TNPSC Thervupettagam

கான்கிரீட் கட்டிடங்கள் நிரந்தரமானவையா

June 15 , 2023 576 days 406 0
  • கட்டிடங்கள் அவற்றின் பயன்பாட்டுக்கு ஏற்ப - தற்காலிகம், தற்கால நிரந்தரம், நிரந்தரம் என மூன்று வகைப்படும். நிரந்தரக் கட்டிடங்களின் பயன்பாட்டுக் காலம் 50 ஆண்டுகளுக்குக் குறையக் கூடாது. உள்கட்டமைப்பு வசதிகள், மருத்துவமனை போன்றவை 100 வயதுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். கட்டிடங்களின் வயதுக்கு ஏற்றவாறு கட்டுமானப் பொருள்கள், தரம், பராமரிப்பு போன்றவை மாறுபடுகின்றன. ‘கான்கிரீட்’ என்பது தொழில்நுட்பச் சொல். ‘செயற்கைப் பாறை’ என்று அதற்குப் பொருள். கான்கிரீட்டின் பலமும் அதன் உறுதித்தன்மையும் ஆங்கில மொழியின்பால் ஈர்க்கப்பட்டு, ‘நிரந்தரம்’, ‘உறுதி’ போன்றவற்றுக்கு இணைப்பொருள் சொல்லாகவும் உள்ளது.
  • அப்படியென்றால், கான்கிரீட் கட்டிடங்கள் நிரந்தரம்தானே என்று கேள்வி எழுகிறது, அல்லவா? இதற்கு ஆம் / இல்லை என்று ஒற்றைச் சொல்லில் பதிலளிக்க முடியாது.

மார்க்கண்டேயப் பாலம்:

  • சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு புதுவைப் பொதுப் பணித் துறைச் செயற்பொறியாளர் ஒருவரிடமிருந்து வேண்டல் கடிதம் ஒன்று வந்தது: ஒரு கிராமத்தின் குறுகலான பாலம் ஒன்று பள்ளிக் குழந்தைகளின் காலை நேரத்தையும் பெற்றோர்களின் தவிப்பையும் தினமும் உச்சத்துக்கு எடுத்துச் செல்கிறது. இந்தச் சிக்கலை நெறிப்படுத்த வேண்டும் என்று அக்கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
  • உதவிப்பொறியாளர் என்னை அந்தக் கிராமத்துக்கு அழைத்துச் சென்றார். ஒரு பேருந்து மட்டும் மெதுவாகப் பாலத்தைக் கடக்க முடியும். அவ்வளவு குறுகிய பாலம். சுமார் 15 மீட்டர் அகல ஆற்றின் குறுக்கே அமைந்த கான்கிரீட் பாலம். போக்குவரத்துச் சிக்கலைச் சரிசெய்யப் பொறியாளர் இரண்டு தீர்வுகளை முன்வைத்தார். பாலத்தை இடித்துவிட்டு, அகலமான புதிய பாலம் ஒன்றை அமைப்பது அல்லது பழைய பாலத்தையும் வைத்துக்கொண்டு பக்கத்திலேயே இரண்டாவது பாலம் ஒன்றை அமைப்பது. இந்த இரண்டில் ஒன்றை உரிய முறையில் தேர்வுசெய்வதுதான் எனது கள ஆய்வின் நோக்கம்.
  • பாலத்தை நான் முதலில் ஆய்வுசெய்தேன். பெரும்பாலும் பாலங்களில் கான்கிரீட் பலகை (slab) அதிகமான பாதிப்புக்கு உள்ளாகும். ஆனால், பாலத்தின் எந்தப் பகுதியிலும் எவ்வித பாதிப்பும் என் கண்ணுக்குப் புலப்படவில்லை. “பாலத்துக்கு என்ன வயது?” என்று பொறியாளரிடம் கேட்டேன். அவர் கையில் எவ்விதக் கோப்புகளும் இல்லை. சிறிது யோசித்துவிட்டு, “15 ஆண்டுகள் இருக்கலாம்” என்றார். பாலம் கட்டிய ஆவணங்கள் அலுவலகத்தில் கிடைக்குமா என்று வினவினேன்.
  • வாய்ப்புகள் குறைவு என்றார். பாலத்தின் வயதை மதிப்பிட ஒரு யோசனை கைகொடுத்தது. எனது முதல் மற்றும் இறுதி செயற்பொறியாளர் தாமோதரன் (கொடைக்கானல்) 1981இல் கூறியது அது. அந்தக் கிராமத்திலிருந்து ஒரு முதியவரை அழைத்து வரச்சொன்னோம். எங்கள் கேள்வியைக் கேட்டதும் அவருக்கு ஒரே குதூகலம். நிறைய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அந்தப் பாலம் காலனிய காலகட்டத்தில் பிரெஞ்சுப் பொறியாளர்களால் கட்டப்பட்டது.
  • 75 வயதைத் தாண்டிய பாலம் என்ற உண்மையும் வெளிவந்தது. நான் அந்தப் பொறியாளரிடம், “இந்தப் பாலத்தின் உண்மையான வயது 75. ஆனால் நீங்கள் 15 என்று ஊகித்தீர்கள். நீங்கள் கூறியதிலும் ஒரு உண்மை வெளிப்படுகிறது. அதாவது, 75 வயதைக் கடந்த அந்தப் பாலம் 15 வயதுக்கு உண்டான பொலிவைத் தன்னுள் தக்கவைத்துக் கொண்டுள்ளது என்பதுதான் உண்மை” என்று கூறினேன்.

இளமையில் முதுமை:

  • தற்காலக் கட்டிடங்கள், குறிப்பாக அரசாங்கக் கட்டிடங்கள், குடியிருப்புகள் மிகக்குறுகிய காலத்தில், 20-30 ஆண்டுகளிலேயே பழுதடைகின்றன. புதுவை, தமிழகத்தில் மட்டுமே பல்லாயிரக்கணக்கான கட்டிடங்கள் பாழடைந்துவிட்டன. இப்படிப்பட்ட பட்டியல் மிக நீளமானது.
  • தனியார் கட்டிடங்களும் இதிலிருந்து தப்பவில்லை. ஹரியாணா மாநிலம் குருகிராம் மாவட்டத்தில் 13 அடுக்குமாடிக் குடியிருப்புகளின் தொகுப்பில் நான்கு தொகுப்புகளைப் பாதுகாப்புக் காரணங்களுக்காக இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அக்கட்டிடங்களின் வயது ஐந்தே ஆண்டுகள்தான். ஏன் தற்காலக் கட்டிடங்கள் துரிதமாக முதுமை அடைகின்றன?

சிமென்ட்:

  • சுதந்திர இந்தியாவில் சிமென்ட்டுக்கான தரக்குறிப்பேடு (IS 269) 1951இல் வெளியிடப்பட்டது. அக்கால சிமென்ட் மிக மெதுவாக வெப்பத்தை வெளியிட்டுப் பாரம் தாங்கும் திறனையும் மெதுவாக அடையும். கட்டுமானக் காலம் அதிகம் பிடிக்கும். அதற்குப் பிறகு பல முறை IS 269 திருத்தப்பட்டுள்ளது.
  • சமீபகால சிமென்ட் வகைகளில், கட்டுமானங்களைத் துரிதமாக முடிக்க ஏதுவாக ரசாயனக் கலவையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. அவை மிகத் துரிதமாக வெப்பத்தை வெளியிட்டுப் பாரம் தாங்கும் திறனை விரைவில் எட்டிவிடும். அக்கால சிமென்ட் பல மாதங்களில் அடைகின்ற வலுவை, தற்கால சிமென்ட் சில நாள்களில் / வாரங்களில் அடைந்துவிடும். வேகம் வித்தியாசப்பட்டாலும் இரண்டு சிமென்ட்களின் இறுதித் திறன் ஒரே அளவில்தான் அமையும்.
  • எந்த ஒரு சிமென்ட் மெதுவாக வெப்பத்தை வெளியிட்டு, சீராக வலுவைப் பெறுகிறதோ அதன் நீடித்து உழைக்கும் திறன் உயர்வாக இருக்கும் என்பதுதான் ஆராய்ச்சியாளர்களின் கூற்று. இதற்கு நான் முதலில் குறிப்பிட்ட மார்க்கண்டேயப் பாலம் ஒரு சிறந்த உதாரணம். எவ்விதப் பராமரிப்பும் இன்றி அது காலத்தை வென்று நமக்குப் பாடம் கற்பிக்கிறது.

பொறியியல் அம்சங்கள்:

  • எல்லாம் சரி, தற்கால சிமென்ட் பயன்படுத்தினால் கட்டிடங்களுக்கு அற்ப ஆயுசு தானா?அப்படியல்ல. தற்கால சிமென்ட்டில் பொறியியல் நுணுக்கங்களுடன் கனிமங்களின் கலவை சேர்க்கப்பட்டுள்ளது. அவற்றின் தன்மையைக் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும். பயிற்சி வேண்டும். விழிப்புணர்வு வேண்டும். வழிகாட்டுதல்களை அர்ப்பணிப்புடன் பின்பற்ற வேண்டும். தொழிற்சாலைகளில் உயர்தரமான சிமென்ட் தயாரிக்கப்படுவது என்னவோ உண்மைதான்.
  • ஆனால், கட்டிடக் களத்தில் கான்கிரீட் அதே முறையில் தயாரிக்கப்படுகிறதா என்பதுதான் கவனத்துக்குரிய கேள்வி. கான்கிரீட்டின் தலையெழுத்தை, கட்டிடத்தில் அன்றைக்குப் பணி புரிபவர்கள்தான் நிர்ணயிக்கிறார்கள். களத்தில் வேலை செய்பவர்களின் விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதுடன் தொடர்புடைய முக்கிய விஷயம் இது.
  • பெரும்பாலான அரசாங்கக் கட்டிடங்கள் ஆதரவற்றவை. ஆம், அவற்றைப் பராமரிக்க யாரும் பொறுப்பேற்பதில்லை. அரசுக் குடியிருப்புகள் மூலமாக வரும் வாடகை அனைத்தும் கடலில் கரைத்த பெருங்காயமாக மறைகிறது.
  • மார்க்கண்டேயப் பாலம் பராமரிப்பின்றி இருந்தாலும் முதல் இரண்டு முக்கியக் காரணங்கள் அதன் இளமையைப் பாதுகாக்கின்றன. கான்கிரீட் கட்டிடங்கள் நிரந்தரமானவைதான். ஆனால், நாம் அவற்றுடன் தொடர்ந்து பயணிக்கும்போதுதான் அது உறுதிப்படுத்தப்படுகிறது.
  • தொழிற்சாலைகளில் உயர்தரமான சிமென்ட் தயாரிக்கப்படுவது என்னவோ உண்மைதான். ஆனால், கட்டிடக் களத்தில் கான்கிரீட் வழிகாட்டுதல்களின்படி தயாரிக்கப்படுகிறதா என்பது தான் கேள்வி

நன்றி: தி இந்து (15 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories