TNPSC Thervupettagam

கானுயிர் ஆராய்ச்சியாளர் இந்தியாவின்‘சிங்க’ப் பெண்

October 5 , 2023 463 days 360 0
  • மீனா வெங்கட்ராமன் ஆசிய சிங்கங்களை ஆராய்ச்சி செய்யும் இந்திய விஞ்ஞானி. சிங்கங்கள், சிங்கங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவு குறித்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்து, பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். மும்பை கானுயிர் பாதுகாப்பு மற்றும் ஆய்வு அமைப்பின் (Carnivore Conservation & Research) தலைமை ஆலோசகராக இருக்கிறார். மாணவர்களிடமும் மக்களிடமும் விழிப்புணர்வூட்டும் பணிகளையும் செய்துவருகிறார்.
  • “சென்னைப் பெண்ணாகிய நான் இங்குள்ள மேற்கு மலைத் தொடர்களை நோக்கிச் செல்லாமல், கிர் காடுகளில் உலவும் சிங்கங்களை ஆராய்ச்சிக்காக ஏன் தேர்ந்தெடுத்தேன் என்று பலரும் கேட்பார்கள். எனக்குச் சிங்கத்தைப் பிடிக்கும். இந்த விருப்பமே நாளடைவில் ஆர்வமாக மாறி, கானுயிர் ஆராய்ச்சிப் பயணத்தைத் தொடங்கக் காரணமானது. பிறகு அதுவே வேலையாக மாறி, ஒருகட்டத்தில் என் அடையாளமாகவும் மாறிவிட்டது” என்கிறார் மீனா வெங்கட்ராமன்.
  • விலங்கியல் துறையில் இளங்கலைப் பட்டமும், புதுவை பல்கலைக்கழகத்தில் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். ஆசிய சிங்கங்களின் சமூகப் பழக்கவழக்கங்களை அறிந்துகொள்வது பற்றி இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் முனைவர் பட்டத்தையும் மீனா வெங்கட்ராமன் பெற்றிருக்கிறார்.

ஆராய்ச்சியின் அடிப்படை

  • “ஒரு சிங்கம் குறிப்பிட்ட இடத்தில் எவ்வளவு காலம் தங்கியிருக்கும், தங்கி இருக்கும் பகுதியை எந்தச் சூழ்நிலையில் விட்டுச் செல்கிறது, இவற்றுக்கான இரையும் நீரும் எவ்வாறு பகிரப்படுகின்றன, புலிகளும் சிங்கங்களும் தங்களுக்குள் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பது போன்ற கேள்விகளின் அடிப்படையில்தான் ஆய்வுகளைத் தொடங்கினேன்.
  • சிங்கங்கள் மட்டுமே கூட்டமாக வாழும் பெரிய பூனை இனம். சிங்கங்கள் பெரும்பாலும் சண்டையிட விரும்புவதில்லை. சிங்கங் களுக்குக் காயம் ஏற்படுவது பிடிக்காது. அதற்காகவே சண்டையைத் தவிர்க்கின்றன. மாறாகத் தங்களது கர்ஜனை மூலம் எதிரிகளை நடுக்கத்தில் வைத்திருக்க அவை விரும்புகின்றன. சிங்கங்கள் புத்திக்கூர்மை மிக்கவை. கானுயிர் ஆராய்ச்சியில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. சமீபத்தில் சிங்கம், புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதே அதற்குச் சான்று” என்கிறார் மீனா வெங்கட்ராமன்.
  • கானுயிர் ஆராய்ச்சி போன்ற துறையில் பெண்கள் சாதிப்பது சாதாரண விஷயம் அல்ல. குடும்பத்தின் ஆதரவு இருந்ததால் தான் தன்னால் இந்தத் துறையில் நீண்ட காலம் பயணிக்க முடிகிறது என்கிறார் இவர். “கானுயிர் போன்ற ஆராய்ச்சித் துறைகள் ஆண்களின் ஆதிக்கம் நிறைந்தவையாகத் தான் இன்றளவும் இருக்கின்றன. அரசு சார்பில் அமைக்கப்படும் கானுயிர் சார்ந்த நிபுணர் குழுக்களில் எனக்கான வாய்ப்பு இதுவரை வழங்கப் பட்டதில்லை. அதிகாரம் அளிக்கும் பதவிகளில் பெண்கள் இங்கு அமர்த்தப்படுவதில்லை.
  • இந்தச் சூழலில் ஆராய்ச்சிகளுக்கான நிதி தனியார் நிறுவனங்கள் மூலம்தான் எனக்குக் கிடைக்கிறது. ஒரு சுயாதீன ஆராய்ச்சியாளர் என்கிற அடையாளத்துடன்தான் செயல்பட்டுவருகிறேன். என்னைப் பொறுத்தவரை காடுகளில் ஆராய்ச்சி செய்வதில் எந்தச் சிரமும் இல்லை. எங்கள் துறையில் பெண்களுக்கு இருக்கும் பின்னடைவுகள்தாம் எனக்குச் சிரமமாகத் தோன்றுகிறது.
  • இந்தப் போக்கு நிச்சயம் மாற வேண்டும். ஆய்வுக்காகச் செல்லும் இடங்களில் அங்குள்ள கிராம மக்கள் குறிப்பாகப் பெண்களிடத்தில் எனக்கான அங்கீகாரம் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. என்னைப் பார்த்துப் பல பெண்கள் இந்தத் துறைக்கு வருவதாகச் சொல்லும்போது என் ஆராய்ச்சிகள் அர்த்தமுள்ளவையாகத் தெரிகின்றன” என்கிறார் மீனா வெங்கட்ராமன்.
  • குஜராத் கிர் காடுகளிலிருந்து வெளியேறி கிராமங்களை நோக்கிச் செல்லும் சிங்கங்களைப் பற்றிய ஆய்வில் தற்போது இவர் ஈடுபட்டிருக்கிறார். அங்குள்ள பள்ளி மாணவர்களிடம் சிங்கங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருவதால், எதிர்காலத்தில் சிங்கங்களைப் பாதுகாக்க முடியும் என்று நம்புகிறார்.

பொறுமையும் மனவுறுதியும்

  • கானுயிர் ஆராய்ச்சியைத் தேர்ந்தெடுப்பவர் களுக்கு இதை நிலையான வேலையாக உருவாக்கிக் கொள்ள நீண்ட காலம் தேவைப்படலாம். அதற்கான மன உறுதி, தன்னம்பிக்கை, பொறுமை தேவை. கானுயிர் ஆராய்ச்சியில் பலர் பங்கெடுக்கப்பதன் மூலம் இத்துறை வலுவானால், வாய்ப்பு களும் அதிகரிக்கும். குறிப்பாகப் பெண்கள், இளைஞர்களின் எண்ணிக்கை இத்துறையில் அதிகரிப்பது அவசியம்” என்கிறார் மீனா வெங்கட்ராமன்.

நன்றி: இந்து தமிழ் திசை (05 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories