TNPSC Thervupettagam

கானுயிர் காக்க, கானகம் காப்போம்!

January 10 , 2020 1833 days 1663 0
  • இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியாவிலுள்ள வனவளங்கள் குறித்து  உத்தரகண்ட் மாநிலம் டேராடூனிலுள்ள இந்திய வன ஆய்வு நிறுவனம் ஆய்வு செய்து, முடிவுகளை வெளியிட்டு வருகிறது.
  • செயற்கைக்கோள் ஆய்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்திய மாநிலங்களின் வனப்பரப்பு 2019' அறிக்கை, கடந்த டிசம்பர் 30-ஆம் தேதியன்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
  • அதன்படி,  இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் வனங்கள்,  மரங்கள் என பசுமைப் பரப்பு 25 சதவீத அளவில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் மொத்த பசுமைப் பரப்பு 20 சதவீதமாக இருந்தது.

பசுமைப் பரப்பு விகிதம்

  • இந்தியாவின் காடுகள், மரங்களின் பசுமைப் பரப்பு, தில்லி, கோவா மாநிலங்களின் பரப்பளவுக்கு இணையாக அதிகரித்துள்ளதாக  இந்த  ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
  • 2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு எடுக்கப்பட்ட இந்த ஆய்வறிக்கையின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் நம் நாட்டில் காடுகள்மரங்கள் பரப்பளவு ஒட்டுமொத்தமாக 5,188 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
  • அதாவது, தேசிய அளவில்  காடுகளின் பரப்பளவு  3,976 சதுர கி.மீ.-ம், மரங்கள் பரப்பு 1,212 சதுர கி.மீ.-ம் அதிகரித்துள்ளது.
  • மாநிலவாரியாக வனங்களின் பரப்பளவு அதிகரித்ததில் கர்நாடகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • கர்நாடகம், ஆந்திரம், கேரளம்,  ஜம்மு-காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசத்தில் முறையே 1025, 990, 823, 371, 334  சதுர கி.மீ. வனப் பரப்பு அதிகரித்துள்ளது.  
  • தமிழகத்தில் வனப் பரப்பு 26,364 சதுர கி.மீ. (2017-இல் 26,281 ச.கி.மீ), கடந்த 2 ஆண்டுகளில் 83 சதுர கி.மீ. அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • ஒட்டுமொத்தமாக காடுகளின் பரப்பளவு அதிகரித்தாலும், வடகிழக்கு மாநிலங்களில்,  பசுமைப் பரப்பு 765 சதுர கிலாமீட்டர் (0.45 சதவீதம்) குறைந்துள்ளது என்றும்,  தமிழ்நாட்டில் மாங்குரோவ் காடுகள் எனப்படும் அலையாத்தி காடுகளின் பரப்பளவு அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.

விளைவுகள்

  • இதனால், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திற்கு ஏற்ப கூடுதலாக  250-300 கோடி டன் கார்பன் சின்க்' எனப்படும் கரிம வளம்'  உருவாக்கத்திற்கு இது துணை புரிந்துள்ளது.
  • இந்திய வனப் பகுதியின் மொத்த கரிம அளவு 712 கோடி டன் எனவும், இது 2017-இல் காணப்பட்டதைவிட 4.26 கோடி டன் அதிகம் எனவும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.  
  • ஒரு நாட்டிற்கு அரணாகக் காடுகள் உள்ளன. இந்தியாவிலுள்ள வனங்கள் 1936-ஆம் ஆண்டிலேயே சர்.சாம்பியன் என்பவரால் தரம் பிரிக்கப்பட்டுள்ளன.
  • 1968-இல்  எச்.ஜி.சாம்பியனும், எஸ்.கே.சேத் என்பவரும் நம் நாட்டின் வனவளங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதை அடிப்படையாகக் கொண்டு வன வளங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வன வளங்கள்

