TNPSC Thervupettagam

காமராஜர் அமைத்த கல்வி வழித்தடம் எங்கே

July 14 , 2023 548 days 1467 0
  • ஒருமுறை கல்லூரி மாணவர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது, அவர்களுக்குப் பிடித்தமான தலைவர் யார் என்பதையும் அதன் காரணத்தையும் கூறுமாறு கேட்டோம். ‘‘காமராஜரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் அரசுப் பள்ளிகளை ஊரெங்கும் திறந்ததால்தான் ஏழைகள் படிக்க முடிந்தது. நானும் அப்படிப் படித்தவன்தான்’’ என்று ஒரு மாணவர் கூறினார்.
  • மறுக்க முடியாத உண்மை இது. இன்றிருப்பதுபோல பெரிய அளவுக்கு அரசுக்கு வரி வருவாய் இல்லாத அன்றைய சூழலில், காமராஜரின் ஆட்சிக் காலத்தில் எழுத்தறிவித்தல் என்பது அரசின் பெரும் கடமையாக இருந்தது. மூன்று கி.மீ.க்கு ஒரு அரசுத் தொடக்கப் பள்ளி திறக்கப்பட்டது. காமராஜர் பிறந்த நாளையொட்டி அந்தச் சாதனைகளை இன்றைக்கு நினைவுகூர்வது அவசியம்.

அரசுப் பள்ளிகளில் சமத்துவம்:

  • கல்வி கொடுப்பது அரசின் கடமை என்ற ஜனநாயக நெறியைக் காமராஜர் உறுதியாகப் பின்பற்றினார். நல்லோர் மத்தியில் அதற்கு ஆதரவும் கிடைத்தது. பொருளாதார வசதியும் சமூக அக்கறையும் கொண்டிருந்த பலர் தங்கள் நிலங்களையும் பணத்தையும் கொடுத்துக் கட்டணமில்லாக் கல்வி வழங்க அரசுக்குத் துணைநின்றனர். இப்படி உருவானவைதான் அரசு உதவிபெறும் பள்ளிகள்.
  • அந்தக் காலகட்டத்தில், உண்மையான கல்வித் தந்தைகள் ஊருக்கு ஒருவராவது இருந்தனர். தொண்டுள்ளம் படைத்த மக்களின் உதவிகள் மூலம் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த ‘பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள்’ காமராஜர் ஆட்சியில் மாவட்டம்தோறும் நடத்தப்பட்டன. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்துச் சிகரம் தொட்டவர்கள் பலர், தாங்கள் படித்த பள்ளியை, கற்றுக் கொடுத்த ஆசிரியர்களைச் செல்லும் இடமெங்கும் போற்றுவதை இன்றைக்கும் கேட்க முடிகிறது.
  • அரசுப் பள்ளிகள் தனிமனித முன்னேற்றங்களை மட்டும் சாத்தியப்படுத்தவில்லை. பல்வேறு வேற்றுமைகளும் பாகுபாடுகளும் நிறைந்து கிடந்த ஊர்ப்புறங்களில், அரசுப் பள்ளிகளில்தான் சமத்துவம் என்பது முதன்முதலாகச் சாத்தியமானது. சில ஊர்களில் அரசுப் பள்ளிகளில் தனிக் குடிநீர்ப் பானைகளும் இருந்தன. ஆனாலும் எல்லோருக்கும் ஒரே குடிநீர் கிடைப்பது சாத்தியமானது.

சிதைந்து போன கனவு:

  • அரசமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய நாளில்,“சமூக ஜனநாயகம் என்பது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றைப்பின்பற்றி வாழ்கின்ற வாழ்க்கை முறையாகும். மக்களிடையே சமூக ஜனநாயகம் வளராத நிலையில், அரசியல் ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது” என்று எச்சரித்தார் டாக்டர் அம்பேத்கர். அவரது கனவாக இருந்த சமூக ஜனநாயகத்தை வளர்ப்பதற்கு அரசுப் பள்ளிகள்தான் முதல் பயிற்சிக் கூடங்களாக அமைந்தன. வறுமை, அறியாமை, ஏற்றத்தாழ்வு, பெண்ணடிமைத்தனம் போன்ற சமூகக் கேடுகளுக்கு முடிவுகட்டவும் கல்வியறிவே முதல் தேவையாக இருந்தது.
  • 1980க்குப் பிறகு படிப்படியாக நடந்தேறிய அரசின் கொள்கை மாற்றங்களால், கல்வி தனியாரின் விற்பனைப் பண்டமாக மாற்றப்பட்டது. உலகில் வேறெங்கும் இல்லாத அளவில், வருமான சமத்துவமின்மை கொண்ட மக்கள் வாழும் நாடாக இந்தியா உள்ளது. இந்நிலையில், கல்வி விற்பனைப் பண்டமாக மாற்றப்பட்டதால், பெற்றோர் கல்விக்காகச் செலவழிக்கும் திறனுக்கு ஏற்ப ஒரு குழந்தையின் கல்விக்கான வாய்ப்பும் கல்வியின் தரமும் தீர்மானிக்கப் படும் நிலை உருவானது.
  • வருமானத்தில் கடைநிலையில் இருந்த மக்களின் குழந்தைகளுக்கும் வசதியால் பல்வேறு வகைப் பட்டவர்களாக இருந்த குழந்தைகளுக்கும் இடையிலான கல்வி வாய்ப்பு, கல்வியின் தரம் இரண்டிலும் சமமான தளம் என்பது காணாமல் போனது. மற்றொரு புறம், கல்விக்கான நிதி ஒதிக்கீட்டை அரசின் நிதிச் சுமையாகக் கருதும் கொள்கையும் உறுதியானது.

