- தற்சார்புப் பொருளியல் மேதை குமரப்பா தனது குடிலின் நுழைவாயிலின் மேலாக, ஒரு கிராமத்து உழவரின் படத்தைத் தொங்கவிட்டிருப்பார்.
- அதில் ‘எனது தலைவரின் தலைவர்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும். தனது தலைவரான காந்தியடிகளின் தலைவர் ஓர் எளிய உழவரே என்ற பொருள்பட அந்த வாசகம் அமைந்திருக்கும்.
வேளாண்மை
- வேளாண்மைக்கும் காந்தியடிகளுக்கும் இருந்த நெருக்கம் மிகவும் ஆழமானது. அவர் எங்கு தனது பணியைத் தொடங்கினாலும் அங்கு ஒரு ஆசிரமத்தை உருவாக்குவார். அதில் வேளாண்மை முதன்மையானதாக இருக்கும். முதலில் ஃபீனிக்ஸ் குடியிருப்பை 1904-ல் தொடங்கினார்.
- மனிதர்கள் வாழத் தகுதியற்றதாகப் புதர்களும் புற்களும் நிறைந்த அந்த இடத்தில், தனது நண்பர்களைக் கொண்டு வேளாண்மையைத் தொடங்கினார்.
- அதன் பின்னர், 1910-ல் டால்ஸ்டாய் பண்ணையை உருவாக்கினார். அங்கு வேளாண்மை முதன்மையாக அமைந் திருந்தது.
- ஏறத்தாழ 1,100 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட அந்த நிலம், பழ மரங்களையும் பயிர்களையும் கொண்டிருந்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பண்ணையில் தோட்ட வேலை செய்ய ஆர்வமாக இருந்திருக்கிறார்கள்.
- இந்தியா திரும்பிய பின்னர், 1915-ல் தொடங்கப்பட்ட கோச்ரப் ஆசிரமம் பிளேக் நோய் பரவலால் இடம் மாற்றப்பட்டு, சபர்மதி ஆசிரமமாக உருவெடுத்தது. அங்கும் வேளாண்மைக்கான முன்னுரிமை இருந்தது. அதன் பின்னர், 1936-ல் வார்தா அருகில் உள்ள சேவாகிரமம் என்ற ஆசிரமத்தில் வேளாண்மையின் பங்கு மிகவும் அடிப்படையாக அமைந்தது.
காந்தி மற்றும் இதரத் தலைவர்கள்
- அங்குதான் காந்தியும் வினோபா பாவே, குமரப்பா போன்ற முன்னோடிகளும் ஒன்றாகச் செயல்பட்டனர். கிராமங்கள் உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என்பதிலும், அவற்றின் நெஞ்சமாக வேளாண்மை இருக்க வேண்டும் என்பதிலும் காந்தி உறுதியாக இருந்தார்.
- அந்தக் கிராமங்கள் தற்சார்புடன் இயங்க வேண்டும் என்பதில் அழுத்தமான பிடிப்பு கொண்டிருந்தார். இந்திய வேளாண்மை, அடிப்படையில் உடலுழைப்பைப் பெரிதும் நம்பியிருப்பது. அதற்குப் பெரிதான எந்திரங்கள் தேவையில்லை என்பதே அவர் கருத்து.
- வேளாண்மை என்பது குறிப்பிட்ட பருவத்தில் மட்டுமே வேலைவாய்ப்பைத் தரக்கூடிய தன்மை கொண்டிருப்பதால், மீதமுள்ள காலங்களில் மாற்று வேலையாக நெசவு போன்ற கைவினைத் தொழில்களைப் பரிந்துரைத்தார்.
- அதன் மூலம் எல்லாக் காலங்களிலும் கிராமங்கள் உயிர்ப்புடன் இருக்கும் என்று அவர் நம்பினார்.
- “கலப்பையை மேம்படுத்திக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், ஒட்டுமொத்த நிலத்தையும் சில எந்திரங்களைக் கொண்டு உழும் ஆற்றலை ஒருவர் பெற்றுவிட்டால், ஒட்டுமொத்த வேலையையும் அவர் பறித்துவிட முடியும்” என்று 1925-ல் ‘யங் இந்தியா’ இதழில் எழுதினார்.
- நிலங்கள் உழுபவர்களின் கைகளில் இருக்க வேண்டும் என்பது காந்தியின் கொள்கை. இன்றும் பசியை அகற்றுவதில் முதன்மைப் பங்கு சிறிய பண்ணைகளுக்குத்தான் உள்ளது என்று உணவு வேளாண்மைக் கழகம் குறிப்பிடுகிறது.
- உழவர் தனது தேவைக்கான சாகுபடியை முதலில் தொடங்க வேண்டும், பின்னரே சந்தையைக் கவனிக்க வேண்டும் என்று 1941-ல் காந்தி குறிப்பிடுகிறார்.
- ஒவ்வொரு உழவரிடமும் ஒரு மாடு அவசியம் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
- “தற்சார்பு, உயிர்களை ஒட்டுமொத்தமாக அழிக்காத இயற்கையோடு இயைந்த வேளாண்மை முறையே நமது நாட்டுக்குப் பொருத்தம்” என்ற காந்தி, வேளாண்மையை ஒரு நீடித்த வாழ்வியலாகப் பார்த்தவர். வேளாண்மையை அவர் தனது ஆன்மாவின் தேடலாகப் பார்த்தார். அவரது கனவு இயற்கையின் மடியில் ஒரு பூ மலர்வதுபோல வேளாண்மை இருக்க வேண்டும் என்பதே. அதற்கு இன்னும் பல காலம் ஆகலாம். அதை விட்டால் மனித குலத்துக்கு வேறு விடியல் இல்லை.
நன்றி: இந்து தமிழ் திசை (03-10-2019)