  • நாட்டின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கினை வனம், மரப் பரப்பின் கீழ் கொண்டு வர வேண்டும் என 1988-ஆம் ஆண்டின் தேசிய வனக் கொள்கை அறிவித்திருந்தது.
  • காடு என்பது பல நூறு ஆண்டுகளாக செழித்து, நெடிதுயர்ந்து, விண்ணைத் தொட்டு வளர்ந்து நிற்கும் மரங்களும், செடி, கொடி, பூக்கும் தாவரங்கள் உள்ளிட்டவையும், புலி, யானை, சிறுத்தை உள்ளிட்ட  காட்டுயிர்களும், நீர்நிலைகள், மலைகள் என அனைத்தும் இணைந்த இயற்கையின் அதிசய, அற்புதக் கட்டமைப்பே காடு' என்றழைக்கப்படுகிறது.
  • பல்லுயிர்க் களஞ்சியங்களைத் தன்னகத்தே காடுகள் கொண்டுள்ளதன் மூலம் பல்வேறு வகையான உயிரினங்களுக்கு வாழ்விடங்களாகவும், வாழ்வாதாரமாகவும்  உள்ளது.  
  • மரங்கள்  நமக்குத் தேவையற்ற கரியமில வாயுவை உள்வாங்கி கொண்டு,  நாம் உயிர் வாழத் தேவையான ஆக்சிஜனை அளிக்கின்றன.
  • மனித இனத்திற்கு  ஆதாரமாக உள்ள ஆறுகள், ஏரிகள் யாவும் அடர்ந்த வனப்பகுதிகளிலேயே உற்பத்தியாகி மனிதத் தேவையைப்  பூர்த்தி செய்கின்றன. ஆனால், இன்று அவை சிறிது சிறிதாக மறைந்து வருகின்றன. 
  • அடர்த்திக் காடுகள், பசுமை மாறா மழைக் காடுகள், வெப்ப மண்டல மழைக் காடுகள், புதர்க் காடுகள், புல்வெளிக்காடுகள், சதுப்பு நிலங்கள், அலையாத்திக் காடுகள் எனப் பல வகைகளில் இந்தியாவில் காடுகள் காணப்படுகின்றன.
  • பூமத்திய ரேகையின் நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் இந்தியக் காடுகள் பல்வேறு சிறப்பு உயிரினங்களின் வாழ்விடமாக இன்றும் உள்ளன.

மேற்குத் தொடர்ச்சி மலைகள்

  • உலகின் மூன்று உயிர்க்கோளங்களுள் ஒன்றான நமது மேற்குத் தொடர்ச்சி மலைகள் பல சிறப்புகளைப் பெற்றுள்ளன.
  • மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகள், நமக்கான தென்னக நதிகளை உற்பத்தி செய்யும் மையங்களாகும். இந்தியாவில் அடர்த்தியான காடுகளில் இந்த மலைப் பகுதியே முதன்மையானது.
  • இது வடக்கே குஜராத்தில் தொடங்கி தெற்கே குமரி முனை வரை நீடிக்கிறது.  இதில் அதிகமான அடர்த்தி தமிழ்நாடு, கேரளம், கர்நாடகத்தை உள்ளடக்கியது.
    கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 100 ஆண்டுகளில் 15.83 சதவீத காடுகள் அழிக்கப்பட்டுள்ளன;
  • குறிப்பாக, சிக்கிம், இமயமலைப் பகுதிகளில் காடுகள் முற்றிலும் அழிந்து விட்டன.  அங்கு வாழ்ந்த மக்களின்  வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விட்டது.
  • இந்திய வனப் பாதுகாப்பு அமைப்பில், சூழல் தொகுதியின் உட்கூறுகளாகத் தாவரங்கள், பிராணிகள், நுண்ணுயிரிகள் அமைகின்றன. இவையனைத்தும் உயிரின வளம்' என்றழைக்கப்படுகின்றன.
  • உலகின் மொத்த நிலப்பரப்பில் 14 சதவீதமாக இருந்து, தற்போது 6 சதவீதமாக மட்டுமே உள்ள மழைக்காடுகளில், உலகின் மொத்த உயிரினங்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட உயிரினங்கள்  வாழ்கின்றன. உயிரினங்களுக்கு சோலை வனங்கள் போன்றவை காடுகள்.  
  • ஒரு நாட்டின் வளத்துக்கு 33 சதவீத நிலப்பரப்பு காடுகளாக இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்தியாவிலுள்ள மொத்த நிலப்பரப்பில் 7,12,249 சதுர கி.மீ. மட்டுமே காடுகள் உள்ளன.
  • இது மொத்த நிலப்பரப்பில்  21.67 சதவீதமாகும்.  மரங்களின் பசுமைப் பரப்பு 95,027 சதுர கி.மீ. இது மொத்த நிலப்பரப்பில் 2.89 சதவீதமாகும்.  
  • அதாவது, நம் நாட்டின் மொத்த பசுமைப் பரப்பளவு  8,07,276 சதுர கி.மீ. ஆகும்.  இது இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 24.56 சதவீதம் மட்டுமே ஆகும்.
  • புவி பரப்பளவில் 30 சதவீதம் வனம் இருந்தால்தான் புவி வெப்பமயமாதலைத் தடுக்க முடியும்.

உயிர்பன்முகத் தன்மை

  • காடுகளை அழிப்பதால் மரங்கள் மட்டுமின்றி, அங்கிருக்கும் தாவரங்கள், மூலிகைகள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புழுக்கள், எண்ணற்ற நுண்ணுயிர்கள் ஒட்டுமொத்தமாக அழிந்து விடுகின்றன. இதனால், சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்கும் உயிர்பன்முகத் தன்மை முற்றிலும் கெடுகிறது.
  • நாம் உயிர் வாழும் இந்த உயிர்க்கோளமான பூமிக்குத் தேவையான ஆக்சிஜனை அளிப்பது உலகின் 13 நாடுகளில் உள்ள காடுகள்தாம்.
  • அவற்றில் இந்தியக் காடுகளின் பங்கு மகத்தானது. இதில், மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை, இமாலயக்  காடுகள் ஆகியவை உலகின் உயிர்க்காற்றை உற்பத்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கின்றன.  
  • தமிழ்நாட்டில் நீலகிரி, சேலம், வேலூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் காடுகள் அதிகமாக  உள்ளன.  
  • காடுகளில் உள்ள பிணி பல போக்கும்  மரங்களைத் திருக்கோயில்களில் ஸ்தல விருட்சமாக நட்டு, நட்சத்திரங்கள் பெயரிட்டு வளர்த்து வணங்கினர். மரங்களில் அருமருந்தாவன எவை, விருந்தாவன எவை என்பதைச் சித்தர்கள்  கண்டறிந்தனர்.  
  • காடு கோயிலாயின, இலைகள், தழைகள், கொல்புலிதோல் நல்லாடையாயின, ஆல்அமர், கடம்பன், காளி, பிடாரி, சதுக்க பூதம் வெளியே வந்தனர்.
  • இவர்களுக்குக் காடுகளில் கிடைத்த பூக்களைத் தூவியும், காய், கனிகளைப் படையலாக்கி  வணங்கி தங்கள் அச்ச உணர்வைப் போக்கிக் கொண்டனர்.  
  • கடம்பவனம் (மதுரை), திண்டிவனம், கடம்பூர், கடம்பத்தூர், சிறுகாட்டூர், திருவாலங்காடு, பனங்காடு, ஆற்காடு, காயாங்காடு, தாழைக்காடு, திருமறைக்காடு, திருவேற்காடு, திருவெண்காடு, இலுப்பைக்காடு முதலிய காடுகள் ஊர்களாயின.

காடுகளின் மேலாண்மை

  • உலக அளவில் 160 கோடி மக்கள் காடுகள் மூலம் வரும் வருவாயையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.
  • காடுகளின் நிலையான மேலாண்மையே நாட்டின் நிலையான வளர்ச்சி; வறுமை ஒழிப்பு, நாடுகளுக்கிடையேயான சர்வதேச ஒப்பந்த வளர்ச்சித் திட்ட இலக்குகளை எய்துதல் ஆகியவற்றை அடைய முடியும்.  
  • இந்தக் காடுகளை நாம் காப்பாற்ற தவறுமேயானால் புவி வெப்பமடைந்து கடல் மட்டம் அதிகரித்து உயிர்கள் அழியும் பெரும் பாதிப்புகளை மனித இனம் சந்திக்க நேரிடும்.  
  • இப்போதிருக்கும் காடுகளின் பரப்பளவை நம்மால் அதிகரிக்க முடியாவிட்டாலும், தற்போதுள்ள காடுகளையாவது சுருக்காமல்,  அழிக்காமல் அவற்றிலுள்ள மரங்கள் வெட்டப்படாமல் பாதுகாப்பது ஒவ்வொரு இந்தியரின் கடமையாகும்.
  • அடர்ந்த காடுகளே செழித்த நாட்டை உருவாக்குகின்றன. கானுயிர் வாழ வேண்டுமென்றால், கானகம் வளர வேண்டும். கானகம் அழிந்தால், கானுயிர் அழியும்; கானுயிர் அழிந்தால் மனிதகுலம் அழியும். 

நன்றி : தினமணி (10 -11-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories