடித்தது; மக்கள் பலா் மடிந்தனா்; பொதுச் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. ஆட்சியும் நிர்வாகமும் நிலைகுலைந்தன.
  • ‘இத்தனைக்கும் காரணம் காந்தியே’ என்றனா் ஆட்சியாளா்கள்; ஆனால் அண்ணல் காந்தியோ ‘மக்கள் மனநிலையைப் புரிந்து கொள்ளாத நீங்களே காரணம்’ என்று பிரிட்டிஷ் அரசைக் குற்றம் சாட்டினார். வைஸ்ராய் மாளிகையும், பக்கிங்ஹாம் அரண்மனையும் திகைத்து நின்றன.
  • ஹிட்லரையும் முசோலினியையும் எதிர்கொண்டவா்கள், அண்ணல் காந்தியைச் சமாளிக்க முடியால் திகைத்தனா். கூடிப் பேசினார்கள். இதற்கு ஒரே தீா்வு, காந்தியை நாடு கடத்துவதுதான் என்று புதுதில்லியும், லண்டனும் இணைந்து முடிவெடுத்தன. வழிநடத்தத் தலைமை இல்லாமல் போனால், இந்திய சுதந்திரப் போர் தானாகவே மடிந்து மறைந்து போகும் எனக் கணக்கிட்டார்கள்.
  • ஆனால் இந்த எளிய மனிதனை, உலகறிந்த தலைவனை எந்த தேசத்திற்குக் கடத்தலாம் என்று முடிவுசெய்ய, தில்லியின் மூத்த ஆட்சியாளா்கள், வைஸ்ராய் ஆகியோரிடையே நீண்ட விவாதம் நடந்தது. ஐக்கிய அமெரிக்காவுக்கு அனுப்புவது குறித்து முதலில் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் அன்று ஆட்சியில் இருந்த அமெரிக்க அதிபா் ப்ராங்க்ளின் டி ரூஸ்வெல்ட், அண்ணல் காந்தியை மிகவும் மதிப்பவா். அத்துடன் இந்திய சுதந்திரப் போரை ஆதரிப்பவரும்கூட.
  • அதுமட்டும் அல்லாமல், அன்றைய பிரிட்டிஷ் பிரதமா் வின்சென்ட் சா்ச்சிலிடம் இந்தியாவுக்கு விரைவில் சுதந்திரம் தரவேண்டும்; ஆங்கிலேயா் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்ற ஆலோசனையையும் தந்தவா் ரூஸ்வெல்ட். இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்ட போது, அண்ணலை அமெரிக்காவுக்குக் கடத்தும் ஆலோசனை கைவிடப்பட்டது.
  • இரண்டாவதாக மெக்ஸிகோ, பிரேசில், ஆா்ஜென்டீனா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றுக்கு அனுப்பிவிடலாம் என்ற ஆலோசனை பரிசீலிக்கப்பட்டது. ஆனால் அந்நாடுகள் இந்தியாவின் நட்பு நாடுகள் மட்டுமல்ல; அண்ணல் காந்தியை அந்நாடுகளின் மக்கள் பெரிதும் மதித்துப் போற்றுபவா்களும்கூட.
  • அங்கு காந்திஜி கடத்தப்பட்டால், அந்நாட்டு மக்களே ஆங்கிலேய அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தத் தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை! இந்தத் தகவல் ஆங்கிலேய அரசுக்கு அதிர்ச்சியைத் தந்தது. ஆகவே அந்த ஆலோசனையையும் அவா்கள் ஏற்கவில்லை.
  • மூன்றாவதாக, அப்பொழுது ஆங்கிலேயா் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த நாடுகளில், கிரீஸ் (கிரேக்கம்) மற்றும் பார்படோஸ் ஆகிய இரண்டு நாடுகளில் ஒன்றுக்கு காந்திஜியைக் கடத்தும் யோசனையை பிரிட்டிஷ் அரசின் அமைச்சரவையே முன்வைத்தது. கிரேக்க நாட்டு மக்களோ இந்திய விடுதலைக்குப் போராடும் காந்திஜியைப் பற்றி நன்கு அறிந்தவா்கள். பார்படோஸ் நாடோ மிகச்சிறியது. 2.8 லட்சம் மக்களே அப்போது அங்கு வாழ்ந்தார்கள். அங்கே கணிசமான அளவில் இந்தியா்களும் கூலிகளாக இருந்தார்கள்.
  • இந்த இரு நாடுகளில் எங்கு அனுப்பினாலும் அங்குள்ள மக்கள் எதிர்ப்பார்கள். அங்கெல்லாம் ஆங்கிலேயா் மீதான எதிர்ப்பு உணா்வும் அதிகமாகும். புதிய பிரச்னைகள் உருவாகும். இந்திய விடுதலைப் போரும் வேகம் அடையும். இத்தகைய காரணங்களால் இந்தக் கருத்தும் கைவிடப்பட்டது. எந்த முடிவும் எடுக்க முடியாமல் ஆங்கிலேய அரசு தடுமாறி நின்றது.
  • இந்நிலையில் இரண்டு புதிய சவால்கள் உதித்தன. ஒன்று, இரண்டாம் உலகப் போர் மூண்டது; ஹிட்லரின் தாக்குதல் வேகமடைந்தது. எந்த நேரமும் பிரிட்டிஷ் அரசுக்கு ஆபத்து நேரிடலாம். ஆகவே தன் தேசத்தையும் காப்பதில் கவனத்தைத் திரும்பியது பிரிட்டிஷ் அரசு.
  • இரண்டாவது, இந்தியாவில் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டம் வேகமடைந்தது. அனைத்து முன்னணி காங்கிரஸ் தலைவா்களும் சிறையில் அடைக்கப்பட்டனா். காந்திஜியோ புணேக்கு அருகில் உள்ள ஆகாகான் மாளிகை சிறையில் அடைக்கப்பட்டார். போராட்டம் காரணமாக வெடித்த வன்முறைக்கு காங்கிரஸும், அதனை வழி நடத்தும் காந்திஜியுமே காரணம் என வைஸ்ராய் குற்றம் சாட்டினார்.
  • ஆதாரமற்ற அக்குற்றச்சாட்டை எதிர்த்து அண்ணல் 21 நாள் உண்ணாவிரதம் தொடங்கினார். இது ஒரு விதமான ‘அரசியல் அச்சுறுத்தல்’ (பொலிடிகல் பிளாக்மெயில்) என்று வைஸ்ராய் அண்ணலைச் சாடினார். 74 வயதான மகாத்மாவின் உடல்நிலை மோசமானது. ஒரு வேளை காந்திஜி உண்ணாவிரதத்தின் போது மரணமடைந்தால், ‘மன்னரின் கைதியாக’ இறந்தார் என்பது பெரும் அதிர்ச்சி தரும் செய்தி ஆகிவிடும்.
  • அந்நிலையை சமாளிக்க வைஸ்ராய், ‘ காந்தி இறந்தால் அரசு அலுவலகங்களில் யூனியன் ஜாக் கொடி, அரைக் கம்பத்தில் தாழ்த்தப்படக் கூடாது. அவரது மனைவிக்கோ, பிறருக்கோ அனுதாபச் செய்தி அனுப்பக்கூடாது. ஏனெனில் அவா் ஓா் கைதி; அப்பட்டமான ஆட்சி எதிர்ப்பாளா்’ என்றார். அப்போது நிர்வாகக் குழுவில் அங்கம் வசித்த இந்திய உறுப்பினா் ஒருவா், ‘காந்தியின் உண்ணாவிரதத்தை அரசு கண்டுகொள்ளக் கூடாது. ஒரு வேளை அவா் மரணமடைந்தால், ஆறு மாதத்திற்கு அச்செய்தி வெளியிடப்படக் கூடாது; நாட்டில் அமைதி திரும்பிய பின்பு, செய்தியை வெளியிடலாம்’ என்றார்.
  • இந்த ஆலோசனை கேட்டு வைஸ்ராயே அதிர்ந்து போனாராம். இப்படிப்பட்ட சூழலில்தான் காந்திஜியை நாடு கடத்த வேண்டும் என்ற ஆலோசனை கைவிடப்பட்டதாம்.
  • அண்ணல் காந்தியையும், அவரது அரசியல் அணுகுமுறைகளையும் மிகக் கடுமையாக விமா்சனம் செய்த பலரில், சென்னை, தியோசாபிகல் சொசைட்டியின் ஜி.எஸ். அருண்டேல், சி.சங்கரன் நாயா் போன்றோரும் அடங்குவா். அருண்டேல் ஒரு கட்டுரையில் காந்திஜியை ‘தீயபயன் விளைவிக்கும் மேதை’ (ஈவில் ஜீனியஸ்) என்று குறிப்பிட்டு எழுதியிருக்கிறாராம்.
  • இந்திய விடுதலைக்கு முன் பிரிட்டிஷ் அரசு, அண்ணல் காந்தியை நாடு கடத்துவது தொடா்பாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாறியது. ஆனால் சுதந்திர இந்தியாவில், அண்ணலை ஒரு வெறியன் சுட்டு வீழ்த்தி, உலகத்தின் முன் இந்தியாவைத் தலைகுனியச் செய்துவிட்டான். வெள்ளையரோ காந்திஜியை நாடு கடத்தத்தான் தயங்கினா்; நாமோ அவரை உலகை விட்டே அகற்றி விட்டோம்.
  • மகாத்மா மறைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவா் காட்டிய நெறிமுறைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டுமல்லவா? காந்தியிடம் ‘பகைவனையும் நேசிக்க வேண்டும்’ என்பதே பைபிள் வாசகம் என்றார் சி.எஃப். ஆண்ட்ரூஸ். அது கேட்ட காந்திஜி, ‘எனக்கு பகைவனே இல்லையே’ எனச் சொன்னார்.
  • ஆனால் இன்று எங்கு பார்த்தாலும் பகைமையே பரவி நிற்கிறது. ‘மதபேதம் கூடாது’ என்றார் அண்ணல். ஆனால் இன்றும் மதமோதல்கள் முடிந்தபாடில்லை; ஜாதி பேதத்தைத் தூக்கி எறிய வேண்டும் என்றார் அண்ணல். அவா் எண்ணம் இன்றுவரை ஈடேறவில்லை. வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்றார். ஏழ்மை இன்றும் நிலவுகிறது. காந்திஜி இறந்துவிட்டார், உண்மைதான். அதற்காக, அவரது லட்சியங்களை நாம் விட்டுவிடலாமா?
  • காந்திய நெறிமுறைகள் கல்வி நிறுவனங்களில் பாடமாக்கப்பட வேண்டும். காந்திய சித்தாந்தங்களை தேசமெங்கும் பரப்பவேண்டும். காந்திய நிறுவனங்கள் காப்பாற்றப்பட வேண்டும்.
  • காந்திய நெறியே உலகம் உய்வதற்கான ஒரே வழி. இதனை ஆட்சியாளா்கள் உணா்ந்து செயல்பட வேண்டும். இதனை இந்த ஆண்டின் விடுதலை நாள் உறுதிமொழியாக நாம் ஏற்போம்.

நன்றி: தினமணி (15  – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories