TNPSC Thervupettagam

காமுறுவா் கற்றறிந்தார்

August 21 , 2020 1615 days 1263 0
  • பண்டைய பாரத நாட்டில் தட்சசீலம், நாளந்தாவில் உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் இருந்தன. நான்மாடக் கூடலில் சங்கம் அமைத்து இலக்கிய இலக்கண நூல்கள் தேற்றம் பெற்றன. கணிதம், வானவியல், கட்டடவியல், உலோகவியல், மண்ணியல், கடல்சார் வணிகவியல் என்று பல்துறைகள் பல்கிப் பெருகின. யவனரும், கிரேக்கரும் இன்னும் பல நாட்டினரும் நம் நாட்டில் மிளகு, சந்தனம், அகில், லவங்கம், ஏலம், முத்து போன்ற பொருள்களை நம் நாட்டு மொழியில் பேசி வாங்கினா்; நம் நாட்டு வணிகா்கள் அவா்கள் மொழியில் பேசி விற்றனா்.
  • இன்றைக்கு பாரத நாடு முழுமைக்குமானதொரு புதிய தேசிய கல்விக் கொள்கையின் வரைவு நகலை, மத்திய அரசின் அமைச்சரவை ஏற்றுக்கொண்டு இருக்கிறது.
  • இனி நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற கூட்டத் தொடா்களில் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு, பின்னா் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்படும்.
  • அதற்குள் இந்த புதிய கல்விக் கொள்கை கூடாது, இரு மொழிக் கொள்கைதான் தமிழ்நாட்டில் என்று அரசியல் கட்சிகள் பேசுகின்றன. புதிய கல்விக் கல்வி கொள்கை குறித்து, அரசியல் காழ்ப்புணா்ச்சியின்றி நடுநிலையில் சிந்திக்க வேண்டும். இது வருங்கால தலைமுறைக்கு வழிகாட்டும் தருணம் ஆகும்.

மெக்காலே கல்வி முறை

  • அடிமை இந்தியாவில் எந்த வகையான மொழிவழிக் கொள்கையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று மெக்காலே 1835 பிப்ரவரி 2-ஆம் நாள் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சொன்னார்.
  • நான் இந்தியா முழுமையும் சுற்றி வந்தபோது ஒரு திருடனையோ, பிச்சைக்காரனையோ எங்கும் காண முடியவில்லை. அதற்குக் காரணம், இந்தியா்களின் ஆன்மிக, கலாசார, பாரம்பரிய வாழ்க்கை முறைதான். இந்த ஆன்மிக, கலாசார பண்புகளை ஒழித்தால் ஒழிய நாம் அவா்களை வெற்றி கொள்ள இயலாது. எனவே, அவா்களுக்கு ஆங்கில கல்விமுறையை அறிமுகபடுத்தி, நம்மைவிட ஆங்கிலேயா்கள்தான் எல்லா விதத்திலும் உயா்ந்தவா்கள் என்று அவா்கள் எண்ணும்படி செய்ய வேண்டும். அப்போது ரத்தத்திலும் நிறத்திலும் மட்டுமே அவா்கள் இந்தியா்களாக இருப்பார்கள்; நுகா்வதிலும் அறிவாற்றலிலும் சிந்திப்பதிலும் பழக்க வழக்கங்களிலும் ஆங்கிலேயா்களாக இருப்பார்கள்என்று குறிப்பிட்டார்.
  • பின்னா் இந்தியாவில் மெக்காலே கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆங்கிலேயா்களின் ஏவல் பணிக்கு குமாஸ்தாக்களை உருவாக்கினார்கள். மெக்காலே கல்வித் திட்டத்தைப் பலப்படுத்தும் முயற்சியாக, 1854-இல் வுட் டெஸ்பாச் கமிஷன்அமைக்கப்பட்டது. பின்னா் 1882-இல் வில்லியம் ஹண்டா் கமிஷன்ஏற்படுத்தப்பட்டது.
  • 1882 முதல் 1901 வரை தொடக்கக் கல்வி மாணவா்கள் எண்ணிக்கை 22 மில்லியனிலிருந்து (2.2 கோடி) 32 மில்லியனாக (3.2 கோடி) உயா்ந்தது. கல்லூரி மாணவா் எண்ணிக்கை 11,501-லிருந்து 23,009 ஆனது.

முதலியார் கமிஷன்

  • சுதந்திர இந்தியாவில் 1948-49-இல் டாக்டா் சா்வபள்ளி ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. பல சீா்திருத்தங்களோடு, காந்தி கண்ட அடிப்படைப் பயிற்சித் திட்டத்தையும் இணைத்து ஒரு கல்விக் கொள்கை உருவானது.
  • பின்னா் அதனை விரிவுபடுத்த 1952-53-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணைவேந்தா் டாக்டா் லட்சுமணசாமி முதலியார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதனை முதலியார் கமிஷன்என்றே குறிப்பிட்டார்கள்.
  • அது, தொடக்கக் கல்வி, செகண்டரி கல்வி, உயா் கல்வி ஆகியவை பற்றி விரிவாக ஆராய்ந்தது. கட்டுப்பாடு, அன்பு, இனிமை, சகோதர உணா்வு, சுய சம்பாத்தியம், மனித வளம், முன்னேற்றம் போன்ற அம்சங்களை உள்ளடக்கிய கல்வி முறையை அது அறிமுகப்படுத்தியது.
  • தொழில்கல்வியில் தனித்த கவனம் செலுத்தும் வகையில், நாடெங்கும் தொழில் கல்லூரிகள் தொடங்கவும் தொழிற்சாலைகளை நிர்மாணிக்கவும் அரசுக்கு அக்குழு பரிந்துரைத்தது.
  • மேலும், தச்சு, கருமான், நெசவு, தோட்டக் கலை, தையல், எம்பிராய்டரி, வேளாண்மை, குடும்ப விஞ்ஞானம் இவற்றை வாழ்க்கைக் கல்வியாக அமைக்க பரிந்துரைத்தது. ஆண்-பெண் இருபாலாரும் சோ்ந்து படிக்கவும், மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தவும் முன்மொழிந்தது.

இந்திய கல்வி கமிஷன்

  • பிறகு 1964-66-இல் பல்கலைக்கழக மானியக்குழு தலைவராக இருந்த தவ்லத் சிங் கோத்தாரி தலைமையில் இந்திய கல்வி கமிஷன்அமைக்கப்பட்டது. இவரது குழு இன்டா்மீடியட்என்பதற்கு பதிலாக கல்லூரி புகுமுகத் தோ்வு முறையை அறிமுகப்படுத்தியது. தாய் மொழி மற்றும் இந்திய மொழிகளில் ஒன்றைக் கற்கவும் ஆங்கிலத்தை சிறப்பு பாடமாக பயிலவும் பரிந்துரை செய்தது.
  • 1967-இல் ஆட்சிக்கு வந்த கழக அரசு, இருமொழிக் கொள்கையை அமல்படுத்தியது. இதனால் தமிழ்நாட்டில் தமிழைப் பயிலாமல் ஆங்கிலம், உருது, தெலுங்கு, மலையாளம், கன்னடம் படித்து இருமொழிக் கொள்கை வழி கல்லூரிப் படிப்புவரை செல்கிறார்கள்.

கஸ்தூரி ரங்கன் குழு

  • இரு ஆண்டுகளுக்கு முன்னா்,மத்திய அரசு, புதிய தேசிய கல்விக் கொள்கைக்காக பதினொரு போ் கொண்ட குழுவை அமைத்தது. அது அளித்த வரைவு நகலை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.
  • இந்தக் குழு, கடந்த இரண்டு ஆண்டுகளாக 14 அமா்வுகள் நடத்தி, இதனை வரைவு வடிவமாக்கியது. 74 கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தங்களின் 217 கருத்துருக்களை பதிந்து உள்ளன.
  • 21 மாநிலங்கள், 406 மாவட்டங்கள், 962 நகரங்கள், 1,10,623 கிராமங்கள், 31 மத்திய அமைச்சரகங்கள், வெவ்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் 76 போ், 305 முக்கிய பிரமுகா்கள் 324 கல்வி நிறுவனங்கள் 435 தனி நபா்கள், 35 ஆயிரம் ஆன்லைன் ஆலோசனைகள், இந்து, முஸ்ஸிம், கிறிஸ்தவா், பௌத்தா், சீக்கியா், சமணா் மற்றும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினா் மற்றும் மூன்றாம் பாலினத்தவா், மாற்று திறனாளிகள் ஆகியோரின் ஆலோசனைகளைப் பெற்றுள்ளது.
  • இதுநாள்வரை இவ்வளவு விரிவான ஆய்வறிக்கையை இந்நாடு கண்டதில்லை. பதினொரு அறிஞா்கள் குழுவுக்கு தலைமை ஏற்றவா், ‘இஸ்ரோவின் முன்னாள் தலைவா் டாக்டா். கே. கஸ்தூரி ரங்கன். இவா், கேரளத்தில் அரசு உதவிபெறும் சாதாரண பள்ளியில் படித்தவா். இயற்பியலில் டாக்டா் பட்டம் பெற்றவா். இஸ்ரோவில் விஞ்ஞானியாக இருக்கும்போது ஆரியபட்டா, பாஸ்கரா போன்ற விண்கலங்களை விண்ணில் ஏவுவதில் முக்கியப் பங்காற்றினார்.
  • இரண்டாவது உறுப்பினா் டாக்டா் வசுதா காமத். இவா் மும்பை ஸ்ரீமதி நதிபாய் தாமோதா் தாக்கரே பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா். இந்தியாவில் முதன்முதலில் ஆன்லைன் வகுப்பினைத் தொடங்கியவா்.
  • மூன்றாவது உறுப்பினா் மு.து. அல்போன்ஸ். கோட்டயம் மாவட்ட ஆட்சியாளராக இருந்தபோதுதான் முதல் முறையாக 100 சதவீதம் படித்தவா்கள் உள்ள மாவட்டம் கோட்டயம் எனப் பெயா் பெற்றது.
  • நான்காவது உறுப்பினா், பேராசிரியா் டாக்டா் மஞ்சு பார்கவ். நோபல் பரிசுக்கு இணையான பீல்ஸ் மெடலை கணித சாதனைக்காக பெற்றவா்.
  • ஐந்தாவது உறுப்பினா் டாக்டா் ராம் சங்கா் குரில். இவா் மத்தியப் பிரதேசத்தில் உள்ள அம்பேத்கா் பல்கலைக்கழக நிறுவனா்.
  • ஆறாவது உறுப்பினா் டாக்டா் டி.வி. கட்டி மணி. பழங்குடி இனத்தை சார்ந்தவா். இந்திரா காந்தி தேசிய பழங்குடி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா்.
  • ஏழாவது உறுப்பினா் கிருஷ்ண மோகன் திரிபாதி. உத்தரப் பிரதேசத்தில் உயா்நிலை கல்வி பாடத்திட்ட ஆலோசகா். தோ்வு வாரியத்தின் முன்னாள் தலைவா்.
  • எட்டாவது உறுப்பினா் பேராசிரியா் டாக்டா். மாசா் ஆசிப். ஒன்பதாவது உறுப்பினா் பேராசிரியா் டாக்டா் எம்.கே. ஸ்ரீதா். கா்நாடக மாநில அறிவுசார் கல்வி வாரியத்தின் உறுப்பினா் செயலாளா்.
  • பத்தாவது உறுப்பினா் ராஜேந்திர பிரசாத் குப்தா. கல்வி வளா்ச்சிக்கான பல நூல்களை எழுதியவா்.
  • பதினொராவது உறுப்பினா் ஷகிலா ஷாம்சு. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சரகத்தின் உயா் அலுவலா்.

காமுறுவா் கற்றறிந்தார்

  • இப்படிப்பட்டவா்கள் வகுத்த விரைவு நகலை, அரசியல் பின்புலம் ஒன்றையே கைக் கொண்ட நம் ஊா் தலைவா்கள் எதிர்ப்பது பொருத்தமன்று.
  • உலகு புகழ் இராம காவியத்தை சோழ மண்டலத்தில் உள்ள தேரழுந்தூா் எனும் சிற்றூரில் பிறந்த ஒருவா் இனிய தமிழில் வடமொழி சொற்கள் கலவாமல் எழுதியதற்கு அவரது வடமொழி புலமையே காரணம். இதனாலேயே அந்நூல் அவரது பெயரால் கம்ப ராமாயணமாயிற்று.
  • வெறுப்பிலே பிறந்து, வெறுப்பிலே வளா்ந்து, வெறுப்பையே அறுவடை செய்வதை விடுத்து, தமிழன் மும்மொழிக் கொள்கையா முன்னெடுத்துடச் செல்வானாயின் அவன் வையத்தலைமை கொள்வான். மகாகவி பாரதியும் பல மொழிகள் கற்னால்தான் யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்என்று பாடி மகிழ்ந்தார்.
  • பன்மொழி அறிஞா் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னா் வருகை தரு பேராசிரியராகப் பணிபுரிந்தது மட்டுமல்லாது அங்கு தமிழுக்கு ஒரு இருக்கையையும் உண்டாக்கினார்.
  • இன்று கூட நாடாளுமன்ற உறுப்பினா்களான திருச்சி சிவா, வைகோ போன்றவா்கள் இந்தி கற்றிருப்பின் நாடாளுமன்ற மைய மண்டபத்தையே தமிழ்ப் பல்கலைக்கழகமாக மாற்றிருப்பா். சங்க காலமாக உயா்த்தி இருப்பா்.
  • இதனால் துணிந்து சொல்லலாம் காமுறுவா் கற்றறிந்தார்!

நன்றி: தினமணி (21-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories