- பள்ளிப் படிப்பை முடித்த காந்தியின் முதல் ஆசை மருத்துவம் பயில்வதாகவே இருந்தது. சடலத்தைத் தொடுவதும் அதை அறுப்பதும் பாவம் என்று சுற்றியிருந்தவர்கள் மத்தியில் இருந்த எண்ணத் தடையால் அவருடைய மருத்துவக் கனவு நிராசையானது.
- பின்னரே, ‘கடல் தாண்டிச் செல்வது பாவம்’ என்ற தடையையும் மீறி வழக்கறிஞர் ஆவதற்காக லண்டன் புறப்பட்டார்.
நவீன மருத்துவம்
- நவீன மருத்துவம் மீதான விமர்சனத்தின் வழியாக மருத்துவர்களின் எதிரியாக காந்தியைப் பார்க்கும் ஒரு பார்வை உண்டு. அப்படியல்ல; எல்லாவற்றையும்போல மருத்துவத்துக்கும் ஒரு பன்மைத்துவ உள்ளடக்கத்தைக் கொடுக்க அவர் தலைப்பட்டார்.
- சேவையைக் காட்டிலும் வணிகத்தைப் பிரதான இலக்காகவும் மனிதர்களின் சுயசார்பைத் தாக்கியழிப்பதாகவும் யதார்த்தத்தில் கொண்டிருந்த நவீன மருத்துவத்தை இதன் பொருட்டே அவர் அதிகம் விமர்சித்தார்.
- “மருத்துவர்கள் சாதாரண ஏழை மக்களின் வாழ்வை உணர நெசவாளிகளாக வாழ வேண்டும்” என்ற அறைகூவல்வழி காந்தியின் உண்மையான நோக்கம் எது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
- நோய் நாடி, நோய் முதல் நாடி என்று வள்ளுவர் சொன்னதுபோல, நோய் வந்த பிறகு மருந்துகள் பக்கம் செல்வதைவிடவும் நோயைத் தடுப்பதிலும், நோய்க்கு மூலாதாரமான வறுமை, சத்துணவின்மை, சுற்றுச்சூழல் கேட்டை ஒழிப்பதிலும் தீவிரமான கவனம் செலுத்தியவர் காந்தி.
அரசியல் தலைவர்
- ஒரு அரசியல் தலைவர் ஏன் திறந்தவெளி மலம் கழிப்புக்கு எதிராகவும், மலத்தை உரமாக்குதல் பற்றியும், வயிற்றுப் புழுக்களின் தீமை பற்றியும் விரிவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும்? ஏன் நீர், சூழல் தூய்மை பற்றிய கல்வியை, குறிப்பாக கிராம மேம்பாட்டை நலவாழ்வின் அடிப்படைத் தேவையாகக் கருதி போதிக்க வேண்டும்? ஏன் கிராமப் பஞ்சாயத்து ஊட்டச்சத்து சுகாதாரக் குழுக்களை உருவாக்க வேண்டும்?
- காந்தி அக விடுதலைக்கான கருவியாக இந்த உடலைப் பார்த்தார். பூனா தேசிய இயற்கை மருத்துவ நிறுவனத்துடனும், அதன் தலைவர் டாக்டர் தின்ஷாவுடனும் நெருங்கிய உறவு கொண்டவராகவும் அதன் ஆய்வு ஏட்டில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதுபவராகவும் இருந்தார் காந்தி.
- நீர் மருத்துவம், மலர்ப் பூச்சு மருத்துவம், மலக்குடல் சுத்தப்படுத்துதல், மூலிகைகள் பயன்பாடு, உண்ணா நோன்பு, நீர்நிலைகளின் தூய்மை ஆகியவற்றை ஏழை மக்கள் மத்தியில் எளிய மருத்துவ முறைகள் என்று காந்தி பிரச்சாரம் செய்தபோது அன்றைய நவீனத்துவர்கள் அதைக் கேலிசெய்தனர்.
- ஆனால், மெளன விரதம், கட்டாய உடல் உழைப்பு, நடைப் பயிற்சி, காய்கனி உணவு, உண்ணாநோன்பு, நீர் சிகிச்சை, இயற்கை மருத்துவம் என அவர் போதித்த வாழ்க்கைப் பயிற்சிகள் யாவும் இன்று கட்டணம் செலுத்தி பெறும் மருத்துவ அறிவுரைகளாக அவர்களே ஆக்கியுள்ளனர்.
- தன்னுடைய உடலை காந்தி பரிசோதனைக் களமாக்கிச் செயல்பட்டது ஊரறிந்த விஷயம். மருத்துவச் சேவையிலும் இணையான ஆர்வத்தை அவர் காட்டிவந்தார்.
போர்கள்
- தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற போயர் போர், ஜூலு போரின்போது முதலுதவிப் படையில் சேர்ந்து சேவை புரிந்தார். கருப்பினர் ஒருவரைத் தேள் கடித்து மரண விளிம்பிலிருந்தபோது தனது வாயால் விஷத்தை உறிஞ்சி அவரைக் காப்பாற்றினார். முதல் மற்றும் இரண்டாவது உலகப் போரில் ஆம்புலன்ஸ் படையில் சேவை புரிந்தார்.
- தென்னாப்பிரிக்காவில் ப்ளேக் பரவியபோதும், வார்தாவில் காலரா பரவியபோதும் தூய்மைப் பணியில் ஈடுபட்டார். தொழுநோயாளிகள் வெறுத்துத் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில், சம்ஸ்கிருத அறிஞர் பர்சூரி சாஸ்திரிக்குச் சேவை புரிந்தார்.
- முதியோரைப் பேணும் மனமற்ற உலகில் இன்று ‘பேலியேட்டிவ் கேர்’ எனும் பெயரில் அன்பான, அமைதியான இறுதி நாட்களை வழங்கும் சிறப்பு மருத்துவக் கல்வியாகி உள்ளது. ஆகாகான் சிறையில் மரணப்படுக்கையில் இருந்த மனைவி கஸ்தூர்பாவின் ‘பேலியேட்டிவ் கேர்’ மருத்துவராகப் பணியாற்றிய கருணையாளர் காந்தி.
- மது, புகையிலை, உணவுப் பழக்கம், மாசுபாடு இவற்றால் மரணிப்பவரே அதிகம் என்று இன்றைய நவீன மருத்துவம் எச்சரிக்கிறது. ஆனால், தனது கடுமையான விடுதலைப் போராட்டத்தின் நடுவிலும் இவற்றைப் பற்றிய விழிப்புணர்வை வளர்க்க முற்பட்டார் காந்தி.
- இன்றைய மருத்துவ உலகம் கருணை மரணத்தை அனுமதிக்கலாமா என்பதை விவாதித்துக்கொண்டிருக்கும் வேளையில் இதற்கு முன்னோடியாக, வேதனையில் துடிக்கும் கன்றுக்குட்டிக்கு ஊசி போட்டு அமைதியான மரணம் தர வேண்டியதன் மூலம் எதிர்காலத்துக்கும் வழிகாட்டிச் சென்றவர் காந்தி. காந்திய மருத்துவம் என்றுகூட ஒன்றைச் சொல்லலாம். அது எவ்வகை மருத்துவமாக இருந்தாலும் சரி, நோயாளரின் சுயசார்புக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும், கடைக்கோடி மனிதருக்கும் கிடைப்பதாகவும் இருப்பதே அது!
நன்றி: இந்து தமிழ் திசை (03-10-2019)