- சாப்பாடு இல்லாமலோ, உடுக்கத் துணி இல்லாமலோ யாருமே கஷ்டப்படக் கூடாது. இந்தியாவின் பொருளாதார அமைப்பும், உலகத்தின் அமைப்பும் அப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து. அதாவது, ஒவ்வொருவருக்கும் தங்கள் செலவுக்கு வேண்டியதைச் சம்பாதித்துக்கொள்ளப் போதுமான வேலையைப் பெறுவது சாத்தியமாக வேண்டும். வாழ்க்கைக்கு அத்தியாவசியமான தேவைகளை உற்பத்தி செய்வதற்கான முறைகள் பொதுமக்களின் ஆதிக்கத்தில் இருந்தால்தான் இந்த லட்சியம் எங்கும் நிறைவேற்ற முடியும். கடவுளின் காற்றும் நீரும் எல்லோருக்கும் எப்படித் தாராளமாகக் கிடைக்கின்றனவோ, கிடைக்க வேண்டுமோ அதே போலவே உணவும் துணியும் எல்லோருக்கும் தாராளமாகக் கிடைப்பவைகளாக இருக்க வேண்டும்.
சுரண்டல்
- மற்றவர்களைச் சுரண்டுவதற்குச் சாதனங்களாக அவற்றை ஆக்கிவிடக் கூடாது. அவற்றை எந்த நாடோ, நாட்டு மக்களோ அல்லது கோஷ்டியினரோ தங்களது ஏகபோக உரிமையாக்கிக்கொண்டுவிடுவது அநியாயமாகும். இந்தச் சாதாரண விதியை நாம் அலட்சியம் செய்துவிடுவதால்தான் இந்தச் சந்தோஷமற்ற நாட்டிலேயே அன்றி உலகத்தின் பல பகுதிகளிலும்கூட மக்களின் துயர நிலையை நாம் காண்கிறோம்.
- அன்பும், ஏகபோகமாகத் தானே சொத்தை வைத்துக்கொண்டுவிடுவதும் எப்போதும் ஒன்றுசேர முடியாது. தர்க்கரீதியில், பூரணமான அன்பு இருக்குமானால், அங்கே சொத்தை வைத்துக்கொள்ளாமையும் இருக்க வேண்டும். நம் உடல்தான் நமக்குள்ள கடைசி சொத்து. ஒருவர், மனித வர்க்கத்துக்குச் சேவை செய்வதற்காகத் தன் உடம்பையும் தத்தம்செய்து சாகத் தயாராக இருந்தால்தான் அவர் பூரணமான அன்பைச் செலுத்தவும் முழுமைக்கும் சொத்தில்லாமல் இருக்கவும் சாத்தியமாகும்.
இயற்கை
- ஒரு வகையில் நாம் திருடர்கள் என்று கூறுவேன். என் உடனடி உபயோகத்துக்குத் தேவைப்படாத எதையாவது எடுத்து நான் வைத்துக்கொள்ளுவேனானால், இன்னொருவரிடமிருந்து அதை நான் திருடியவனே ஆவேன். நமது அன்றாட வாழ்க்கைக்குத் தேவையானதை இயற்கை உற்பத்திசெய்கிறது. ஒவ்வொருவரும் தனக்குப் போதுமானதையே எடுத்துக்கொள்ளுவது, அதிகமாக எதையும் எடுத்துக்கொள்ளுவதில்லை என்றால், உலகில் ஏழ்மை இருக்காது. மனிதன் பட்டினி கிடந்து சாவது என்பதும் இருக்காது. இயற்கையின் அடிப்படையான நியதி இதுதான் என்று நான் துணிந்து கூறுவேன்.
நன்றி: இந்து தமிழ் திசை (26-06-2019)