அறத்துக்கு எதிரானது:

  • காமராஜர் அமைத்துக் கொடுத்த கல்வி வழித்தடம் இன்று காணாமல் போய்விட்டது. நாற்பதாண்டு காலமாகக் கல்வியில் தனியார் வணிகத்துக்குக் கட்டுப்பாடுகளின்றி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தனியார்மய-வணிகமயக் கல்விக் கொள்கைகளே சமூக நீதி பேசப்படும் தமிழ்நாட்டிலும் இன்றுவரை பின்பற்றப்படுகிறது. தனியார் கல்வி நிறுவனங்கள் அரசின் நிதி உதவிகள் எதுவும் இல்லாமல் செயல்பட்டுவருகின்றன.
  • மேலும், தனியார்கள் கல்வியைத் துளி அளவும் சேவையாகக் கருதாமல், வணிகப் பண்டமாகப் பயன்படுத்துவதற்கும் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய-மாநில அரசுகளின் இத்தகைய நடவடிக்கைகள் நமது விடுதலைப் போராட்ட தியாகங்களுக்கும் அரசமைப்பின் குறிக்கோள்களுக்கும் ஜனநாயக விழுமியங்களுக்கும் கல்வி அறத்துக்கும் எதிரானவை.

ஜனநாயகப் படுகொலை:

  • தனியார் கல்வி வணிகம் வளர்க்கப்பட்டதால், சமத்துவத்தை வளர்த்த அரசுப் பள்ளிகள் மதிப்பிழந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளன. முப்பதாண்டுகளுக்கு முன்புவரை அரசுப் பள்ளிகள் அனைவருக்குமான பள்ளிகளாக இருந்தன. இன்று, அரசுப் பள்ளிகள் என்றாலே, கல்விக்காகச் செலவழிக்க வழியில்லாத ஏழைகளின் பள்ளிகளாக மாறியுள்ளன.
  • கல்வியின் மூலம் அனைத்து வகையான சமூக இடைவெளிகளும் இட்டு நிரப்பப்பட வேண்டும். ஆனால், கல்வியிலும் சமூக, பொருளாதார இடைவெளிகள் பிரதிபலிக்கும் அவலநிலை இன்று உள்ளது. அரசியலில் தவறுகள் நடப்பதை ‘ஜனநாயகப் படுகொலை’ எனும் பதத்துடன் நாம் விவாதிக்கிறோம். அதேபோல், அரசுப் பள்ளிகளை வளரவிடாமல் செய்வதையும் ஜனநாயகப் படுகொலை என்று கூறுவதும் பொருத்தமானதே.
  • இன்றைக்கு அரசின் வரி வருவாய் பல மடங்கு கூடியுள்ளது. கல்விக்கென்று தனி வரியும் வசூலிக்கப்படுகிறது. காமராஜர் முதல்வராக இருந்த ஒன்பது ஆண்டு காலத்தில், கல்வியில் மாபெரும் மாற்றத்தைச் செய்ய முடிந்தது. அரசியல் உறுதிப்பாடு இருந்தால் இன்றும் செய்ய முடியும். உலகின் முன்னேறிய நாடுகள் பலவற்றிலும் கட்டணமற்ற பொதுப் பள்ளி முறையும் அருகமைப் பள்ளி முறையும் தாய்மொழி வழிக் கல்வியும் கட்டாயமாகப் பின்பற்றப் படுகின்றன.
  • கல்வியில் சமத்துவத்தைப் பேணுவதும் குழந்தைகளிடம் கட்டணம் பெறாமல் தரமான கல்வி வழங்குவதும் அரசுகளின் அடிப்படைக் கடமை என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது. காமராஜர் அமைத்துக் கொடுத்த கல்வி வழித்தடத்தில் கல்விக் கடமைகளைத் தொடர்வதே காமராஜரின் பிறந்த நாளைக் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடுவதை அர்த்தமுடையதாக்கும்.

ஜூலை 15 - காமராஜரின் 120ஆவது பிறந்தநாள்

நன்றி: இந்து தமிழ் திசை (14  – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories