TNPSC Thervupettagam

காய் நகர்த்தும் கார்ல்ஸன்!

February 4 , 2025 1 hrs 0 min 10 0

காய் நகர்த்தும் கார்ல்ஸன்!

  • புகழ்பெற்ற செஸ் வீரரான நார்வேயைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்ஸன், இன்றைக்கு உலக சாம்பியன் இல்லை. 2013ஆம் ஆண்டு முதல் ஐந்து முறை (2013, 2014, 2016, 2018, 2021) கிளாசிக்கல் செஸ்ஸில் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற கார்ல்ஸன், நவீன செஸ் உலகின் ஜாம்பவானாக உருவெடுத்தவர்.
  • 2023ஆம் ஆண்டுக்குப் பிறகு உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். என்றபோதும், முன்பு இருந்ததைவிட செஸ் விளையாட்டு தொடர்பான தலைப்புச் செய்திகளில் கார்ல்ஸனின் பெயரே அதிகம் இடம்பெறுகிறது; செஸ் வெற்றியைவிடவும், அதிகாரத்தை நோக்கிய அவரது காய் நகர்த்தல்தான் இன்றைக்குப் பேசுபொருளாகியிருக்கிறது.

‘ஜீன்ஸ்’ சர்ச்சை:

  • ‘கிளாசிக்கல் செஸ்’ விளையாட்டு முறையில் நேரக் கட்டுப்பாடு இல்லாததால் இது ‘ஸ்லோ செஸ்’ என்றும் அழைக்​கப்​படு​கிறது. ராபிட் செஸ் (Rapid chess), பிளிட்ஸ் செஸ் (Blitz chess) முறைகளில் காய் நகர்த்​தலுக்கு நேரக் கட்டுப்பாடு வழங்கப்​படும். கிளாசிக்கல் செஸ்ஸில் இந்தியாவைச் சேர்ந்த விஸ்வ​நாதன் ஆனந்துக்குப் பிறகு டி.குகேஷ் அண்மையில் செஸ் உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். உலக அளவில் செஸ் விளையாட்டினை ஒருங்​கிணைக்கும் சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE), 2012ஆம் ஆண்டு முதல் ஆண்டு​தோறும் ராபிட், பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்தி வருகிறது.
  • 2024ஆம் ஆண்டுக்கான இந்த சாம்பியன்ஷிப் தொடர் டிசம்பர் மாத இறுதியில் அமெரிக்​காவின் நியூயார்க் நகரத்தின் புகழ்​பெற்ற வால் ஸ்ட்ரீட்டில் நடைபெற்றது. ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 9ஆவது சுற்றுக்கு கார்ல்ஸன் ஜீன்ஸ் பேன்ட் அணிந்து வந்ததால், விதிமுறை​களின்படி அந்த உடையை மாற்றி​விட்டு போட்டியில் அவர் தொடர வேண்டும் என ஃபிடே எச்சரிக்கை விடுத்தது.
  • ஆனால், விதிமுறை​களுக்குக் கட்டுப்பட மறுத்த கார்ல்ஸன், தான் போட்டியி​லிருந்து விலகு​வ​தாக​வும், பிளிட்ஸ் செஸ் சாம்பியன்​ஷிப்​பிலும் பங்கேற்கப் போவதில்லை என்றும் அறிவித்​தார். எனினும், விதிமுறைகளை ஃபிடே தளர்த்திக்​ கொண்​டதால் பிளிட்ஸ் தொடரில் கார்ல்ஸன் விளையாடி​னார்.
  • செஸ் விளையாட்டு பிரபலமாக ஆரம்பித்த காலம் தொட்டு ஃபேஷனுக்கும் செஸ் விளையாட்டுக்கும் தொடர்பு இருந்​த​தில்லை. ‘டை’ கட்டி, மிடுக்கான ‘சூட்​’களில் செஸ் வீரர்கள் போட்டிகளில் பங்கேற்​பதையே வழக்க​மாகக் கொண்டுள்​ளனர். இப்படி இருக்​கும்​போது, ஆடை வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்திய ஜீன்ஸ் பேன்ட்டை அணிந்​துவந்த கார்ல்ஸன் முன்வைக்கும் கருத்துகள் என்ன என்பதைத் தெரிந்​து​ கொள்ள இன்னும் சில விஷயங்​களைக் கவனிக்க வேண்டி​யுள்ளது.

ஃபிடேவில் நடப்பது என்ன?

  • விளையாட்டு வீரர், வீராங்​கனை​களுக்​கும் விளையாட்டு அமைப்பு​களுக்கும் இடையேயான உறவு என்பது தாமரை இலைத் தண்ணீர் போன்றது. அமைப்பு​களின் விதிமுறை​களும் கட்டுப்​பாடு​களும் ஒரு தனிமனிதச் சுதந்​திரத்தைப் பாதிக்​கும்போது அல்லது விளையாட்டின் மேம்பாட்டுக்குப் பெரிதாக உதவாதபோது இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடிக்​கும். செஸ் விளையாட்டில் அப்படியொரு பனிப் போர்தான் தற்போது மூண்டுள்ளது.
  • ஃபிடேவின் விதிமுறைகள், விளையாட்டு முறைகள், தொடர்கள் ஆகியவற்றில் சில வகைகளில் பழமைவாதம் நிலவுவதாக கார்ல்ஸன் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் சிலர் கருதுகின்​றனர். கணினியில் செஸ் பயிற்சி, செயற்கை நுண்ணறிவுத் தொழில்​நுட்​பத்தின் ஈடுபாட்டால் அடுத்த கட்டத்தை எட்டி​யுள்ள பயிற்சி முறைகளைப் போல செஸ் ஆட்டத்​திலும் மாற்றம் வர வேண்டிய நேரம் என்கிறார் கார்ல்ஸன்.
  • கிளாசிக்கல் செஸ் விளையாட்டு முறை பழமையாகி​விட்​ட​தால் ராபிட், பிளிட்ஸ் முறைகளை அடுத்து ‘ஃபிரீ-ஸ்​டைல்’ செஸ்தான் எதிர்​காலம் என்பது கார்ல்​ஸனின் நம்பிக்கை. அதாவது, ஒரு செஸ் போட்டியில் பயன்படுத்​தப்​படும் 16 காய்களில் 8 சிப்பாய்கள் முன் வரிசையில் இருக்க, பின் வரிசையில் உள்ள மீதம் 8 காய்களையும் வெவ்வேறு கட்டங்​களில் மாற்றி வைத்துப் போட்டியைத் தொடங்​கலாம் என்பதே ‘ஃபிரீ-ஸ்​டைல்’ செஸ் முறை.
  • இந்த முறையால் போட்டியின் சுவாரசியம் அதிகரிக்​கும்; ஒவ்வொரு வீரருக்கும் உள்ள தனித்​தன்மை, திறன் வெளிப்​படும் எனக் கூறப்​படு​கிறது. இந்த முறையைப் பற்றியும் ஃபிடேவின் பழமைவாதம் பற்றியும் 1990களிலேயே செஸ் ஜாம்பவான்களான அமெரிக்காவின் பாபி ஃபிஷர், ரஷ்யாவைச் சேர்ந்த கேரி காஸ்பரோவ், பிரிட்​டனைச் சேர்ந்த நிகெல் சார்ட் உள்ளிட்டோர் பேசியுள்ளனர்.

‘ஃபிரீ-ஸ்டைல் செஸ் கிளப்’

  • இதனால் கிளாசிக்கல் உலக சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து தன்னை விலக்​கிக்​கொண்ட கார்ல்ஸன், தனது கருத்துகளை முன்வைத்தது மட்டுமின்றி, ஒரு படி மேலே சென்று ‘ஃபிரீ-ஸ்​டைல்’ சாம்பியன்ஷிப் தொடரையும் ஒருங்​கிணைக்க ஆயத்த​மாகி​விட்​டார்.
  • முன்னணி வீரர்களை ஒருங்​கிணைத்து ‘ஃபிரீ-ஸ்டைல் செஸ் கிளப்’ உருவாக்கும் பணிகளில் மும்முரமாக இறங்கி​யுள்ள அவர், ‘ஃபிரீ-ஸ்​டைல்’ செஸ் உலக சாம்பியன்ஷிப் தொடர் ஒன்றையும் திட்ட​மிட்​டுள்ளதால் ஃபிடேவுக்கு அழுத்தம் கூடியுள்ளது. அமைப்பு சாராமல் செஸ் விளையாட்டின் வேறொரு பரிணா​மத்தைப் பிரபலப்​படுத்தும் முயற்சி ஃபிடேவுக்கு இடையூறாக இருப்பது கண்கூ​டாகத் தெரிகிறது. இதனால் செஸ் வீரர்கள் உடனான ஃபிடேவின் சுமுகமான உறவுக்குச் சிக்கல் ஏற்பட்​டுள்ளது.

செஸ் எதிர்​காலம்:

  • செஸ் விளையாட்டில் உள்ள பழமைவாதத்தைப் போக்க வேண்டு​மென்பது ஃபிடேவின் முன் இருக்கும் மிகப் பெரிய சவால். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் வீரர்​களின் எதிர்​வினை​களைச் சமாளிப்​பதும் ஃபிடேவுக்குச் சற்று கடினமாகவே உள்ளது. 2024 பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்​போட்​டியில் கார்ல்​ஸனும் மற்றுமொரு முன்னணி வீரர் இயன் நிபோமி​னாட்​சியும் மோதினர்.
  • பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் விதிமுறை​களின்படி ஒருவர் மட்டுமே வெற்றி​யாளராக நிர்ண​யிக்க வேண்டும். ஆனால், கார்ல்​ஸனும் இயனும் தொடர்ந்து டிரா செய்து​கொண்டே இருந்​தனர்; இருவருக்கும் வெற்றி​யாளர் என்கிற பட்டத்தைப் பகிர்ந்​தளிக்க வேண்டும் என்கிற கோரிக்கை​யையும் அவர்கள் முன்வைத்​தனர். இதனால், மீண்டும் ஒரு முறை விதிமுறை​களைத் தளர்த்திக்​கொண்டு இருவரையும் வெற்றி​யாளராக அறிவித்தது ஃபிடே.
  • தவிர, ஃபிடே அமைப்பின் துணைத் தலைவர் பதவி வகிக்க விஸ்வ​நாதன் ஆனந்துக்கு தகுதி​யில்லை எனச் சொன்னது, ஃபிடேவின் மூத்த தலைவரை விமர்​சித்தது, பொதுவெளி நேர்காணல்​களில் ‘தகாத’ வார்த்​தைகளைப் பயன்படுத்துவது என கார்ல்​ஸனின் நடவடிக்கைகள் வளர்ந்​து வரும் இளம் செஸ் தலைமுறைக்கு முன்னுதா​ரணமாக இருக்க​வில்லை.
  • செஸ் விளையாட்டு மீதான கார்ல்​ஸனின் அக்கறை சரிதானா என்பதோடு, இவரைப் போல வம்படியாக எதிர்வினை ஆற்றும் வீரர்களை ஃபிடே எப்படிக் கையாளப்​போகிறது என்பதையும் பொறுத்​திருந்​துதான் பார்க்க வேண்டும்.
  • செஸ் விளையாட்டின் விதிமுறைகளை மாற்றும் எண்ணம் பரிசீலிக்​கப்பட வேண்டும். யாரோடும் ஒத்துப்​போ​காமல் செஸ் விளையாட்டின் வரலாற்றையே மாற்றி எழுத வேண்டும் என்று நினைக்கும் கார்ல்​ஸனின் நோக்கத்தையும் புரிந்​து​கொள்ள முடிய​வில்லை.
  • செஸ் விளையாட்டில் ஒருவர் பெறும் வெற்றி, தோல்வியைத் தாண்டிப் போட்டி முழுக்க ஆதிக்கம் செலுத்​தியவர் பெரிதும் கவனிக்​கப்​படு​வார். அப்படி, யார் ஆதிக்கம் செலுத்த வேண்டும், அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்கிற இந்தப் பனிப்​போரில் வெல்​லப்​போவது கார்ல்ஸன் உள்ளிட்ட வீரர்களா, ஃபிடேவா என்​ப​தற்குக் ​காலம்​தான் ப​தில் சொல்ல வேண்​டும்​.

நன்றி: இந்து தமிழ் திசை (04 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories